அதிமுக பிளவுபடுமா…? எடப்பாடி என்னாவார்…?

சாவித்திரி கண்ணன்

சசிகலாவின் வருகை எடப்பாடியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது! சசிகலா ஒன்றும் மக்கள் தலைவியல்ல! தியாகியல்ல, நிர்வாகியுமல்ல! ஆயினும் நான்காண்டுகள் குற்ற வழக்கில் சிறையில் இருந்து வரும் ஒருவரால் தமிழக அரசியல் அதகளப்படவுள்ளது! அதிமுகவின் ரிங்மாஸ்டராக அறியப்பட்ட சசிகலா, அங்கீகரிக்க மாட்டார் எடப்பாடியின் முதல்வர் அதிகார மோகத்தை! இதனால் தற்போது பதற்றத்தோடு டெல்லி சென்று காய் நகர்த்துகிறார் எடப்பாடி!

அ.திமுகவினரை அடிமைகளாகவும், அதிகாரப் பற்றுள்ள சுயநலவாதிகளாகவும் மட்டுமே எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் வளர்த்து ஆளாக்கியுள்ளனர் என்ற வகையில் இன்று சசிகலாவை முழுவீச்சில் எதிர்பதற்கான ஆற்றல் எவருக்காவது இருக்குமா என்பது கேள்விக்குறியே! சசிகலாவிற்கு பொதுநல நோக்கமோ, நாட்டு நலனில் அக்கரையோ இருந்ததுமில்லை! இது நாள் வரை சசிகலா என்பவர் ஜெயலலிதாவிற்கு அனுசரணையாக இருந்ததன் மூலம் அதிமுகவின் கட்சியிலும்,ஆட்சியிலும் ஒரு மறைமுகமான அதிகார மையமாக இருந்தார். அதன் மூலம் மிகவும் அநீதியாக பல ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்தவர். அப்படி அவர் சொத்து சேர்ப்பதற்காகவே தனக்கு கட்டுப்பட்டவர்களை கட்சியிலும், ஆட்சியிலும் உயர் நிலைக்கு கொண்டு வந்தார்! ஆனால், சசிகலாவை ஜெயலலிதா எந்த ஒரு அதிகாரப் பொறுப்பும் அற்றவராகவே கட்சியிலும்,ஆட்சியிலும் வைத்திருந்தார்! அப்படி பொறுப்பு தந்தால் அந்த குடும்பம் தன்னை அழுத்தி மேலெழுந்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே அருகில் வைத்திருந்தார்!

ஆகவே, மக்கள் மத்தியிலும் சரி, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி சசிகலாவின் ஆளுமை தெரிந்துவிடாத வண்ணமும், அதேசமயம் சசிகலாவின் விருப்பம் பணம் சேர்ப்பது என்றால், சேர்த்துக் கொள்ளட்டும், அந்த அளவுடன் திருப்திபட்டுக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்!

ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த கட்சியை கட்டிக் காப்பாற்றத் தன்னை விட்டால் தகுதி படைத்தவர்கள் யாருமே அந்த கட்சிக்குள் இல்லாமல் இருக்கும்படி சசிகலாவும் திட்டமிட்டு காய் நகர்த்தி காத்திருந்தார்!

இந்த திட்டத்தை நன்கு மோப்பம் பிடிதறிந்திருந்த பாஜக, சசிகலா அதிகாரத்தில் அமரத் தயாரான நிலையில் அவரை சிறைக்குள் தள்ளிவிட்டது. சசிகலா இல்லாததை பயன்படுத்தி தானே ஒற்றை அதிகாரமையமாகத் துடித்த தினகரனையும் ஓரம்கட்டி உட்கார வைத்திருந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தி, ஒரு அச்சத்தையும் விளைவித்தது!

