விவசாயிகளுக்கு மட்டுமல்ல- அனைத்து இந்தியருக்கும் எதிரானவையே – பாஜக அரசின் வேளாண் மசோதாக்கள்!

-அறச்சலூர் செல்வம்

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகளின் வாதங்களையும் பொருட்படுத்தாமல் அராஜகமாக வேளாண் மசோதாக்கள் இந்தியப் பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன! இவற்றால் ஏற்படவுள்ள பாதகங்களை, உருவாகப் போகும் பாதுகாப்பற்ற விவசாயச் சூழலைச் சற்றே விரிவாகப் பார்ப்போம்!

இந்தியாவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புத் தரும் தொழில் விவசாயம் தான். ஆனால், விவசாயிகள் உட்பட எல்லா இந்தியர்களாலும் மட்டமாக மதிக்கப்படுவதும் விவசாயம் தான்.காரணம் விவசாயிகள் உழைப்புக்கும், விளை பொருளுக்கும் உரிய மரியாதை இல்லாமல் போனதே!

ஆனால் இந்தியாவின் விவசாய வரலாறு என்பது வேறு விதமானதாக இருக்கிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு  முன்பு வரை இந்திய விவசாயம் மிக உச்சத்தில் இருந்த ஒன்று. இந்திய விளைபொருட்களுக்காகத் தான் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தனர்.

அவர்களது வருகைக்கு முன் இருந்த நிலையைப் பயணிகளாகவும், அதிகாரிகளாகவும் இருந்த ஆங்கிலேயர்கள் பதிவு செய்தவைகள் இந்திய விவசாயத்தின் உச்சத்தைத் தெரிவிக்கின்றன. ஜான் பேட்டிக்ஸ், டாக்டர். நாதானியேல் வாலிச், சார்லஸ் மெட்காஃப்  ஆகியோர் அன்றைய இந்திய விவசாயத்தின் தன்நிகரில்லா சிறப்பை ஆவணப்படுத்தியுள்ளனர்! ஆனால் மது தற்சார்புக்கான விவசாயம் ஆங்கிலேயர்களால் உலக வணிகத்திற்கானதாக மாற்றப்பட்டது. காந்தி இந்தியாவில் நடத்திய முதல் போராட்டம். விவசாய விடுதலைக்காக நடந்த ஒன்று தான்.

இந்திய விவசாயத்தை வணிகத்திற்கான ஒன்றாக ஆங்கில அரசு மாற்றியதன் விளைவு இந்திய விவசாயம் முற்றாகச்  சிதைந்தது. விடுதலை பெற்ற பின் உணவு துறை சார்பிற்காக விவசாயத்தை மேம்படுத்தப் பல வேலைகள் நடந்தன. நீர் ஆதாரங்கள் பெருக்கப்பட்டது. நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டது. ஆனாலும் ஆங்கிலேயரின் வணிகப் பாதையிலேயே தொடர்ந்தது. கிராமப்புற வளர்ச்சியும் ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட்ட தற்சார்பு நிலையை மீண்டும் உருவாக்குதற்கு மாறாகச் சார்பு நிலையிலேயே தொடர்ந்தது.

இருப்பினும் உணவு தற்சார்பையும் விவசாயிகளின் நலன்களையும் நுகர்வோர் நலன்களையும் காக்கப் பல பாதுகாப்பு அமைப்புகள், சட்டங்கள் உருவாக்கப்பட்டது. அவைகளில் முக்கியமானவை விவசாயிகள் விளைவிக்கும்  பொருட்களை வணிகர்கள் தங்களது பேராசைக்காக உரிய விலை கொடுக்காமல் ஏமாற்றிடக் கூடாது என்பதற்காகக் குறைந்த பட்ச ஆதரவு விலை முறை கொண்டு வரப்பட்டது.

விவசாயிகள், வணிகர்களால் பாதிக்கப்படாமல் இருக்க விவசாய விளை பொருட்கள் சந்தை கமிட்டி (தமிழகத்தில்  ஒழுங்கு முறை விற்பனைக் கமிட்டி, வட இந்தியாவில் மண்டிகள்) அமைக்கப்பட்டது. அதற்கான சட்டங்களும் வகுக்கப்பட்டது. இதில் பெரும் வணிக அமைப்புகள் உள்ளே வந்து விலையைக் குறைப்பது தடுக்கப்பட்டது. இந்தச் சட்டம் தற்போது தமிழக அரசின் சீழ் இயங்கும் ஒழுங்குமுறை கூடத்தின் சேவைகளைத் தடுக்கிறது.

