சாதிகளைக் குறித்த விவேகானந்தரின் மதிப்பீடுகள்..!

-ஆர்.பட்டாபிராமன்

விவேகானந்தர் வீர மதத்துறவி  என்கிற சிமிழுக்குள் அடங்குபவரல்ல! அவரின் சமூக அரசியல் சிந்தனைகள் பார்வை தீர்க்கம் நிறைந்தவை. சமூக வளர்ச்சி, அரசின் தோற்றம், இந்திய சமூகத்தில் கொள்ளவேண்டியவை- தள்ள வேண்டியவை குறித்து அவர் எழுதியவை நமக்கு பிரமிப்பு ஊட்டக்கூடியன. அவரின் மேதாவிலாசத்தை பறை சாற்றுவன.

உண்மையான ஆன்மீகம் என்ன என்ற புரிதலையும், இந்தியாவில் சாதிகள், அவற்றின் குணாம்சங்கள், சமூக பங்களிப்புகள் ஆகியவை குறித்த துல்லியமான மதிப்பீடுகளையும் விவேகானந்தர் கொண்டிருந்தார்!

ஆன்மீக வழியை அனைவருக்கும் திறக்க கிருஷ்ணன், சமூக சமத்துவத்திற்காக  புத்தம்- வைஷ்ணவம் என போராட்டங்கள் நடந்தன! ஆன்மீக சமத்துவம் பேசிய நாடு சமூக வேறுபாடுகளை கொண்டே நகர்ந்தது.

வடக்கில் குமரிலர், தெற்கில் ஆதிசங்கரர்  ராமானுஜர் என ‘செக்ட்’ வகைப்பட்ட கோட்பாடுகள், சடங்கு முறையிலான இந்துயிசம் உருவாயின. சங்கரரின் இயக்கம் மக்கள் தொண்டு இயக்கமாகாமல் அறிவு இயக்கமானது. சமஸ்கிருத வாகனத்துடனும், சாதிய சட்டங்களுடனும் அது பயணித்தது. ராமானுஜர் உணர்வுகளின் எழுச்சியாய் நடைமுறைத் தத்துவங்களுடன் சாதாரண மக்களை ஈர்த்து பயணித்தார். ராமானந்தர், கபீர், சைதன்யர், நானக் மனிதர்களின் சமத்துவம்  பேசினர். அதே நேரத்தில் பல்வேறு தத்துவ திசைகளில் அவர்களது பயணம் சென்றது

”முகலாயர்கள், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என நுழைவை கண்டோம். ஆங்கிலேயர் வெற்றி பைபிளின் வெற்றி என பேசப்பட்டது. ஆனால் அவர்களின் உண்மையான யுத்தக்கொடி ’ஆலை சிம்னிகளில்’ பறந்தது!’’ என இந்திய வரலாற்றின் பக்கங்களை விவேகானந்தர் தன் மொழியில் விளக்கினார்.

மனிதர்கள் பட்டினியில்லாமல் உயிர்வாழவேண்டும் என்ற தேவை சமூகத்தை இயக்கிக்கொண்டே இருக்கிறது.

பிராமணர்கள் ”கற்பதுதான் சக்தி’’ என்றனர்.

சத்திரியர் ”வாள் தான் அதிகாரம் ‘’என்றனர்.

வைஸ்யர் ”செல்வமே அதிகாரம் ‘’என்றனர்.

ஆனால், கவனிக்கவே பெறாத அடித்தட்டு வர்க்கம் நிலத்தில் உழைத்துக் கொண்டேயிருந்தது. …!

யார் ஆண்டபோதும் அது அமைதியாக எதிர்க்க சக்தியின்றி உழைத்துக் கொண்டேயிருந்தது என இந்திய சமூகம் குறித்த தனது புரிதலை விவேகானந்தர் வெளிப்படுத்தினார்.

சமுகத்தில் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட சாதியிடத்தில் – சில குடும்பங்கள் கையில் – அறிவு குவிப்பு, அதிகாரம், செல்வக்குவிப்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், அவை சாசுவதமாக நீடிக்க வேண்டியதில்லை. அவைகள்  பகிர்ந்து (diffuse) அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் விவேனாந்தர். ’’அறிவோ, அதிகார குவிப்போ, செல்வமோ ஓரிடத்தில் என நிலைப் பெற்றுவிட்ட சமூகம் அழிந்துவிடும்’’ என்றார்.