ஆனால், சுமார் 30 ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்தை சுவைத்துப் பழகிவிட்ட சசிகலா சேர்த்து வைத்த செல்வங்கள் போதும் என நிம்மதியடைகிற கேரக்டராகத் தெரியவில்லை! தான் அடக்கி பழக்கப்பட்டவர்களிடம் சூழல் கருதி, சரி என் பங்கை மட்டும் ஒழுங்கா தந்தால் போதும் என ஒதுங்கிப் போகிறவருமல்ல!

சசிகலாவை கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் உறுதிபடத் தெரிவித்துள்ளாரே தவிர அதை எப்படி சாத்தியமாக்கப் போகிறார் என்பது தெரியவில்லை! இவ்வளவு துணிச்சலாக தன்னை கட்சியில் சேர்க்க மறுப்பதாக சொன்ன எடப்பாடியை இனி சசிகலா மன்னித்து ஏற்கவும் வாய்ப்பில்லை!

ஆனால், சசிகாலாவை நீக்குவதாக ஏன் கடைசியாக நடந்த பொதுக் குழுவில் அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களின் அங்கீகாரத்தோடு தீர்மானமாக எடப்பாடியால் நிறைவேற்ற முடியவில்லை? என்ற கேள்வி எழுகிறது!

சசிகலா இல்லாத அதிமுகவை கட்டி எழுப்ப வேண்டும் என்றால், அதை இந்த நான்காண்டுகளில் அவர் செய்து முடித்திருக்க வேண்டும்! முக்கியமாக படிப்படியாக சசிகலா விசுவாசிகளை கட்சியில் இருந்து களை எடுத்திருக்க வேண்டும்! சசிகலாவிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தந்து வளர்த்தெடுத்து உருவாக்கியிருக்க முடியும். அதையும் அவரால் செய்யமுடியவில்லை! மிக முக்கியமாக ஊழல் குறைவான ஒரு நல்லாட்சியை தந்திருந்தாலாவது மக்கள் தலைவராக மாற்றம் அடைந்திருப்பார்! ஆனால், குறைந்தபட்சம் அவரால் செய்ய முடிந்தது தன் முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது மட்டுமே! அதற்காக சசிகலா குடும்பத்தின் மிடாஸ் ஆலை தொடங்கி அனைத்து பிசினஸ்களுக்கும் பாதிப்பு வராமல் பக்குவமாக மறைமுக விசுவாசத்தைக் காட்டியே வந்துள்ளார்! பாஜகவின் தயவில் சசிகலாவை சமாளிக்க முடியும் என தப்புக் கணக்கு போட்டுவிட்டார்!

ஆனால், சசிகலாவின் கால்களைத் தேடித் தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பிச்சையாக கேட்டுப் பெற்ற எடப்பாடி நான்காண்டுகளாக முதலமைச்சராக வலம் வந்துவிட்ட நிலையில், சசிகலாவிற்கு மேலானவராகத் தன்னை கருதத் தொடங்கிவிட்டார்! தன்னை அதிமுகவின் ஒற்றைத் தலைவனாக கருதத் தொடங்கிவிட்டார்! மேலும் அவர் சார்ந்த சமூகமும் அவருக்கு உசுப்பேற்றி,அவரை உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டது!

அதனால், அதிமுக பிளவுபடுவது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது என்று தான் தோன்றுகிறது! இந்தப் பிளவில் உடனடி ஆதாயம் பெறப் போவது பாஜகவாகத் தான் இருக்கும் என்றாலும், அடுத்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக சிரமமில்லாமல் ஜெயிக்கவே வழிவகுக்கும்!

அதேசமயம் பிளவுபட்ட அதிமுக அணிகள் வட்டார கட்சியாக பமகவைப் போல சுருங்கிவிடவும் வாய்ப்புண்டு! அதாவது கொங்கு மண்டலத்தில் எடப்பாடி அணியும், தென்மாவட்டங்களில் சசிகலா அணியுமாக ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவும் மாற வாய்ப்புள்ளது!

கட்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், சாதிய உணர்வுகள் மேலெழுந்து வருவதும் தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time