ஆபரேஷனின்றி மூலத்தை குணப்படுத்தலாம்!

-எம்.மரியபெல்சின்

கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி, தையலின்றி மிக எளிதான சிகிச்சையில் மூலத்தில் இருந்து விடுபட  சாத்தியமுள்ளது! சரியான உணவுகளையும், மூலிகைகளையும் பயன்படுத்துபவர்கள் ஆபரேஷனுக்கு ஆட்பட வேண்டியதில்லை! முழுமையான குணம் பெறலாம். கொஞ்சம் சிரத்தை எடுத்தால் போதுமானது!

ஆனால், ”மூலத்தை முழுமையாக குணப்படுத்துகிறோம்” என ஏகத்துக்கும் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி ஏமாற்றுபவர்கள் நிறைய உள்ளனர். இது போன்ற விளம்பரங்களைச் செய்யும் சில மருத்துவ முறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களை தன் வசப்படுத்தவே இப்படி செய்கிறார்கள். அவர்களால் முடியாததை மூலிகை மருத்துவத்தால்,  இயற்கை மருத்துவத்தால்… நமது பாரம்பரிய மருத்துவத்தால் நிகழ்த்திக் காட்ட முடியும்.

மூல நோய் வருவதற்கு மலச்சிக்கல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மலச்சிக்கல்! இது ஏற்படும் போது மலத்தை வெளியேற்ற முக்கி, முனகி மிகுந்த சிரமப்படும்போது ஆசனவாயில் ஏற்படும் அழுத்தம் நாளடைவில் மூலநோயை உண்டாக்கும். இன்னும் சொல்லப் போனால் உணவு உண்பதில் பிரச்சினை, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் என அது ஒரு தொடர்கதையாக நீள்கிறது.

மூலம் வராமல் தடுக்கவும், வந்தபிறகு அதிலிருந்து மீளவும் மிக எளிதான வழிகள் இருந்தாலும் அதை சரியாக பின்பற்றாததால் நம்மில் பலர் படும் அவதி சொல்லிமாளாது.பொறுமையின்மை, நம்பிக்கையின்மையாலும் கூட மூலநோயை முழுமையாக குணப்படுத்த முடியாமல் போகிறது. துத்தி என்ற ஒற்றை மூலிகையைக் கொண்டே மூலத்தை விரட்டி விடலாம். துத்தி மூலத்துக்கு கத்தி என்பார்கள்.

கீரை வகையைச் சேர்ந்த துத்தி மிகச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் தானாக வளரக் கூடிய ஒரு மூலிகை. துத்தியில் பலவகை இருந்தாலும் பெருந் துத்தி இலையைத்தான் கீரையாக உண்ண வேண்டும். இதை வெளிப் பிரயோகமாக பயன்படுத்தவும் செய்கிறார்கள். பச்சை நிறத்தில் இதய வடிவத்தில் காணப்படும் இந்த பெருந்துத்தியில் மஞ்சள் நிற பூக்கள் பூத்திருக்கும். இதன் காய்கள் வட்ட வடிவ சீப்பைப் போன்று காணப்படும். இதை வைத்து துத்தி பற்றி அறியாதவர்கள் கூட அடையாளம் கண்டுகொள்ளலாம்.

மூல நோய்க்கு அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வுதான் என்று சொல்லப்படும் நிலையில் இந்த துத்தி இலை மூல நோய்க் கிருமிகளை வயிற்றிலேயே அழித்துவிடும். சிலர் பச்சையாக மென்று சாப்பிடுகிறார்கள்; இன்னும் சிலர் துத்தி இலையை அரைத்து சாறு எடுத்து குடிக்கிறார்கள். மிக எளிதாக உண்ணக் கூடிய விதத்தில் கீரைக்கடைசல் செய்வது போன்று செய்து சாப்பிடலாம். மேலும் கைப்பிடி துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி பொறுக்கும் சூட்டில் மூலம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டுவதாலும் கூடுதல் பலன் கிடைக்கும். எனது அனுபவத்தில் பலருக்கு இந்த துத்திக்கீரையை பரிந்துரை செய்து பலன் பெற்றதைக் கண்டுள்ளேன். இலை கிடைக்காதவர்களுக்கு தேடிச் சென்று பறித்து கொடுத்துள்ளேன்.

