அற்புதமான வாய்ப்புகளை தவறவிட்ட மாநாடு!

-சாவித்திரி கண்ணன்

வியக்கத்தக்க அளவில் வெகு பிரம்மாண்டமாக மதுரையில் அதிமுக மாநாடு நடந்துள்ளது. மிகப் பெரும் மக்கள் செல்வாக்கு அதிமுகவிற்கு உள்ளது என்பது நிருபணமாகியுள்ளது! ஆனால்.. மதுரை அதிமுக மாநாடு தற்போது தமிழக அரசியலில் தனக்கான வரலாற்று வாய்ப்புகளை கோட்டை விட்டதை என்னென்பது..?

சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் பந்தல் போட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரத்தக்க அளவில் ஒரு மாநாட்டை நடத்தி உள்ளனர். வந்தோருக்கான உணவு தயாரிப்பு மற்றும் விருந்தோம்பல், வருகின்ற வாகனங்கள் நிறுத்தம்.. ஆகிய ஏரியாக்களையும் சேர்த்து மதிப்பிட்டால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடந்துள்ளது! சமையற் கலை தொடர்பான பணிகளில் 10,000 பேர், வாகன நிறுத்த ஏற்பாடுகளில் 3,000 பேர், சீருடை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் 3,000 பேர்..என ஒவ்வொரு வகையிலுமாக மிகப் பெரிய அளவிலான மனித உழைப்பிலும், பொருட் செலவிலும் மாநாடு நடந்து முடிந்துள்ளது.

விமானத்தில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவப்பட்டுள்ளன! பெருந்திரள் மக்களுக்கு குடிதண்ணீர் ஏற்பாடுகள், கழிவறை ஏற்பாடுகளும் செய்துள்ளனர். பல ஊர்களில் இருந்து வந்து தங்குவதற்கு பல ஹோட்டல்களும், திருமண மண்டபங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கிலான வாகனங்களாலும், லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்களாலும் மதுரை மாநகரமே திணறியுள்ளது!

எனில், சந்தேகமில்லாமல் அதிமுக ஒரு மக்கள் இயக்கம் தான்! இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை திரட்ட முடிகிறது. பிரம்மாண்ட செலவு செய்து மாநாடு நடத்த முடிகிறது! ஆனால், மக்கள் நலன் சார்ந்து சுதந்திரமாகப் பேசக் கூடத் திரானியற்ற தலைவர்களால் நிரம்பியுள்ளதே இந்தக் கட்சி. மாநாட்டில் வாசிக்கப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கொண்டு பார்ப்போம்;

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட துடிக்கும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசையும், கர்நாடகா அரசையும் கண்டிக்கத் தவறும் தமிழக திமுக அரசை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் முந்தைய கர்நாடகா பாஜக அரசின் அழுத்தத்தால் காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சுற்றுச் சூழல் பாதிப்பு  உள்ளிட்ட வெவ்வேறு தடைகளை மத்திய பாஜக அரசு நீக்கி, அனுமதி கொடுத்ததையும் சேர்த்து அல்லவா தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கண்டிக்க முடியாவிட்டால் கூட, ‘மத்திய பாஜக அரசு இதை தடுக்க வேண்டும்’ என்று கூட தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லையே!

மற்றொரு தீர்மானம் கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசுக்கு கண்டணமாம். நல்ல வேளையாக ‘மத்திய அரசால் தான் கச்சத் தீவை மீட்க முடியும்’ என்பது அதிமுகவிற்கு தெரிந்திருக்கிறதே! ஆனால், அப்படித் தெரிந்தும் திமுக அரசு வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்றித் தர மத்திய பாஜக அரசுக்கு அதிமுக கட்சி சார்பில் அழுத்தம் தரத் துணிவில்லையே!

எல்லாவற்றையும் விட படுதமாஷ், ‘நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடுவதாக’ எடப்பாடி பழனிச்சாமி கூறுவது தான்! அப்படியானால், சட்ட சபையில் ‘நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என அதிமுகவும் சேர்ந்து கையெழுத்துப் போட்டது நாடகமா?

இங்கே மிகப் பகிரங்கமாக ஒரு அதிகப் பிரசங்கி  ஆளுநர் ”நீட் தேர்வு விலக்கு மசோதாவை நான் ஏற்கமட்டேன்” என்கிறார்! ”நீட் அவசியம்” என பாஜக மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இவர்களை எதிர்க்கத் துணிவில்லை அதிமுகவிற்கு! தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் நீட் தற்கொலைகள் அதிமுகவினர் மனதை உலுக்கவில்லையா? ‘தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றித் தர வேண்டும்’ என ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றத் தெம்பில்லையே அதிமுக தலைமைக்கு!

என்.எல்.சி நிறுவனத்திற்காக விவசாயிகளின் நிலங்களை அடாவடியாக பிடுங்கித் தருகிற திமுகவை கண்டிக்கிறீர்கள் தவறில்லை. ஆனால், ”என்.எல்.சியை விரிவாக்கம் செய்ய வேண்டாம்” என மத்திய பாஜக அரசுக்கு அதிமுகவால் ஏன் சொல்ல முடியவில்லை?

