இரண்டாம் உலகப் போரின் படுகொலைகள் குறித்த விசாரணைப் படமே, ‘ஜட்ஜ்மெண்ட் அட் நியூரம்பெர்க்’. பல உலக விருதுகளை அள்ளிய படம். அன்பை விதைப்பவர்களே மனித குலத்திற்கானவர்கள். இவர்களால் உருவாகும் விழுமியங்களே சமூகத்தை முன்னோக்கி நகர்த்துகின்றன.. எனக் காட்டும் படம்;
‘ஆரிய இனம் தான் சிறந்தது’ என ஆர்ப்பரித்து, யூத மக்களையும், கம்யூனிஸ்டுகளையும் படு கொலை செய்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போகிறான். வெற்றி பெற்ற நாடுகள் மனித குலத்திற்கு எதிராக நடந்த கொடூரக் குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, பலரைத் தண்டித்தன.
இது சட்டரீதியாக விளக்கும் வாதுரைகளை விட, தார்மீகரீதியில் எழுப்பும் கேள்விகள் வலுவானவை. சமுதாயத்தின் நீட்சியாகத் தான் சட்டங்கள் இருக்கின்றன. நடந்த குற்றங்களுக்கு ஹிட்லரை மட்டும் குறை சொல்ல முடியாது.
அமெரிக்காவில் இருந்து நீதிபதி வருகிறார். இந்த வழக்கில் பணிபுரிய பலர் மறுத்த நிலையில், இந்த வேலை இவருக்கு வருகிறது. எளிமையான மனிதரான அவர், தனக்கு அதிக வேலையாட்கள் தேவையில்லை என்கிறார். ஹிட்லர் இறந்து விட்டான், அவனோடு இருந்த கோயபல்ஸ் உயிரோடு இல்லை, கோயரிங் உயிரோடு இல்லை. அடுத்த நிலையில் இருப்பவர்கள் மீது எப்படி வழக்கை நடத்துவது என்கிற தயக்கம் அவருக்கு இருக்கிறது. மூவர் நீதிபதிகளாக இருக்கும் இராணுவ நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஸ்பென்சர் டிரேசி நடித்துள்ளார்.
சட்டத் துறையைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு நடக்கிறது.எனக்கு இடப்பட்ட வேலையை நான் செய்தேன். இதில் தனிப்பட்ட பொறுப்பு இல்லை என்ற பதிலைச் சொல்லுகிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தின் மேன்மைக்காக ஒருசிலர் பலியானால் தவறில்லை என்கிறார்கள். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீதித்துறை அமைச்சர், தங்களை விசாரிக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை என்று சொல்லி வழக்கில் பங்கேற்க மறுக்கிறார்.
சித்திரவதை முகாம்களில் நடந்த கொடுமைகளைக் கண்ட இராணுவ அதிகாரி குற்றம் சுமத்தும் வேலையைச் செய்கிறார். யூதர்களாக இருந்தவர்களுக்கு கருத்தடை சிகிச்சை நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இப்படி ஒரு சட்டம் அமெரிக்காவில் இருக்கிறதே ! பிறகு ஏன் ஜெர்மனியை மட்டும் குற்றம் சொல்ல வேண்டும் என்று குற்றவாளிகளுக்காக வாதிடும் அதிகாரி கூறுகிறான். லட்சக்கணக்கான மக்கள் இறந்தது குற்றம் என்றால், அமெரிக்கா நாகசாகி, ஹிரோஷிமா மீது குண்டு போட்டு அழித்தது குற்றம் இல்லையா..? என்கிறார்.
ஹிட்லரின் கட்சியில் சேருவது கட்டாயம். எனவே, அந்தக் கட்சிக் கொள்கைப்படி நான் சாட்சி சொன்னேன் என்று அவள் பதில் சொல்லுவாள். கட்சியில் சேர்வது கட்டாயம் என்ற சட்டம் வருவதற்கு முன்பே, வெறுப்பைக் கொட்டும் கட்சியில் சேர்ந்தது தவறு இல்லையா..? என்ற கேள்வி எழுகிறது.
நவீன இயந்திரங்கள் மூலம் படுகொலை செய்தது குற்றம் என்றால், இலாபம் கிடைக்கும் என்பதற்காக அப்படிப்பட்ட இயந்திரங்களை உற்பத்தி செய்த அமெரிக்க முதலாளிகள் குற்றவாளிகள் இல்லையா..? என்ற கேள்வி வருகிறது.
இது எழுப்பும் தார்மீகக் கேள்விகள் வலுவானவை. கம்யூனிஸ்ட் ஒருவனின் மகன் என்பதற்காக, அரசாங்கம் சொல்கிறபடி கருத்தடை சிகிச்சை செய்வது அறமா ?
