இந்திய மின் துறையே இனி அதானியிடம் தான்!

-சாவித்திரி கண்ணன்

புதிய மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் நோக்கமே லாபத்தை தனியாருக்கும், நஷ்டத்தை மாநில அரசுகளுக்கும் பரிசளிக்கவும் தான்! இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின் கட்டணங்கள் தாறுமாறாக உயரும். எளிய, நடுத்தர பிரிவு மக்களுக்கு மின்சாரம் எட்டாக் கனியாகும். அதானியின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகும்!

ஏனென்றால், இந்தியாவிலேயே மிக அதிக தனியார் அனல் மின் நிலையங்கள் வைத்திருப்பது அதானி குழுமமே!  மகாராஷ்டிரா, குஜராத், சத்திஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான்.., என பல மா நிலங்களில் அதானியின் நிறுவனங்கள் 12,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அந்ததந்த மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. அதே போல பல மாநிலங்களிலும் காற்றாலைகளையும், சூரிய ஒளி மின்சக்தி நிறுவனங்களையும் அமைத்துள்ளது. அப்படியான அவர்களின் வியாபாரத்திற்கு அனுகூலமாகவே இந்த புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவானது கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது, பெட்ரோல் விலையை அம்பானி தீர்மானிப்பது போல, இனி மின்சாரக் கட்டணத்தை அதானி தான் தீர்மானிப்பார்.

இதனால் நுகர்வோர் இனி கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வார்கள்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மின்சார உற்பத்தி, மின் விநியோகம் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் வசம் செல்வதோடு, மாநில அரசு என்பதே மின்துறையை பொறுத்த மட்டில் செல்லாக்காசாகிவிடும். இந்த திருத்தத்தினால் மாநில மின் வாரியங்களுக்கு பதிலாக மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். மாநில அரசு தனக்கான உற்பத்திக்கு கூட இந்த ஆணையத்திடம் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டும்.


2003 இல் வாஜ்பாய் ஆட்சியில் புதிய மின்சாரச் சட்டம் உருவாக்கப்பட்டு அமல்படுத்த தொடங்கியது முதல் மின்சார வாரியம் தனியார் நிறுவனங்களின் வேட்டைக் காடானது. மின்வாரியம் ஆண்டுக்காண்டு அதிக கடனாளியாகிக் கொண்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் தான்  முதன் முதலில் மின்சார உற்பத்தி (Generation), மின்சாரம் அனுப்புதல் (Transmission), மின்சாரப் பகிர்மானம் (Distribution) ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறுவனங்கள் உருவாக்கினார்கள். தமிழ்நாட்டில் மின்சார வாரியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்” (TANGEDGO) என்ற பெயரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இது மின்சாரத் துறையில் தனியார் குழுமங்களை நுழைப்பதற்கான ஏற்பாடாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று தான்! இதற்கு பிறகு அரசு மின் உற்பத்தி நிறுவனங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. இந்தத் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கி வழங்கும் நிறுவனங்களாக அரசின் மின்சார நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. இந்த வகையில் மிக அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மாநிலங்கள் சென்றன.

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2, கோடியே 2 லட்சத்து 80 ஆகும். தற்போது வழங்கப்பட்டு வரும் மொத்த மின் இணைப்புகளில் விவசாயத்திற்கான மின் இணைப்பு 22 லட்சம் மின் இணைப்புகளாகும். 11 லட்சம் இணைப்புகள் குடிசை சார்ந்ததாகும். இனி இத்தனை நுகர்வோரையும் அதானியின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதே மத்திய பாஜக அரசின் நோக்கமாக உள்ளது.

எப்படி என்றால், இப்போது இந்தப் புதிய திருத்தச் சட்டம் மின்சார வழங்கலையும் தனியார் மயமாக்கத் திட்டமிடுகிறது. மின்சாரக் கம்பி என்ற அடிப்படை கட்டமைப்பு அரசுத்துறை மின்வாரியத்துடையது, அதில் வரும் மின்சாரம்  தனியாருக்கு உரிமையானது. இதன் மூலம் அரசு கட்டமைப்பை பயன்படுத்தி, தனியார் மின் கட்டணம் வசூலித்துக் கொள்வார்கள்.

என்ன கொடுமை என்றால், பொட்டல்காடு, கரடுமுரடான மலைப் பகுதிகள் எல்லாம் திரிந்து அலைந்து கம்பம் நட்டு, கம்பியை இழுத்துச் சென்று, மின்மாற்றி அமைத்து, கிராமங்கள் தொடங்கி மூலை முடுக்கெல்லாம் இணைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பணியாம்! அதில் செலுத்தப்படும் மின்சாரத்திற்கு சொகுசாக கட்டணம் வசூலித்துக் கொள்வது தனியார் நிறுவனங்களாம்! சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மத்திய பாஜக அரசின் தெளிவான காய் நகர்த்தல் இது தான். இலாபத்தை தனியார் மயமாக்குவது, இழப்பை அரசுடமை ஆக்குவது என்பதே. இந்த கெடு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டு உள்ளதே இந்த புதிய மின் திருத்த சட்டம்.

மின்சாரக்  கட்டண சர்ச்சை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நுகர்வோர் குழு நடத்திய ஒரு வழக்கில் அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,  “அதானி இலாபம் அடைவதற்காக அரசு நட்டம் அடைகிறதா?” என்று  நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக கேள்வி எழுப்பினார் என்பது நினைவிருக்கலாம்! ஏனெனில் எந்த நியாமும் இன்றி அதானி குழுமத்திடம் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு ஓர் அலகு (Unit) 7 ரூபாய் என்று மிகைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு முடிவு செய்து மின்சார வாரியப் பணத்தை அதிமுக அரசு அள்ளிக் கொடுத்தது. இவ்வாறு, அதானியிடம் வாங்கும் மின்சாரத்தின் காரணமாக தமிழக மின்வாரியம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளது. இனி ஒட்டு மொத்த தமிழகத்தையே அதானியிடம் இழக்க உள்ளது.

மத்திய பாஜக அரசின் புதிய மின்சார திருத்த சட்டமானது எந்த ஒரு மாநிலமும் தனக்கான சொந்த மின் தேவையை தானே உற்பத்தி செய்வதற்கும் ,விநியோகம் செய்வதற்குமான அனுமதியை மறுக்கிறது. அது தாங்கள் குறிப்பிடும் தனியார்களிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்தே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கிறது. அந்த வகையில் அதானியிடம் இருந்து தமிழக ரசு மின்சாரம் வாங்குவதற்காகவே இராமநாதபுரம் கமுதியில் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளது. அதே போல தெலுங்கானா அரசும் 8,000 மெகாவாட் மின்சாரத்தை அதானியிடம் வாங்கும் வண்ணம் அங்கு அதானிகுழுமம் 45,000 கோடி செலவில் சூரிய ஒளி மின் திட்டத்தை உருவாக்கி உள்ளது.மேற்கு வங்கத்தில் மாற்று எரிசக்தி, மின்சாரம், மின் விநியோகத் துறைகளில் அதானி குழுமம் தான் கொடிகட்டி பறக்கிறது.

ஒரு சில தனியார்கள் கொழுப்பதற்காக சட்டங்களை உருவாக்கியும், இருக்கும் சட்டங்களை திருத்தியும் செயல்படுகிறது மத்திய பாஜக அரசு. 75  ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிக்  கொண்டுள்ளோம். உண்மையான சுதந்திரத்தை நாம் பெற்றோமோ அல்லது பெற்ற சுதந்திரத்தை பறி கொடுத்து வருகிறோமோ.. தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time