வங்கத் திரை உலகின் முடிசூடா மன்னன் தருண் மஜும்தார் !

-ஆனந்த் பாசு

இடதுசாரி சிந்தனையாளர் என்றால், வறட்டுத்தனமானவரல்ல, மக்கள் படைபாளி என்பதற்கு தருண் மஜும்தாரே உதாரணம். அழகியலோடு, எளிய கிராமத்து மக்களின் அச்சு அசலான கள்ளங் கபடமற்ற வாழ்க்கையை திரையில் பிரதிபலித்தார். கமர்சியல் கச்சடாக்கள் இல்லாமலே அவரது படங்கள் வெற்றி பெற்றன!

தருண் மஜும்தார், ‘ஆர்ட்-ஹவுஸ்’ சினிமாவின் அழகியலை வெகு லாவகமாக வெகுஜன மக்களுக்கான சினிமாவுடன் கலந்து, கலையை கலைக்காக மட்டுமின்றி வெகுஜன மக்களுக்காகவும், அதே சமயத்தில் கலைப் படங்களை மட்டுமே ரசிக்கும் கடினமான பார்வையாளர்களை கவரக் கூடிய திரைப்படங்களை உருவாக்கியதற்காகவும், இந்திய சினிமாவில்,  ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

நான்கு முறை தேசிய விருது பெற்ற தருண் மஜூம்தாரை இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும்  கௌரவித்தது. ஐந்து முறை பிலிம்பேர் அவார்டும் பெற்றுள்ளார்!

கடந்த திங்கட்கிழமை, ஜூலை 4 அன்று பிரபல வங்கத் திரைப்பட எழுத்தாளர் – இயக்குனர் தருண் மஜும்தார் இயற்கை எய்தினார். வங்காளத் திரை ரசிகர்களின் மனதைக் கவரும் குடும்பப் படங்களை உருவாக்கிய ஒரு தலை சிறந்த கதைசொல்லியை இந்தியத் திரை உலகம் இழந்துவிட்டது.

இவர் ஜனவரி 1, 1931 அன்று போக்ரா எனும் இடத்தில் (தற்போது இது பங்களாதேஷில் உள்ளது) பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகனான இவர், கொல்கத்தாவின் பிரபல ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் உயர்கல்வி கற்றார்.  இடதுசாரி சித்தாந்தத்தைத் தன் வாழ் நாளில் பின்பற்றிய அவர் 40 திரைப்படங்களைப் படைத்துள்ளார்.  அவற்றில் முக்கியமானவை பாலிகா படு (1967), குஹேலி (1971), கணதேவதா (1979), தாதர் கீர்த்தி (1980), பலோபாசா பலோபாசா (1985), மற்றும் அலோ (2003) ஆகியவை.

பாலிகா படு (1967)

வங்கத் திரை உலகில், சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் மற்றும் மிருணாள் சென் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்கள் புகழ் ஏணியின் உச்சியில் இருந்த காலகட்டத்தில், மிகப் பிரபலமான வணிகத் திரைப்படங்களை வங்க ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில், இந்த இரண்டு நீரோடைகளுக்கு இடையேயான இடைவெளியை மஜும்தார்  ஆக்கிரமித்தார். ஆம். மஜும்தாரின் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கப் பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள்  அழகியல் உணர்வு மற்றும் கலாச்சார வளமிக்க உள்ளீடுகளுடன் திரையரங்கத்தை விட்டு வெளியேறினர்.

மஜும்தார் கிராமப்புற வாழ்க்கையைப் பாங்குடன் சித்தரித்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கொண்டாடும் வண்ணம் தம் படங்களில் படைத்தார். மஜும்தாரின் கிராமப்புற இந்தியாவின் கதைகள், அவை சொல்லப்பட்ட விதத்தால், அனைத்து பிரிவினரையும் ஈர்த்தது.

