தமிழுக்கு உண்மையாகவே பெரிய பங்களிப்பை தந்து, காலத்தால் அழியாத தடங்களை பதித்தவர் மால்கம் ஆதிசேசய்யா! உலகப் பேரறிஞரான ஆதிசேசய்யா, சர்வதேச நிறுவனமான யுனெஸ்கோவின் முக்கிய தலைமை பொறுப்பில் அரும்பணி ஆற்றப் போன நிலையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெரும் தொண்டாற்றியுள்ளார்!
இன்றைக்கு நாம் கொண்டாடும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாகவும், அது நின்று நிலை பெறவும் யுனெஸ்கோவிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தந்தவர் ஆதிசேசய்யா!
மூன்றாம் உலகத் தமிழ் மாநாட்டை பாரிஸ் மாநகரில் நடத்தி, சாதனை படைத்தவர்! இதன் மூலம் செம்மொழியான தமிழின் தொன்மையை, அதன் மொழி வளத்தை, தனித் தன்மையை உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்த தனிப் பெரும் ஆளுமை தான் ஆதிசேசய்யா!
உலகின் முக்கிய ஆறு மொழிகளில் மட்டும் வந்து கொண்டிருந்த யுனெஸ்கோ கூரியர் என்ற அறிவியல் இதழை முதன் முதலாக இந்திய மொழியான தமிழில் கொண்டு வந்தவர். இந்தியில் வந்த பிறகு தான் தமிழில் வெளிவர வேண்டும் என்ற இந்திய அரசிடம், ”தமிழ் இலங்கை, சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. மலேசியாவில் பாராளுமன்ற மொழியாக உள்ளது. ஆகவே சர்வதேச மொழியான தமிழில் முதலில் வரட்டும். இரண்டாண்டுகள் கழித்து இந்தியில் கொண்டு வரலாம்” என சமாதானப்படுத்தி கொண்டு வந்தவர்.
திருக்குறளை முதன் முதலாக ஆங்கிலத்திலும், பிறகு ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஸ், அரபி மற்றும் ரஷ்ய மொழிகளில் வெளியிடக் காரணமானவர்.
தமிழகத்தின் புராதனப் பெருமை மிக்க சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பத்து கோவில்கள் புனரமைத்து புது பொலிவு பெற உலகளாவிய நிதியை பெற்றுத் தந்தவர். இவர் தமிழுக்கு ஆற்றிய அரும் பெரும் பணிகளுக்கு ஈடாக சொல்லத்தக்க அளவுக்கு ஒரு அரசியல்வாதியை நம்மால் காட்ட முடியாது.
இவர் ஒரு அரசியல் இயக்கத் தலைவராக இருந்திருந்தால் வருடா வருடம் நினைவு கூர்ந்து தொண்டர்களால் கொண்டாடப்பட்டு இருப்பார். சென்னையின் முக்கிய பகுதியில் இவருக்கு சிலை வைத்திருப்பார்கள்!
இவர் ஏதோ தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் மட்டும் தான் இவ்வளவு பங்களிப்பு செய்துள்ளார் அவ்வளவே, என கடந்து செல்ல முடியாத பேராளுமை ஆதிசேசய்யா! இவர் யுனெஸ்கோவில் இருந்த காலத்தில் வளரும் ஏழை நாடுகளின் முன்னேற்றத்திற்காக தன்னை முற்ற முழுக்க அர்ப்பணித்துக் கொண்டவர். இவருடைய அன்றைய சேவைகள் இன்றும் பல நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளன!,
ஆங்கிலேயர் ஏற்படுத்திய மெக்காலே கல்வி திட்டத்திற்கு மாற்றாக சுதேசிய கல்வியை கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டமாக கொண்டு வரக் காரணமானவர் ஆதிசேசய்யா! இன்று இந்தியாவின் புகழ் பெற்ற என்.சி.ஆர்.டி என்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தொடங்க அடித்தளமிட்டவர். இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டவர், எம்.ஐ.இ.டியில் வானூர்தி பொறியியல் படிப்பு தொடங்க காரணமானவர், இந்திய திரைத்துறையின் மறுசீரமைப்புக்கு உதவியர் என்று பட்டியல் போட்டால் இவர் சாதனை மிகப் பெரிது!
சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவாழ்வு வாழ்ந்து மனிதகுலத்தின் கல்வி, பொருளாதாரம், கலாச்சார முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இவர் முதல் 23 ஆண்டுகள் சர்வதேச அளவிலும், எஞ்சிய ஆண்டுகள் தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் பங்களித்துள்ளார்.
Also read
இப்படி அறிந்து போற்றப்பட வேண்டியவர் குறித்த நாம் அறியாத செய்திகளை இந்த நூலில் மிகச் செழுமையாக தொகுத்து தந்துள்ளார் ஆ.அறிவழகன்
ஆதிசேசய்யாவால் உருவாக்கபட்ட நிறுவனம் தான் சென்னை ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனமாகும். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆ.அறிவழகன். அறிவுரு தமிழ்த் தூதர் என்ற அடைமொழியிட்டு ஆதிசேய்யா குறித்து இந்த நூலை மிகச் சிறப்பாக எழுதியுள்ளதன் மூலம் தமிழர்கள் நன்றி கொன்றவர்கள் என்ற வசை மொழி வராமல் காத்துள்ளார்.
நூல் ; அறிவுறு தமிழ்த் தூதர் ஆதிசேசய்யா
ஆசிரியர்; ஆ.அறிவழகன்
டீனு பதிப்பகம்,
சென்னை 600014
அலைபேசி; 9382135385, 9790200478
சாவித்திரி கண்ணன்
Leave a Reply