சமூக நீதிக்கான  அறப்போர் செய்த பி.எஸ்.கிருஷ்ணன்!

-பீட்டர் துரைராஜ்

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக  1956 முதல் 1990 வரை  இருந்த  பி.எஸ்.கிருஷ்ணன், மண்டல் குழு அறிக்கையை வி.பி.சிங் அமலாக்க காரணமானவர்.மேலும் இவர், புத்த, சீக்கிய மதத்தின் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு, வன்கொடுமை சட்டத்தின் வடிவாக்கம்,  மனிதக் கழிவை மனிதன் அகற்ற  தடை  சட்டங்கள் ,  இசுலாமியருக்கு இட ஒதுக்கீடு என பல  முன்னெடுப்புகளுக்கு காரணமானவர். ஆதிக்க சாதிகள் கோலோச்சிய அதிகாரவர்க்கத்தினூடே எளிய மனிதர்களுக்காக களமாடிய இவரது வரலாறு சாகஸமானது..!

” The Crusade of Social Justice “ என்று ஆங்கிலத்தில் வெளியான பி.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்று நூல்,  தமிழில் “ சமூக நீதிக்கான அறப்போர்” என்ற பெயரில்  வெளிவந்துள்ளது. மு.ஆனந்தன் இந்த நூலை நன்கு மொழிபெயர்த்துள்ளார். மூன்றாம் பதிப்பு கண்டுள்ள இந்த நூல், சமூக நீதி போராளிகளுக்கான ஒரு கையேடு என்று சொல்லலாம்.

கல்வியாளரான வே.வசந்தி தேவி, பி.எஸ்.கிருஷ்ணனைச் சந்தித்துப் பேசிய உரையாடலே இந்த நூல். நேர்காணல் முதல்  பகுதியில் உள்ளது. இரண்டாம் பகுதியில் சமூக, சமத்துவத்துக்கு வழிகாட்டும் செயல்திட்டத்தை கொடுத்துள்ளார். 560 பக்கங்கள் கொண்ட நூலை எளிதாக படித்துவிடலாம்.படிக்க வேண்டிய நூல்.

வாசகருடைய அரசியல் புரிதல், பார்வை, இலக்கு இவைகளைப் பொறுத்து விரிவான பொருளைப் பெறலாம். இது  வழக்கமான தன்வரலாறு அல்ல.நூலைப் படிக்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது.  அய்யன்காளி, நாராயணகுரு ஆகியோரின் கருத்துகளால் ஆதர்சம் பெற்று, கேரளாவில் பிறந்த பி.எஸ்.சங்கரன் தன்னை  சாதியற்றவன் என்று அறிவித்துக் கொள்கிறார். சாதியற்ற சமுதாயம் படைக்க, தன் பணிக்காலத்திற்குப் பிறகும்,  87  வது வயதில் அவர் இறக்கும் (2019) வரையில் ஏதோ ஒரு வகையில் பணியாற்றியுள்ளார்.

ஆந்திராவில்  சார் ஆட்சியராக பணியைத் தொடங்கி, இந்திய அரசுச்  செயலாளர் வரை பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். ஓய்வுக்குப் பிறகும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின்  ஆணையர்- செயலராக, ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் ஆலோசகராக,  அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து, இந்த அமைப்பை மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்த நூலைப் படிக்கும் ஒருவருக்கு, அதிகாரிகள் நியாயமாக இருந்தால் எவ்வளவு பெரிய மாற்றங்களைத் தரமுடியும் என்பதை உணரமுடியும். இவர் விவரிக்கும் ஒரு சில சம்பவங்கள் (உ.ம்.தலித்தான சஞ்சீவய்யா ஆந்திராவின் முதலமைச்சரான கதை, காங்கோ புரட்சி அனுபவம்,  எஸ்.ஆர்.சங்கரன் உடன் பயணித்த அனுபவம்) சுவையாக உள்ளன.

பி.எஸ். கிருஷ்ணன் சொல்லியதை வே.வசந்தி தேவி எழுதியிருக்கிறார். விரிவாக எழுதப்பட்டுள்ளது.பல இடங்களில் கூறியது கூறல் வருகிறது.பல பக்கங்களை சுருக்கி இருக்கலாம். திராவிடர் கழகம் இவரை கெளரவித்துள்ளது.

டெல்லியில் ‘மெட்கால்ப் ஹவுசில்’  இருந்த ஐஏஎஸ் பயிற்சிப் பள்ளியில் (இப்போது முசோரியில் நடக்கிறது)  பெற்றவர்  பி.எஸ்.கிருஷ்ணன். தனது  அணுகுமுறை மூலம் ஆக்கப்பூர்வமான பல முன்னோடித் திட்டங்களுக்கு காரணமாக இருந்துள்ளார். பட்டியல்சாதியினருக்கு அவரது இருப்பிடங்களுக்குச் சென்று சான்றிதழ் வழங்குகிறார். திறந்தவெளியில் பொதுமக்களை அணுகுவதால் அவர்கள் தயக்கமின்றி பேசுவார்கள் என்கிறார். அதிகாரிகள் தங்கியிருக்கும் இடமான ‘பங்களா’ என்பது காலனியாதிக்கச் சொல் என்பதால் அதை தவிர்க்கிறேன் என்கிறார்.’வரைவு பட்டா ஆட்சேபணைக் கூட்டம்’ நடத்தி உண்மையான பயனாளிகளுக்கு இறுதிப்பட்டா கொடுத்திருக்கிறார். ‘தலித் மக்களை விரக்கியான மனநிலையிலிருந்து நம்பிக்கை கொள்ளும் மனநிலைக்கு  கொண்டு போவது எவ்வளவு சுலமானது’ என்று நம்புகிறார்.

