சுயநல எம்.பிக்களுக்கு பாதுகாப்பில்லையாம்!

-சாவித்திரி கண்ணன்

‘இந்திய நாட்டில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கானதல்ல’ என்பதை இந்த பிரச்சினையை இவர்கள் அணுகிய விதம் வெளிப்படுத்திவிட்டது! மக்களின் விரக்தி  மற்றும் ஏமாற்றங்களை பார்லிமெண்டில் எதிரொளிக்க இந்த இளைஞர்கள் செய்த அதிரடி வழிமுறை எல்லா வகையிலும் பயனற்றுவிட்டது;

மக்களைவையில் மக்களின் அதிருப்திக் குரலை, விரக்தியை  நடக்கின்ற ஆட்சியின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு அதிரடிச் செயலை செய்துள்ள இந்த இளைஞர்களின் செயல் நமக்கு ஏற்புடையதாக இல்லை எனினும், தங்கள் உயிரையும், எதிர்காலத்தையும் பணயம் வைத்து மக்கள் குரலை ஒலித்துள்ளனர் என்பதே நிதர்சனம்! ஆனால், ஊடகங்களும், எதிர்கட்சிகளும் ”பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல்” என இந்த சம்வத்தை விவரிக்கின்றனர்!

எதிர்கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி,  பிரச்சினையை ”பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்றும், ”பாஜக அரசின் பாதுகாப்பு நடவடிக்கையில் குறைப்பாடு” என்ற கோணத்திலும் மட்டுமே அணுகுவதால், ‘இதனால் என்ன மாற்றம் விளைந்திருக்க வேண்டுமோ.., அதை நிகழவிடாமல் செய்துள்ளன! ஆட்சியாளர்கள் தங்கள் சுயத்தை உணர வேண்டிய தருணத்தை தடுத்துள்ளன!’ என்பது தான் நம்மைப் போன்ற சமூக அரசியல் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது!

பாராளுமன்றத்தில் வண்ணப் புகையை உருவாக்கிய இளைஞர்களுக்கு வன்முறை நோக்கங்கள் இல்லை! இந்த வண்ண புகை கேன்கள் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரணமாக விற்கப்படுவது தான்! விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது, மகிழ்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்கள் இதை பயன்படுத்துவர். சினிமாவில் காதல் காட்சிகளில், போட்டோ ஷூட் நிகழ்ச்சிகளில் எல்லாம் கூட  இந்த வண்ணப் புகை கேன்கள் பயன்படுத்தப்படுகிறது! ஆகவே, ஆபத்தில்லாத வழிமுறையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற வகையில் இவர்கள் தீய நோக்கம் கொண்டவர்கள் இல்லை என்ற முடிவுக்கே வர முடிகிறது.

”சர்வாதிகாரத்தை ஏற்கமாட்டோம்” என அவர்கள் கத்தினார்கள்!

”படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறோம். உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கி சிறையில் தள்ளும் ஆட்சி நடக்கிறது” என்பதே அவர்கள் வைத்த கோஷம்!

”விவசாயிகள் போராட்டங்கள் தொடங்கி மணிப்பூர் சம்பவம் வரை மக்களுக்கு அரசு துரோகம் செய்கிறது என்பதை கவனப்படுத்தவே நாங்கள் இந்த அதிரடி கவன ஈர்ப்புச் செய்தோம்’’ என அவர்கள் கூறியுள்ளனர்!

துர்அதிர்ஷ்டவசமாக இந்த இளைஞர்கள் வெளிப்படுத்திய மக்கள் குரலை காங்கிரஸ் உள்ளிட்ட எந்த எதிர்கட்சியுமே மக்களவையில் விவாதிக்க தயாராக இல்லை! பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இதே போல அன்று பகத்சிங் செய்த செயலை நாம் கொண்டாடினோம்! அதே சமயம் இன்று இந்த மாதிரி விவகாரத்தை அதிகார மேலாதிக்க கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகிறோம். நோக்கம் உன்னதமானதென்றால், செயல்பாட்டில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல் அணுகுவதே சரியானது!

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரியோ ‘‘நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை இச் சம்பவம் காட்டுகிறது” என்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, கார்த்தி சிதம்பரம், குர்ஜித் சிங் அஜ்லா தொடங்கி தமிழக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இதே கருத்தையே பிரதிபலித்துள்ளனர்.

