தேவை, மலிவு விலை மக்கள் உணவகங்கள்!

- சாவித்திரி கண்ணன்

உணவகம் என்பது மனசாட்சியில்லாத ஒரு வர்த்தகமாக வலுப் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வாய்த்தது தான் அம்மா உணவகம்! ஆனால், அரசியல் தலையீடுகள், அலட்சியங்கள், அதிகார அழுத்தங்கள், சமாளிக்க முடியாத நஷ்டம் மற்றும் பெயர் அரசியல் ஆகிவற்றால் தடுமாறுகின்றன.

அம்மா உணவகம் குறித்த பெயர் அரசியல் உள்ளார்ந்த வகையில் தற்போது ஓடிக் கொண்டுள்ளது!

இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்!

உண்மையில் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்ட போது – அதாவது மார்ச்- 19,2013 ல் மாநகராட்சி மலிவு விலை உணவகம் என்று தான் ஆரம்பிக்கப்பட்டது ஆனால், வெகு சில நாட்களிலேயே அது ஜெயலலிதாவை நினைவுபடுத்ததக்க வகையில் அம்மா உணவகம் என்ற பெயர் மாற்றம் பெற்றதோடு, ஜெயலலிதாவின் படமும் ஒவ்வொரு உணவகத்திலும் பேனராக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் பெயர் தாங்கியதால் மாநகராட்சிக்கு இந்த உணவகம் நடத்துவதில் உள்ள நஷ்டத்தை சரிகட்ட மாநில அரசின் நிதியும் கொஞ்சம் கிடைத்ததாகத் தெரிகிறது!

அழகான கட்டிடம் ,ஸ்டீல் உணவு மேஜை, சில்வர் தட்டுகள், பாத்திரங்கள், மொசைக் தரை என்பதாக இந்த மலிவு உணவகம் தோற்றப் பொலிவில் ஒரு மரியாதையுடன் திகழ்ந்ததால், ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

செக்யூரிட்டி வேலை செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், வேலை தேடும் இளைஞர்கள்..ஆகியோர் இந்த உணவகத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து உணவு உட்கொண்டனர். அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகங்கள் மகத்தான வரவேற்பை பெற்றன. சென்னையில் 13 இடங்களில் துவங்கிய உணவகங்கள் இரு நூறாக உயர்ந்து, நானூறை எட்டியது. இது மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் வேண்டியதன் விளைவாய் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க 658 இடங்களில் செயல்பாட்டுக்கு வந்தது.

மிக நல்ல வரவேற்பு பெற்ற இந்த உணவகங்களுக்கு காலப்போக்கில் வரவேற்பு குறைந்தன. ஆரம்பத்தில் இருந்த சுவையும், தரமும் பிறகு இல்லை என்ற புகார்கள் வந்தன. மேலும் உணவகம் சுகாதாரமான நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக வந்தன.

இவற்றுக்கான காரணத்தில் மிகவும் பிரதானமானது, இதன் நஷ்டத்தை மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை என்பதே! வரவுக்கும்,செலவுக்கும் மிகப் பெரிய இடைவெளி தொடர்ந்து கொண்டே இருந்தது.

இட்லி ஒரு ரூபாய் என்றால், அதில் போடும் அரசி, உளுந்து, அதை மாவாக்கும் உழைப்பு அதற்கு தரும் தரமான பருப்பு சாம்பார் இவற்றை உருவாக்கி, பரிமாறுவதற்கான உழைப்பு, சம்பந்தப்பட்ட இடத்தின் பராமரிப்பு ஆகிவற்றை இணைத்து பார்க்கும் போது அதன் விலை கூடுதலாக வருகிறது! அதாவது ஒவ்வொரு இட்லி விற்பனையும், நஷ்டக் கணக்கை அதிகப்படுத்துகிறது.

இது தான் பொங்கல், சாம்பார் சாதம், தயிர்சாதம், எலுமிச்சை, புளியோதரை, கறிவேப்பிலை சாதங்கள், சப்பாத்தி உள்ளிட்டவற்றுக்கும் நிலைமை! உற்பத்தி செலவை விடவும் குறைவான விலைக்கு தரும் போது எந்த ஒரு தொழிலும் நிலை பெறாது! பிறகு நடமாடும் அம்மா உணவகமும் ஆரம்பித்தார்கள். இதி பெட்ரோல் செலவும் கூடுதலாக சேர்ந்து கொண்டது.

பெயர், புகழ் விளம்பரம், அரசியல் கணக்கு இந்த அபிலாஷைக்கு கொஞ்ச காலம் இழுத்து பிடிக்கலாம். ஆனால், தொடர்ந்த நஷ்டத்தில் ஒரு மிகப் பெரிய புராஜக்டை யாராலுமே கொண்டு செலுத்த முடியாது. அதுவும் ஒரே ஒரு இடத்தில் என்றாலும் சமாளிக்க முடியும். நூற்றுக்கணக்கான இடங்களில் என்பது பெரும் சவாலாகும்.

