பிரசவ காலச் சிக்கல்களை எளிதாகக் களைவது எப்படி?

-எம்.மரியபெல்சின்

குழந்தை பேறு காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். அந்த காலகட்டத்தில் பக்குவமாக சாப்பிட வேண்டியவற்றையும், தவிர்க்க வேண்டியவற்றையும் தெரிந்து கொண்டால் சிக்கல்கள் தீரும்! சுகமான குழந்தைப் பேறு கைகூடும்!

பருவமடைதலில் தொடங்கி திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பேறு, பிரசவம், மெனோபாஸ் என பெண்களின் வாழ்க்கையில் சுமார் 40 ஆண்டுகள் வலிகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஆக, பெண்கள் ஒவ்வொரு பருவத்திலும் படும்பாடுகளை சொல்லிமாளாது. இதில் ஒரு சிலர் விதிவிலக்கு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் இடுப்பு வலியில் தொடங்கி முதுகுவலி மற்றும் உடல் உறுப்புகளின் பல்வேறு பகுதிகளில் வலிகளுடன் வாழ்ந்தாலும் அதை எளிதாக்க நிறைய வழிகள் இருக்கின்றன. குறிப்பாக பருவமடைதலுக்குப் பிறகு ஊட்டம் நிறைந்த உணவுகளைக் கொடுப்பதன் மூலம் பெண்களின் வாழ்க்கையை இனிமையாக்கலாம். அத்துடன் பிரசவ காலங்களை சிக்கலின்றி கடக்க முடியும் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரை.

பெண்கள் கர்ப்பமான சில நாட்களில் வாந்தியும், குமட்டலும் வருவது இயல்பு. ஏற்கெனவே உடலில் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களால் உணவு உண்ண பிடிக்காத இந்தச் சூழலில் வாந்தியும், குமட்டலும் மாறி மாறி வந்து மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். இன்னும் சிலருக்கு செரிமானக்கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட்டு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் சிலருக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பு தளர்ந்துபோனாலும், தாய்மை அடைந்துவிட்டோம் என்ற மனமகிழ்ச்சி அவர்களை வலிகளைக் கடந்தும் வாழ வைக்கும்.

கர்ப்ப காலங்களில் ஏற்படும் வாந்தி, வயிற்றுப் போக்கு மட்டுமல்லாமல் வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளுக்கு புதினா கைகண்ட மருந்து. கைப்பிடி புதினா இலைகளுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டி எலுமிச்சைச் சாறு, தேன், சர்க்கரை கலந்து பானமாக அருந்தலாம். பகல் பொழுதில் அருந்துவதற்கு இந்த பானம் ஏற்றது. இரவு வேளையாக இருந்தால் கைப்பிடி புதினாவை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் போட்டு வதக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இனிப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

வெறும் எலுமிச்சை ஜூஸ் அல்லது நெல்லிக்காய் கலந்த ஜூஸ் அருந்துவதும் நல்லது. நெல்லிக்காயை வெறுமனே கடித்துச் சாப்பிட்டால் செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் ஏற்படாமலிருக்கும்.

வாந்தி, குமட்டலை நிறுத்த ஆல்பகோடா பழம் மிகவும் நல்லது. புளிப்பும், இனிப்பும் நிறைந்த இந்தப் பழம் நாட்டு மருந்துக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் கிடைக்கிறது. ஆல்பகோடா பழத்தைச் சாப்பிடும்போது எச்சில் அதிகமாக ஊறுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ரத்தசோகை பிரச்சினையை சரிசெய்து எலும்புகளை பலமாக்க உதவும். கர்ப்பமான நாள் முதல் பேரீச்சை, அத்தி போன்ற பழங்களைச் சாப்பிட்டு வருவது உடலுக்கு பலத்தைத் தரும்.

வாந்தி, குமட்டல், மயக்கம் என ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய பார்லி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுவது நல்லது. மாலைவேளையில் பார்லி அரிசி கஞ்சி செய்து எலுமிச்சை ஜூஸ், உப்பு சேர்த்துக் குடிக்கலாம். பனங்கல்கண்டு அல்லது வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் பார்லியை வேகவைத்து அப்படியே வைத்திருந்து காலையில் வடிகட்டி குடிப்பதன்மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் போன்ற பாதிப்புகள் சரியாகும்.  சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படும் கர்ப்பிணிகள் பார்லி அரிசி கஞ்சியை அருந்தி நலம் பெறலாம்.

கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மாம்பிஞ்சு, மாதுளம்பழம் போன்றவற்றைச் சாப்பிடுவது சிறந்தது.

