புராண, இதிகாசத்தில் தொடங்கி, புதிய சமூக மாற்றத்திற்கான தேடல்…!

- பாலுமணிவண்ணன்

சினிமா – நேற்று இன்று நாளை-1

90 வருடப் பயணத்தில் தமிழ்ச் சினிமா கடந்து வந்துள்ள பாதை சுவாரசியமானது! முதல் இருபதாண்டுகள் புராண, இதிகாசங்களிலேயே மூழ்கி திளைத்த நிலையிலும் கூட சமூக மாற்றத்திற்கான தேடல்களும், அதற்கான குரல்களும் இருக்கவே செய்தன..! இன்றைக்கு திரும்பிப் பார்த்தாலும் பிரமிக்கதக்க மாற்றங்கள் நடந்துள்ளதை உணரமுடிகிறது..!

தமிழ்ச் சினிமா பேசத் தொடங்கி 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்நாளில், தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது . அமெரிக்காவில்அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில், வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் , இந்தியா சார்பில்  பங்கேற்க,  தமிழ் படமான “கூழாங்கல் ” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புது இயக்குனர் பி. எஸ் .வினோத் ராஜ் இயக்கிய இந்தப் படம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷெர்னி மற்றும் சர்தார் உதம் ஆகிய படங்களை  பின்னுக்குத் தள்ளிவிட்டு, முன்னுக்கு வந்திருக்கிறது. அது குறித்து கருத்து தெரிவித்த தேர்வுக்குழு தலைவர் ஷாஜி என் கருண், ‘’இந்தப் படத்தின் கதை சொல்லும் பாணி மற்றும் தொழில்நுட்ப உத்திகள் தேர்வுக் குழுவைக் கவர்ந்ததால் , இந்தப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்புவதென ஒருமனதாக முடிவெடுத்தோம்’’ என்கிறார்.

இது உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு – தமிழ்ச் சினிமாவிற்கு  பெருமை சேர்க்கும் அம்சம்.

ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன், இந்தியன், குருதிப்புனல், நாயகன், ஹேராம் ஆகிய படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் அனுப்பப்பட்டு இருந்தாலும், அவை விருது பெறவில்லை.

தமிழ் சினிமா இந்த வளர்ச்சியை அடைய வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறது குரங்கிலிருந்து மனிதனாகப் பரிணமித்த வரலாறு இது …!

1931 ஆம் ஆண்டு பேசத் தொடங்கிய தமிழ்ச் சினிமா, முதலில் பேசியது சமஸ்கிருதம் கலந்த தமிழில்! பிறகு ஆங்கிலத்தில் ..தொடர்ந்து தெலுங்கில். ஏனெனில், சினிமாவை முதலில் கையில் எடுத்துக் கொண்டவர்கள் உயர் சாதியினர் மற்றும் படித்திருந்த வசதியுள்ளோர்.

அவர்கள் எடுத்துக்கொண்ட கதைகள் எல்லாம் அன்று நாடகத்தில் பிரபலமாகி இருந்த வள்ளி திருமணம், பவளக்கொடி, ராமாயணம், மகாபாரதம், பக்த குசேலா, லவகுசா, நந்தனார், ஸ்ரீ கிருஷ்ண விஜயம்… போன்ற புராண இதிகாச சமாச்சாரங்கள் தான்.! அதற்கு முன், தமிழில்  எடுக்கப்பட்ட  119 பேசாத படங்களும் கடவுள் கதைகளைத்தான் சொல்லின. அது தான் அப்படி என்றால், படம் பேசத் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட 30 படங்களிலும் கடவுள்கள் தான்….!  அவர்களது லீலைகள் தான் …!

இந்தப் படங்களையும் போட்டோ எடுக்கிற மாதிரி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அவற்றை  filmed dramas என்று அழைத்தார் அப்போது அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன். இந்த நிலை அப்போது தலையெடுத்த அவ்வை டி கே சண்முகத்தால் மாறத் தொடங்கியது. தொடர்ந்து சமூக நாடகங்களையும்  சுதந்திர உணர்வு ஊட்டக்கூடிய நாடகங்களையும் நடத்தி வந்தனர்  இவரும் இவரது சகோதரர்களும்!  இதன்  இயக்குனராக ராஜா சாண்டோ பொறுப்பேற்றார். இவர் பேசாத படக் காலத்திலேயே தீண்ட ப்படாத மக்களைப்பற்றி- அவர்களது துயரங்களைப் பற்றி படம் எடுத்துப் பேசப்பட்டவர். சிறப்பாக இயக்கினார்!  தமிழின் முதல் சமூக படமான மேனகா 1935 -ல் வெளிவந்து புதிய சிந்தனையை ஏற்படுத்தியது.

