ஒரே நாடு,ஒரே சட்டம்,ஒரே குடும்பம்! – ராஜபக்சேவின் நரித்தனம்

சாவித்திரி கண்ணன்

இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்கு போராடியது ஒரு காலம்.ஆனால்,இன்று ராஜபக்சே அரசாங்கம் நாடாளுமன்றம், அதன் மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் அனைத்தையும் செல்லாக்காசாக்கிவிட்டு, நாட்டின் அதிபர் ஒருவருக்கே அனைத்து அதிகாரமும் என்ற வகையில் 20வது சட்டதிருத்தத்தை செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையுமே பறித்து, தன் ஒற்றைக் குடும்ப சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதானது போராட்ட களத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது!

இலங்கையில் 20 வது சட்டதிருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் இன்னொரு பேரழிவை நிகழ்த்த ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமிடுகின்றனரோ என்ற அச்சம் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.

ஒரு தனிமனிதருக்கு வானாளாவிய அதிகாரத்தை வழங்கும் தன்மை ஜன நாயகத்தையே சவக்குழிக்குள் தள்ளும்.ஆகவே’ அதிபர் என்பவரது அதிகாரத்தை வரையறுத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகப்படுத்தும் 19 வது சட்ட திருத்தம் சென்ற ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை தற்போது செல்லாக்காசாகிவிட்டது இந்த 20 வது சட்டதிருத்தம்.

மக்களாட்சி தத்துவத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு, மீண்டும் மன்னராட்சி முறைக்கு நாட்டை கொண்டு சென்று இலங்கை தீவை தன் குடும்பத்தின் தனிச் சொத்தாக்கும் ராஜபக்சேவின் நோக்கமாகவே இந்த 20 வது சட்டதிருத்தம் அமலாகியுள்ளது. அதாவது, நாடாளுமன்றம்,மக்கள் பிரதிநிதிகள்..எல்லாவற்றையும் ஒரு வெற்றுச் சடங்காக்கிவிட்டு, அந்த நாட்டின் அதிபரை ஒற்றை அதிகாரமையமாக்கியுள்ளது இந்த சட்ட திருத்தம்!

இந்த 20 வது சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சங்களாவன;

# ஜனாதிபதியால் பிரதமரை நியமிக்கவும் முடியும் நீக்கவும் முடியும்!

#  அமைச்சர்களை நியமிப்பதில் பிரதமருடன் கலந்தாலோசிக்க தேவையில்லை. தன்னிச்சையாக முடிவெடுக்கலாம்.

# தற்போது, ராஜபக்க்ஷ அரசியலமைப்புக்கு முரணாக பாதுகாப்பு அமைச்சராக இருப்பதுடன், 23 பிரதான துறைகளை தானே வைத்துள்ளார்.!

# பாராளுமன்றம் அதன் ஐந்தாண்டு காலத்தின் ஒரு வருடத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதியால் அதை கலைக்க  முடியும்.!

# குற்றவியல் வழக்கு உட்பட எந்தவொரு வழக்குகளிலிருந்தும் ஜனாதிபதி விலக்கலிப்பு உள்ளவர். எந்த சட்டத்தாலும் அவரை கேள்விகேட்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது! மேலும் அவர் மீது அடிப்படை உரிமை வழக்குகள் கூட பதிவு செய்ய முடியாது.!

# தேர்தல் ஆணையம், காவல்துறை,, பொது சேவை, மனித உரிமைகள், லஞ்சம், ஊழல் மற்றும் நிதி தொடர்பான ஆணைக்குழுக்களின் தலைவர்களை அதிபரே நியமிப்பார்!,

#  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் அதிபரின் விருப்பத்திற்கு உட்பட்டதே!

#  முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளையும் ஜனாதிபதி நியமிக்க முடியும். இந்த நியமனங்களை பற்றி, பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கத்தவர்களாக கொண்ட ஒரு குழுவிடம் கலந்துரையாடலாம். ஆனால்,அவரது முடிவே இறுதியானது.

#. பாராளுமன்ற பேரவையில் ஜனாதிபதி பங்குபெறுவதை கட்டாயப்படுத்த முடியாது!

#  24 மணி நேரத்திற்குள் பாராளுமன்றத்தில் “அவசர மசோதாக்களை” நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது., இதன் மூலம் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் இருந்து எந்தவொரு சட்ட சவாலையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆட்சியாளர்கள் விரும்புவது தெளிவாகியுள்ளது. இந்த சட்ட திருத்தத்தில் இலங்கை அதிபர் ஒரு கடவுள் என்று சொல்லாதது தான் பாக்கி! மற்றபடி, அனைத்துக்கும் அப்பாற்பட்ட அதிகாரமிக்கவராக அவரை நிலை நிறுத்துகிறது இந்த சட்டதிருத்தம்.

