சனாதனமயமாக்கப்படும் தமிழகக் கல்வித் துறை!

-சாவித்திரி கண்ணன்

தமிழக ஆட்சியாளர்களை எப்படி புரிந்து கொள்வது? ஒரு பக்கம் சனாதன எதிர்ப்பு போர் முழக்கங்கள்! மறுபக்கம் சுமார் 12 லட்சம் மாணவர்கள் படிக்கும் ப்ளஸ் 2 பாடத் திட்டத்தில் சனாதனத்தை புகழும் பாடத் திட்டங்கள்! ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை தேசிய கல்வித் திட்ட அமலாக்கங்கள்..! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்;

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் திமுகவின் வருங்காலத் தலைவராகப் பார்க்கபடும் அமைச்சர் உதயநிதி “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்” எனப் பேசினார்.

அவர் பேச்சு அகில இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் என கடும் எதிர்ப்பு அலை வட இந்தியாவில் இருந்து வீசியது. மறுபுறம் சனாதனம் குறித்த தெளிவில்லாத இந்தியா கூட்டணியின் மம்தா போன்ற தலைவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள, ”சனாதனத்தை நாங்கள் மதிக்கிறோம்” என சொல்லும் அளவுக்கு சூழல் சிக்கலாகப் போய்க் கொண்டுள்ளது. எனினும், தான் சொன்னத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உதயநிதி மீண்டும் பேசியது தமிழக மக்களில் கணிசமானவர்களிடையே அவரது இமேஜை உயர்த்தி உள்ளது.

இந்த நேரத்தில் சனாதன தர்மத்திற்கும், இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையும், ”சனாதன தர்மம் என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு” என்ற உண்மையை மக்களுக்கு தெளிவாக்க வேண்டிய பெரும் கடமை தமிழக ஆட்சியாளர்களுக்கு உள்ளது!

ஆனால், தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள  12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான புத்தகத்தில் ‘சனாதன தருமம் அழிவில்லாத நிலையான அறம்’  என குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் 59 ஆவது பக்கத்தில் இந்து தர்மம் எனும் தலைப்பில் சமூகக் கடமைகள் (வர்ணாசிரம தர்மம்) எனும் உபதலைப்பில், “இந்துசமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியப் பண்பாடும் சமயங்களும்’ என்னும் பாடத்தில் (பக்கம். 58) “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும்” என்றுள்ளது.

இந்தக் கருத்துக்கள் முற்றிலும் பிழையானது. இதில் சொல்லப்பட்டவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள்! மேலும் வழக்கொழிந்து போனவைகளாகும்!

இந்தியாவில் இந்து மதம் என்பது நவீன சமரச சித்தாந்தங்களை உள்வாங்கி, சமீபத்தில் உருவாக்கப்பட்ட மதமாகும். சரியாகச் சொல்வதென்றால், 1799 ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட மதங்களை தனித்தனியே குறிப்பிடுவதற்கு உள்ள சிரமங்களைக் கருதி, அரசு நிர்வாக செளகரியங்களுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்த ‘இந்து மதம்’ எனப் பெயர் வைத்தனர் என்ற போதிலும், அதை இந்தியர்கள் சுமார் நூறாண்டுக்கு முன்பு வரையும் ஏற்கவில்லை என்பதே யதார்த்தம்!

சனாதன தர்மம், சாங்கியம், யோகம், உத்திர மீமாம்சை, பூர்வ மீமாம்சை, சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், சமணம், பெளத்தம்..என எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் இருந்தன. இவற்றில் சமணம், பெளத்தம் தவிர்த்து, மற்ற மதங்கள் அனைத்தும் மெல்ல, மெல்ல இந்து மதம் என்ற குடையின் கீழ் வந்தன! அத்துடன் சமண, பெளத்த மதங்களில் உள்ள பல முற்போக்கு அம்சங்கள் இந்து மதத்திற்குள் சேர்க்கப்பட்டு, நெகிழ்வுதன்மையுடன் காலப் போக்கில் கட்டமைக்கப்பட்ட மதம் தான் இந்து மதம்.

நன்றாக கவனிக்க வேண்டும். பல மதங்களின் கலப்பே இந்து மதம். அதாவது, பல மதங்களும் தங்களை இந்து மதத்தில் கரைத்துக் கொண்டன! அப்படிக் கரைந்து போன மதங்களில் ஒன்று தான் சனாதன தர்மம்! இது பிராமணர்கள் மட்டுமே கடைபிடித்த மதம்! அதாவது 95 சதகிதத்திற்கும் அதிகமானோர் பின்பற்றாத மதம். இந்த பிராமணர்கள் வேள்வித் தீயை உருவாக்கி நெருப்பை மட்டுமே வணங்கினர். உருவ வழிபாட்டை எதிர்த்து வந்தனர். நூறு வருடத்திற்கு முன்பு வரை இது தான் நிலைமை!

