பல சிக்கல்களுக்கு காரணமாகும் மலச்சிக்கல்! தீர்வு என்ன?

-எம்.மரியபெல்சின்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முறையான கழிவு வெளியேற்றமே அடிப்படை விதியாகும்! மலச் சிக்கல் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும்! கழிவு வெளியேற்றத்திற்கு கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் என்ன?

இன்றைய சூழலில் நாம் பலவித நோய்களில் சிக்கி தவிக்க ஒழுங்கற்ற உணவுமுறையே காரணம்! கடந்த இதழில் இதுபற்றி விரிவாக கூறி இருந்தாலும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோமோ, அதேபோல் கழிவு வெளியேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மலச்சிக்கல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இன்னும் சொல்லப்போனால், பள்ளி மாணவர்கள் மத்தியில் கேள்வி கேட்பது போல் மலச்சிக்கல் என்றால் என்ன? என்று கேட்டால்,  அடுத்த விநாடியே இல்லை என்ற பதில்தான் அதிரடியாக வருகிறது. மலச்சிக்கலை  கௌரவக் குறைச்சலாக நினைத்து பொய் சொல்கிறார்கள்.

மலச்சிக்கல் ஏற்பட தவறான உணவுமுறைகளே மிகமுக்கியமான காரணமாகும். நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.இப்போதெல்லாம் நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை ஒதுக்கிவிட்டுஇப்போதெல்லாம் நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை ஒதுக்கிவிட்டு பிஸ்கட், ரொட்டி, கேக் மற்றும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் உணவுகளையும், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையுமே நம்மில் பலர் விரும்பி உண்கிறோம். எளிதில் செரிமானமாகாத இறைச்சி உணவுகளையும், மசாலா நிறைந்த உணவுகளையும், மைதாவில் தயாராகும் பரோட்டாவையும் இரவு நேரங்களில் தொடர்ந்து சாப்பிடுவது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மலச் சிக்கல் உள்ளவர்கள் மசாலா உணவுகளையும், மைதா உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நாம் கையில் கிடைத்தவற்றை வாயில் போட்டுக்கொண்டு அவசர அவசரமாக அன்றாடப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். நாம் உண்ணும் உணவுகளில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை உணராமல் யாரோ செய்த உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஏற்கெனவே கலாச்சாரம், பண்பாடு என அந்நியப்பட்டு  போன நாம் இன்றைக்கு உண்ணும் உணவிலும் அந்நியப்பட்டு நிற்கிறோம். நம் சூழலுக்கேற்ற எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண தவறி சூழ்நிலைக் கைதிகளாகி, பாரம்பரியத்தை தொலைத்து, உடலையும் கெடுத்து விழிபிதுங்கி நிற்கிறோம்.

ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அவர் எந்த அளவுக்கு நீர் அருந்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். நீர் அருந்துவதில் நம்மிடம் உள்ள மெத்தனமும்கூட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. இது கோடைக்காலம் என்பதால் சுற்றுச்சூழல் தகிக்கும்போது நம் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறும். ஆகவே, அதற்கேற்ப நீர் அருந்த வேண்டும். வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுக்குமென்பதால் அவசியம் வழக்கத்தைவிட கூடுதலாக நீர் அருந்த வேண்டும்.

வெறும் நீராக இல்லாவிட்டாலும் மோர் மற்றும் இயற்கை குளிர்பானங்களை அருந்தலாம். அதேபோல், வெறும் மோராக இல்லாமல் சிறிது சின்ன வெங்காயம், சிறிது மல்லித்தழை, கறிவேப்பிலையுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அருந்தினால் மலச்சிக்கலை மட்டுமல்ல,  செரிமானக் கோளாறையும் சரிசெய்யும். நம் முன்னோரின் உணவுமுறைகள் இப்படித்தான் இருந்தன. இதேபோல் குளிர்காலங்களிலும் நாம் வழக்கமாக அருந்தும் நீரின் அளவைவிட குறைத்தே நீர் அருந்துவோம். எனவே, குளிர்காலத்திலும் நீர் அருந்தும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உடல்நலனுக்கு உகந்தவை அல்ல என்பது தெரிந்தே தவறு செய்துகொண்டிருக்கிறோம். பானகம் அல்லது பானகரம், நன்னாரி சர்பத், எலுமிச்சைச் சாறு, புதினா ஜூஸ் போன்ற இயற்கை பானங்களே உடல்நலனுக்கு உகந்தவை. வயிற்றுக்கு எந்தவித கெடுதலும் விளைவிக்காத இந்த பானங்களை தாராளமாக அருந்தலாம். இயற்கையாகவே குளிர்ச்சித்தன்மை நிறைந்திருக்கும் இந்த பானங்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். நன்னாரி, வெட்டிவேர், தேற்றான்கொட்டை போன்றவற்றை நசுக்கி ஒரு துணியில் கட்டி மண்பானை நீரில் இரவில் ஊற வைத்து மறுநாள் அருந்துவதும் நல்லது.