மேனகா , இயக்குனர் ராஜா சாண்டோ

இதே போல சமூக மாற்றத்திற்கான படங்களை தந்ததில் இயக்குனர் கே.சுப்பிமணியம் ஒரு முன்னோடி. அவரது சேவாசதனம், தியாக பூமி..போன்றவை பெரிதும் பேசப்பட்டன! தொடர்ந்து தமிழ் சினிமாவின் முதல் படமான காளிதாஸ் படத்தில், முதல் கதாநாயகியாக அறிமுகமான டிபி ராஜலட்சுமி தானே எழுதிய மிஸ் கமலா என்னும் சமூகக்கதையை தாமே தயாரித்து , இயக்கி வெளியிட்டார் . அது அப்போதைய பெண்ணுலகில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சியது.

முதல் பெண் இயக்குனர், நடிகை டி.பி.ராஜலட்சுமி

ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் எஸ் வாசன் எழுதி, அதே ஆனந்த விகடனில்தொடராக வெளிவந்த சதிலீலாவதி என்னும் சமூக கதை படமானது. இதில் எம்ஜிஆர் வில்லனாக அறிமுகமானார் .இந்தப் படத்தை எல்லீஸ் ஆர் .டங்கன் இயக்கினார் .இவர்தான் முதன்முதல் கேமராவை டிராலி மூலம் அல்லது க்ரேன் மூலம் இயக்கியவர். அதன் காரணமாகத்தான் மூவி எனப்படும் சினிமா நகரத் தொடங்கியது. அதன்மூலம் கேமரா பார்வையாளர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றது.

இது அப்போதைய அடித்தட்டு மக்களுக்கு பிரம்மாண்டமான ஒரு நகர்வாக இருந்தது .மக்களுக்கு சினிமாவின் மீது மீது மிகவும் ஈர்ப்பு ஏற்பட்டது. சொல்லப்போனால் ஒரு மயக்கமேஏற்பட்டது. அன்று ஏற்பட்ட மயக்கம் இன்றும் தெளியவில்லை!

ஆக ,நாற்பதுகள் வரை சுற்றிச் சுற்றி முப்பத்து முக்கோடி தேவர்களின்  புராண இதிகாசக் கதைகள்  வேறு, வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்க ,கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவற்றில் நுழைந்து முற்றிலும் கடவுள் நம்பிக்கைக்கு மாற்றான, சாதிவெறிக்கு எதிரான விஷயங்களை காமெடியாகச் சொல்ல, மக்கள் அதை வெகுவாக ரசித்தனர்! சொல்லப்போனால் ஒரிஜினல் கடவுள் கதைகளை விட அப்படங்களில் வரும் என் எஸ் கிருஷ்ணன் காமெடியை மிகவும் ரசித்தனர்.

அது வரை படம் முழுக்க பாடல்களே, அதுவும் இந்துஸ்தானி சங்கீதமே பொங்கி வழிந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், தமிழ் வசனங்கள் பிரவாகம் எடுத்துப் பாய  வைத்தவர் இளங்கோவன். அன்றைக்கு கதை,வசனம் எழுதியவர்களில் இவர் ஒரு சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்! அம்பிகாபதியில் இயல்பான மொழியில் மனம் கர்ந்த உரையாடல்கள்! .கண்ணகியில், உணர்ச்சிகரமான சொல்லாடல்கள் போன்றவை பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின! இவை ஏற்படுத்திய உத்வேகத்தையடுத்து, அடுத்தடுத்து வந்த படங்கள் எல்லாம் நல்ல தமிழ் பேசத் தொடங்கின. பெரும்பாலும் சமூகக் கதைகளாகவே வெளிவந்தன. கூடவே அப்போது நடைபெற்று வந்த சுதந்திரப் போராட்டம் பற்றிய உணர்ச்சிகரமான பாடல்கள் தென்பட்டன.

1947ல் மக்கள் எதிர்பார்த்தபடி இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை வளம் பெற வில்லை. அதனைத் தனது படங்களில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வலுவாக சுட்டிக்காட்டினார் .

இதே காலகட்டத்தில் மூட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும், சமூக விடுதலையை அழகு தமிழிலும், அடுக்கு மொழி வசனங்களிலும் பேசிய திராவிட இயக்க படைபாளிகள் கவனம் பெற்றனர்.

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான  அறிஞர் அண்ணா ,கலைஞர் கருணாநிதி, இராம அரங்கண்ணல் ,ஏவிபி ஆசைத்தம்பி, கவிஞர் கண்ணதாசன் போன்றோர் வசனம் எழுதிய படங்கள் எல்லாம் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. இதன் மூலம் சினிமா, பிம்பங்களின் தொகுப்பாக மட்டுமின்றி, வாழ்க்கையின் சாரமாகவே தமிழ் மக்களின் மூளைக்குள் வேர்விட்டது.

எம்ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், கே ஆர் ராமசாமி, எம்.ஆர்.ராதா, எஸ்எஸ் ராஜேந்திரன் …போன்ற நடிகர்கள் திராவிட இயக்க முகங்களாக மக்கள் மனதில் பதிந்தனர் .

