இந்த முறையும் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி: “பணப்பட்டுவாடா” என்ற ஜனநாயக படுகொலை தமிழ்நாட்டில் முழுவதுமாக அரங்கேறியது!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06.04.2021) காலை ஏழுமணிக்கு தொடங்க யது. மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டதைப் பார்க்க முடிந்தது.இதனால், 72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வந்தன என்றாலும், ஆளும் கட்சியினரின் அதீத பணப்பட்டுவாடா தொடர்பாக சரியான நடவடிக்கைகள் இல்லை.அதற்கு போட்டியாக எதிர்கட்சியினரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பணம் தந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த பணப்பட்டுவாடா வுக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ?என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்றாற்போல தீவிர வாகன தணிக்கைகள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக துணை ராணுவத்தினர் இருந்தனர்.
இவ்வளவு கட்டுக் காவலையும் மீறி இந்தமுறையும் பணப்பட்டுவாடா என்ற ஜனநாயகப் படுகொலை தமிழ்நாடட்டில் முழுமையாக அரங்கேறியது. சில இடங்களில் புகார்கள் கொடுத்தும் பறக்கும் படையினர் கண்டு கொள்ளாமல் இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன!
“ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.”
” பணம் வாங்குவது தன்மானத்தை விற்பதற்கு சமம்”!
என்று சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பிரச்சாரத்தை செய்துவந்தனர். ஆனால் அனைத்தும் வீணாய் போனது.
” ஓட்டுக்கு பணம் கொடுப்பது அடுத்த தலைமுறையை பாழாக்கும் செயல்” என்று கெஞ்சிக் கூத்தாடி அரசியல்வாதிகளை சமூக ஆர்வலர்கள் பலரும் கேட்டுக் கொண்டனர் .ஆனாலும் இந்த ஜனநாயகப் படுகொலையை மிகத் திட்டமிட்டு ஊழல் அரசியல்வாதிகள் செய்து முடித்து விட்டனர்.
சுமார் 6 லட்சம் கோடி கடன் உள்ள இந்த மாநிலத்தில் இவ்வளவு பணத்தை அரசியல்வாதிகள் எங்கு பதுக்கி வைத்திருந்தார்கள். எப்படி எடுத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. வழிநெடுகிலும் துப்பாக்கி சகிதமாக நின்றுகொண்டிருக்கும் காவல்துறையினரையும், துணை ராணுவத்தினரையும் எப்படி ஏமாற்றினார்கள் என்பதை நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
இவ்வளவு நாளும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்த வருமான வரித்துறையினர் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை.
சென்னை மாநகரைப் பொருத்தவரை இங்கு வசிக்கும் மக்களில் 40 சதவீதம் பேர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள். அடையாறு ,கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஓரமாக சிறு சிறு குடிசைகளில் வசித்தவர்கள் ஒட்டுமொத்தமாக காலி செய்யப்பட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி அதன் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மூன்று பகுதிகளில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இங்கு முழுவதுமாக பணம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களான 39 லட்சம் பேரில் 16 லட்சம் வாக்காளர்கள் இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் வசிப்பவர்கள். இவர்களில் 95 சதவீதம் பேருக்கு பணம் போய்ச் சேர்ந்துள்ளது.
சென்னை நகரம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் உச்சகட்ட கையூட்டை அரசியல்வாதிகள் நடத்தி முடித்தனர்.
சென்னை மாநகரில் தான் தமிழக போலீஸ் பிரிவுகளான லஞ்ச ஒழிப்பு, சிபிசிஐடி உட்பட அனைத்து காவல் பிரிவு தலைமை அலுவலகங்களும் உள்ளன. இது தவிர, மத்திய அரசின் சிபிஐ, அமுலாக்கம், வருமானவரித்துறை தலைமை அலுவலகங்களும் உள்ளன.
இங்கேயே இந்த கதி என்றால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் பற்றி சொல்ல தேவை இல்லை.