ஏற்கனவே இரு முறை அதிபராகவும்,மூன்றுமுறை பிரதமராகவும் இருந்துள்ள ராஜபக்சே தற்போது தன் தம்பியான அதிபர் கோத்தபயேவிற்கு அதிக அதிகாரங்களை உறுதிபடுத்தும் இந்த சட்டதிருத்ததை நிறைவேற்றுவதன் மூலம் அடுத்து தற்போது அமைச்சராக இருக்கும் தன் மகனை அதிபராக்கவே இவ்வாறு காய் நகர்த்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் ராஜபக்சே சகோதரர்கள் நால்வர், அவர்களின் மகன்கள்,அவரது சகோதரி குடும்பம் என பலர் இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பொறுப்புகளில் அதிகார மையமாக இருந்துவருகின்றனர். இதை நிரந்தரப்படுத்தவே இந்த முனைப்பு எடுக்கப்பட்டுள்ளது.

2009 ன் போர்குற்றங்களுக்காக ராஜபக்சேவை தண்டிக்காமல் விட்டதன் விளைவை தற்போது அந்த நாடு அனுபவிக்கிறது. இத்தனைக்கும் இந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனாவை  தமிழ் கட்சிகள் ஒரு சிலவும்,இஸ்லாமிய இயக்கங்களும்,மலையகத் தமிழர் கட்சி என்பதாக பத்துக்கு மேற்பட்ட கட்சிகள் ஆதரித்தன! கூட்டணி வைத்தன. இவர்களின் ஆதரவை பெற்றதால் தான் 59.9% வாக்குகளை பொதுஜனபெரமுனா பெற முடிந்தது.

இந்த 20 வது சட்டதிருத்தம் ராஜபக்சேவை ஆதரித்த அனைத்து இயக்கங்களையும் ஏமாற்றியுள்ளது. அத்துடன் தீவிர சிங்களவாத கட்சியாக அறியப்பட்ட ஜே.வி.பியே இதை கடுமையாக எதிர்த்துள்ளது. அனைத்து இடதுசாரி, முற்போக்கு அமைப்புகளும், தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளும், இஸ்லாமிய இயக்கங்களும்,மலையக தமிழர் அமைப்புகளும் இதை ஏற்கவில்லை.

இத்துடன் இன்னொரு பெரிய ஆபத்தாக இலங்கையின் மாகாண அரசுகளுக்கு குறைந்தபட்ச உரிமைகளை உத்திரவாதப்படுத்தும் 13 வது சட்டதிருத்தையும் ஒழிக்க போவதாக ராஜபக்சே கட்சியினர் பேசிவருகின்றனர். அப்படி நடக்குமானால்,அது தமிழர்களுக்கு மட்டும் செய்யும் துரோகமாக இருக்காது. சிங்களர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது மாகாணங்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

சர்வாதிகாரத்திற்கு வித்திடும், தனி நபர் ஏதேச்சதிகாரத்திற்கு வழிவகுக்கும் பாதையில் அடியெடுத்துவைக்க ராஜபக்சே சகோதரர்கள் துணிந்துவிட்டனர்- தங்களுக்கு இருக்கும் நாடாளுமன்ற மெஜாரிட்டி என்ற பலத்தைக் கொண்டு!

ஆனால், இதன் மூலம் தங்கள் தலைகளுக்கு தாங்களே கொள்ளிவைக்க அவர்கள் துணிந்துவிட்டனர் என்று தான் அர்த்தமாகிறது. இனி, இலங்கையில் உருவாக உள்ள அரசியல் கொந்தளிப்பு தமிழினம் சார்ந்த ஒன்றாக மட்டும் இருந்துவிடாது. அது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டமாகத் தான் உருவெடுக்கும்.

ராஜபக்சே சகோதர்களின் இந்த குடும்ப அதிகாரத்திற்கான ஜனநாயக சீர்குலைவை இந்தியா உள்ளிட்ட எந்த உலக நாடுகளும் ஏற்காது- சீனாவைத் தவிர! சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணும் ராஜபக்சே சகோதர்கள் விஷயத்தில் இந்தியா முன்னெப்போதையும் விட எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஒரே நாடு,ஒரே சட்டம் என்ற முழக்கத்தின் பின்னணியில் ஒரே குடும்பம் உள்ளது என்ற உண்மையை இலங்கை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருப்பார்கள்!

2009 போருக்கு பிறகு அந்த நாட்டில் நிராதரவான குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை! தமிழர்கள் தரப்பின் இனவாத அரசியல் முடிவுக்கு வந்த நிலையில் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கான அரசியல் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கையை முற்றிலும் சீர்குலைத்துவிட்டனர் ராஜபக்சே சகோதர்கள்! கொரானா காலகட்டத்தில் பல தொழில்கள் நசிந்து, பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மற்றும் பலர் சம்பளக் குறைப்பு தாங்காமல் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வியாபாரமனைத்தும் மந்த கதியில் தான் உள்ளன. இந்த நிலையில் இலங்கையில் ஒரு குடும்பம் மட்டுமே ஒட்டுமொத்த தீவையும் விழுங்கி ’ஸ்வாகா’ செய்ய நினைப்பது தான் சோகத்திலும் சோகம்!

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time