பானகம் என்பது புளியை சுமார் ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து அருந்த வேண்டும். இதை பகல் வேளையில் மட்டுமே அருந்த வேண்டும். இதேபோல் நன்னாரி சர்பத்தை நாமே தயாரித்து அருந்துவதுதான் நல்லது. இரண்டு மூன்று நன்னாரி வேர் துண்டுகளை நன்றாக நசுக்கி நீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். சூடு நன்றாக ஆறியதும் அந்தச் சாற்றுடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். கூடியமட்டும் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

நன்னாரி இயல்பாகவே உடல் சூட்டைக் குறைப்பதுடன் கோடைகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்கடுப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்யும். நாள்பட்ட மலச்சிக்கல் இருந்தால் இதே நன்னாரி வேருடன் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து நீர்விட்டு கொதிக்கவைத்து இரவில் குடித்தால் காலையில் தானாக மலம் வெளியேறும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப்போக்க உலர்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து நசுக்கி வடிகட்டி நீரை மட்டும் குடிக்கக் கொடுப்பார்கள். இதெல்லாம் நாம் காலங்காலமாக பின்பற்றி வரும் எளிய நடைமுறையாகும்.

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து மீள நல்ல வழியாகும்! மதிய உணவில் சோற்றுக்கு இணையாக காய்கறீகள் சேர்க்க வேண்டும். எலுமிச்சைச் சாற்றுடன் இஞ்சி, சீரகத்தூள், உப்பு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் சரியாகும். வெறுமனே எலுமிச்சை ஜூஸ் அருந்துவதும்கூட பலன் தரும். இது இல்லாமல் புதினா ஜூஸ்கூட மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்பிரச்சினைகளை சரிசெய்யும். கைப்பிடி புதினா இலைகளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி அரை எலுமிச்சம்பழச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்கலாம். இனிப்பு தேவையென்றால் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற இயற்கை பானங்களை அருந்திவந்தால் எந்தவித கெடுதலும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் காலை நேர உணவாக பழங்கள் சாப்பிட்டுவருவது மிகவும் நல்லது. குறிப்பாக கொய்யாப்பழம், பப்பாளி, அன்னாசி, மாதுளை, திராட்சை மற்றும் வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதுடன் வந்த பிரச்சினையையும் சரிசெய்யலாம். இதேபோல் மதிய வேளைகளில் தினம் ஒரு கீரையை இணை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. துத்திக் கீரை மலச் சிக்கலுக்கு சிறந்த அருமருந்தாகும்! முக்கியமாக முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. மணத்தக்காளிக் கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம். அகத்திக்கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது; மாறாக, 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

மலச்சிக்கல் வருவதற்கு நாம் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிப்பறைகள்கூட ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் ஆதிகாலம் முதல் குத்தவைத்து உட்கார்ந்தே கழிவை வெளியேற்றும் முறையைப் பின்பற்றி வருகின்றனர். இன்டியன் டாய்லெட் என்று சொல்லப்படும் நமது இந்தியக் கழிவறைகளில் அமரும் முறையை யோகாசனத்தில் `மலாசனா’ என்கிறார்கள். இந்த முறையில் மலம் கழிப்பதே நல்லது. பவன்முக்தாசனா அல்லது காற்றுநிவாரண போஸ் மற்றும் பலாசனா, குழந்தையின் போஸ் போன்ற பலவித ஆசனங்களைச் செய்து மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம்.

மலச்சிக்கல் ஏற்பட்டதும் உடனே மாத்திரை வாங்கி போட்டுக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அவை தற்காலிக தீர்வையே தரும். மேலும் மாத்திரை போட்டால்தான் மலம் வெளியேறும் என்ற நிலைக்குப்போகாமல் இயற்கை வழிகளில் தீர்வு காண்பது நல்லது. மலச்சிக்கலைத் தவிர்க்க காலை முதல் இரவு வரை எளிதாக செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துவதுடன் மோர், ரசம் போன்ற இணை உணவுகளை உண்பது நல்லது. கூடவே, உலர்ந்த திராட்சையை அவ்வப்போது சாப்பிடுவது, கடுக்காய் அல்லது திரிபலா சூரணத்தை இரவு தூங்கச்செல்வதற்குமுன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அருந்துவது, மறுநாள் காலை கண் விழித்ததும் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணையை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவது போன்றவை நல்ல தீர்வைத்தரும்.

மலச்சிக்கல்தானே, அதற்கெல்லாம் கவலைப்படலாமா? என்று அலட்சியமாக இருக்காமல் அதை சரிசெய்வது பிற்காலத்தில் வேறுசில பாதிப்புகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் மலச்சிக்கல் முற்றியநிலையில் அது குடல் புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். காலப்போக்கில் உணவு கலாச்சாரம்கூட மாறிப்போய்விட்டது. எனவே, நாம் உண்ணும் உணவு முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்; இப்படி சொல்வதைவிட பழைய முறைக்கு திரும்ப வேண்டும். அது ஒன்றே மலச்சிக்கலை மட்டுமல்ல நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளும்.

உதாரணத்துக்கு மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள பழைய சோறு ஒன்றே போதும்.  நார்ச்சத்து, வைட்டமின் சத்துகள் மற்றும் பல்வேறுவிதமான சத்துகளைக்கொண்ட பழைய சோறு பல நோய்களை தீர்க்கக்கூடியது. கோடைகாலத்தில் தாராளமாக பழைய சோற்றினை உண்டு மலச்சிக்கலில் இருந்து தப்பிக்கலாம். ஏற்கெனவே முன்பு சொன்னதுபோல வேறு சில எளிய வழிமுறைகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின், மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time