நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இமாலய ஊழல்…! மத்திய அமலாக்கத்துறை இக விரிவான ரெய்டு நடத்தி அனைத்து விபரங்களையும் எடுத்துள்ளது..! உண்மைகள் வெளி வருமா? அல்லது ஊமையாக கடந்து போகுமா? சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கபடுவார்களா? அல்லது சமரசம் கண்டு கிடைத்ததை பங்கு போட்டுக் கொள்வார்களா..?
மிதமிஞ்சிய மதுபான புழக்கத்தால் நாடும், மக்களும் நாசமாகி வருகின்றனர். குடும்பங்களில் வன்முறை, வளரும் குழந்தைகளின் மனநிலை பிறழ்வுகள், கொலைகள், பெண்கள் பாலியல் பலாத்காரம், சாலை விபத்துக்கள்.. ஆகியவை அதிகரித்து வருகின்றன. ஆனால், பல்லாண்டுகளாக மது விற்பனை லாபத்தில் சுகம் கண்டு விட்ட ஆட்சியாளர்கள், மக்கள் நலத் திட்டங்களுக்காகவே டாஸ்மாக் நடத்துகிறோம் எனக் கூறிவிட்டு, வரம்பற்ற வகையில் டாஸ்மக்கில் முறைகேடுகளை அமல்படுத்தி , பெரும் சூறையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நியாயமாக விற்பனை செய்தாலே மிக அபரிமிதமான லாபத்தை தரும் டாஸ்மாக்கில் வரைமுறையில்லாத வகையில் ஊழல் செய்து 2 லட்சம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், நஷ்ட கணக்கை காட்டலாமா? டாஸ்மாக் பணியாளர்களை அடிமாட்டுச் சம்பளத்திற்கு அத்துக் கூலிகளாக நடத்தலாமா? குடிமகன்களுக்கு தரமில்லாத மதுவைத் தரலாமா…? என்பதே தற்போதைய பிரதான கேள்விகளாகும்.
தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின், 4,830 சில்லறை கடைகள் வாயிலாக, தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. முக்கிய பண்டிகை நாட்களில் இந்த தொகை இரண்டு மடங்கிற்கும் மேலாகிவிடும். இது தவிர, ஏராளமான பார்கள், லைசென்ஸ் பெற்ற ஹோட்டல்கள், மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றுக்கும் பல்லாயிரக்கணக்கான மதுபான அட்டை பெட்டிகள் விநியோகம் செய்யப்படுகின்ற வருமானம் தனியாகும்.
இந்த வகையில் சப்ளை செய்யப்படும் சரக்குகளில் சுமார் 40 சதமானவை கணக்கு காட்டாமல் விற்கப்பட்டு அரசு கஜானாவிற்கு செல்லாமல் காணாமல் போவதாக புகார்கள் ஒன்றிய பாஜக அரசின் கவனத்திற்கு இங்குள்ள அதிகாரிகளாலேயே போட்டுத் தரப்பட்டு தான் இந்த ரெய்டுகள் நடக்கின்றன.
இரண்டாண்டுக்கு முன்பும் கூட இது போல டாஸ்மாக் தொடர்பான ரெய்டுகள் விரிவாக பல இடங்களில் பல நாட்கள் நடத்தப்பட்டன. ஆயினும், அது தொடர்பான தகவல்களை கமுக்கமாக மறைத்துவிட்டது மத்திய அரசு.
ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், ‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் மது ஆலைகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில், தி.மு.க., மேலிடத்து முக்கிய புள்ளிகளுடன் தொடர்பில் உள்ள, எஸ்.என்.ஜெயமுருகனின், எஸ்.என்.ஜே., மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மதுபானங்கள் விற்கும், தி.மு.க., முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பர் வாசுதேவனின், ‘கால்ஸ்’ குழுமத்தின் சென்னை தலைமை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள மது ஆலைகளிலும் சோதனை நடந்தது.
இதேபோல சென்னை அடுத்த அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலும், 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், ஒப்பந்ததாரர்கள் இடங்கள் என 3-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை தொடர்கிறது.
இதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜே மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான ஒப்பந்ததாரர் வீட்டிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்தது. கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான ஆலையிலும் 3-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை தொடர்ந்து நடைபெற்றது.
இதில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்ததில் மொத்த மதுபானங்களில் 40 சதவிக்த மாதுபானங்களுக்கு ஆயத் தீர்வை வசூலிக்கப்படவில்லை என்பதோடு அவை கள்ளத்தனமாக சந்தையில் விற்க டாஸ்மாக் அதிகாரிகளே துணை போயுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர். இப்படி கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு மட்டுமே ஆண்டுக்கு 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு செய்தியை கசிய வைத்துள்ளனர்.