தமிழகத்தை பாதிக்கும் எந்த ஒரு மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத்தையும் அதிமுக எதிர்க்கவில்லையே!

தமிழகத்தில் மத்திய பாஜக அரசின் மோட்டார் வாகன சட்டம் திமுக அரசால் ஏற்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் அநியாயமான அபராத கட்டண வசூல் கொள்ளை நாளும் அரங்கேறி வருகிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத கொள்கைக்கு துணை போகிறது திமுக என்று அரசியல் செய்து ஆதாயம் அடையும் தைரியம் கூட இல்லையே அதிமுக தலைமைக்கு!

கன்னியகுமரி தொடங்கி பழவேற்காடு வரை மின் உற்பத்தி நிறுவனங்கள் பிரம்மாண்ட துறைமுகம், டேட்டா சென்டர்கள், எட்டு வழிச் சாலைக்கான நிர்பந்தங்கள் என தமிழகத்தை விழங்கும் அதானிக்கு கண்டனம் தெரிவிக்கக் கூட தைரியமில்லையே! வருங்காலத்தில் அதானி வசம் செல்லக் கூடிய பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் கிராம மக்களுக்கு ஆதரவு தர முடியாத ஒரு எதிர்கட்சி தான் அதிமுக!

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதில் மக்களுக்குள்ள அதிருப்தியை அதிமுகவால் புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசுக்காக கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க கொண்டு வரப்பட்ட நில அர்ஜித மசோதாவை அமல்படுத்தும் திமுகவை எதிர்த்து கேட்க திரானியில்லை.

கள்ளக் குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி அநியாயமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதிலும் சரி, தற்போது அதே கள்ளக் குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர் மோகன் என்பவர் நடத்தும் மகாகவி பாரதி பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதற்கும் வாய் மூடி மெளனம் சாதிக்கிறது தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுக!

வேங்கைவயல் விவகாரத்திலும், நாங்குநேரி விவகாரத்திலும் துல்லியமாக வெளிப்படும் சாதி ஆதிக்க போக்குகளை கண்டித்து, ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க மனமில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் திமுக அரசு மீது தற்போது மக்களிடம் ஏற்பட்டு வரும் அதிருப்திகளை அறுவடை செய்வதற்கான அருகதையைக் கூட இழந்து நிற்கிறது அதிமுக என்று தான் சொல்ல முடியும்.

தமிழகத்தில் சாதி அமைப்புகளை, சங்கங்களை அரவணைத்து, சாதி அரசியலை முன்னெடுத்து, பிற்போக்கு அரசியலை வளர்த்து சென்று கொண்டிருக்கும் பாஜகவின் ஆபத்தான அரசியலை வாய் மூடி மெளனப் பார்வையாளராக பார்த்துக் கொண்டுள்ளது அதிமுக!

போதாக்குறைக்கு நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான அண்ணாமலையைப் போன்றவர்கள் அதிமுகவை அடிக்கடி மட்டம் தட்டிப் பேசும் போதெல்லாம் அமைதி காத்து வருகிறீர்கள்!

இந்த லட்சணத்தில் செங்கோல், வீரவாள் எல்லாம் வழங்கப்பட்டு, புரட்சித் தமிழர் என்ற பட்டம் வேறு, எடப்பாடி பழனிச்சாமிக்கு தரப்பட்டுள்ளது! இந்த பெயரைக் காப்பாற்றவாவது பாஜகவின் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவாரா எடப்பாடி பழனிச்சாமி?

கடைசியாக ஒன்று! ”அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது. எந்தக் கட்சியாலும் முடியாது” என்றீர்கள்! இப்படி சொல்லிய சொல்லில் உங்களுக்கே நம்பிக்கை இருந்திருக்குமானால் பாஜக அண்ணாமலை உங்களுக்கு எம்மாத்திரம்?

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பிரதான எதிர்கட்சிக்கான பங்குபாத்திரம் என்னவென்றே உணராத ஒரு கட்சிக்கு இன்றைக்கு உள்ள மக்கள் செல்வாக்கு இனி வருங்காலத்திலும் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவே!  மக்கள் நலனில் சமரசமில்லாத நிலைபாடுகளும், செயல்பாடுகளுமே ஒரு கட்சியை அழிவின்றி காப்பாற்றும். கூடுகின்ற கூட்டத்தைக் கண்டு மயங்குவது அறியாமையில் தான் முடியும்.

ஆம்! “இவ்வளவு பிரம்மாண்ட செல்வாக்கு கொண்ட அதிமுகவை வெளியில் இருந்து யாரும் அழிக்க அவசியமில்லை! நாங்களே அழித்துக் கொள்வோம்” என்பது தான் அதிமுக மாநாடு குறித்து அதன் தலைமை நமக்கு சொல்லும் செய்தியாகும்.

வரலாறு காணாத மிகப் பெரிய மாநாட்டை நடத்தி காண்பித்துவிட்டார்கள்! ஆனால், மத்திய அதிகார மையமான பாஜகவிற்கு பயந்து தமிழ்நாட்டையும், மக்களையும் அடகு வைத்து, அடங்கிப் போகும் அதிமுக தலைமையை வரலாறு மன்னிக்குமா?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time