தமிழ் நாட்டை ஆட்சி செய்வது திமுக? பாஜகவா?

- சாவித்திரி கண்ணன்

ச.முருகன், தண்டையார்பேட்டை,சென்னை

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொலைகாரனை விடுதலை செய்வதா என ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனரே?

31 வருட நெடிய சிறைவாசம் என்பது தூக்கு தண்ட்னையை விடக் கொடியது! எந்தக் குற்றவாளிக்குமே இது போன்ற மிக நீண்ட சிறைவாசம் என்பது ஏற்புடையதன்று! அது சிறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்! ஒருவரை விடுதலை செய்வதால் இந்த சமூகத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்ற அளவுகோலே போதுமானது!

எம்.ராதிகா, தேனீ

சில அரசியல் கட்சிகள் மொழி, சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றனர் என்கிறாரே பிரதமர் மோடி?

சொந்தக் கட்சியையே விமர்சிக்கும் அளவுக்கு துணீச்சல் வந்துவிட்டதா மோடிக்கு!

எஸ்.ராமநாதன், திருச்செந்தூர்

சமீபத்திய மானியக் கோரிக்கையில் இந்து அறநிலையத் துறையை நிர்வகிக்க இந்தியா முழுமைக்குமான ஒரே சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளதே?

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் திமுகவா? பாஜகவா?

மாநில உரிமைகளை பேசி வந்த திமுக தற்போது தானே வலிந்து சென்று மண்டியிடுகிறதே..! என்ன சொல்ல?

ஒன்றிய அரசின் குவிக்கப்பட்ட ஒற்றை அதிகாரத்தை கேள்வி கேட்ட காலம் மாறிப் போய் இருப்பதையும் எடுத்துக் கொடுப்பதா? தமிழக அரசின் நிர்வாகத்தில் இருக்கும் இந்து அற நிலையத் துறையை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் கோரிக்கையை திமுக அரசு எப்படி வைத்தது? அதுவும் ஒன்றிய என்பதை தவிர்த்து மத்திய அரசு என்ற சொல்லாடல் வேறு!

ஆக, தமிழகத்தில் தற்போது இருப்பது இந்து அற நிலையத் துறையா? அல்லது ஆர்.எஸ்.எஸின் கிளையா? என்ற சந்தேகம் வலுப்படுகிறதே!

அயோத்தியா மண்டபத்தை அயோக்கியதனத்தில் ஈடுபட்ட அறக்கட்டளைக்கே வலிந்து திரும்ப தந்தது!

கோவில்களில் ஏற்கனவே இருக்கும் கோசாலைகள் போதாது என்று தனியாக மாபெரும் கோசாலை அமைப்பது!

சிதம்பரம் தீட்சிதர்கள் மேலுள்ள 21 எப்.ஐ.ஆரை செயலிழக்கச் செய்திருப்பது!

ஆதீனங்களின் பல்லக்கு பவனிக்கு துணை போனது!

தமிழகத்தில் நாளும்,பொழுதும் கொல்லப்பட்டு வரும் யானைகளை பாதுகாக்கத் திரானியற்று கோவிலில் இறைபணி செய்து இறைவனடி சேர்ந்த யானைகளுக்கு நினைவு மண்டபம் எழுப்பபடுமென அறிவித்து இருப்பது…

என்ற வரிசையில் தற்போது அனைத்து தமிழக கோவில்களையும் இந்திய அரசின் அற நிலையத் துறையின் கீழ் கொண்டு வர திமுக அரசு துணை போவது என்றால், இதற்கு மேல் ஒரு தீமை இல்லை! தமிழக கோவில்களின் வழிபாட்டு முறைகள், பண்பாட்டு மரபுகள் என்பது வட இந்தியாவில் இருந்து முற்றிலும் வேறானது! தனித்துவமிக்கது.

‘அருகதை இல்லாத ஒரு ஆளுமையை நாம் ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவிட்டோமோ’ என்ற ஆதங்கமே மேலோங்குகிறது. பாஜக அரசின் இது வரையிலான அனைத்து அநீதிகளைவிடவும் மிகப் பெரிய அநீதி இது தான்! இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு!