ஸ்ரீமான் பிருத்திவிராஜ் (1973)

அவர் தன் படங்கள் வெற்றி பெற புகழ் பெற்ற திரையுலக நட்சத்திரங்களைச் சார்ந்திருக்காமலேயே அடுத்தடுத்து வெற்றிப் படங்களை அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.  அவரது  படங்களின்  கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கா  இடம் பெற்றவையாகத் திகழ்ந்தன. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட அப்பாவித்தனத்தை  வெளிப்படுத்தும் அவரது முக்கிய கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, அரிதாகவே எதிர்மறையானவையாக இருந்தன. அது மட்டுமின்றி, மனதை மகிழ வைக்கும்  இசைக்காகவும், அவர் படங்கள் பெரிதும் பேசப்பட்டன. பாரம்பரிய இலக்கியத்தின் திரைத் தழுவலுக்கும் இவர் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார். குறிப்பாக பிபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் கதைகள், மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்கள் போன்றவை.

மஜும்தார் படங்களில் அறிமுகப் படுத்தப் பட்ட புதுமுகங்கள், பிற்காலத்தில் திரை வானில் நட்சத்திரங்களாக மின்னினார்கள். அவர்களுள், மௌசுமி சாட்டர்ஜி, தபஸ் பால், தேபாஸ்ரீ ராய் மற்றும் மஹுவா ராய்சௌத்ரி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

அவரது எந்தப் படமும் அவரது அரசியல் சாய்வைப் பிரதிபலிப்பதாக இருந்ததில்லை. அதே சமயம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இருந்தன.

சமூகப் பிரக்னை  பின்னிப் பிணைந்த ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்தவையாக இருந்தன. இத் திரைப்படங்கள் சாமான்ய மக்கள்  மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை, போராட்டங்கள்,  மற்றும் வெற்றி தோல்விகளைச் சித்தரித்தன.

அவர் உருவாக்கிய, ‘யாத்ரிக்’ (தமிழில் ‘பயணி’ என்று பொருள்) குழு இயக்கிய காலத்தைத் தாண்டி நிற்கும்  படம், 1959ல் வெளி வந்த ‘சாவ்வா பாவா’. அவரது யாத்ரிக் குழுவின் படைப்புகளாக, மேலும் சில படங்களையும், அறுபதுகளின் தொடக்கத்தில் தருண் இயக்கினார்.

தாதர் கிர்தி (1980)

அவரது படைப்புகளுள் மறக்க முடியாத படம் பாலிகா படு (1967). மௌசுமி சட்டர்ஜி முதன்முதலாய் நடித்த இந்த படம் பின்னர் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.

மஜும்தார் ‘பலடக்’ மற்றும் ‘நிமந்திரன்’  ஆகிய இரண்டு  படங்களில், எப்பொழுதும் நகைச்சுவை வேடங்களில் நடித்த, அனுப் குமாரை கதாநாயகனாக நடிக்கத் தேர்ந்தெடுத்தார். இந்த தேர்விலிருந்து அவரிடம் உள்ள அபார நடிப்புத்திறனை வெளிக் கொணர்ந்தார். தருண் எப்போதும் புதுமையை விரும்பிய வித்தியாசமான இயக்குனர் என்பதற்கு இதுவே சான்று.

அவரது கடைசி நாட்களில், அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், ​​அவர் எடுக்க விரும்பும் புதிய படத்தைப் பற்றி காகிதத்தில் எழுதி வெளிப்படுத்தினார்.  தயாரிப்பாளரும் தயாராகவே இருந்தார்.  அவர் அந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதிக் கொண்டிருந்த போதே உடல் நலம் குன்றி காலமானார்.

அர்ப்பணிப்புள்ள மார்க்சியவாதியான தருண் மஜும்தார், அவர் இறந்ததற்குப் பிறகு, அவரது பூத உடல், மக்களுடைய மாலைகளால் மூடப்பட அஞ்சலிக்காக வைக்கப்படக் கூடாது என்றும், இறுதிச் சடங்கோ அல்லது அரசு மரியாதையோ இன்றி   செங்கொடியால் போர்த்தப் பட்டு, மருத்துவ ஆராய்ச்சிக்காக, உடல் தானம் செய்யப் பட தன்னுடைய இறுதிப் பயணம் அமைய வேண்டும் என்பதில் உறுதி பட இருந்தார்.

மிகச் சிறந்த உதாரண புருஷராக வாழ்ந்த தருண் மஜும்தார் ஒரு சகாப்தம் என்பது மிகையல்ல!

கட்டுரையாளர்; ஆனந்த் பாசு

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time