தமிழ் வணிகர்களின் பிரம்மாண்ட பொங்கல்விழா!

-மாயோன்

ஒன்று கூடல்,ஒன்றிணைந்து செயல்படுதல், தமிழ் சமூகத்தின் மீதான பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் திருவள்ளுவரை ஈன்ற மகத்தான சென்னை மண்ணிலே, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னெடுத்த உணர்வாளர்களின் ஒரு பிரிவினரான தமிழ் வணிகக் குழுக்கள் ஒன்றிணைந்து, பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது!தமிழர் வாழ்வியிலின் பல்வேறு கூறுகளையும்,அதில் பொதிந்துள்ள உண்மையான அர்த்தங்களையும் உணரும் வண்ணம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு நாள் நிகழ்வாக விழா கலைகட்டியது!

சென்னையில் தமிழர் வணிகம்  பரிந்துரை(த.ப.வ) அமைப்பின் பத்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன .ராஜ்குமார் சண்முகத்தால் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் “வணிகத்தில் கோலோச்சுகிற சமூகமாக தமிழ் சமூகத்தை  திகழ வைக்க வேண்டும்” என்பதாகும்.

இந்த வணிகக் குழுக்களின் வணிக செயல்பாட்டுக் கூட்டம்  வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள அரங்குகளில் ஒரே சமயத்தில்  நடைபெற்று வருகிறது.

முதலில் தொடங்கப்பட்ட குழுவின்  300  வது வார சிறப்புக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது.

தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகையை இந்த வணிக குழுக்களில் அங்கம் வகிக்கும் வணிகர்கள் ஒருங்கிணைந்து மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த 10.01. 2021 அன்று  கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. பலத்த மழை பொழிவு காரணமாக அன்று நடைபெறவிருந்த விழா 24.01. 2021  தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, திருவள்ளுர் மாவட்டம், மாதர்பாக்கத்தில் உள்ள, த.ப.வ. மூத்த உறுப்பினர் “மகிழ்ச்சி” மணிவண்ணனின் பண்ணை விவசாயப் பண்ணையில் நடைபெற்றது!

பிரமாண்டமான  துணி பந்தல் பண்ணையின் மையப்பகுதியில்  போடப்பட்டிருந்தது. கரும்புகள்  நடப்பட்டு அவை தங்கள் தோகைகளால்  அனைவரையும் வரவேற்றன.

பொங்கல் பானைகள் அடுப்புகளில்  வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மூத்த உறுப்பினர் மாரியப்பன் ஒருங்கிணைப்பில்  ஒரு மாதமாகவே நடைபெற்று வந்த  திட்டமிடல் அடிப்படையில் விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு மூன்று பேர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பசுமை நிறைந்த மகிழ்ச்சிப் பண்ணைக்குள் வருகை தந்த அனைவருக்கும் காலை  உணவாக சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இதையடுத்து,  தமிழ் பெண்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர். வெண்பொங்கலும் சக்கரை பொங்கலும்  இதனுடன் அவியலும் குழம்பும்  வைக்கப்பட்டன. மதியம் 12 மணி அளவில்  பானையில் பொங்கல்  பொங்கத் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் “பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்” என்று உரத்த குரலில் குலவையிட்டு சூரியனையும் வாழ்வாதாரம் வழங்கும் இயற்கையையும் வணங்கினர்.பொங்கல் பண்டிகையின் மெய்ப்பொருள் செய்நன்றி அறிதல் தானே!

படையலிட்ட பின்னர்  அனைவருக்கும் சுவையான பொங்கல்வழங்கப்பட்டது.

திட்டமிட்டப்படி,பண்ணையின் ஒரு பக்கத்தில்  காலையில் இருந்தே குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

ஊதப்பட்ட பலூன்களை  அதிக எண்ணிக்கையில் கொண்டு  செல்லும் குழந்தைகளுக்கான போட்டி அனைவரையும் பெரிதும் ஈர்த்தது.  பெண்களுக்கு இசை நாற்காலி, பல்திறன் தொடர் ஓட்டம், ஆண்களுக்கு  உறியடித்தல் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

குழந்தைகளும் பெண்களும் ஆண்களும்  குதூகலம் பொங்க விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

“தமிழ்  எங்கள் பேச்சு, சிலம்பம்  எங்கள் மூச்சு”

என்ற வாசகத்தை  சட்டையில் பதிவிட்டுக்கொண்டு சிலம்பு சுழற்றி இளைஞர்களும் இளம்பெண்களும்  விழாவில் பங்கேற்ற அனைவரையும் மகிழ்வித்தனர்.

தமிழ்க் குழந்தைகள் பல கலைகளில் வல்லவர்களாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் , ஓவிய பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஓவிய உலகம் அமைப்பின்  ஓவியர்கள் இதில் கலந்துகொண்ட ஏராளமான குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்தனர். சூரியனை மையமாக வைத்து  இயற்கைக்காட்சி ஒன்றை  வரைந்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.

மதியவேளையில் நாட்டுக்கோழி மற்றும் ஆட்டிறைச்சியுடன் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சைவ உணவு  விரும்பியவர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவு  கொடுக்கப்பட்டது.

 பாவலர் அறிவுமதியும்  கலையரசி நடராஜன் அம்மையாரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று அனைவரும் பங்கேற்ற அரங்கில் உரையாற்றினர் .

த.ப.வ.நிறுவனர் ராஜ்குமார் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,”தமிழ்ச்   சமூகத்தில் சாதி இருந்தது கிடையாது அது  திணிக்கப்பட்டது எப்படி ?

அதை தமிழர்கள் உணர்ந்து  சாதிபாகு பாடின்றி தமிழராய் வாழப் பழக வேண்டும். பிற மொழிக் கலப்பு மொழி அழிப்புக்கு வழி வகுத்துவிடும்.  குழந்தைகளுக்கு  தூய தமிழில் பெயர் சூட்ட வேண்டும். எதையும் சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து  உண்மைத் தன்மையை உணரும் ஆளுமை கொண்டவர்களாக   வாழப் பழகிக் கொள்ள வேண்டும் ” ஆகிய  கருத்துகளை தங்களுக்கே உரித்தான  பாணியில்  பேசினர் .

மூன்று பேர் கொண்ட பத்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பெண்களுக்கு கோலப் போட்டி நடத்தப்பட்டது.கலையரசி நடராஜன் நடுவராக பங்கேற்று ‘ விவசாயிகளின் வேதனையை பிரதிபலிக்கும் வண்ணம் பொங்கல் பானையையே கண்ணீர் சிந்தும் விவசாயியின் முகமாக்கிய கோல ஓவியத்தை சிறந்த ஒன்றாக தேர்வு செய்தார்.

போட்டிகளில் வென்றவர்களுக்கு மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதி நிகழ்வாக நடைபெற்ற, தமிழர்களின் வீர விளையாட்டான  கபடிப் போட்டியில் ஆண்கள்  சீருடை அணிந்து ஆக்ரோஷமாக விளையாடி மகிழ்ந்தனர். பெண்களும் குழந்தைகளும் இப்போட்டியை வெகுவாக ரசித்தனர்.

மாலை 6.00 மணியளவில், பிரமாண்டமாய் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்ற 2021 ஆண்டு

பொங்கல் விழா முடிவுற்றது.முழு மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் “அடுத்த பொங்கல் விழாவில் சந்திப்போம் ”

என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு

மகிழ்ச்சிப் பண்ணையில் இருந்து

விடைபெற்றனர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time