அம்பலப்பட்ட ஊழலும், அரங்கேறும் நாடகங்களும்!

ஜீவா கணேஷ்

ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனாவில் அசைவற்றுக் கிடந்த மே மாதம் தமிழக நெடுஞ்சாலைத்துறை மட்டும் தகதகவென வேலைகளை செய்தது என்றால்.சும்மவா?

ஒரு பக்கம் கொரானா மரணங்கள், மறுபக்கம் பொருளாதார பின்னடைவுகள்,வேலை இழப்புகள் என்று அல்லோகலப்பட்ட காலகட்டத்தில், ‘’ஆகா இது பொற்காலம் அள்ளுவோம் கோடிகளை’’ என தமிழக அரசு மட்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எல்லாத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அரசுப் பணிகளை கடந்த மே மாதம்  முதல் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

பணிகளைச் செய்ய டெண்டர் விட்டால்தானே கமிஷன் பார்க்கமுடியும். ஆனால்,டெண்டராவது, ஆர்டராவது தொடங்கு வேலையை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என செய்யப் போய் எல்லாம் தாறுமாறாகிவிட்டது!

12,000 கோடியில் ஒரு பகல் கொள்ளை!

கொரோனாவால் எல்லா நடவடிக்கைகளும் முடங்கிப் போயிருந்தாலும் பணிகளை மேற்கொள்ள 12000  கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் கடந்த மே மாதமே டெண்டர் விட்டது நெடுஞ்சாலைத் துறை. போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளை அகலப்படுத்துவது, வலுப்படுத்துவது என்று அரசுப் பணத்தை விரயம் செய்கிறது நெடுஞ்சாலைத் துறை. தேவையில்லாத இடங்களில் அதிகமாகச் செலவு செய்வது  அதிகமான கமிஷனைப் பார்ப்பதற்குத்தான்.

நெடுஞ்சாலைத் துறையில் புதிதாகப் போடப்பட்ட சாலைகளில் பழுது, பாலங்களில் பழுது என்று பல்வேறு முறைகேடுகள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாக உள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எந்த அச்ச உணர்வும்  மனசாட்சியும் இன்றி  முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலான  ஒரு முறைகேட்டினை  திருநெல்வேலி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட  தென்காசி கோட்டத்தில் திட்டமிட்டு கடந்த சில மாதங்களில் அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள்.

ஒப்புதலும் இல்லை,ஒப்பந்தமும் இல்லை!

தென்காசி, சங்கரன்கோவில் உட்கோட்டங்களில் உள்ள ஒரு சில சாலைகளை மூன்று பேக்கேஜ்களாகப் பிரித்து 16.15 கோடி ரூபாய் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து (பேக்கேஜ் 10: 4.56 கோடி ரூபாய், பேக்கேஜ் 17: 6.19 கோடி ரூபாய் , பேக்கேஜ் 18: 5.40 கோடி ரூபாய்) கடந்த மே மாதம் இறுதியில் டெண்டர் விட்டிருக்கிறார் திருநெல்வேலி கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி.  ஒவ்வொரு பேக்கேஜூக்கும்   ஆறு ஒப்பந்தக்காரர்கள் டெண்டர் போட்டிருக்கிறார்கள். நான்கு ஒப்பந்தக்காரர்களின் டெண்டர்களை சில காரணங்களைக் குறிப்பிட்டு நிராகரித்து உள்ளார்.

விலை குறைவாகக்  குறிப்பிட்டிருக்கும் ஒப்பந்தக்காரர்  வேலையைச் செய்வதற்கு தலைமைச்செயலக  நிதித்துறையின்  ஒப்புதல்  பெற்று அளிக்கும்படி  கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி  சென்னையிலுள்ள தலைமைப் பொறியாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். நிதித்துறையின்  ஒப்புதலுடன்  ஒப்பந்தக்காரருடன் ஒப்பந்தம் போட்ட பிறகு தான் சாலைகளில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தக்காரரை  கண்காணிப்புப் பொறியாளர் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் நிதித்துறையின்  ஒப்புதல் பெறாமலும் ஒப்பந்தம் போடாமலும் மூன்று பேக்கேஜ்களுக்கும் குறைவாக விலை குறிப்பிட்ட  (மொத்தமாக 19 கோடி ரூபாய்) ரவிச்சந்திரன்  என்கிற   ஒப்பந்தக்காரரை  கடந்த ஜூலை  மாதத்திலேயே பணிகளை மேற்கொள்ள கண்காணிப்புப் பொறியாளர் அனுமதித்திருக்கிறார். வேலை செய்வதற்கான உத்தரவும் ஒப்பந்தமும்  இல்லாமலேயே  ஒப்பந்தக்காரரும் 75 சதவிகித வேலைகளை  இதுவரை  செய்துள்ளார்.

