இந்து மதத்தில் மட்டுமல்ல, இராமாயணங்கள்!

-செழியன். ஜா

இது பல்லாயிரம் ஆண்டுகளாக நாட்டுபுற கதையாக புழங்கியுள்ளது. வால்மிகிக்கு முன்பே பல இராமாயணங்கள் வந்துள்ளன! அந்தந்த மண்ணிற்கும், மதங்களுக்கும் ஏற்ப இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன! ”அய்யய்யோ… இதென்ன..?” என அலறும்படிக்கு ஒன்றுக்கு ஒன்று ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் அசரடிக்கின்றன!

ஒன்று, இரண்டல்ல முந்நூறுக்கும் அதிகமான இராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன என்பதே வியப்பான செய்தி தான்! இதை அறிமுகப்படுத்தும் வண்ணம். முந்நூறு இராமாயணங்கள்என்பதையே  தலைப்பாகக் கொண்டு  .கே.ராமானுஜன் ஆங்கிலத்தில் எழுதி நூல் உள்ளார் . அதன் தமிழ் மொழிபெயர்ப்பு .வினோத் குமார்.

மொழிபெயர்ப்பு தான் நம்மை மூலத்துடன் நெருக்கமாக இணைக்கும். அதை வினோத் குமார் சரியாக செய்து உள்ளார். அதற்குச் சரியான உதாரணம் வால்மீகி எழுதிய அகலிகை பற்றிய நீண்ட பாடலை தமிழில் மொழி பெயர்த்ததைச் சொல்லலாம். நேரடியாகத் தமிழில் எழுதியது போல் உள்ளது.

ஏதோ இராமாயணம் என்பது இந்துக்களுக்கான நூல் என நாம் நினைத்திருப்பதையும் இந்த நூல் தகர்க்கிறது! ஒவ்வொரு மதத்திலும் இராமாயணம்  எழுதப்பட்டுள்ளது. பல நாடுகளில் இராமாயணம் பல விதமாக அந்த நாட்டிற்கேற்ப விவரிக்கப்பட்டுள்ளது. ஏன் நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களில், அந்தந்த மொழிக்கு ஏற்ப ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன.

வால்மீகி சமஸ்கிருதத்தில் எழுதினால், கம்பர் தமிழில்  ராமாயணம் எழுதினார். அண்டை மாநிலம் கர்நாடகத்தில் “பாணர் ராமாயணம்” உண்டு. மலையாளத்தில் “அத்யாத்ம” இராமாயணம், மாப்ளா ராமாயணம்  உண்டு. அதேபோல் தெலுங்கிலும் உண்டு!

இராமனைப் போற்றும் வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்டு சமணத்தில் உள்ள ராமாயணம், சமணத்தைப் போற்றும் ராவணன் எப்படி உயிர்களை கொல்லுபவனாகவும், இரத்தவெறி வெறி பிடித்தவனவாகவும் இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்புகிறது? அதே சமயம் ராமாயணத்தில் ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்டார் என சொல்லப்பட்டு உள்ளது.(சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8)

விமல சூரி எழுதிய சமண ராமாயணம், ராமனின் பிறப்பிலிருந்து தொடங்காமல், ராவணனின் பிறப்பிலிருந்து தொடங்குகிறார்.

பத்து தலை ராவணன் என்பதைக் கூட சமணர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். ராவணன் பிறந்தபொழுது அவன் தாய் நவரத்தின மாலை ஒன்றை ராவணனுக்கு அணிவிக்கிறார். அந்த மாலையில் ராவணனின் தலை பிரதிபலிக்கிறது. அதனால் இராவணன் பத்து தலையான் என்று அழைக்கப்படுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இராவணனுக்குப் பிறந்தவள் சீதா

இதிலிருந்து மாறுபட்டு பாணர் எழுதிய கன்னட ராமாயணம் உள்ளது. மிகுந்த ஆச்சரியம் தரும் ராமாயணம் பாணர் ராமாயணம் ஆகும்.

