தமிழகம் ஊழலில் உச்சபட்ச சாதனைகளைப் படைத்துக் கொண்டுள்ளது என்பதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகளே அத்தாட்சியாகும்! ஏற்கனவே இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து உள்ளன. தலைமைப் பொறியாளர் நியமனம் தொடங்கி,அடிமட்டத் துப்புறவுப் பணியாளர் நியமனம் வரை எல்லாவற்றிலும்,கையூட்டு,லஞ்சம் என ஊழலில் ஊறித் திளைக்கும் வேலுமணிக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் இவர் தலையில் நன்றாகக் கொட்டு வைத்துள்ளது!
உள்ளாட்சி அமைப்புகளை உதாசீனப்படுத்தி,உள்ளாட்சிகளின் தேவைகளை அறியாமலும், உரிமைகளை மதிக்காமலும்,பணம் ஒன்றே குறிக்கோளாய் உள்ளாட்சித் துறை டெண்டர் விட்ட 2,369 கோடி அறிவிப்பாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குடிநீர் வழங்கல்,தெருவிளக்கு வைத்தல்,சாலை போடுதல் உள்ளிட்ட 29 அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இவை எவற்றையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற போக்கில் தமிழக அரசின் அமைச்சர் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை ’ஓவர்டேக்’ செய்து தொடர்ந்து அத்துமீறி இயங்குகிறார்.இது தமிழகம் முழுக்க கொந்தளிப்பை உருவாக்கியுள்ள சூழலில், திருவண்ணாமலை தேவநத்தம் ஊராட்சித் தலைவர் ரமேஷ்,தர்மபுரியின் பொன்னேரி ஊராட்சித் தலைவர் அழகுராஜா,மன்னார்குடி ஒன்றியத்தின் ஜோதிமணி குமரேசன் உள்ளிட்ட பல மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான ஊராட்சி மன்றத் தலைவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில்,
’’இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஆவணங்களை பார்க்கும்போது டெண்டர் விஷயத்தில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்பட்டு நிதிக்கான காசோலையில் கையொப்பம் தேவை என்பதால் மட்டும் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப் படுகிறது எனத் தெரிய வருகிறது.இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களுக்கு எதிரானது என்பது புலனாகிறது. ஊராட்சிகள் சுதந்திரமான முறையில் முடிவெடுத்து அவற்றை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பஞ்சாயத்து ராஜ் முறை அங்கீகாரம் பெறும். மாநில அரசும் அதிகாரிகளும் பஞ்சாயத்துகள் தங்களின் கீழ் உள்ளவர்கள் என்ற எண்ணமும், செயல்பாடும் கொண்டவர்களாக உள்ளனர் என்பது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் தெரியவருகிறது. இந்த எண்ணம் அகற்றப்பட்டு, அரசியலமைப்பில் பஞ்சாயத்துகளுக்குத் தரப்பட்டுள்ள அதிகாரம் மூலம் நிதிக்குழுவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
எனவே, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அறிவித்த ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தையும் ரத்து செய்வதில் உயர் நீதிமன்றத்திற்கு எந்த தயக்கமும் இல்லை. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில் எங்கெல்லாம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெறுகின்றதோ அங்கு மட்டும் பணிகள் தொடரலாம். அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராம சபைகள் கூடி முடிவெடுத்து பஞ்சாயத்துகளுக்கான நிதியை பயன்படுத்த வேண்டும். நிதியை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பணிகளுக்கான புதிய ஒப்பந்தப்புள்ளிகளைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளியிட வேண்டும்.என கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பானது தமிழக அரசின் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது என உள்ளாட்சி அமைப்புகள் மகிழ்ச்சியடைந்துள்ளன.தன்னாட்சி அமைப்பின் நந்தகுமாரிடம் இது குறித்து கேட்ட போது,உள்ளாட்சி அமைப்புகளை பைபாஸ் செய்து தமிழக அரசு இந்த திட்டங்களை அறிவித்தபோதே இது பேரதிர்ச்சியை அனைவரிடமும் ஏற்படுத்தியது.விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் ஆபீஸ் முன்பு இதை எதிர்த்து ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள் போராட்டமெல்லாம் நடத்தினார்கள்.பல மாவடங்களிலும் கொந்தளிப்பு எழுந்தது.ஆனால்,எந்த எதிர்ப்பையும் அரசு பொருட்படுத்த வில்லை.அதனால் தான் முப்பதிற்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர்.இந்த நிதி முழுக்க,முழுக்க ஊராட்சிகளுக்கான நிதி.இதை தொடுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.அரசு அதிகாரிகளை கைபவையாக வைத்துக் கொண்டு, இப்படி பைபாஸ் செய்கிறார்கள்.அமைச்சர் தரும் அழுத்தங்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாகிறார்கள்.கடந்த ஆறுமாதத்திற்கும் மேலாக இந்த சர்ச்சை போய்க் கொண்டிருந்தது. நீதிமன்றம் நல்ல தீர்ப்பை நல்கியுள்ளது.வரப் போகின்ற 15 வது நிதிக்குழு அறிக்கையிலாவது இந்த மாதிரி தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் களையப்பட வேண்டும்.என்றார்.
Also read
அறப்போர் இயக்கத்தின் ஜெயராமனிடம் பேசிய போது, ’’உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படுவதில் தான் ஜனநாயகத்தின் அடிப்படையே பொதிந்துள்ளது.உள்ளாட்சி மன்றங்களின் அனுமதி யில்லாமல் அவர்களின் அதிகாரங்களை நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, மாநகராட்சி…ஆகியவை பறித்துக் கொண்டு உள்ளாட்சிகளில் சாலை போடுவது, மழை நீர் வடிகால் அமைப்பது..போன்ற பணிகளை வெளிப்படையாகத், தைரியமாகச் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதில் 40 முதல் 50 சதவிகிதம் வரை தரகுத்தொகை விளையாடுகிறது. அதனால் தான் நாங்கள் மத்திய தொகுப்பிலிருந்து நேரடியாக உள்ளாட்சிகளுக்கு நிதி தரப்பட வேண்டும் என்கிறோம். நாங்கள் தொடர்ந்து அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை நாங்கள் அம்பலப்படுத்திப் போராடி வருகிறோம்என்றார்.
Leave a Reply