ஒரு யூதர், ஆரிய இனத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்ணோடு உடலுறவு கொண்டான் என்பதற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆரிய இனத்தோடு உறவு கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருந்தாலும், நியாயமற்ற அந்த சட்டத்தை அமலாக்க, ஒரு குடிமகன் அரசாங்கத்திற்கு ஏன் தகவல் சொல்ல வேண்டும்…? சாட்சி, ஆவணம் என்று இல்லாமல், அந்தக் காலங்களில் நிலவும் நிலைகளே தீர்ப்புகளுக்கு காரணமாக உள்ளன. போர் முடிந்தவுடன் வீரியத்தோடு தொடங்கும் விசாரணை, அதே வேகத்தோடு செல்கிறதா ? ஜெர்மனியர் மீது நடக்கும் விசாரணையை அவர்கள் விரும்பவில்லை.
பெர்லின் மக்கள் கோபமாக இருந்தால், பெர்லினைப் பிடிக்க முடியாது. பெர்லினை வெற்றி கொள்வது ஜெர்மனியை வெற்றி கொள்வது போல. அதாவது ஐரோப்பாவை வெற்றி கொள்வது அதாவது உலகை வெற்றி கொள்வது. எனவே ரஷ்யாவோடு பிணக்கு ஏற்பட்ட பிறகு, அதே வேகத்தோடு வழக்கை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமா? என அமெரிக்கா நினைக்கிறது.
ஆனால், தலைமை நீதிபதி தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்கிறார். அவர் அமெரிக்க நாட்டு மக்களால் பதவிநீக்கம் செய்யப்பட்ட மாவட்ட நீதிபதி தான். ஆனாலும் அவர் அரசாங்கம் சொல்கிறது என்பதற்காக வேகமாக தண்டிப்பதும் இல்லை. அழுத்தம் வருகிறது என்பதற்காக தண்டிக்காமலும் இல்லை. தனியாக இருக்கும் இவரை, இராணுவ அதிகாரியின் மனைவியாக இருந்த விதவை நடந்ததைச் சொல்லி தீர்ப்பின் ஓட்டத்தை மாற்ற முயற்சி செய்வாள். ஆனால் அவளிடம் வழக்கு குறித்து பேச மறுத்து விடுவார்.
ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல மறுத்த குற்றவாளி, சித்திரவதை முகாம்களில் கொடுமைகளைக் காட்டும் காணொளிகளைக் கண்டு மனமிரங்கி குற்றத்தை ஒத்துக் கொள்வான். யூத மக்களின் மண்டையோடுகளை தங்கள் மேசைகளில் அலங்கார பொருட்களாக வைத்துக் கொண்ட மக்களுக்கு குற்ற உணர்ச்சி இருந்ததா..? விசாரணையை அடுத்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 99 பிரதிவாதிகளில், ஒருவர் கூட 1961 ஆம் ஆண்டு இந்தத் திரைப் படம் வெளியான காலகட்டம் வரையிலும் தண்டனையை அனுபவிக்கவில்லை என்பதும் அன்றே கவனப்படுத்தப்பட்டது!
இறுதிக் காட்சியில் குற்றவாளி ஒருவரும், நீதிபதியும் நேரில் சந்திப்பார்கள். இத்தனை இலட்சம் பேர்கள் சித்திரவதை முகாம்களில் செத்தது அப்போது எங்களுக்கு தெரியாது என்று ஒரு குற்றவாளி கூறுவார். ‘எப்போது ஒரு நிரபராதியை முதலில் தண்டிக்கத் தொடங்கினாயோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டது’ என நீதிபதி பதில் சொல்லுவார். இது தான் இந்தப் படத்தின் கடைசி வசனம்.
ஸ்டேன்லி கிராமர் இயக்கி இருக்கிறார். அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். கருப்பு,வெள்ளைப் படமென்றாலும் தொய்வின்றி உள்ளது. 1961 ல் வெளியான இந்தப் படத்தை 2013 ல் அமெரிக்க அரசு பாதுகாக்க வேண்டிய கலாச்சார மற்றும் வரலாற்றுப் பொக்கிஷமாக அறிவித்தது!
ஜெர்மனி நாட்டின், நியூரம்பெர்க் நகரில் நடைபெற்றதால் இது ‘நியூரம்பெர்க் விசாரணை’ என்று அறியப்படுகிறது. நீதி என்பது நாடு, இனம், மதம் கடந்து அனைவருக்குமானது என உணர்த்தும் படம்!
Also read
இதில் என்ன விநோதம் என்றால், அடக்குமுறைக்கு ஆளான யூத இனம் ஒரு நூற்றாண்டு முடிவதற்குள், தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, பாலஸ்தீன இனத்தை படுகொலை செய்வது தான் ! வரலாற்றில் இருந்து நல்ல பாடம் பெற்றோமா? அல்லது கொடூரத்திற்கான பயிற்சி கிடைத்ததா? தெரியவில்லை. இந்தப் படத்தை சமகாலத்திலும் பொருத்திப் பார்க்க முடியும். அதனால் தான் அறுபது ஆண்டுகள் கடந்தாலும் இந்தப் படம் தொடர்ந்து பேசப்படுகிறது.
பார்க்க வேண்டிய படங்கள் என்ற பிரிவில் பிரைம் தளத்தில் Judgement at Nuremberg ஓடிக் கொண்டிருக்கிறது.
பட விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
யூத இனமே படுகொலை செய்கிறதா? ஒருசில யூத முதலாளிகள் செய்வதற்கு எப்படி இனத்தையே பொறுப்பாக்க முடியும்?