குழந்தை இல்லாத ராவணன் கடும் தவம் இருக்கிறான். சிவன் அளிக்கும் மாம்பழம் ஒன்றின் சதைப்பற்றை தன்  மனைவிக்கு கொடுப்பதாகச் சொல்லி வாங்கி செல்லும் ராவணன் அப்படிச் செய்யாமல் சதைப்பற்றை தான் உண்டு, கொட்டையை மனைவியிடம் கொடுக்கிறான். சதைபற்றை ராவணன் சாப்பிட்டு விடுவதால் ராவணன் கர்ப்பமடைகிறான்.

இதை ராவணன் எப்படிக் கடக்கிறான், உணர்கிறான்  என்பதை  ராவணன் சிவனை நோக்கிப் பாடுவது போல் பாணர்  ராமாயணம் இருக்கும்.

உலகிற்கு நான் எப்படித் தலைகாட்டுவேன் ஓ சிவா..

உலகில் நான் எப்படி நடமாடுவேன் ஓ சிவா..

இதை எப்படித் தாங்கிக் கொள்வேன் ஓ சிவா.

எனக்குத் துன்பத்தை அளித்தாயே ஓ சிவா.

என்னால் முடியவில்லை முடியவில்லை ஓ சிவா..

எப்படி வாழ்வேன் என்று சிவனை நோக்கி ராவணன் பாடுவது போன்று எழுதி, கடைசியில் ஒன்பதாவது மாதம் வருகிறது..

குழந்தை பிறக்க ராவணன் தயாராகிறான் அப்பொழுது ராவணன் தும்மினான்.

சீதா அவன் மூக்கு நாசி வழியாகப் பிறக்கிறாள். நாசி வழியாகப் பிறந்ததால் “சீதா” என்று பெயர் சூட்டுகிறார்கள். கன்னடத்தில் சீதா என்பதற்கு “அவன் தும்மினான்” என்ற பொருள் உண்டு.  இப்படி நமக்குத் தெரியாத ராமாயணம் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருக்கிறது.

ராவணனைக் கொன்றது ராமன் அல்ல சீதா

அத்புத இராமாயணத்தில் ராவணை கொன்றது ராமன் இல்லை.  சீதாவாகும். பத்து தலை ராவணன் இறக்கும்பொழுது 100தலை ராவணன் உயிர்த்தெழுகிறான். ராமனால் இதைச் சமாளிக்க முடியவில்லை அதனால் சீதை போரிட்டு ராவணனைக் கொல்வதாக சொல்லபடுகிறது.

மண்ணிற்கேற்ப ராமாயணங்கள் எழுதப்பட்டன! 

ராமன்-ராவணன்-சீதை-லட்சுமணன் என்ற இந்த கதாபாத்திரங்கள் அனைத்து ராமாயணத்திலும் வருகிறது. ஆனால் உறவு முறைகளில், அந்த நிலத்தின் கலாச்சாரத்திற்கு, மொழிக்கு ஏற்ப ராமாயண கதைகள் மாறுபட்டுள்ளன.

உதாரணமாகத் தாய்லாந்து நாட்டு வரலாறு என்பது  யுத்தங்களால் நிறைவடைந்து உள்ளது. உயிர் வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தான் மக்கள் இருந்தனர். அதனால் தாய்லாந்து இராமாயணத்தில் யுத்த காண்டம் பற்றி மிக விரிவாக பேசப்பட்டுள்ளது.வேறு எந்த ராமாயணத்திலும் அப்படி இல்லை.

வால்மீகி ராமாயணம் ராமனை மனிதனாகவே குறிக்கிறது. ஆனால் கம்பர் ராமாயணம் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டது. வட இந்தியாவில் துளசிதாசரின் ராமாயணம் ஏற்படுத்திய தாக்கங்கள் அசாதரணமானவையாகும்!

ஒரு ராமன் இல்லை பல ராமன்கள் உள்ளனர்!

புத்தக தொடக்கம் நாட்டார் கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறது. முடிவிலும் ஒரு நாட்டார் கதையுடன் முடிகிறது. முடிவில் வரும் நாட்டார் கதை மனிதர்களின் மனநிலையைச் சரியாகக் காட்டுகிறது.