இந்த திட்டத்தில் இதனால் தான் அம்மா உணகவகத்தில் மேஜை பழுதானாலோ, மின்விசிறி பழுதானாலோ அதிகாரிகள் பழுதே பார்ப்பதில்லை. மின்மோட்டார் பழுதான சில உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் அதில் வேலை செய்யும் பெண்கள் வெகுதூரம் சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வந்து செயல்படும் அவல நிலைகளும் பல இடங்களில் தொடர்கிறது.

இன்னும் பல இடங்களில் லோக்கல் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் மளிகை, காய்கறிகள் வாங்குவதில் தலையிட்டு ஊழல் செய்கின்றனர். அதிகாரிகள், அரசியல்வாதிகளால் பெண்களுக்கு பல இடங்களில் பாதுகாப்பு இன்மை ஏற்பட்டு பிரச்சினைகளும் வெடித்தன!

அன்றே தங்களுக்கு தோதான – கட்சிக்கு விசுவாசமானவர்களை – பணியமர்த்தும் செயல்பாடுகள் நடந்ததால் தற்போது ஆட்சி மாறியுள்ள சூழலில் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கானவர்களை வேலைக்கு வைக்க முயற்சிப்பதாகவும், பழையவர்களை வேலையை விட்டு நீக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பெயர் மாற்றத்திற்கான பேச்சுகளும் அடிபடுகின்றன. பெயர் மாற்றத்தில் விருப்பம் இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதில் உள்ள கூச்சம் காரணமாக ஆளும் கட்சியினர் அமைதி காத்தாலும் ஒரு சில இடங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவோ அல்லது ஜெயலலிதா படத்துடன் கருணாநிதி படத்தையும் சேர்த்து வைக்கும் முயற்சிகளோ நடந்துள்ளன.

இருவர் பெயரையும் தவிர்த்து வள்ளலார் பெயரை வைக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். பசி ஆற்றும் ஜீவ காருண்யத்தைக் காட்டிலும் சிறந்த இறை வழிபாடு வேறு இல்லை எனச் சொல்லி அதன்படி செய்தவர் தான் வள்ளலார். இன்றும் கூட வள்ளலார் பக்தர்கள் தமிழகத்தின் பல இடங்களில் நாளும் அன்னதானம் செய்து வருகின்றனர்.

பசியால் வாடுபவர்கள், சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் இன்றும் நிறையவே உள்ளனர். கோயில்களில் தரும் அன்னதானத்தை உண்டு உயிர் வாழ்வோரும் கூட உண்டு.

ஆகவே, ஏழைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அரசாங்கம் அந்தரங்க சுத்தியோடு இந்த மலிவு விலை உணவகத்தை நடத்த மனம் கொண்டால், இதை நஷ்டமில்லாமல் செய்யலாம்.

மக்கள் பங்களிப்போடும், சுய சார்புடனும் இருந்தாலும் மட்டுமே இந்த உணவகம் வெற்றிகரமாக இயங்க முடியும்.

ஏராளமான விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் ஒரே புகலிடம் இந்த இட்லிக் கடை உணவுக் கடைகள் தான். அந்த ஏழைப் பெண்களுக்கு உணவகத்திற்கான இடத்தை மட்டும் அரசு உருவாக்கி தந்தாலே போதும். மாத வாடகையாக நூறோ, இரு நூறோ மட்டும் நிர்ணயித்தால் செளகரியமாக இருக்கும். பெண்கள் தங்கள் கூட்டு முயற்சியால் கூட இதை நடத்தட்டும். மகளீர் சுய உதவிக் குழுக்களை இதில் ஈடுபடுத்தலாம்.

இவர்களோடு கலந்து பேசி ஒரு விலையை நிர்ணயிக்கலாம். அவர்களும் தங்கள் வாழ்வியலுக்கான நியாயமான வருவாயை அதில் இருந்து பெறுவதாக அது இருக்க வேண்டும். ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான உணவு கிடைப்பதாகவும் அது அமைய வேண்டும். இதில் அரசியல் தலையீடோ, அரசாங்கத் தலையீடோ இருக்க கூடாது. சுய சார்புடன், சுந்ததிரமாக அவர்கள் பணியாற்ற வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுடன் அரசு விலகி நிற்பது சாலச் சிறந்ததாக இருக்கும்! இப்படி செய்ய முனைந்தால் தமிழகத்தில் 5,000 மலிவு விலை உணவகங்களை பெண்கள் உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுவார்கள். இதற்கு தேவை பெயர், புகழ் விரும்பாத ஒரு மனப்பான்மை தான்!

அம்மா உணவகமும் வேண்டாம். அய்யா உணவகமும் வேண்டாம். மக்கள் உணவகமே தேவை. அது மக்களால், மக்களுக்காக நடத்தபட வேண்டும். அரசு இதய சுத்தியுடன் இறங்கினால், இந்த நன் முயற்சி காலாகாலத்திற்கும் நிலை பெற்று சிறந்தோங்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time