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

பேரறிவாளன் விடுதலை ஆகிவிட்டார்! அது போல மற்ற ஆறுபேரும் விடுதலை ஆக வாய்ப்புள்ளதா?

மீண்டும் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டுவதை கவர்னர் தவிர்ப்பாரா? அல்லது அந்தப்படியே இந்த ஆறுபேரையும் நீதிமன்றமே விடுவிக்கட்டும் என நெடுமரமாய் நிற்கப் போகிறாரா? பார்ப்போம்!

சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி

திரைத்துறையில் உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தான் மோனோபலியாக திகழ்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்?

திரைத்துறை பட விற்பனையில் மொத்தம் ஏழு ஏரியாக்கள் உள்ளன! இதில் ஏராளமான விநியோகஸ்தர்கள் உள்ளனர்! கடந்த ஆறு மாதங்களில் நடந்த ஒட்டுமொத்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தின் 90 சதமானத்தை ஒரே நிறுவனம் மட்டுமே அள்ள முடியும் என்றால், அதற்கு என்ன பெயர்? மற்ற 10 சதவிகித லாபத்தையாவது மற்ற அனைவரும் பங்கிட்டுக் கொள்ள அனுமதிக்கிறார்களே… என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

சிறீதர் தமிழன், மும்பை

தமிழர் என்ற சொல்லுக்கு மாற்றாக திராவிடம் என்பது சரியா? திராவிடம் என்பது மரபினமா? உங்கள் கருத்து என்ன?

தமிழோடு நெருக்கமான தொடர்புள்ள மொழிகளை கண்டெடுத்து அவை அனைத்தையும் ஒரு சேரக் குறிக்கும் வண்ணம் திராவிட மொழிக் குடும்பம் என பெயரிட்டார் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்! சில திராவிட மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை என்பதால் தமிழை திராவிட மொழிகளின் தாய் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆரியத்திற்கு மாற்றான ஒரு பெரும் அரசியல் அடையாளக் குறீயீடாக திராவிடம் என்ற சொல் பதத்தை இங்குள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர் அவ்வளவே! திராவிடம் என்பது பரந்துபட்ட அர்த்தத்தை குறிப்பதால் அது தமிழர் என்பதற்கு ஒரு போதும் மாற்றாக இருக்க முடியாது!

எஸ்.ராகவன், நங்கநல்லூர் சென்னை

பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிப் பிடித்தை பற்றி?

இது தமிழ் தேசிய அடையாள அரசியலுக்காக ஸ்டாலின் செய்த திட்டமிட்ட பொலிடிக்கல் ஸ்டண்ட்!   நானறிந்த வரை ஸ்டாலின் இது வரை யாரையுமே முழு மனதுடன் கட்டிப் பிடித்த வரலாறே இல்லை. சென்ற மாதம் பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண வரவேற்புக்கு சீமான் சென்ற போது பேரறிவாளனும், சீமானும் ஒருவரை ஒருவர் கட்டித்  தழுவியது சோசியல் மீடியாவில் வைரலானது! இதன் மூலம் தமிழ் ஆர்வலர்களிடையே சீமானின் இமேஜ் உயர்ந்ததாக ஒரு தோற்றம் உருவானது! அதன் எதிரொலியே ஸ்டாலின் செய்த ஸ்டண்ட்!

ராமச்சந்திரன், பல்லாவரம்,சென்னை

துப்புறவு தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த கூலிகளாக வைத்து, அடிமாட்டுச் சம்பளம் தருகிறதே தமிழக அரசு?

துப்பு கெட்ட அரசு! அடி நிலை உழைப்பாளிகளை அடிமைக் கூலிகளாக வைத்திருக்கும் நிலப் பிரபுத்துவ அடிமை சித்தாந்தத்தையும் திராவிட மாடலில் சேர்த்துவிடாதீர்கள்! சோஷலிசம் பேசிய திராவிட இயக்க ஆட்சியாளர்கள் சோரம் போய்க் கொண்டிருப்பதை என்னென்பது?

மு.ராஜேஷ், சிங்காநல்லூர் கோயம்பத்தூர்

அதானி குழுமம் மருத்துவ துறையில் கால் பதிக்க போகிறதாமே?