அது போலவே வாங்குவோர் நலன் காக்க, பெருமளவு விளை பொருட்களை இருப்பு வைத்துக் கொண்டு சந்தை நிலவரத்தைக் குலைப்பது, விலையைத் தேவைப்படும் போது இறக்குவது, தங்களுக்குத் தேவையான நேரத்தில் ஏற்றுவது போன்றவை தடுக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கள்ளச் சந்தை தடுக்கப்பட்டது. பதுக்கல் தடுக்கப்பட்டது.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு தமது பொருட்களை எடுத்துச் சென்று விற்கும்  விவசாயிகள், நல்ல விலைக்கு என்று கூற முடியாவிட்டாலும், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் (மண்டிகள்) இருக்கும் மாநிலம் பஞ்சாப். ஆனால் அங்கேயே இன்னும் தேவைப்படும் மண்டிகளின் எண்ணிக்கை 18,000-19,000.  பஞ்சாபிலேயே இந்த நிலை என்றால் நாட்டின் பிற பகுதிகளில் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு அடுத்து உதவிக்கரமாக இருந்து வருவது குறைந்த பட்ச ஆதரவு விலை. இதன் பெயரே குறைந்தபட்ச ஆதரவு விலை. கட்டுபடியான விலை அல்ல. அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் பொருட்களைக் கொள்முதல் செய்யப்படுவதில் இருந்து தடுக்க உள்ள முறை. விவசாயிகள் விளைவிக்கும் எல்லாவகையான விளை பொருட்களுக்கும் இந்தப் பாதுகாப்பு இல்லை.

வெறும் 23 வகையான பொருட்களுக்கும் மட்டும் மத்திய அரசின் கீழ் உள்ள வேளாண் செலவு மற்றும் விலைக்கான கமிசன் (Commission for Agricultural Costs and Prices (CACP), குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 7 தானிய வகைகள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், சோளம், ராகி, கம்பு, பார்லி),  வகையான எண்ணெய் வித்துகள், 5 வகையான பயறு/பருப்பு வகைகள் மற்றும் 5 வகையான வணிகப் பயிர்கள் ( பருத்தி, கரும்பு, தேங்காய் மற்றும் சணல்). இவைகளுக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளது. உதாரணமாக ஒன்றைச் சுட்டலாம். நெல் இந்தியா முழுதும் விளைவிக்கப்படுகிறது. இதிலும் சில பிரச்சினைகள் இருந்த போதிலும்  இது ஒரு குறைந்தபட்ச பாதுகாப்பாக உள்ளது. இந்த 23 வகை விளைபொருட்களுக்கு மட்டுமே இந்த குறைந்தபட்ச பாதுகாப்பு. மற்ற விளை பொருட்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. ஆனால்,தற்போது இதற்கு பாதுகாப்பின்றி செய்துள்ளது இந்த சட்டங்கள்!

அண்மையில் நடந்த ஆய்வில் வாய்ப்பு கிடைத்தால் விவசாயத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் விவசாயிகளின்  எண்ணிக்கை 64 % ஆக உள்ளது. தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் இதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

உழன்றும் உழவே தலை என்கிறார் வள்ளுவர். உழன்றும் என்றால் கடினமானது, உடல் வருத்தக்கூடியது என்று பொருள். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் ( National Sample Surevy organisation)2013ல்  வெளியிட்ட விவசாயிகள் கடன்கள் குறித்த அறிக்கையில்  ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் கடன் அளவு 12,585 ல் இருந்து  47,000க்கு உயர்ந்தது 2013ல்.5 ஏக்கர் நிலத்திற்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்களில் 82% பேர் கடனாளிகள்.   மொத்த விவசாயக்குடும்பங்களின் எண்ணிக்கை 4.68 கோடிகள். இதில் 3.84 கோடி குடும்பங்கள் 5 ஏக்கருக்கும் கீழே நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள்.  அதிக கடனாளிக் குடும்பங்கள் இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப், ஹரியானா, ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம் உள்ளது.

(பச்சைப் புரட்சி எங்கெல்லாம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் விவசாயிகள் கடனில்)  இந்தப் பின் புலத்தில் இருந்து விவசாய அவசரச் சட்டங்களைக் காண வேண்டும்.