உண்மை இவ்வாறு இருக்க, ப்ளஸ் 2 பாட புத்தகத்தில், ”இந்து மதத்திற்கு வேத மதம், வைதீக மதம், சனாதன தர்மம் போன்ற பெயர்கள் உண்டு” என எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று பெயர்களுமே பார்ப்பன மதத்தை மட்டுமே குறிப்பானவாகும். இதன் மூலம், ‘வேதமதம் தான் இந்து மதம்’ என நிறுவப் பார்க்கிறார்கள்! இது உண்மையில்லை. வேதங்களுக்கும் சாதாரண இந்து மக்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பிராமணர்களைத் தவிர்த்து அனைவருக்கும் அன்னியப்பட்டதே வேதமதம்.

மேலும், ‘அறவியலும் இந்தியப் பண்பாடும்’ எனும் அந்தப் புத்தகத்தில் ‘வேதகால பண்பாடு’ என்னும் பாடத்தில் (பக்.54) “வேத உபநிடதங்களை ஏற்கும் சனாதன தர்மம் என்கிற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனித நூலாக அமையவில்லை. வேதம், உபநிடதம், பகவத்கீதை, புராணங்கள், இதிகாசங்கள் என்ற நீண்ட பட்டியலே உண்டு. ஒவ்வொன்றும் மனித இயல்புகளுக்குத் தக்க படி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது. வேதங்களில் யாகங்களும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. உபநிடதங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தத்துவ  உண்மைகள் காணப்படுகின்றன’’ எனக் கூறப்பட்டுள்ளது.

அடப்பாவிகளா? மேற்படியானவை அனைத்தும் பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தானவையல்லவா?

மக்களின் புனித நூல்கள் என்றால், அவை நாயன்மார்களும், ஆழ்வார்களும், இராமலிங்க அடிகள் போன்ற சித்தர்கள் இயற்றிவைகளுமான தேவாரம், திருவாசகம், திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம், அருணகிரி நாதரின் கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி உள்ளிட்ட எண்ணற்றவையல்லவா?

பல மதங்களின் கலவையான இந்து மதத்தை உண்டு செறித்து விழுங்கி, ”ஏற்றத் தாழ்வு கொண்ட – மூட நம்பிக்கைகள் நிறைந்த – சனாதன தர்மமே, இந்து மதம்” என பாடத் திட்டத்திலேயே திணிப்பது எவ்வளவு அயோக்கியத்தனம்!

இதை கல்வியாளர்கள் அரசுக்கு பல முறை கவனப்படுத்தியதாக சொல்கிறார்கள். ஏன் திருத்தவில்லை? அல்லது இந்த பாட திட்டத்தை ஏன் நீக்கவில்லை?

இத்தகைய வாக்கியங்கள் கொண்ட இந்த பாடதிட்டம் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 பதிப்பிலும் வந்த போது அதிமுக ஆட்சியாளர்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், திமுக அரசு 2021ல் பதவி ஏற்ற பிறகு வந்த 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது தான் வேதனையளிக்கிறது.

ஆபத்தான தேசிய கல்விக் கொள்கை தடுக்கப்படுமா?

இதுமட்டும் அல்ல, தமிழ் நாட்டில் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வலுவாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எண்ணும், எழுத்தும், வீடு தேடிக் கல்வி.. போன்றவற்றுக்குள் சனாதனச் சதி புதைந்துள்ளது. இது குறித்து ஆசிரியர் சங்களே மேடை போட்டு கொந்தளித்து உள்ளனர். அதையும் நாம் அறம் இணைய இதழில் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம். தமிழ் நாட்டிற்காக தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்க ஒரு கமிட்டியை அமைத்தீர்கள். அதில் முழுமூச்சாக செயல்பட்ட கல்வியாளர் ஜவகர் நேசனுக்கு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க நிர்பந்தப்படுத்தி வெளியேற்றினீர்கள்! நமது பள்ளித் திட்டத்தில் சிலை திருட்டு நாயகன் டி.வி.எஸ் வேணு சீனிவாசனை தலைமை பொறுப்புக்கு வைத்துள்ளீர்கள்! அரசு சார்பிலான கல்வி தொலைகாட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலமுள்ள பூபதி என்பவரை சி.இ.ஒவாகப் போட்டீர்கள்! அறம் இதழில் நாம் விரிவாக அம்பலப்படுத்திய பிறகு தான் வாபஸ் வாங்கினீர்கள்!

கல்வி தொலைகாட்சிக்குள் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்!

தமிழ்நாட்டு அரசின் செயல்திட்டங்கள் அனைத்துமே சனாதனத்திற்கு ஆதரவானவையாக உள்ளன. ஆனால், திமுக தலைவர்களின் பேச்சுக்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாக போர்முரசம் கொட்டுகின்றன!

பாடத் திட்டத்திலேயே சனாதனப் பிற்போக்கு கருத்துக்களை திணித்து பிஞ்சு மனதில் நஞ்சை கலந்துவிட்ட பிறகு எதிர்காலத் தலைமுறையிடம் நாம் என்ன சொன்னாலும் அது எடுபடாமல் தானே போகும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் தளத்தில், ‘’ பிளஸ் 2 பாடப் புத்தகத்தில் சனாதன தர்மமே அழிவில்லாத அறம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் இந்த ப்ளஸ் 2 வகுப்பில் சேர்ந்து சனாதன தர்மம் குறித்து போதனையை பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றெல்லாம் சொல்லுமளவுக்கு  நக்கல் பேச்சை வாங்குவது அவமானம் அல்லவா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time