அடப் பாவிகளா? மக்கள் உயிரையும் விலை பேச வருகிறார்களா? இனி மக்களை நோயாளிகளாக்கி அதானியிடம் ஒப்படைக்கும் பணியை விட வேறென்ன வேலை இருக்க போகிறது பாஜக அரசுக்கு!

சு.மரியதாஸ், திண்டுக்கல்

தமிழக அரசு மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்தவர்களை விடுவித்த வகையில் விடுதலையான 700 பேரில் இருவர் கூட முஸ்லீம் கிடையாதாமே?

சிறைவாசிகள் விடுதலையில் கடை பிடிக்கப்பட்டது சட்டரீதியான அளவுகோலா? சங்கிகள் ரீதியான அளவுகோலா? என்ற விளக்கத்தை அரசு தர வேண்டும்.

இரா.சிதம்பரம், கடலூர்

டெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபை புகார் கூறுகிறதே?

‘இந்தியாவில் உள்ள பல இந்து கோவில்களின் அடியில் புத்தர் சிலைகள் புதைந்துள்ளன’ என்பது பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல் பொருள் ஆய்வில் தெரிய வந்துள்ளது! அதற்கு என்ன செய்யலாம்?

அ.புவனேஸ்வரி, மதுரை

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கீறீர்களே? அப்படியானால் இது அவருக்கும், அவரோடு இறந்தவர்களுக்குமான அநீதியாகாதா?

மகாத்மா காந்தி கொலை சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் ஒராண்டு தொடங்கி 15 ஆண்டுகளில் படிப்படியாக முற்றிலும் விடுதலை செய்யப்பட்டனர்! ஆனால், தற்போது ராஜிவ் கொலையில் 31 வருடங்களையும் கடந்து சிறை நீடிப்பு செய்தால்.. உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல! இந்த சமூக கட்டமைப்பே குற்றவாளியாகிவிடும்! எந்த ஒரு குற்றத்திற்கும் சட்டப்படியான தண்டனையை மீறி கூடுதல் தண்டனை கோருவது பழிவாங்கும் குற்றச் செயலுக்கு ஒப்பாகும்!

சங்கர நாராயணன், மயிலாப்பூர், சென்னை

திரிபுரா முதல்வராக மாணிக் சாஹா பதவி ஏற்றுள்ளாரே..?

மாணிக்க கல்லாக ஒளிவீசிய மார்க்சியத் தலைவர் மாணிக்சர்க்கார் என்ற மாமனிதர் இருந்த பீடத்தில் பாஜகவின் மாணிக் சாஹா! பதவி ஏற்கும் முன்பே இவருக்கான படுகுழியை தோண்ட ஆரம்பித்துவிட்டனரே அவருடைய அமைச்சரவை சகாக்கள் விஷ்ணுதேவ் வர்மாவும், ராம்பிரசாத்தும்! நீண்ட நாள் நீடிக்க மாட்டார்!

ம.வேதவல்லி, ஆத்தூர், சேலம்

பருத்தி மற்றும் பஞ்சு நூல்விலை உயர்வால் ஜவுளித் தொழில் ஸ்தம்பித்து உள்ளதே? பல்லாயிரம் கோடி பொருளாதார இழப்பு! பல லட்சம் தொழிலாளர் பாதிப்பு தொடர்கிறதே தீர்வில்லையா?

பஞ்சையும் நூலையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தினாலே போதுமானது! ஏன் முடியவில்லை!

ஏற்றுமதியால் ஆட்சியாளர்கள் அடையும் ஆதாயப் பணம் தான் முக்கியம் என்றால், பஞ்சத்தால் மக்கள் பிணம் தான் இங்கு மிஞ்சும்!

கருப்பசாமி, அருப்புக் கோட்டை

இலங்கையில் மக்கள் போராட்டம் நடத்துவதால் தமிழ் நாட்டிற்குள் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் நுழைவார்கள் என மத்திய உளவுத் துறை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?

”சர்வத்தையும் இழந்து வாழமுடியாமல் அகதிகளாக தஞ்சமடைய வருபவர்களை இந்த கண்ணோட்டத்தில் தான் நாங்கள் பார்க்கிறோம்” என்பதே ஒன்றிய அரசு நமக்கு சொல்ல வரும் செய்தியாகும்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time