இங்கே பக்கத்தில் 5 கி.மீ தொலைவில் உள்ள உழவர் சந்தைக்குக் கொண்டு சென்று தனது காய்கறியை விற்கவே விவசாயிகளால் முடியவில்லை. 10 கி.மீக்குள்  இருக்கும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று தனது நெல்லை, கடலையை, தேங்காயை விற்க முடியவில்லை விவசாயிகளால். தங்கள் ஊரிலேயே விளைந்ததை விற்று பணம் வந்தால் போதும் என்பதே விவசாயிகளின் பொதுவான மன நிலை!  இவர்களைப் போய் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்று நல்ல வருவாயைப் பெறலாம் என்று மத்திய அரசு சொன்னால் நம்மையெல்லாம் அந்த அளவு முட்டாள்களாக மத்திய அரசு எடை போடுகிறது என்று தானே அர்த்தம்.

ஒப்பந்த விவசாய விவசாயச் சட்டம் என்ன சொல்கிறது என்றால் விவசாயிகளின் விளை பொருட்களை வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட விலைக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளும். சந்தையில் விலை குறைந்து போனாலும்,அதிக விலையாக இருந்தாலும் ஒப்பந்த விலைக்குத் தான் அந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும். வணிக நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது எந்தத் தரத்தில் இருக்க வேண்டும் என்பதையும் கூறிவிடும். விதை, உரம் போன்றவற்றையும் வழங்கிவிடும்.இதன்படி உற்பத்தி செய்த விளை பொருட்களைத் தனியார் நிறுவனத்திற்கு விவசாயி தரக் கடமைப்பட்டவர். அதாவது இது வரை இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்து வந்த அரசு வேளாண் துறைப் பணிகளைத் தனியாரிடம் விட்டு விடுகிறது.

அதாவது, விவசாயி தன்னுடைய நிலத்தில் எப்படி விவசாயம் செய்ய வேண்டும் என்பது மாறிப் போய் தன்னுடைய  நிலத்தில் ஒரு வகைக் கொத்தடிமையாக இருக்க வேண்டும். முடிவெடுப்பதெல்லாம் வணிக நிறுவனங்கள் செய்யும்.

வணிக நிறுவனங்களிடம் ஏற்கெனவே கரும்பு உள்ளிட்ட சில பயிர்களில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட  வேண்டிய நிலுவைத் தொகை ஒவ்வொரு கரும்பு ஆலையிலும் கோடிகளில் உள்ளது. அதையே இன்னும் வாங்கித் தர முடியவில்லை அரசுகளால்!

அத்தியாவசிய பொருட்கள் தடை நீக்கச் சட்டம் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு  நல்ல விலை பெற அடுத்த  மாநிலங்களுக்குப் பொருட்கள் எடுத்துச் செல்வதை அனுமதிக்கும் சட்டம் என்கிறது அரசு.  இப்போதும் மாநிலங்கள் தாண்டி விளை பொருட்களை எடுத்துச் செல்ல பெரிய தடைகள் இல்லை. அதனால் தான் காஷ்மீர் ஆப்பிளும், கர்நாடகப் பொன்னியும் ஆந்திரப் பொன்னியும், ஆந்திரத்து மிளகாயும் இங்கே நம் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டுள்ளன.

ஆட்சியாளர்கள் மக்களை முட்டாள்களாகவே மதிக்கின்றனர் .

மேலும் வணிக நிறுவனங்கள் பண்டங்களை வாங்கி இருப்பு வைப்பதில் இனி எந்தத் தடையும் இல்லை. நல்லது  தானே என்று நினைக்கலாம். உண்மையில் பெரு வணிக நிறுவனங்கள் அதிகமாக வாங்கி பதுக்கிக் கொள்ளவே இந்த சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.இதனால்,செயற்கையாக அவை ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயர்வை ஏற்படுத்திவிடும்!ஆனால்,இது வரை உள்ள சட்டத்தால் இப்படிப் பதுக்குவதைத் தடுக்கிறது.அதை தான் பாஜக அரசு அகற்றி,கார்ப்பரேட்டுகளுக்கு வழி சமைத்துக் கொடுக்கிறது!

தற்போதைய சட்டத்தின் மூலம் இனி அரசு விலையைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கும் பொறுப்பில் இருந்து விலகி  விடுகிறது. வணிக நிறுவனங்களின் கருணைக்கு விவசாயிகளை, மக்களை விட்டுவிடுகிறது. கருணை மனுக்களை அதானிக்கும், அம்பானிக்கும், வால்மார்ட்டிற்கும் அனுப்ப வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கும், அதை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கியதற்கும் உள்ள காரணம் விவசாயிகள் இந்த காலகட்டத்தில் போராட முன்வரமாட்டார்கள் எனக் கருதித் தான்!

