சபாஷ்! வெடிக்கட்டும் போராட்டங்கள்! காத்திருக்கும் சாத்தான்கள்!

-சாவித்திரி கண்ணன்

இத்தனை நாட்களாகியும் ஒரு மாபெரும் அநீதிக்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய் திறக்காமல் காட்டும் மெளனம், நுபூர் சர்மா கைது செய்யப்படாமல் இருப்பது, அதனால் நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள், வன்முறைகள்..அதை சாக்காக வைத்து இஸ்லாமியர்களை அடக்கத் துடிப்பது…!

இஸ்லாமியர்களை அவதூறு செய்வதே வேலையாகக் கொண்டிருந்த நுபூர் சர்மாவிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தது மட்டுமின்றி, அவர் அவ்வாறு பேசும் போதெல்லாம் ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர்கள் தான் மோடியும், அமித்ஷாவும்! அதனால் தான் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக கட்சியில் இருந்து  தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

எதிர்ப்புகள், சர்வதேச அளவில் இருப்பதால் பேருக்கு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டு, நடவடிக்கை ஏதுமின்றி உள்ளனர். இப்படி சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தால் தான் இஸ்லாமிய இறை தூதர் குறித்து நுபுர் சர்மாவின் வெளிப்படுத்திய வன்மத் தீ காஷ்மீர் தொடங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து இந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடக்க காரணமாகியுள்ளது!

இந்தியாவிற்கு வெளியிலும் பல நாடுகளில் போராட்டங்கள் நடக்கின்றன! நுபுர் சர்மாவின் விஷமப் பேச்சுக்கு எதிராக மலேசியா, ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.  நுபூர் சர்மாவின் கருத்துக்கு விளக்கம் அளிக்க கோரி கத்தார், அபுதாபி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தன.

”நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பாஜக தலைவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதே போல மாயாவதி, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் பேசியுள்ளனர்.

இதனைக் கண்டித்து கான்பூரில் நடந்த போராட்டம் வன்முறையானது. உருவ பொம்மை எரிப்பு, கல்லெறி சம்பவங்கள்..என உத்திர பிரதேசம் அதிர்கிறது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது போல மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா,ஜார்கண்ட், தெலுங்கானா, தில்லி, காஷ்மீர்..என எல்லா மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். குற்றவாளியை கைது செய்திருந்தால் இத்தனை போராட்டங்களுக்கு வாய்ப்பே இல்லை! ஆனால், இஸ்லாமியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி, வன்முறைக்கு தள்ளிவிடவே குற்றவாளியை பாதுகாக்கிறது பாஜக அரசு!

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது ட்விட்டர் பக்கத்தில், “முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முகமது நபிகள் குறித்த பாஜக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரீப், ”இந்தியாவை தற்போது ஆட்சி செய்யும் கட்சி இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை நசுக்குகிறது” என குற்றம்சாட்டியிருந்தார். ”உலக நாடுகள் இதை கவனத்தில் கொண்டு இந்தியாவை கண்டிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அகமதியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு உலக நாடுகளே சாட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

நுபூர் சர்மாவிற்கு ஆதரவாக பாஜகவின் கங்கனா ரனாவத் நஞ்சைக் கக்கியுள்ளார்.பேசப்பட்ட அவதூறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மக்களின் உள்ளத்தில் எரியும் தீக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக ”ஏன் பேசினால் என்ன தவறு?” எனக் கேட்டு உள்ளார்.

இதே போல பாஜக தலைவர் சுப்பிமணியன் சுவாமியும், ”இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த போது அப்போது வாய் திறக்காத இஸ்லாமிய நாடுகள், தற்போது மட்டும் ஏன் பேசுகிறார்கள்” என கேட்டு உள்ளார். அதாவது, சுவாமி பேசுவதானது, ”என்றோ அந்த தீவிரவாதிகள் செய்த செயலுக்கு, தற்போது நாங்கள் பதிலடி தந்து உள்ளோம்” என ஒப்புதல் வாக்குமூலம் தருவதாக உள்ளது! இது வரை, ”யாரோ சில விஷமிகள் பேசியதை பொருட்படுத்த வேண்டாம்” என சமாளித்து வந்தது! ஆனால், சுவாமி சொல்லி இருப்பதன் மூலம் ”இது திட்டமிட்டு நாங்கள் தான் எங்கள் செய்தி தொடர்பாளரை இவ்விதம் பேசச் சொன்னோம்” என்பது போல உள்ளது.

ஆக, ஆன மட்டும் மேன்மேலும் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் ஒரு சிலர் பேசுவது, ஆனால், மேல்மட்டத் தலைவர்களோ, ‘தங்களுக்கு எதுவுமே தெரியாது’ என்ற வகையில் அமைதி காப்பது, என்பதை ஒரு அஜந்தாவாகவோ அல்லது யுத்த தந்திரமாகவோ பாஜக செய்கிறது என்று தான் தோன்றுகிறது.

நுபூர் சர்மாவை கைது செய்யச் சொன்னால், சமூக வலைத் தளங்களை அலசி ஆராய்ந்து ‘பாஜகவிற்கு எதிர்வினை ஆற்றிய ஏழெட்டு பேரையும் சேர்த்தே கைது செய்வோம்’ என லிஸ்ட் வைத்து வழக்கு பதிந்துள்ளது பாஜக அரசு!

”இன்னும் கோபப்படுங்கள்,கொந்தளியுங்கள், எங்களுக்கு செளகரியம்! மேலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தோதாக உங்கள் ஆத்திரம் அமையட்டும்..” என காத்திருக்குது பாஜக அரசு! ‘இப்படியாக அநீதிக்கு மேல் அநீதியாக அராஜகத்தை அரங்கேற்றத்தான் ஆட்சிக்கே வந்துள்ளோம்’ என்பதால் தான் மோடியும், அமித்ஷாவும் அத்துமீறிப் பேசிய நுபூர் சர்மாவை அரவணைத்து காப்பாற்றுவதன் நோக்கமாகும்!

ஆகவே, இஸ்லாமிய நண்பர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் அமைதி காக்க வேண்டும். பாஜகவிற்கு அன்பு மொழிகள் புரியாது. மற்றவர்களின் வலி கொஞ்சம் கூடத் தெரியாது. சர்வதேச சமூகம் மோடியையும், அமித்ஷாவையும் கண்டித்தால் தான் ஓரளவேனும் நடவடிக்கை எடுப்பார்கள்! இந்தியாவின் சமையல் எண்ணெய் பயன்பாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வெளி நாடுகளில் இருந்து தான் தருவிக்கப்படுகிறது. மலேசியாவையும், இந்தோனேசியாவையும் பகைத்தால் இந்திய வீடுகளில் இனி சமைப்பதற்கே சமையல் எண்ணெய் இல்லாமல் திண்டாட்டமாகிவிடும்.

இந்தியாவின் எரிபொருள் தேவையின் பெரும் பகுதி அரபு நாடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. அதை நிறுத்திவிட்டார்கள் என்றால், இந்தியாவே ஸ்ம்பித்துவிடும். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் மூன்று கோடி இந்தியர்கள் வேலை செய்கின்றனர்! அவர்களின் நலன் கருதியாவது இந்த துவேஷ பேச்சுக்களையும். அதை தூண்டிவிடும் தலைமையும் திருந்த வேண்டும். நுபூர் சர்மா போன்ற வாய்க் கொழுப்பு வன்முறையாளர்களை விரைந்து சிறையில் தள்ளாமல் வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டு, ”இதற்காகத் தானே காத்திருந்தேன்..”  என வாளாதிருப்பது நல்லதல்ல!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time