”புரோகித வர்க்கம் தான் பின்னிய சிலந்தி வலையில் தானே மாட்டிக்கொண்டது. பிராமணர்கள் மீது சமூகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது.  தனக்கான   கல்லறையை (SEPULCHRE) அது தன் கரங்களாலேயே கட்டிக் கொண்டுவிட்டது. தனக்கான சிதையை அதுவே மூட்டிக்கொள்வது சரியானதேயாகும்…’’ என துணிச்சலான கருத்தை அவர் வாழ்ந்த அக்காலத்தில் அவரால் சொல்லமுடிந்தது…!

சத்திரிய, வைஸ்ய வர்ணங்களையும் அவர் பேசாமல் இல்லை. அரசனோ பாதி கடவுள்- பாதி மிருகமாக இருந்தான். அவனுக்கு தேவை என்றால், தனது கூரிய நகங்களால் அப்பாவிகளை பிளந்து இரத்தம் குடிக்கும் மிருகமாக இருந்தான். சமூகத் தேவைகள்தான் அரசனை பிறப்பித்தன. அரசர் குடிகளுக்கு தந்தையெனப்பட்டார். கேள்வி கேட்கமுடியாத பணிவு கோரப்பட்டது. எதிர்ப்பு ராஜதுரோகம், பாவம் என்று சொல்லப்பட்டது. தண்டனைக்கு உரியதானது. ஆனால் சமூகம் வலுவாக இருக்குமிடத்தில் அரசனுக்கு’ எதிராக போராட்டங்கள் வெடித்தன. பல ராஜ்யங்கள் இன்று மியூசியத்தில் காலாவதியாகிவிட்டன!’’ என்றார் விவேகானந்தர்.

”ருஷ்யாவிலும், சீனாவிலும் சூத்திரர் ஆட்சி எழும்’’ என முன்கூட்டியே கணித்தவர் விவேகானந்தர்.

குரோபட்கின் போன்ற ருஷ்யா அனார்க்கிஸ்ட்களை சந்தித்து உரையாடியவர் விவேகானந்தர். சூத்திரர்கள்  எண்ணிக்கையில் அதிகமிருந்தும் ஏன் சூத்திரர் ஆட்சி அமையவில்லை என்ற விவாதத்திற்கு சில காரணங்களை பதிலாகத் தருகிறார்; அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. எப்போது அடி விழும் எனக் கூட அறியாமல் உழைக்க வேண்டும். தாங்களும் மனிதர்கள்தான் என்கிற உணர்வு அவர்களிடமே வற்றிப்போன நிலை. உயர்வர்க்கத்தை அண்டித்தான் வாழ்க்கை என்ற நிலை. மேற்கின் கல்வி நுழைந்த நிலையிலும் அவர்களிடம் அக்கல்வி போகாத சூழல்- கற்கவோ, சொத்துரிமை பெறவோ வாய்ப்பில்லாத வாழ்க்கை நிலைமைகள் என பல்வேறு தடைகளை அவர் பட்டியலிடுகிறார்.

நம்பிக்கை இருக்கிறது அவர்கள் எழுவர். காணாமல் அடிக்கப்பட்ட அந்த உழைக்கும் மனிதனை மீண்டும் நாம் கண்டறிவோம் என நம்பிக்கை ஏற்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.

”சுவாமியை ’சோசலிஸ்ட்’ என அழைக்கலாமா?’’ என விவேகானந்தரிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அவர் தயக்கமின்றி தனது பதிலை தருகிறார்.  அனைத்து மக்களுக்கும் பட்டினியைவிட அரைத்துண்டு ரொட்டி கிடைப்பது மேலானது என்கிற சமூக முறைக்காக நான் சோசலிஸ்ட் ஆக இருக்கிறேன். (I am a Socialist not because I think it is a perfect system, but half a loaf is better than no bread). 

மார்க்சிய வகைப்படுத்தலில் சமூக மாற்றத்தை அவர் விளக்கவில்லை. இந்திய வருண முறையில் அவர் எடுத்துரைத்தார். அதை வர்க்கம் என்ற சொல்லாக்கி அவர் விளக்கினார். நால்வகை வர்க்கத்தாரின் தீமைகள் ஏதுமற்ற  அவர்களின் உயர் அடையாளங்களை இணைத்துக்கொண்ட- புரோகித அடையாளமான அறிவு- சத்ரிய போர்க்குண பலம்- வைஸ்யர் வணிக நியாயம்- சூத்திரர்களின் சமத்துவ உணர்வு என கட்டப்படும் அரசுதான் லட்சிய அரசாக அமையும் என அவர் கனவு கண்டார்.