அம்பலமான மோசடி!

இந்த நிலையில் டெண்டர் போட்டவர்களில் ஏதோ காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டவர்கள் போக மீதியுள்ள இரண்டு ஒப்பந்தக்காரர்களும் டெண்டரின் போது  கொடுக்க வேண்டிய வைப்புத்தொகையை ஒரே வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தியிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இது செட்டிங்  செய்யப்பட்ட  டெண்டர் என்று அரசு செயலாளருக்கும் தலைமைப் பொறியாளருக்கும் ஒரு சிலர் புகார் அனுப்பியுள்ளனர்.

இந்த முறைகேடுகள்   அம்பலமாகிவிட்டதால் தலைமைப் பொறியாளர் சாந்தி டெண்டர்களை  ரத்து  செய்யும்படி சொல்ல, கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி செப்டம்பர் மாதம் இறுதியில் ரத்து செய்துள்ளார். மூன்று பேக்கேஜ்களிலும் பெரும்பாலான வேலைகளை ஒப்பந்தக்காரர் முடித்து விட்டிருந்ததால் அதை முறைப்படுத்தி அவருக்குப்  பணம் கொடுக்க கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி மறுபடியும் டெண்டர் விட்டுள்ளார். வேலைகளை முடித்துவிட்ட ஒப்பந்தக்காரரும் வேறு சிலரும் இந்த டெண்டரில் கலந்து கொண்டுள்ளனர். நடந்த முறைகேடுகள்  தொடர்பாக டெண்டர்கள்  திறக்கப்பட்ட மறுநாள்  ஒரு சிலர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்   வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால்  கோட்டப்பொறியாளர், உதவிக் கோட்டப்பொறியாளர், உதவிப்பொறியாளர் ஆகியோர்  மீது மட்டும் பெயரளவில் நடவடிக்கை எடுத்து வழக்கு விசாரணைக்கு  வரும்போது அதைச்  சொல்லி உயர்நீதிமன்றத்தின்  கண்டனத்திலிருந்து உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

அந்த நாடகத்தை நிறைவேற்ற  நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் கோதண்டராமன் மூலமாக அரசுக்கு  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.    அறிக்கையைப் பெற்ற நெடுஞ்சாலைத் துறை செயலாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் தென்காசி கோட்டப் பொறியாளர் சுந்தர்சிங்,  தென்காசி உதவிக் கோட்டப்பொறியாளர்  பிரபாகரன் பிரின்ஸ்,  உதவிப்பொறியாளர் செல்வன், சங்கரன்கோவில் உதவிக் கோட்டப்பொறியாளர் மெரிலின் கிறிஸ்டல், உதவிப் பொறியாளர்  வைரமுத்து  ஆகியோரை கடந்த மூன்றாம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தண்டிக்கபடாத சூத்திரதாரி

வேடிக்கை  என்னவென்றால், டெண்டர் போட்ட ஒப்பந்தக்காரர்களில் நான்கு பேரின் டெண்டர்களை நிராகரித்த கண்காணிப்புப் பொறியாளர் சாந்தி,  வைப்புத் தொகையை  ஒரே வங்கிக்  கணக்கிலிருந்து செலுத்திய இரண்டு ஒப்பந்தக்காரர்களின்  டெண்டர்களை  நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இன்னாருக்குதான்  ஒப்பந்தம் தரவேண்டும்  என்று முடிவெடுத்தபிறகு அதைச் செயல்படுத்துபவர்   இவர்தான். முறைகேடுகள் செய்து லாபம் பார்க்கும்  கூட்டணியில் முக்கிய உறுப்பினராக செயல்படுபவர் எப்படி செட்டிங்  செய்த டெண்டரை  நிராகரிப்பார்? யார் வேலையைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக யாரோ ஒருவரை தன்  ஆளுகைக்குட்பட்ட  சாலைகளில் இரண்டு, மூன்று மாதங்களாக வேலை செய்ய இவர் அனுமதித்துக் கொண்டிருந்தார் என்றால் இதைவிட ஏமாற்று வேலை என்ன  இருக்க முடியும்? இவரையும்  தற்காலிக பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறைகேடுகளுக்கு  சூத்திரதாரியான கண்காணிப்புப் பொறியாளர் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்காணிப்புப் பொறியாளர் சாந்தியின் பொறுப்பில்தான் டெண்டர் ஆவணங்கள் உள்ளன. குறைந்தபட்சம் திருநெல்வேலியிலிருந்து உடனடியாக பணியிட மாறுதலாவது செய்திருக்க வேண்டும். பணம் தங்கு தடையின்றி தண்ணீராகப் பாய்வதற்கு வாய்க்காலை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க மாட்டார்கள்.

