சவால்களைச் சமாளிப்பாரா..? பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ்!

- ச.அருணாசலம்

பிரிட்டனின்  பிரதமராக துணிச்சலான பெண்மணி லிஸ் ட்ரஸ் வந்துள்ளார். இவர் இங்கிலாந்து வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் என்றாலும், வலுவான ஆணாதிக்க சூழல்களை மீறி தலைமைக்கு வந்துள்ளார்! இவர்  தலைமைக்கு வந்த விதமும், அமைச்சரவை சகாக்களை தேர்ந்தெடுக்கும் விதமும் சுவாரசியமானது!

கன்சர்வேட்டிவ்- பழமைவாத- கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ் நான்கு சுற்று உள்கட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி வாகை சூடி அதனடிப்படையில் பிரதமர் பொறுப்பு ஏற்றுள்ளார் . நான்கு சுற்று தேர்தல்களிலும் முன்னணி பெற்று இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி சுனாக் என்ற பெருந்தனக்காரரை- போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவரை- தோற்கடித்து பிரதமர் பதவியை அடைந்துள்ளார் லிஸ் ட்ரஸ்.

பொய்யும், புனை சுருட்டுமாக செயல்பட்டவரான அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக தொடர விரும்பவில்லை என தன் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து, துணிச்சலாக வெளியேறியவர் லிஸ் ட்ரஸ் தான் என்பது கவனத்திற்கு உரியது. ஒரு தவறு நடக்கிறது என்றால், அதுவும் சொந்தக் கட்சியின் தலைமையே என்றாலும், அதை மெளனமாக ஏற்றுக் கொள்ள முடியாது என முதன்முதலாக அமைச்சரவையில் இருந்து வெளியேறியதன் மூலம் மக்களிடையே மரியாதை பெற்றார்! அவரைத் தொடர்ந்து தான் மற்றவர்கள் வெளியேறினர். இதனால் தான் போரீஸ் ஜான்சன் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது!

ரிஷி சுனக்கை தோற்கடித்த லிஸ் ட்ரஸ்

ஜனநாயகம் என்றால், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டுமே என்ற இந்திய புரிதலுக்கு இத்தகைய நடைமுறை ஒரு சுவாரசிமான அதிர்ச்சியை தரக்கூடும். ஏனேனில், இந்தியாவில் உள்ள கட்சிகள்  உட்கட்சி ஜனநாயகத்தை மறந்து பல்லாண்டுகள் ஆகி விட்டதால் இது புதுமையாக காட்சியளிப்பதில் வியப்பில்லை.

ஜனநாயகம் பல விதம்!

சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதோடு நின்று விடுவதல்ல ஐனநாயகம். நாட்டு நடப்பில் , நாட்டின் அரசியல் பாதையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அதை நோக்கிய திட்டமிடலில் வாக்காளர்களின் பங்கும் பல்வேறு வடிவங்களில் அமைந்துள்ளது, அதில் பொதுமக்கள்-வாக்காளர்கள்- தங்களின் விருப்பு மற்றும் தவிர்ப்புகளை தங்களது வாக்குகள் மூலம் முடிவெடுக்கின்றனர்.

கவுன்டி-கிராமங்கள்-களில் தொடங்கி நகராட்சி, பெரு நகரம் வட்டார குழுமம் இறுதியில் நாடாளுமன்றம் ஆகிய அனைத்து அரசியல் நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளிலும் மக்களின் வெளிப்படையான ஒப்புதலும், அங்கீகாரமும் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அதற்கான தளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன இந்த  ‘ஜனநாயக’ நாடுகளில். அந்த நாடுகளில்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும்- (கிராம சபை, நகராட்சி உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும்- வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். அக்கடமையினின்றும் அவர்கள் நழுவமுடியாது..

தனது சகாகளோடு கலந்து ஒன்றாக அமர்ந்து உரையாடும் லிஸ் ட்ரஸ்!

கிராம ஆட்சி, பஞ்சாயத்து, நகராட்சி , மாவட்ட கவுன்சில் என்று நம்நாட்டிலும் (தமிழ் நாட்டில்) முன்பு சுய அதிகாரம் பெற்ற அமைப்புகள் இருந்தன.

பிறகு 1988-89 வாக்கில் ராஜீவ் காந்தி ஆட்சியில் பஞ்சாயத்து ஆட்சி முறையை நாடு தழுவிய நடைமுறையாக்க சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

நாடாளுமன்றம், சட்ட மன்றம் ஆகிய இரு பிரதிநிதித்துவ அமைப்புகளை தொடர்ந்து, அதன் கால்களாக கிராமங்களும், நகரங்களும் இருக்க வேண்டும். அவை சுய அதிகாரமும், நிதி வலிமையும் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பஞ்சாயத்து-நகர பாலிகா சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இதை பல எதிர்கட்சிகள் அன்று எதிர்த்தன என்பதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும் . பல எதிர்ப்புகளுக்கிடையில் சில சமரசங்களுடன் சட்டமான பஞ்சாயத்து ஆட்சி முறையின் இன்றைய நிலை நாம் அறிவோம் .