மக்களவையில் குதித்தவுடன் அந்த இளைஞர்களின் கையை பிடித்து சில எம்.பிக்கள் முறுக்கினர். சிலர் தலையை பிடித்து உலுக்கினர். பலர் இளைஞரின் கன்னத்தில் ‘பளார், பளார்’ என அறைந்தனர். சிலர் ஓங்கி,ஒங்கி குத்து விட்டனர். அதன் பின்னர் தான் அந்த இளைஞர்களை பாதுகாப்பு படை வீரர்கள் அழைத்துச் செல்ல முடிந்தது! உண்மையில் பாராளுமன்றத்தில் குதித்த அந்த இளைஞர்கள் யார் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்தும் கொடூர வன்முறைகளை நிகழ்த்தவில்லை. அவர்கள் தான் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்!

வண்ணப் புகை வீசியவரை வளைத்து தாக்கும் வன்முறை எம்.பிக்கள்!

”எங்களுக்கேயான அதிகார மையத்திற்குள் இந்த பிசாத்து பசங்க வருவதா..? நாங்க யார் தெரியுமாக்கும்..” என்ற ஆணவமே எம்.பிக்களிடம் இருந்தது. இந்த இளைஞர்களிடம், ”ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?, சொல்லுங்கள்!” எனக் கேட்பதற்கு கூட எந்த எம்.பிக்களுக்குமே நிதானமோ, பக்குவமோ இல்லை!

இவர்கள் நம் பிள்ளைகள் அல்லவா? எவ்வளவு வேதனை இருந்தால், உயிரைப் பணயம் வைத்து இந்த முட்டாள்த் தனத்தை செய்திருப்பார்கள்! அவர்களிடம் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை இந்த நாட்டுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் ஆரோக்கியமாக யோசிக்க யாருமே தயாராக இல்லாதது போலத் தான் தெரிகிறது.

ஒரு பக்கம் மத்திய பாஜக அரசு இந்த இளைஞர்களுக்கும் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் முடிச்சி போடலாமா? என யோசிக்கிறது. ”நாடாளுமன்றத்தில் அத்துமீறியவர்களுக்கும், காலிஸ்தான் அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமா?”என்ற சந்தேகம் ஏற்படுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்!

ஆதீர் ரஞ்சன் செளத்திரி, மல்லிகார்ஜுன கார்க்கே

‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் பாஜக அரசின் பாதுகாப்பு குறைப்பாட்டை அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக மட்டுமே இந்த பிரச்சினையை அணுகுவதை எப்படி புரிந்து கொள்வது? ”இந்த சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும்” என மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ”நிலைமையை ஆய்வு செய்து அவை முடியும் முன் தகவல் அளிப்பதாக’ கூறினார். இதனால் அதிருப்தியடைந்த எதிர்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இவை யாவுமே ‘மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையாக இந்த விவகாரத்தை கையில் எடுக்க எதிர்கட்சிகள் தயாரில்லை’ என்பதையே உணர்த்துகிறது!

’’நமக்கு வாய்த்த எதிர்கட்சிகள் நம்மை வாழ்விக்கவே பாடுபடுகிறார்கள்”

லோக்சபாவில் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக ராம்பால், அர்விந்த், வீர்தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் உள்ளிட்ட எட்டு பேர் அடங்கிய பாதுகாப்பு படை வீரர்களை லோக்சபா செயலகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இன்னும் சில பேர் வேலைகள் பறி போகலாம்!

‘நாட்டில் பார்லிமெண்ட் உறுப்பினர்களின் உயிர் மட்டுமே முக்கியமானது. அங்கே ஒரு ஈ, எறும்பு கூட வந்துவிடக் கூடாது! நாங்கள் எங்க பிரச்சினையைத் தான் பேசுவோம். மக்கள் பிரச்சினைகளை நாங்க ஓட்டு வேட்டைக்கு மட்டும் தான் பேசுவோம்..’ என்ற ரீதியிலேயே எம்.பிக்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் உள்ளன! இவர்கள் என்னைக்கு மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப் போகிறார்கள்? இவர்களே மக்களின் பிரச்சினையாகியுள்ளது தான் இன்றைய யதார்த்தம்!

இப்படிப்பட்ட எதிர்கட்சிகள் இருக்கும் வரை இந்த மக்களை வாட்டி வதைத்து இன்னும் பல காலம் பாஜக கோலோச்சவே வாய்ப்புள்ளது! ”காங்கிரஸால் மாற்றம் கிடைக்கும்” என்பவர்கெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time