தேசிய மருத்துவ ஆணையத்தின் தகிடுதத்தங்கள்!

-அபர்ணா அன்பரசன்

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையமானது கோல்மால் செய்யும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு துணை போகிறது! என்.எம்.சியின் வெளிப்படைத் தன்மையற்ற நிர்வாக சூழ்ச்சிகள், மருத்துவ உலகத்தையே மரணப்பிடிக்குள் தள்ளிவிடக் கூடும்..!

தேசிய மருத்துவ ஆணையம் என்பது எதற்கானது? யாருடைய நலனுக்கானது? என்பது தான் இன்றைக்கு இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம், புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கவும், மருத்துவக் கல்வியை ஒழுங்குமுறை படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். இந்த அமைப்பு ஒவ்வொரு கல்வியாண்டிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆய்வு செய்வது வழக்கம். அந்த ஆய்வின் அடிப்படையில், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனியாக ஒரு Assessment Report (மதிப்பீட்டு அறிக்கை) தயார் செய்யப்படும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை என்று தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்யும்.

ஒரு மருத்துவக் கல்லூரியில் போதிய அளவிலான மருத்துவர்கள், மருத்துவ ஆசிரியர்கள் , செவிலியர்கள், இதர மருத்துவத் துறை ஊழியர்கள் ஆகியோர் உள்ளனரா என்பதையும் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளான கற்பிக்கும் அறை, விடுதி , மருத்துவமனையின் படுக்கை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யப்படும். ஆய்வின் முடிவில், தேசிய மருத்துவ ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்தில் இருப்பின்,  கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்கும். இது போன்ற மதிப்பீட்டு அறிக்கையை 2011 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வந்தது.

மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்பிலோ, அல்லது முது நிலைசேர விரும்பும் மாணவர்கள் இந்த மதிப்பீடு அறிக்கையில் உள்ள தரவுகளை நன்கு ஆராய்ந்து, அதன்படி அவரவர் விருப்பத் திற்கேற்ப கல்லூரிகளை கலந்தாய்வு வழியாக தேர்வு செய்து படிப்பர்.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலை ( Medical council of India – MCI ) கலைத்து விட்டு 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர்25  ஆம் தேதியன்று தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission – NMC) என்ற புதிய அமைப்பை பாஜக அரசு உருவாக்கியது. இந்த ஆணையம் அமலுக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், எந்தவொரு கல்லூரிக்கான மதிப்பீட்டு அறிக்கையையும் இதுநாள் வரையில் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவிடாமல் இருக்கிறது. இது மட்டுமே பிரச்சினை அல்ல! கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் தனது இணைய தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து இருந்த அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளையும் 2020 ஆண்டே, இந்த புதிய ஆணையம் இணைய பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.

இதனையொட்டி சென்ற வருடம் மார்ச் மாதம் 9ம் தேதி அன்று திருச்சியை சேர்ந்த மருத்துவர் முகமது காதர்மீரான் அவர்கள்,  “தகவல் அறியும் உரிமை சட்டத்தின்” (Right to information Act – RTI) கீழ் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார்.

மருத்துவர் முகமது காதர் மீரான்

# NMC ஆய்வு செய்த கல்லூரிகள் மற்றும் MCI முன்னதாகவே பதிவேற்றியிருந்த கல்லூரிகளின் மதிப்பீட்டுத் தரவுகள் ஆகியவற்றை இணையத்தில் வெளியிட வேண்டும்.

# வெளியிடவில்லை என்றால், NMCயிடம் ஆவணங்களை வெளியிட தடை என்ற கொள்கை முடிவு ஏதேனும் உள்ளதா? அல்லது வெளியிடக் கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அல்லது பிரதமர் அலுவலகம் ஆலோசனை வழங்கியதா? அதற்கான ஆவணத்தையும் காண்பித்து விளக்கமளிக்க வேண்டும்” என்பதாகும்.

#  மேலும், 2021-22 கல்வியாண்டிற்கான அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்க வேண்டும் என்றும் இந்த விண்ணப்பத்தில் கோரியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த தேசிய மருத்துவ  ஆணையம் மீண்டும் முகமது காதர் மீரான் மேல் முறையீடு செய்ததால் மாதம் கழித்து 2022 ஜூன் 13 ஆம் தேதியன்று பதில் அனுப்பியது. அந்த பதிலில்,

#  மருத்துவக்கல்லூரிகளின் தர மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட கூடாது என எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை.