ஆனால், மற்றைய ஜனநாயக நாடுகளில்,  ஆட்சியமைப்புக்குள்ளும் ஆட்சியில் பங்கு பெறும் கட்சிகளின் அமைப்புக்குள்ளும் வெளிப்படைத்தன்மையும், ஜனநாயகமும் அடிப்படை கூறுகளாக உள்ளன. அதனால் தான் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல்களும்அதையொட்டிய பரப்புரைகளும் -தலைவரானால் என்ன செய்வோம் என்ற கொள்கையறிக்கை – அவசியமாகிறது அங்கே! விவாதங்களின் இறுதியில் வாக்கெடுப்பு மூலம் தலைவரான நபர் சொன்னதை செய்கிறாரா என்ற கண்காணிப்பும் விமர்சனமும் அப்பொழுதிருந்தே தொடர்கிறது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரக்சிட் (வாக்கெடுப்பு) மூலமாக வெளியேறிய பிரிட்டன் பொருளாதார ரீதியாக இன்று தடுமாறிக் கொண்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் உற்பத்தி மந்தத்தையும், சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் சாதாரண மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைந்துள்ளன, இதன் விளைவே ‘கோமாளி’ போரிஸ் ஜான்சன் பதவி விலக நேரிட்டதும், அவருக்கு மாற்றாக புதிய பிரதமர் தேர்வும் நடந்துள்ளன.

வெற்றி பெற்றுள்ள லிஸ் ட்ரஸ் தன் அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்த்தில் வெள்ளையரல்லாத நான்கு கறுப்பினத்தாருக்கு வாய்ப்பளித்துள்ளார். துணை பிரதமராகவும், சுகாதாரத் துறை செயலாளராகவும் தெரஸாகாபி, நிதி அமைச்சர் குவார்டெங், வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, உள்துறை அமைச்சர் சூலா பிரேவர்மன் ஆகியோரே அந்த நால்வர்! இதில் சூலா பிரேவர்மனின் தாய் உமா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்வேறு இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் தந்து பன்முகத் தன்மையை பேணியுள்ளார் லிஸ் ட்ரஸ்! தனக்கு போட்டியாளராக கருதக் கூடியவர்களுக்கும் அவர் முக்கிய பொறுப்பும், வாய்ப்பும் தந்துள்ளார். இதன் மூலம் திறமையாளர்களை நாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆர்வம் வெளிப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு “உதவித்தொகை”களை நேரடியாக வழங்கி வருகிறது. இவ்வுதவி தொகைகள் சிறு தொழில் முனைவோருக்கும் வேலையிழந்த நபர்களுக்கும் மூடப்பட்ட தொழிற்கூடங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இத்துடன் பணவீக்கமும், விலைவாசி உயர்வும் சேர்ந்து கொண்டதால் வாழ்க்கை செலவு விண்ணை முட்டியுள்ள இங்கிலாந்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதிக வரி விதிப்பு வேண்டுமா அல்லது உதவித் தொகை அளிப்பதை அதிகரிக்க வேண்டுமா என்ற கேள்விகளையே பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட ரிஷி சுனாக் (முன்னாள் நிதி அமைச்சர்) மற்றும் லிஸ் ட்ரஸ் (முன்னாள் வெளியுறவு அமைச்சர்) ஆகியோர் எதிர் கொண்டனர்.

”மக்களின் மீதுள்ள வரிச்சுமையை குறைப்பேன், உதவித்தொகைகளை கட்டுக்குள் வைப்பேன்” என்று தனது பாதையை முன்வைத்து லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்து அரசின்,  ஐரோப்பிய யூனியனுடான மோதல் போக்கு பல பொருளாதார தடைகளை பிரிட்டனின் வளர்ச்சிப் பாதையில் ஏற்படுத்தியுள்ளன. இதோடன்றி, சீனாவுடனான மோதல் போக்கால் தொழில் நுட்பம், நிதி ஆளுமை மற்றும் வணிக துறைகளில் பல இறக்கங்களை பிரிட்டன் மேற்கொள்கிறது. உக்ரைன் போரால் ரஷியாவிற்கெதிராக தடைகளை ஏற்படுத்தியதில் முன்னணியில் உள்ள பிரிட்டன் எரிசக்தி தட்டுப்பாட்டால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்த இக்கட்டில் இருந்து இங்கிலாந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்டெடுக்கும் வேலை எளிதானதல்ல. போதாக்குறைக்கு போரீஸ் ஜான்சன் கடும் கோபத்தில் உள்ளாராம்!

உண்மை நிலவரத்தை – பிரக்சிட் விவகாரத்திலும் சரி, உக்ரைன் போர் விவகாரத்திலும் சரி – அறிந்திருந்தும் பிரிட்டிஷ் மக்களிடம் உண்மையை கூறி, தங்கள் தவறை ஒத்துக் கொள்ள ஒட்டு மொத்த கன்சர்வேட்டிவ் கட்சியே தயங்குகிறது. இந்தச் சூழலில் லிஸ் ட்ரஸ் பிரதமராகி என்ன சாதிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time