அதே காலகட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்த பொதுவுடைமை இயக்கத்தினர் முட்டி முட்டி தமிழ் மண்ணில் முளைத்தனர். சினிமாவானது கலை வடிவத்தின் உச்சம் ; அதனை பொதுவுடமை இயக்கம் சரியாக பயன்படுத்திக் கொண்டு மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என திரை உலகில் அடியெடுத்து வைத்தனர். அந்த முயற்சி அந்தக் காலத்தில் சூரியன் முன்னே ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் கதையானது . திராவிட இயக்கத்தின் அரசியலுக்கும் சினிமாத் திரைக்கதைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர் . ஆனாலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையுலகில் பொதுவுடமை சிந்தனைகளை பாடல்கள் வழி பரப்பினார். அது திராவிட இயக்கத்திற்காக எம்.ஜி.ஆரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இதே காலத்தில் தமிழ் சினிமாவின் வடிவத்தை கலாபூர்வமாக மாற்றியமைத்துக் கொண்டே இருந்தனர் டைரக்டர்கள் கே. ராம்நாத், எல்.வி பிரசாத்  ,ஸ்ரீதர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நிமாய் கோஷ் ,வின்சென்ட் போன்றோர். தொடர்ந்து தஞ்சை நிலமான நன்னிலத்தில் இருந்து புறப்பட்டு வந்த கே பாலச்சந்தர் ,அரசு அலுவலராக பணியாற்றிக் கொண்டே அவர் சார்ந்த சமூக நடுத்தரவர்க்க குடும்பங்களின் பிரச்சனைகளை வித்தியாசமாக அணுகி, புதுமையான அமெச்சூர் நாடகங்களை நடத்தினார். அதன்மூலம் சட்டென்று பிரபலமான அவரை, திரையுலகம் கொத்திக் கொண்டு போனது. அங்கு அவர் கூடுதலாக ,மத்தியதர வர்க்கத்தின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை ஆங்காங்கே தொட்டு, முக்கியமாக காதலுக்கு  புதுப் புது அர்த்தங்கள் கொடுத்தார்.

இவற்றின் தொடர்ச்சியாக பாரதிராஜா இளையராஜா கூட்டணி தேனிப் பக்கம் இருந்து புறப்பட்டு வந்து , கிராமப்புறக் கதைகளையும் , நாட்டுப்புற இசையையும் தமிழ்ச் சினிமாவில் பாய்ச்சியது.

இவர்களிடையே உருவாகிவந்த மற்றொருவர் இயக்குனர் மகேந்திரன் .இவர் இயக்கிய முள்ளும் மலரும் ரஜினிகாந்த்தின் ஹீரோ இமேஜை மாற்றி அவரை ஒரு நடிகர் ஆக்கியது . அதேபோல இலங்கையிலிருந்து வந்த பாலுமகேந்திரா ஒரு முக்கியமான கலைஞர் தனது ஒளிப்பதிவால் தமிழ்ச் சினிமாவை அழகு படுத்தியவர் மட்டுமல்ல; அர்த்தமும் கொடுத்தவர். பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா ஆகியோரது கலை வடிவம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை ரசித்தும்,  ருசித்தும் ஏராளமான இளைஞர்கள் திரையுலகில் அடியெடுத்து வைத்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மணிரத்தினம். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர முயன்று தோற்றவர். இவர் இயக்கிய ‘மௌன ராகம்” கதை சொல்லலிலும்,  கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் புதிய பாணியை வகுத்தது .  நாயகன்” உலக அளவிலான பார்வையையும், பாராட்டையும்  பெற்றது.

இதற்கடுத்ததாக இயக்குனர் சேரன், எஸ்பி ஜனநாதன், சுசீந்திரன், வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ், மணிகண்டன், ராஜுமுருகன்,  லெனின் பாரதி… ஆகியோர் தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்திய முக்கியமான படைப்பாளிகள்.

இவர்களின்  தொடர்ச்சியாகத்தான் கூழாங்கல் இயக்குனர் வினோத் ராஜையும் பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனித்துவம் இருக்கும்தான்; இருக்கவேண்டும் தான். ஆனாலும் , தான் தனிப்பிறவி என்று எவரும் சொல்லிக் கொள்ள முடியாது.  எல்லோரும் ஒன்றிலிருந்து ஒன்றாக உருவானவர்கள் தான். அப்படி உருவாகிக் கொண்டிருப்பவர்களால்தான், தமிழ்ச்சினிமா இப்போதும் தழைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் பேசுவோம்…

கட்டுரையாளர் ;  பாலு மணிவண்ணன்

இயக்குனர், பத்திரிகையாளர், எழுத்தாளர், ‘திரையும், திரைக் கதையும்’ உள்ளிட்ட 32 நூல்களின் ஆசிரியர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time