இதேபோல் இட்லி பொடி போன்று செய்து சாப்பிட மிக எளிமையான ஒரு மூலிகைப் பொடியை நீங்களே செய்து சாப்பிட்டு மூலத்தின் கொடுமையிலிருந்து விடுபடலாம். கறிவேப்பிலை, ஓமம், சீரகம், வெந்தயம், மிளகு, சுண்டை வற்றல் சம அளவு எடுத்து லேசாக வறுத்துப் பொடியாக்கி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். மதியம் மற்றும் இரவு உணவுடன் முதல் கவளமாக சேர்த்தும் சாப்பிட்டு வரலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.  கண்டங்கத்திரி செடியின் பூக்கள் 50 கிராம் அளவு எடுத்து 100 மில்லி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி மூல முளை உள்ள இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் மூலம் சரியாகும்.

நாயுருவி இலையுடன் மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து மூலம் உள்ள இடத்தில் கட்டலாம். நாயுருவி விதையை மோரில் ஊற வைத்து அரைத்து மூலத்தின் மீது தடவி வந்தாலும் மூலம் சரியாகும். ஆலமரத்தின் மெல்லிய விழுதுகள் மற்றும் ஆலம்மொக்குகளை சேர்த்து அரைத்து பாலில் கலந்து மூலத்தில் கட்டினாலும் மூலம் குணமாகும்.

வில்வப் பழத்தின் சதையை பாலில் ஊற வைத்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டாலும் மூலம் குணமாகும். கருணைக் கிழங்கில் பிடி கருணை என்று ஒரு வகை உண்டு; அந்த கிழங்கை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வந்தாலும் மூல நோயிலிருந்து விடுபடலாம். ஆரைக்கீரை, புளியாரைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை, பொடுதலை, வெந்தயக் கீரை மற்றும் பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவதும் நல்ல தீர்வு கிடைக்கும். தினசரி இளநீர் உட்கொள்வதும் மூலத்திற்கு அருமருந்தாகும்!

வாழைப்பூவுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, வாழைப்பழத்துடன் அரை ஸ்பூன் சீரகத்தைச் சாப்பிடுவதும் ரத்த மூலத்திலிருந்து விடுதலை தரும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து அருந்துவதன்மூலம் மூலச்சூடு விலகும்.  மாசிக்காயை உரசி போடுவது, கடுக்காயை நீர் ஊற்றி கொதிக்க வைத்து சூடு ஆறியதும் மூலமுளை உள்ள இடத்தை கழுவுவதும் நல்ல பலன் தரும். கடுக்காய் மற்றும் திரிபலா பொடியை இரவில் தூங்கச் செல்வதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவதும் பலன் தரும்.

இவை அல்லாமல் நாம் உண்ணும் உணவுகள் மென்மையாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதுமாக இருக்க வேண்டும். தேங்காய்ப்பால், வெண்பூசணிச்சாறு, மாதுளை உள்ளிட்ட பழங்களின் சாறுகள் மிகவும் நல்லது. மேலும் குறிப்பாக ஆவியில் வெந்த உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு மற்றும் பொங்கல், பழைய சாதம் போன்றவை நல்லது. காரம் குறைவான குழம்பு வகைகள், கீரை வகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை சமைத்துச் சாப்பிடுவது கூடுதல் பலன் தரும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதன்மூலம் எளிதில் மலம் கழிவதுடன் மூலத் தொந்தரவிலிருந்து விடுபடலாம். கிழங்கு வகைகள் மற்றும் இறைச்சி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய்க் குளியலை தவறாமல் பின்பற்றினால் மூலம் வராமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் மூல நோய் உள்ளவர்கள் விளக்கெண்ணெயை தேய்த்துக் குளித்தால் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். விளக்கெண்ணெயை உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தால் மூல பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ளலாம். வயிறு நிறைய உணவு உண்டதும் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு மூல பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை. குறிப்பாக உண்ட உணவு செரிமானமாவதற்குமுன் அடிக்கடி உறவு வைத்துக்கொண்டால் மூலம் வர அதிக வாய்ப்பு உள்ளது.

நீண்டதூர வாகனப் பயணம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, அடுப்பின் அருகே அதிக நேரம் இருப்பது போன்றவையும் மூலம் வரக் காரணமாகும் என்பதால் கவனம் தேவை. நோய் வந்தபின் அதற்கு சிகிச்சை அளிப்பதைவிட வருமுன் காப்பது சிறந்தது. சில நேரங்களில் சில சூழல் ஒத்துவரவில்லை யென்றால் சூழலை மாற்றிக் கொள்வது நல்லது. மேலும், சிகிச்சை பெறுவது மட்டுமே தீர்வாகாது; அதன் ஊற்றுக் கண்ணை கண்டறிந்து அதற்கேற்ப வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time