சேலம் மாவட்டம் எருக்கம்பாளையம்,ராக்கிபட்டி,எஸ்.பாப்பாரப்பட்டி, கீரபாப்பம்படி, மரமங்கலத்துப்பட்டி ஆகிய இடங்களில் ஆளும்கட்சினர் டோக்கன் கொடுத்துவிட்டு ஓட்டுப் போட்ட பிறகு ஜெயித்து வந்தால் எடுத்து வந்து காண்பிப்பவர்களுக்கு தலா 5,000 தரப்படும் எனக் கூறியுள்ளனர். முதலமைச்சர் தொகுதியிலும், துணை முதல்வர் தொகுதியிலும் வரலாறு காணாத பணப்பட்டுவாடா நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது…?
காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் , கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்று பொதுவாக சொல்லப்படுபவர் ஆர் நட்ராஜ் . இவர் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏவும் கூட! ஆயினும், அதிமுக சார்பில் இங்குள்ள நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் ,பல்லக்கு மாநகர் உள்பட அனைத்து ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பணப்பட்டுவாடா ஜெகத் ஜோதியாக நடைபெற்றுள்ளது.
நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் கூட ஆங்காங்கே பணம் விளையாடியது.
பொதுவாக மயிலையில் அதிமுக தரப்பு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயும், திமுக தரப்பு ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. ஆனால், வேளச்சேரி தொகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு தலா 1,500 தந்துள்ளனர்.காங்கிரசாரும் போட்டி போட்டு ஐநூறு கொடுத்துள்ளனர்.
அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியில்ரூ 4,000 முதல் ரூ 5000 வரை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“கொள்ளையடித்த பணம் தானே”
” நம் பணம் மீண்டும் நம்மிடமே வருகிறது, இதை வாங்குவதில் என்ன தப்பு” என்ற கருத்து பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், இது எளிதாக கடந்து செல்ல கூடிய விவகாரம் அல்ல.!
கடந்த 20 வருடங்களாக சென்னை மாநகரில் சொந்த வீடு கட்டியவர்களை கேட்டால், உள்ளூர் அரசியல்வாதிகள் பணத்துக்காக எவ்வளவு தொல்லை கொடுத்து இருப்பார்கள் என்பது தெரியவரும். கழிவு நீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு என ஒவ்வொன்றுக்கும் பல்லாயிரக்கணக்கில் பணம் தந்தால் தான் நடக்கிறது. அரசு வழங்கும் வேலைவாய்ப்பு, கல்வி அனைத்திலும் கமிஷன், லஞ்சம்.சாலை போடுவதில், 40 சதவீத கமிஷன் கேட்பதாக அந்த ஒப்பந்ததாரர்களே பகிரங்கமாக போர்க்குரல் கொடுத்ததைதை நாம் பார்த்தோம். அவர்கள் யாரென்றால் இப்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் தான்.
இப்படியே இவர்களை விட்டால் வங்கி மற்றும் அரசு கஜானாக்களையும் காலி செய்து விடுவார்கள்.
கிரேக்க நாட்டில் மாதம் மாதம் பென்ஷன் பெற்று வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு திடீரென பென்ஷன் “கட்” ஆகி அவர்கள் நடுரோட்டில் புரண்டு அழுததை பார்த்தோம். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து அனுமதித்தால் இங்கும் அப்படிப்பட்ட கொடிய நிலைமை வரக்கூடும்.
ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்பவர்கள் மிக மோசமான சமூக விரோதிகள் ஆவர். ஜனநாயக் வேர்களுக்கு கொதி நீர் ஊற்றும் இவர்கள் மீது தேச விரோத வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்த அநியாயம் ,அக்கிரமம், அட்டூழியம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
மக்களுக்கு உண்மையாகவே சேவை செய்ய விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் வெற்றிக்காக பணத்தை செலவிட மாட்டார்கள்.
Also read
பணத்தை நம்பி மட்டுமே நிற்பவர்கள் ஜெயித்து வந்தாலும் இவர்களால் உருப்படியாக சமுதாயத்திற்கு எதுவும் செய்ய முடியாது. அடுத்த தேர்தலுக்காக பகல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள்.
பல தேசிய இனங்கள் நிறைய வாழும் இந்தியா போன்ற ஒன்றியத்தில், நேர்மையான வழியில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே தங்கள் மாநிலத்தின் மொழி, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை போராடி காப்பாற்றி தக்க வைக்க முடியும். அதை உணர்ந்து வருங்காலத்திலாவது ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
Leave a Reply