#  மருத்துவக் கல்லூரிகளின் தர மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகமோ, பிரதமர் அலுவலகமோ எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை

#   2021-22 கல்வியாண்டிற்கான அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகள், பல்வேறு கோப்புகளில் ஒழுங்கு படுத்தப்படாமல் சிதறி இருப்பதாலும் ; அவை மிக அதிக அளவிலான தகவல்களாக இருப்பதாலும் அவற்றை உங்களுக்கு வழங்க இயலாது என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆக, தங்கள் கடமையை என்.எம்.சி சரியாக செய்யவில்லை என அதுவே  ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது! மதிப்பீட்டு அறிக்கைகளை ஒழுங்கு படுத்துவதும், அதன் சாராம்சமான தகவல்களை சொல்ல வேண்டியதும் தான் இவர்களின் அடிப்படை கடமையே!

இப்பதிலை தொடர்ந்து மரு. மீரான் 2022 ஜூன் 21 ஆம் தேதியன்று NMC க்கு எதிராக தேசிய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதற்கு பதில் அளித்து 21மார்ச்சு அன்று,தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியிருந்த கடிதம் மேலும் ஒரு பகீர் ராகம்.  ஏற்கனவே தான் கூறிய பதிலுக்கு முற்றிலும்  முரணாக “ஆவணங்களை வெளியிடக்கூடாது என்ற கொள்கை முடிவை NMC எடுத்துள்ளது” என்ற வாதத்தை சமர்பித்திருந்தார்.

முதலில், ”கொள்கை முடிவு எதுவுமில்லை” என தெரிவித்துவிட்டு, பிறகு, ”கொள்கை முடிவு” என சொல்வதன் மூலம் தேசிய மருத்துவ ஆணையத்தின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதை மரு. மீரான் அவர்கள் தகவல் ஆணையருக்கு சுட்டிக் காட்டினார். மேலும் 2011 ஆம் ஆண்டே அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளதையும், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் பிரிவுகள் 60 & 61 இன்படி  மத்திய தகவல் ஆணையம் அளித்த உத்தரவு  தேசிய மருத்துவ ஆணையத்தை கட்டுப்படுத்தும். ஆகவே, ‘இந்த மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட மாட்டோம்’ என்று கொள்கை முடிவு எடுக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என்ற வாதத்தையும் மரு. மீரான் அவர்கள் முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறும்; அவ்வாறு விளக்கம் அளிக்கத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மத்திய தகவல் ஆணையம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் தற்போதைய கல்வி ஆண்டுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் மத்திய தகவல் ஆணையம் NMC ஐ அறிவுறுத்தி உள்ளது.

அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் மேலாண்மையில் ஒழுங்கில்லை, அவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை, ஊழல் மலிந்து விட்டது என்றெல்லாம் கூறி, அதனை கலைத்துவிட்டு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையமானது, முன்பிருந்த மருத்துவ கவுன்சிலைவிட மோசமாக, ஒழுங்கற்ற முறையில் இயங்குகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் என்ன இருக்கமுடியும் ?

 

என்.எம்.சி வந்தது முதல் அது கொண்டு வரும் ஒவ்வொரு மசோதாவுமே மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் எதிராகவே உள்ளது.இவர்களின் நோக்கமே மருத்துவ மாபியாக்களுக்கு பாதுகாப்பு தருவது போல உள்ளது என்ற சந்தேகம் இந்திய மருத்துவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுவே பல இடங்களில் போராட்டமாக வெடித்த வண்ணம் உள்ளது.

ஒழுங்கற்ற முறையில் இயங்கும் தேசிய மருத்துவ ஆணையம்

இந்திய பாராளுமன்றத்தால் நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 4 இன் படி, ஒவ்வொரு அரசு அலுவலகமும் தானாக முன்வந்து சில தகவல்களை மக்களுக்கு அளிக்க வேண்டும். இந்த சட்ட பிரிவின் கீழ் ஆவணங்களை வெளியிட முடியாது என்ற கொள்கை முடிவுகளை எடுக்க ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும், 2011 ஆம் ஆண்டே மத்திய தகவல் ஆணையமானது இந்த மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீட்டு அறிக்கைகள் அனைத்தும், தானாக முன்வந்து தகவல் தரும் பிரிவின் படி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் ஆகும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தையும், மத்திய தகவல் ஆணையம் 2011ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவையும் வேண்டுமென்றே தேசிய மருத்துவ ஆணையம் அலட்சியப்படுத்தி வருகிறது. இது மாணவர்கள் நலனுக்கும், பொது நலனுக்கும் எதிரானதாகும்.

இளங்கலை மருத்துவம் பயில சுமார் ஐந்தரை ஆண்டுகள் தேவைப்படும் .

அப்படியென்றால் கல்லூரியில் ஒரு  கல்வியாண்டில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் ஐந்தரை ஆண்டுக்கால கல்விக்கும் தேவையான அல்லது குறைந்தபட்ச இரண்டாண்டுக் கால கல்விக்கு தேவையான தரநிலைகள் உள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் அவை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தால் பூர்த்தி செய்யப்படுமா? என்றெல்லாம் பார்க்காமல் கண்டபடி உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து விட்டு, மாணவர்களை திண்டாட வைக்குமா தேசிய மருத்துவ ஆணையம்?