கண்துடைப்பு நடவடிக்கைகள்

சரி, ஒரு சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதாலேயே இனி எந்தத்  தவறும் நடக்காது என்று எதிர்பார்க்கவும் முடியாது. பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பார்கள். தவறு  செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்கமாட்டார்கள்.   தவறு நடந்ததை அனைவரும், ஏன் தவறு செய்தவர்களே மறந்த பிறகு தவறே நடக்கவில்லை என்று பூசி மெழுகிவிடுவார்கள். அல்லது யாருக்கும் வலிக்காத வகையில் ஒரு சிறு தண்டனையைக் கொடுப்பார்கள். அதன் பிறகு குற்றவாளிகள் தங்கு தடையின்றி தங்கள் வழியில் தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள்.  மற்றவர்களும் தைரியம் பெற்று நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என்று  கொள்ளையடிப்பார்கள், கொள்ளைக்கு துணை நிற்பார்கள்.  தவறு செய்த அனைவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா, எத்தனை பேருக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது, முடிவெடுக்காமல் எத்தனை வழக்குகள்  நிலுவையில் உள்ளன, எவ்வளவு வருடங்களாக உள்ளன என்பது நெடுஞ்சாலைத் துறை செயலாளருக்கும், முதன்மை இயக்குநருக்குமே வெளிச்சம்.

இது தேர்தலுக்கான திருட்டா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் ஆறு மாத காலம் உள்ளது. தேர்தலுக்குச்  சில ஆயிரம் கோடிகள் செலவு செய்தால்தான் வெற்றி பெற்று வந்தபின் அடுத்த ஐந்து ஆண்டுகளில்  பல ஆயிரம் கோடிகளைப் பார்க்க முடியும். தேர்தல் செலவுக்கும்  பலரின் சுகபோக வாழ்க்கைக்கும் தேவையை நிறைவேற்றுவதில் நெடுஞ்சாலைத்துறை பெரும்  பங்கு வகிக்கிறது.

போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளை அகலப்படுத்துவது, வலுப்படுத்துவது என்ற பெயரில்  அரசுப் பணத்தை விரயம் செய்வது,  தேவையில்லாத இடங்களில் சாலைகளையும்  பாலங்களையும்   அமைப்பது, தரமின்றி சாலைகள் போடுவது, தேவையில்லாமல் அதிகமான விலையுடன் திட்டங்கள் தயாரிப்பது, இன்னின்ன வேலைகளை இன்னின்ன  ஒப்பந்தக்காரருக்குதான் கொடுக்க வேண்டும் என்பது, மதிப்பீடுகள் தயாரிக்கப்படுவதற்கு முன்பாகவே டெண்டர் விடுவது, இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள தென்காசி முறைகேடு போன்றே ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாகவே சாலையில் வேலை மேற்கொள்வது போன்றவை எல்லாம்  நெடுஞ்சாலைத் துறையில் சகஜம் என்றும், தங்கள் கெட்ட நேரம் ஒரு சிலர் மாட்டிக்கொள்கிறோம் என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்தத்  தவறுகள்  ஆட்சியாளர்களுக்கும் தலைமைப் பொறியாளர்  சாந்திக்கும் தெரியாமல் தான் நடக்கிறதா? இல்லை, அவர்கள் வழிகாட்டுதலோடும் ஆசியோடும்தான் அனைத்தும் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

வரைமுறையின்றி புரையோடிய ஊழல்!

இந்த முறைகேடுகளும் ஊழலும்  ஒரு இடத்தில் என்றில்லை, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் எல்லா கோட்டங்களிலும் நடைபெறுவதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். டெண்டர்கள் முடிந்து 12000  கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு வல்லுநர் குழு அமைத்து  மதிப்பீடுகள், போக்குவரத்து கணக்கீடுகள், டெண்டர் ஆவணங்கள், ஒப்பந்தங்கள்  ஆகியவற்றை ஆய்வு செய்தால்,  வேலை நடந்து கொண்டிருக்கும்  சாலைகளில்  மாதிரிகளை எடுத்து தர சோதனை செய்தால் மட்டுமே நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் எவ்வளவு ஆழம் புரையோடியிருக்கிறது  என்பது தெரிய வரும்.

ஊழலையும் முறைகேடுகளையும்  செய்பவர்கள், வருங்கால தமிழகத்தை இருண்ட தமிழகமாக மாற்றிவிட்டுச் செல்கிறோம் என்பதை எப்போது உணருவார்கள்? அப்படி உணர்ந்தால் மட்டுமே  தாங்கள் புரியும்  மாபாதகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time