உளுந்த வடை, உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி, உளுந்து லட்டு போன்றவையும் மிகச் சிறந்த உணவாகும். இவை இடுப்பை பலப்படுத்தும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் இந்த வகை உணவுகள் பயன்பாட்டில் உள்ளன. உணவு உண்ணப் பிடிக்காததுடன் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க நார்த்தங்காய் ஊறுகாயை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். பகல் வேளைகளில் முருங்கைக் கீரை மற்றும் அரைக்கீரையில் செய்த சூப் அருந்துவது நல்லது. வேர்க்கடலை உருண்டை சாப்பிடுவதும் நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். மேலும் மதிய உணவில் தினம் ஒரு கீரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக கீரைகளில் நிறைய சத்துகள் இருக்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், பகல் நேரத்தில்தான் கீரை சாப்பிட வேண்டும். கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் குழந்தையின் முக்கிய உடல் உறுப்புகள் உருவாகும் என்பதால் கீரைகள், பச்சைக்காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்பிணிகள் பழங்களை அதிகமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. முதல் மூன்று மாதங்கள் அன்னாசி, பப்பாளி பழங்களைத் தவிர்த்து ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழங்களைச் சாப்பிடலாம். ஆறாவது மாதத்திலிருந்து பாசிப்பயறு, உளுந்து, கடலை மாவு மற்றும் அரிசி மாவில் செய்த பலகாரங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

உளுந்தில் செய்த உணவுகள் எல்லா காலங்களிலும் எல்லோருக்கும் நல்லது. அதிலும் குறிப்பாக உளுந்தில் செய்த களியுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடலாம். நேந்திரன் வாழைப்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி காய வைத்து அரைத்து மாவாக்கி அதில் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய், முந்திரி, திராட்சை, கல்கண்டு சேர்த்து பாயாசம் போன்று செய்து சாப்பிடலாம். காலை, மாலை வேளைகளில் இதுபோன்று செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். இதேபோல் பயறுகளை முளைகட்டி பச்சையாகவோ அல்லது அரை வேக்காடாக வேக வைத்தோ சாப்பிடுவதும் நலம் தரும்.

இந்த காலகட்டத்தில் முருங்கைக்கீரை, மணத்தக்காளி, முள்ளங்கி கீரைகளை மண் சட்டியில் வேகவைத்து சூப் செய்து சாப்பிடுவது நல்லது. சூப் செய்யும்போது பெரிய வெங்காயத்துக்குப் பதில் சின்ன வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது நல்லது. இதுபோன்று கீரைகளில் செய்த சூப்பினை தொடர்ந்து அருந்திவந்தால் வாந்தி நிற்பதுடன் வேறு சில அலர்ஜி பிரச்சினைகளும் சரியாகும். அத்துடன் சுகப்பிரசவமாகவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். பகல் உணவுக்குப் பிறகு வெற்றிலையுடன் குங்குமப்பூ சேர்த்துக் கொள்வது, இரவில் தூங்கச் செல்வதற்கு முன் குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். ஆனால், குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல.

 

கர்ப்பிணிகள் ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள ஃபோலிக் ஆசிட் பிரசவ நேரத்தில் பிரச்சினைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும். நீர்ப்பற்றாக்குறையை தவிர்க்க தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் பொதுவாக  பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நிறைய நீர் அருந்துவது நல்லது. சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி வரும். இதைக்கண்டு பயந்து வேறு ஏதாவது பிரச்சினையோ என்று நினைப்பார்கள். இத்தகைய நேரங்களில் அரை ஸ்பூன் சீரகத்தை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அதனுடன் வெண்ணெய் சேர்த்துக் குடித்தால் வயிறு வலி சரியாகும்.

இதேபோல் பிரசவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் ஒரு ஸ்பூன் சீரகத்தை மையாக அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட வேண்டும். முதல் மூன்று நாட்கள் காலை, மாலை சாப்பிட வேண்டும். அதன்பிறகு மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு பிறகு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். பிரசவ காலம்வரை தொடர்ந்து சாப்பிட்டால் சுகப்பிரசவமாகும்.

இதே போல தவிர்க்க வேண்டியவை குறித்தும் கவனம் தேவை. ஏனெனில் நீங்கள் உங்களுக்காகமட்டும் சாப்பிடவில்லை. உங்களுக்குள் உருவாகி வளரும் ஒரு சிறிய ஜீவனுக்கும் சேர்த்தே சாப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

காபி, தேனீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது பித்தத்தை அதிகப்படுத்தும்.முற்றிலும் தவிர்க்க முடிந்தால் நல்லது. அன்னாச்சி,பப்பாளிப் பழங்களை தவிர்க்க வேண்டும்.

ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்றால், கடையில் வாங்கி சாப்பிடக் கூடாது. அதில் சோடியம் அதிகம் சேர்க்கபடுகிறது. அது சிக்கலை ஏற்படுத்தும். அதிக காரமான மற்றும் மசாலா உணவுகளை தவிர்த்து விடுதல் நல்லது.

வாய்வு தொல்லைகள் தரும் உருளைக்கிழங்கு, இறால் மீன், வாழைக்காய், எண்ணெய் பலகாரங்கள் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

பீர் உள்ளிட்ட அனைத்து மது வகைகளில் இருந்து முற்றிலும் விலகிவிட வேண்டும்.

கர்ப்ப காலங்களில் பலர் வேலை எதுவும் செய்யாமல் ஓய்வெடுப்பார்கள்; அது நல்லதல்ல. இன்றைக்கு கர்ப்பப்பை பலவீனமாக உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, கரு கலைந்துவிடும் என்று பயப்படக்கூடியவர்கள் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு வீட்டு வேலைகளைச் செய்வது, அம்மியில் மசாலா அரைப்பது, ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டுவது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்வது சுகப்பிரசவமாக உதவும்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time