மது விற்பனையில் மட்டுமல்ல, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதிலும் ஊழல் கரை புரண்டு ஓடியுள்ளது தெரிய வந்துள்ளது. பொதுவாக குடிப்பவர்கள் எந்த சரக்கை அதிகம் விரும்புகிறார்களோ, அவையே அதிகம் கொள்முதல் செய்யபட வேண்டும். ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கமிஷனுக்காகவே குடிபப்வர்கள் விரும்பாத சரக்குகள் அதிகம் கொள்முதலாகி தேங்கியதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனராம்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவோம் எனத் தெரிவித்து இருந்தது. அதன் படி 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் அதிக வியாபாரம் ஆகாத இடங்களில் இருந்தவையாகும். இதற்கு பதிலாக ஆயிரம் மன மகிழ் மன்றங்களை தலா ரூ 4 கோடி ரூபாய் லைசென்சுக்கு பெற்றுக் கொண்டு திறக்கச் செய்து அவற்றுக்கு கணக்கில் வராத மது பானங்கள் அதிக அளவில் தரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
இதெல்லாமே இது வரை தமிழகம் காணாத பெரிய அளவிலான ஊழல்கள் ஆகும். வேறெந்த இந்திய மாநிலங்களிலும் இவ்வளவு அதிகமான அளவுக்கு மதுபான விவகாரங்களில் ஊழல் நடந்திருக்குமா? தெரியாது. டெல்லி ஆம் ஆத்மி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் போன்றோர் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ளப்பட்டு தேர்தலில் தோற்கும்படி செய்யப்பட்ட மதுபான ஊழலின் மதிப்பாக சொல்லப்பட்டது வெறும் 100 கோடி தான்! ஆனால், தமிழகத்திலோ ஆண்டுக்கு 50,000 கோடிகள் என்பதாக நான்காண்டுகள் பெரும் மதுபான ஊழல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
இதே போலத் தான் மணல் கொள்ளையும் நடக்கின்றன. மணல் கொள்ளையிலோ கணக்கில் வைக்கப்படும் மணலின் அளவை விட கடத்தப்படும் மணலின் அளவு நான்கு மடங்கு என கண்டறியப்பட்டது. அங்கும் மணல் காண்டிராக்டர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் பரவலான ரெய்டுகள் நடத்திவிட்டு, அமலாக்கத் துறை அமைதி காத்தது. அதற்குள் அமைச்சர் துரைமுருகன் டெல்லிக்கு விமானத்தில் பறந்து சென்று, பாஜக ஆட்சியின் மேலிடத்தை சந்தித்து சமரசம் செய்து விட்டார்.
Also read
இரண்டாண்டுகளுக்கு முன்பு ரெய்டு நடந்த பிறகு பிரதமர் மோடியை தமிழகத்தில் நடக்கும் விளையாட்டு விழாக்களுக்கெல்லாம் அழைத்து மகிழ்ந்தனர் திமுக ஆட்சியாளர்கள்.
பாஜகவும், திமுகவும் பெரிய எதிரிகள் போலத் தோற்றம் காட்டினாலும் திமுக ஆட்சி சிக்கலின்றி தொடர, எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் பாஜக அரசு ஒத்துழைப்பு நல்கியே வருகிறது. அதற்கு முக்கிய காரணம் எதிர்ப்பதாக பொதுவில் சொல்லப்படும் அனைத்து பாஜக அரசின் திட்டங்கள், சட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு விசுவாசமாக செயல்படுத்தி வருவது தான்!
ஆனால், தற்போது ஆதாயங்களை பெற்றுக் கொண்டு அமைதி காக்கும் பாஜக தலைமையானது எப்போது தன் நிஜ முகத்தை வெளிப்படுத்தி, திமுகவினரை பழி வாங்கும் எனச் சொல்ல முடியாது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அண்ணன் கண்ணனின் கட்டுரையின் முதல் பத்தியின் முடிவில் கொள்வார்களா? என்று கூறியிருக்கிறார்கள். கண்டிப்பாக கொள்வார்கள். இதைத்தான் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக ஏற்கனவே தமிழகத்தில் ஓரளவிற்கு கூட்டணியின் மூலம் தடம் பதித்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன் எப்போது வேண்டுமென்றாலும் தன்னுடைய நிஜ முகத்தை காட்டும். 1950 ஆம் ஆண்டிற்கு பின்னர் திராவிட ஆட்சி தொடங்கி அவர்களுடைய ஆட்சிதான் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணா யாரை எதிர்த்தாரோ அந்த காங்கிரஸ் இன்று இவர்களுடன். அன்று தொடங்கிய ஊழல் வளர்ந்து இன்று ஆலமரத்தை விட வலுவாக வளர்ந்துள்ளது. இதுவரை ஒருவரும் ஊழலை ஒழித்ததில்லை. கூர்ந்து கவனித்தால் காங்கிரஸ் அன்று பின்பற்றிய செயலை இன்று பாஜக பின்பற்றுகிறது. மற்ற ஊழலை கைவிடுங்கள். வருமானத்திற்கு மேலாக சொத்து சேர்த்ததாக சில அரசியல் தலைவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணமே (தமிழகத்தில் மட்டும்) இந்திய கடன்களை அடைத்து விடலாம். செய்ய மாட்டார்கள். பார்ப்போம்.
மக்கள் நலனுக்கான ரெய்டு கிடையாது.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும் அடித்த கொள்ளையில் பங்குக்கும் நடக்கும் ரெய்டு.
ஆக இதில் மிக பெரும் அறுவடை ஆதாயம் ரெய்டு நடத்துபவர்களுக்கு இருக்கிறது.
வழக்கமான செய்தியாக மக்களும் கடந்து செல்ல வேண்டிய நிலைதான்
பாஜக ஆட்சி பிடித்த ஊழல் கேஸ்கள் கடலில் போட்ட பாறாங்கற்கள் தான் திமுக அரசை மத்திய பாஜக அரசு தொடாது மொரார்ஜி தேசாயா பிரதமராக இருக்கிறார்? இந்த தலைமுறை நேர்மையான வெகுஜன அரசை பார்க்க முடியாது