கலாச்சாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத கணவனுக்கு அவன் மனைவி இவருக்கு எப்படியாவது நம் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி அந்த ஊரில் நடக்கும் ராமாயணச் சொற்பொழிவுக்கு அனுப்புவதாக ஒரு கதை உள்ளது.

தொடக்க நாட்டார் கதை இப்படிச் செல்கிறது. ராமன் அணிந்துள்ள மோதிரம் பூமிக்குக் கீழ் விழுந்துவிடும். அதை எடுக்க அனுமான் செல்லும்பொழுது பாதாள அரசன் ஒரு தட்டில் விழுந்த ராமன் மோதிரம் போல் பல மோதிரங்களை காட்டுவர்.

இதில் எது உன்னுடைய ராமன் மோதிரம் எடுத்துக்கொள் என்று சொல்லும்பொழுது அனுமான் குழம்பி பாதாள அரசனைப் பார்ப்பான். அதற்குப் பாதாள அரசன் சொல்வான் ஒரு ராமன் அவதாரம் முடிவுக்கு வரும்பொழுது அவன் மோதிரம் இப்படி கீழே விழுந்துவிடும். அதற்கு ஏற்றாற்போல் பூமிக்கு மேல் பிரம்மாவும், வசிஷ்டரும் ராமனிடம், ”உன்னுடைய பணி முடிவடைந்தது. கடவுளின் உலகில் வந்துவிடவும்” என்று சொல்வார்கள்.

ஒரு ராமன் மட்டும் இல்லை, பல ராமன்கள் உண்டு என்று உணர்த்துவதாக நாட்டார் கதைகள் அமைந்து இருக்கின்றன! ”ராமன், எத்தனை ராமனடி” என நாம் வியக்கலாம்!

எழுத்து வடிவில் வந்த முதல் ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்பதைத் தவிர, அதுதான் முதல் ராமாயணமல்ல.. என்பது புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. யாரும் இதை மறுக்க முடியாத அளவு பெரிய ஆய்வுக்குப் பிறகே கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன! இதில் உள்ள  எண்ணற்ற உதாரணங்கள், விளக்கங்கள் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், ‘இந்த உலகில் ஒரு ராமாயணம் மட்டும் இல்லை பல நூறு ராமாயணங்கள் உண்டு’ என்பதேயாகும்.

ஆனால் இவ்வளவு ராமாயண கதைகள் உள்ளது என்பதை  ஏற்றுக் கொள்ள முடியாத RSS, இந்துத்துவர்கள் பல பிரச்சனைகளைக் கொடுக்கின்றனர். இந்த கட்டுரையை டெல்லி பல்கலைக்கழகம் பாடத்தில் வைத்திருந்தது.

”இதை பாடத்திலிருந்து நீக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டு, கலாட்டா செய்து கடைசியில்  ஏ.கே.ராமானுஜன் எழுதிய இந்த கட்டுரைகளை நீக்கிவிட்டார்கள். வால்மீகி இராமயணம் மட்டுமே உண்மையான ராமாயணம் என்று அந்த இராமாயணத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதே போல் கேரளாவில் உள்ள ராமாயணத்தை மேற்கண்ட அமைப்புகள் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன. எழுத்தாளர் பஷீர் ராமாயணத்தை 6 பகுதியாக எழுதத் தொடங்கி 5 பகுதி எழுதிவிட்டார். உடனே, ஒரு முஸ்லீம் எப்படி ராமாயணம் எழுதலாம் என்று பிரச்சனையைக் கொடுத்து அதையும் நிறுத்தினார்கள்.

உண்மையில் இவர்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எதை நோக்கி நாம் செல்கிறோம் என்றும் புலப்படாத ஒரு கும்பல் யாரோ ஆட்டி வைப்பதற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கிறது. அதற்காக முந்நூறு இராமாயணங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

நிச்சயம் அனைவரும் ஒரு முறை இந்த நூலைப் படித்து ராமாயணத்தைக் குறித்து உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நூல் விமர்சனம்; செழியன். ஜா

பரிசல் புத்தக நிலையம்

235, P பிளாக், MMDA காலனி,

அரும்பாக்கம்,

சென்னை-600106

மொபைல்-9382853646

விலை-100

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time