எம்.சி.ஐ இருந்த காலத்திலாவது அதன் மதிப்பீட்டு ஆவணங்களை முன் வைத்து வழக்கு தொடர்ந்து நியாயம் கேடும் வாய்ப்பாவது மருத்துவ மாணவர்களுக்கு இருந்தது.

“ஆவணம்னு ஒன்னு இருந்தா தானே வழக்கு தொடர்வீங்க .ஆவணமே இல்லாமல் பண்ணிட்டா என்ன?”  என்று தேசிய மருத்துவ ஆணையம் நினைத்தோ என்னவோ! ஆய்வு செய்த ஆவணங்களை வெளியிடாமல், புதிய புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்த கல்லூரிகளின் தரம் என்ன? இவர்களால் தொடர்ந்து செயல்பட முடியுமா? இதில் படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? நாளை அவர்கள் மருத்துவர்களாகி வெளியே வந்தால் தரமான மருத்துவர்களாக செயல்பட முடியுமா? ஆய்வு என்ற ஒன்று நடத்தப்பட்டிருப்பதை வேறு எந்த வழியில் ஆணையம் மக்களுக்கும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும்  தெரிய வைக்கும்?

இரண்டாவதாக, அகில இந்திய மருத்துவ கவுன்சில்  ஊழல் செய்தது என்ற பெரும் குற்றச்சாட்டை முன்னிறுத்தி அமலுக்கு வந்தது தான் தேசிய மருத்துவ ஆணையம்.

அப்படியென்றால், தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் ஊழல் செய்யமாட்டார்களா?

செய்ய முடியாது என்கிறது தேசிய மருத்துவ ஆணைய சட்டம். அட உண்மைதாங்க! மேலபடிங்க. தேசிய மருத்துவ ஆணைய சட்டம் (2019)இன் சட்டப்பிரிவு6(6)பின்வருமாறு,

அதாவது, “தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணையத்தில் பொறுப்பேற்கும் பொழுதும், பொறுப்பு காலம் முடிந்து ஆணையத்தில் இருந்து விலகும் போதும் தங்களது  சொத்து விபரங்களை சமர்பிக்க வேண்டும் மற்றும்  இன்னபிற தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களையும் சமர்பித்து அதனை பொது மக்கள் அறியுமாறு பிரகடனம் செய்ய வேண்டும்”

அடடே! அருமையான விஷயமா இருக்கே? என நாம் சந்தோஷப்படலாம் என்றால், அதான் இல்ல ! அப்படியான பிரகடனப் படுத்தப்பட்ட ஒரு ஆவணம்  இல்லவே இல்லையாம். ஆமாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட எந்தவித சொத்து பட்டியலையும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இதுநாள் வரையில் வெளியிடவில்லை.

அனல் பறக்க அமலுக்கு வந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் இன்றைய நிலை இது தான்! வார்த்தைக்கு வார்த்தை அகில இந்திய மருத்துவ கவுன்சிலை பார்த்து வெளிப்படை தன்மை இல்லை என்று கூறிய மருத்துவ ஆணையம் கடுகளவு கூட வெளிப்படை தன்மை இல்லாமல் இருப்பதை மிக வெளிப்படையாக வெட்கமின்றி தெரிவிக்கிறது.

இப்படியான அடிப்படை நிர்வாகமே குளறுபடியாக வைத்திருக்கும் தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ மாணவர்களுக்கு கொடுக்கும் கெடுபிடிகளுக்கு மட்டும் குறையே கிடையாது!

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த மாணவர்களுக்கு புதிய தேசிய அளவிலான தேர்வுகளை பரிந்துரைத்து வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளும், இத்தேர்வுகளுக்கான பயிற்சியை கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து அளிக்க ஒப்பந்தம் போட்டும் வருகிறார்கள். மாணவர்களிடம் இந்த பயிற்சிக்காக கூடுதல் கட்டணம் வேறு கட்ட சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக பரிதவிக்கிறது நமது மருத்துவக் கல்வியின் தரம்!

(பின் குறிப்பு: நீட்தேர்வைகட்டாயமாக்கியதும் இந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் தான். இந்த புதிய சட்டத்தின்படி நீட் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்று வரையறுக்கப்பட்டு விட்டதால், நீட்தேர்வுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளையும் லாக்டவுன் காலத்தில் 2020 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது)

(மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை வாசிக்க :https://drive.google.com/drive/folders/1kyv9o5j05WKulaiAZmIo8RuX1wyn-d8x?usp=sharing)

கட்டுரையாளர்; அபர்ணா அன்பரசன்

மருத்துவர்.  (சென்னை)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time