வேளாண்மைக்கு நல்லது செய்யவே என்று பாஜகவின்  பேச்சாளர்கள் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்களே என்ற மயக்கம் வருகிறது. பாஜக இப்படி முழுப் பூசனியைச் சோற்றில் மறைக்கிறதே!

தற்போது “வேளாண் துறை என்றால் அது விவசாயிகளைக் குறிப்பதாக ஆகாது. இதற்குள்  விவசாயிகள்- விவசாய வணிக நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இருப்பதாக் கொண்டு வந்துவிட்டனர்!

இந்த சட்டங்களின் விளைவால் இந்திய விவசாயம் அமெரிக்க விவசாயத்தைப் போல மாற்றி அமைக்கப்படப் போகிறது. மொத்தமாக விவசாயம் வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல உள்ளது. அனைத்தும் பெருவணிக நிறுவனங்கள் மற்றும் சந்தையின் கருணைக்கு விடப்படப் போகிறது.

இந்திய விவசாய நிலையை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அரசு ஏன் இப்படிச் செய்கிறது என்னும் நாம் யோசிக்கலாம். காங்கிரசும் இப்படியான பொருளாதார, வணிகமயப்படுத்தும் போக்கைத் தானே கடைப்பிடித்தது  என்று நினைக்கலாம். காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கும் வித்தியாசம் அது முடிவுகளை வணிக நிறுவனங்களுக்குச் சாதகமான வகையில் எடுத்தாலும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை மக்களின் கைக்குத் தந்தது..

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலாக போடுகின்ற ஒவ்வொரு சட்டத்திலுமே வணிக நிறுவனங்களின் நலனை மனதில் கொண்டே போடுகிறது.அதன் உச்சமாக கொண்டுவரப்பட்டுள்ள்வைகளே இந்த வேளாண் மசோதாக்கள்!

சரி இப்போது அவசரச் சட்டங்கள் சட்டங்களாகிவிட்டது. என்ன செய்ய வேண்டும்.

விவசாயிகள் போராட வேண்டும். இன்னமும் இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்று இருந்து வருகிறது. பி.ஜே.பி அரசு நீதிமன்றங்களையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் மக்கள் என்றும் மேலானவர்கள்.  மக்களின்  வலிமை என்றும் மேலானது. இது விவசாயிகள் பிரச்சனையல்ல. உணவு உண்ணும் ஒவ்வொருவரின் பிரச்சனை. அடிமைப்படுத்தப்பட்டது விவசாயம் மட்டுமல்ல. ஒவ்வொருவரின் உணவும் தான்.

கட்சிகள் போராடி மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கையைத் தாண்டி போராட்டம் மக்களுடையதாக  வேண்டும்.  எல்லாவிதத்திலும் பேச வேண்டும். ஒவ்வொரு பாஜக ஆதரவாளரிடமும் கேள்விகள் கேட்க  வேண்டும், மதிப்புடனும் அன்புடனும்! அவர்கள் வெறுப்பை உமிழ்வார்கள். தன்னால் தற்காக்க  முடியாதவைகள் தற்காக்கும் நிலை  ஏற்படும்  ஒவ்வொருவரும்  இப்படித்தான்  இருப்பார்கள்.  அதற்காக  அவர்கள் மீது பரிதாபப்படவே  வேண்டும்.  மாறாக  எதிர் வெறுப்பும்,  கோபமும் காட்டுவது  அவர்களை  வெற்றி பெறச்செய்யவே உதவும்.

 அக்கட்சியின் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். அவர்களின் மனசாட்சி  அவர்களை உலுக்கச் செய்ய வேண்டும்.

 இதுதான் காந்தி காட்டிய வழி. மனசாட்சியை உலுக்கச் செய்வது.

கட்டுரையாளர் – அறச்சலூர் செல்வம்:  தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்.  தமிழக இயற்கை விவசாய முன்னோடி! நம்மாழ்வாருடன் கால் நூற்றாண்டாக   இணைந்து பயணித்த விவசாயப் போராளி! விவசாயம் சார்ந்த  விழிப்புணர்வை  இடையறாது  நடத்தி வருபவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time