அரசாங்கம் குறைந்தவிலையில் அரிசி வாங்கி பொதுமக்களுக்கு தர வேண்டும் என்று அவர் அறுபதுகளில் சொல்லியதை ‘சாத்தியமில்லை’ என்று சொன்ன சக அதிகாரிகளை நினைவு கூறுகிறார். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் ‘ என்பதைப் போலவே ஆட்டோ, ரிக்‌ஷா ஓட்டுபவர்களுக்கே அவை சொந்தமாக இருக்க  வேண்டும் என்கிறார். இந்தியாவில் உள்ள நிலமற்ற ஏழைகள் அனைவருக்கும் அவர்கள் விவசாயம் செய்யும் அளவுக்கு போதுமான பாசன நிலங்கள்,பாசன வசதிக்கு உகந்த நிலங்கள் உள்ளன என்று பி.சி.அலெக்சாண்டர் குழு அளித்த பரிந்துரையை அமலாக்கச் செய்ய வேண்டும் என்கிறார். கல் குவாரிகளை அதைப் பயன்படுத்துபவர்களுக்கே கூட்டுறவு அமைப்புகள் மூலம்  வழங்க வேண்டும் என்கிறார். கேரளாவில் குத்தகைக் காலம் முடிந்த 60,000 ஏக்கர் நிலங்களை தனியாரிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்கிறார். நிரந்தரப் பணியில் இருந்த துப்புரவுப் பணிகள் ஒப்பந்த முறைக்கு மாறுவது குறித்து கவலை கொள்ளுகிறார். காரல் மார்கஸ்,அம்பேத்கர் சொல்லியதை அமலாக்குகிறார்.

“ஒடுக்கப்பட்டோரிடம் தேவையற்ற கரிசனம், சாதி மறுப்புத் திருமணங்களை தீவிரமாக ஆதரித்தல், மதத்தை தாக்கத் தன் சமஸ்கிருத அறிவைப் பயன்படுத்தல், கிராம அதிகாரிகளை விட கிராம மக்களின் பேச்சை நம்புதல், சீர்குலைவு சக்திகளுக்கு உதவும் வகையில் செயல்படுதல்” என்று இவரது பணிக்கால தொடக்கத்தில் அவரது ரகசிய பதிவேட்டில் இவரைப் பற்றி இவரது உயரதிகாரி எழுதி வைத்தபடியே வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கிறார்.

ஓர் அதிகாரியாக எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதோடு இணைந்து, அதைக்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளார். வி.பி.சிங் ஆட்சி இருக்கும் போதே நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை (ஓராண்டு முன்னதாகவே) நடத்தி முடித்திருக்கிறார். ராம் விலாஸ் பஸ்வான் துணை கொண்டு மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரைகளை வி.பி.சிங் ஏற்றுக்கொள்ள பணிபுரிந்து இருக்கிறார். அதன் அமலாக்கத்திற்கு  சாதிகளை இனங்கொள்வதிலும், வழக்கை எதிர்கொள்வதிலும், 1993 ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் உத்தரவு தரும்வகையில் ஆலோசனை தந்திருக்கிறார்.இந்தியாவின் முக்கிய தலைவர்கள் அனைவரோடும் பழகி ஆலோசனை தந்துள்ளார்.

2011 ல் சாதி விபரம் குறித்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் ஏற்படுத்திய தடைகளைக் குறிப்பிடுகிறார். ‘அரசாங்கப்பணியில் இல்லாத நேரத்தில் பலவிதமான விவரங்களைப் பற்றி ப.சிதம்பரம் எழுதுகிறார்’ என்கிறார்.1993 ஆண்டும், 2013 ஆம் ஆண்டும் மனிதக் கழிவை மனிதன் அகற்றுவதை தடுக்கும் தடை சட்ட உருவாக்கத்தில் தன்னுடைய பங்கைச் சொல்லுகிறார். ஓய்வுக்குப் பிறகு 1996 ல்  ‘தலித் அறிக்கை’ உருவாக்கத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

வறுமை ஒழிப்பையும், சாதி் ஒழிப்பையும் கொண்டு வருவது  சுலபமே என்பதை இந்த நூல் சொல்லுகிறது.இவர் பெயரில் ஒரு விருதைக் கூட அரசு அறிவிக்கலாம்.

சமூக நீதிக்கான அறப்போர்

பக்கங்கள்  560, விலை;ரூ.350

சௌத் விஷன் புக்ஸ்,மடிப்பாகம்,சென்னை-91

போன்;9445318520

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time