‘நமது நாட்டில் நாம் செய்ய வேண்டிய கடமை யாது?’ என்ற விவாதத்தை  தொடர்ந்து செய்தவர் விவேகானந்தர். நமது பெரும்பான்மை மக்களுக்கு கல்வி, உணவு, பராமரிப்பு உடனடி கடமை. வளம் நிறைந்த நாட்டில் பட்டினி என்ற முரணை ஏற்பதற்கில்லை . மக்களுக்கு கற்று கொடுத்தால், பொருளாதாரம் உட்பட பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக் கொள்வர் என விவேகானந்தர் நமக்கு உணர்த்தினார்.

ஒன்றுபடுத்திக்கொண்டேயிருக்கும் சக்தியும், வேறுபடுத்தும் சக்தியும் இயற்கையில் உள்ளன. இந்த இருசக்தி தன்மை இயற்கையின் ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்விலும் நிலவுகிறது எங்கு போராட்டம் உள்ளதோ, எதிர்ப்புணர்வு இருக்கிறதோ அங்கு விழிப்புணர்வும் உயிரும் உள்ளது  என்ற இயக்கவியல் பார்வையை அவர் வெளிப்படுத்தினார்.

கிழக்கு மேற்கு சமுக உருவாக்கங்கள் – வேறுபாடுகள் குறித்து சுவாமி விவாதிக்கிறார். ஆசியவகைப்பட்ட நாகரீகம் கங்கை, ஈப்ரடிஸ், யாக்டிசியாங் போன்ற ஆற்றங்கரையில் வளர்ந்தன.  அய்ரோப்பிய சமுகமோ கடல் கொள்ளையில், குன்றுப் பகுதிகளில் வளர்ந்தது. இதை தேவ அசுர தன்மை என  அவர் விவரித்தார்.

அய்ரோப்பாவில் அரசியல் கருத்துக்களை கொண்ட தேசிய ஒற்றுமை உருவானது.  ஆசிய சமூகங்களில் சமய கருத்துக்கள் வடிவில் தேச ஒற்றுமை உருவானது. ஆழ்மன ஆய்வு (Introspective)   என்பது கிழக்கிலும் – விஞ்ஞான மற்றும் வெளிப்பார்த்தல் ( Scientific/ out seeing) என்பது மேற்கிலும் இருந்தன. இந்தியாவில் அத்வைத ஒளியில் சோசியல் கம்யூனிசம் என சகோதரி நிவேதிதா பேசுவார். மற்றொரு அம்சத்தை விவேகானந்தர் பளிச்சென விளக்கினார். மேற்கில் மனிதன் தனிமனிதனாகவே (as individual) பிறக்கிறான்.  இந்தியாவிலோ அவன் சமூக மனிதனாக தனது சாதியில் பிறக்கிறான். அதன் கட்டுக்குள்ளேயே வளர்கிறான்.!.

வடக்கில் இமயம், தெற்கில் சமவெளி, இடையில் காடுகளின் பகுதியாக இந்தியா  என்பது உணரப்பட்டது. திராவிடர், பூர்வீக குடிகள் – அவர்களது வழக்கம், சமயம் இருந்தன. ஆரியர் என்ற பெருமித இனம் பல்வேறு அம்சங்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்டாலும் இவர்களை தனித்தே வைத்திருந்தது. வாளின் வலிமையிலாது மதிநுட்ப புரோகித வர்க்கம் செல்வாக்கு பெற்றது. உயர்தட்டாக மாறியது. குலத்தொழிலாக தொடர்ந்த குடும்பங்கள் சாதிகளாக இறுகின. எல்லைகளை வகுத்துக்கொண்டன. சாதியை எவரும் தாண்டமுடியாது. பிரிவினையாக சாதிகள் எனவும், சாதிக்குள் உதவிக்கொள்ளும் சமுகம் என்ற ஏற்பாடாக இருந்தது. சாதி என்கிற கட்டுமானம் ஆரோக்கிய போட்டி என்பதை மட்டுப்படுத்திவிட்டது. இதுவே இந்திய அரசியலின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது என விவேகானந்தர் தன் வரலாற்று உணர்வை வெளிப்படுத்தினார்.

கட்டுரையாளர்; ஆர்.பட்டாபிராமன்

இடதுசாரி சிந்தனையாளர், தொழிற்சங்கவாதி!

‘நேருவின் மரபு’,

‘நவீன சிந்தனையின் இந்தியப் பன்முகங்கள்”

‘அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும்’

போன்ற நூல்களின் ஆசிரியர்.

 

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time