பாதபூஜையும் , பூத்  தூவலும் வேணாம் ,கண்ணியமாக  நடத்துங்க!

-பீட்டர் துரைராஜ்

தமிழகத்தின் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நேரடியாக நியமிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் மூலம் நியமிக்கிறார்கள். இதன் மூலம் அடித்தட்டில் உள்ள தினக் கூலி தொழிலாளர்களை அத்துக் கூலியாக, அடிமாட்டு சம்பளத்திற்கு பிழிந்து எடுப்பதோடு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், ஒப்பந்தரார்களும் சேர்ந்து கொண்டு முக்கூட்டு கொள்ளையடிக்கிறார்கள்…! இதை அந்த தொழிலாளர்களின் ஒப்பந்த வாக்குமூலமாகவே அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை!

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத   விக்கிரமாதித்தன்   முருங்கை மரத்தின் மீது ஏறி, தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை தன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டான். “உள்ளாட்சிகளில் பணிபுரியும் துப்புரவு  தொழிலாளர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்கு  உரிய  சம்பளத்தை கொடுக்காத தமிழக அரசு குற்றவாளியா ? குறைந்த பட்சக்  கூலியை விட  குறைவாக  கூலியை நிர்ணயிக்கும் மாவட்ட ஆட்சியர் குற்றவாளியா ? மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த நியாயமான கூலியை  கொடுக்காத நகராட்சி ஆணையர் குற்றவாளியா ?  இதில் யார் பெரிய  குற்றவாளி  என்பதற்கு நீ  சரியாக பதில்  சொல்லவில்லை என்றால் உன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும்”  என்றது வேதாளம் .

தமிழகம்  முழுவதும் 15  மாநகராட்சிகளும்,  148  நகராட்சிகளும், 561   பேரூராட்சிகளும் 12524  கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இவைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தூய்மைக் காவலர், தூய்மைப் பணியாளர், டெங்கு பணியாளர் என பல பிரிவினர் பணிபுரிகின்றனர். இவர்களது நிலை குறித்து மாநில அரசோ, உள்ளாட்சி நிறுவனங்களோ, அதிகாரிகளோ, பொதுமக்களோ  கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களின் பிரச்சினைதான் என்ன ?

” நான் தருமபுரி மாவட்டம்,  நல்லம்பட்டி   ஊராட்சியில் குடிநீர் விசைப்பம்பு  இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். எங்களுக்கு மாதம்தோறும் 4,950 ரூபாய்தான் தொகுப்பூதியமாகத்  தருகிறார்கள். எங்களுக்கு வார விடுமுறை கிடையாது. தீபாவளி, பொங்கலுக்கு கூட  வேலை செய்கிறோம். பிஎப், இஎஸ்ஐ கிடையாது.  மின்சாரம் எப்போது வருகிறதோ அப்போது  தண்ணீரை மேல்நிலையத் தொட்டிகளில்  ஏற்றி வைக்க வேண்டும். பணியில் இறந்து போனால்  மூன்று லட்ச ரூபாய் தருவதற்காக மாதம்தோறும் 60 ரூபாய் எங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கிறார்கள்.  இதில் பாதியையாவது நாங்கள் ஓய்வு பெறும் போது எங்களுக்குத் திருப்பிக்  கொடுங்கள் என்று கேட்கிறோம். நாங்கள் ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் இல்லை. பணிக்கொடை இல்லை. இப்போது எனக்கு 54 வயதாகிறது. ஏற்கனவே 24 ஆண்டுகளாக  பணிபுரிந்து வருகிறேன். இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப்  பிறகு ஓய்வு பெறும்போது  ஒரு ரூபாய் கூட  வாங்காமல் வீட்டுக்குப் போகவேண்டியதுதான் ”  என்கிறார் என். மனோகரன். இவரைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விசைப்  பம்பு  இயக்குனர்களாக  தமிழ்நாடு முழுதும் உள்ள பஞ்சாயத்துகளில் வேலை  இருக்கிறார்கள்.

” நான் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 210 ரூபாய் சம்பளத்திற்கு பணியில் சேர்ந்தேன். 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இப்போது எனக்கு 6,300 மாத சம்பளம் தருகிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் நாளொன்றுக்கு 470  ரூபாய் தரவேண்டுமென்று நிர்ணயித்துள்ள சந்தைக் கூலியை தருவதில்லை. அருகிலுள்ள அரியலூர் நகராட்சியில் மாதம் ஒன்றுக்கு  9000 ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.  கடந்த 47 மாதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்துள்ள சம்பளத்தை தரவேண்டுமென்று கேட்டு  வருகிறோம். ஆனால் டெண்டரில் தொகையை  மாற்றவில்லை என்று சொல்லி இதே சம்பளத்தை தருகிறார்கள். என் கணவர் மூட்டை தூக்குபவர்.  அவருக்கும் இப்போது உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு போவது இல்லை.  இதை வைத்துத்தான்  என் குடும்பத்தை நடத்தி வருகிறேன் ” என்கிறார் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ஜெயா.

இதில் சோகம் என்னவென்றால் மாதம் 200 ரூபாய்க்கு ஜெயங்கொண்டம் நகராட்சியில் நேரடித்  தொழிலாளியாக பணிக்குச்  சேர்ந்த இவரை ஒப்பந்தத்  தொழிலாளியாக மாற்றி வேலை வாங்கி வருகிறது ஜெயங்கொண்டம் நகராட்சி.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தொழிலாளிகளை நேரடியாக வேலை வாங்காமல் ஒப்பந்தக்காரர்கள் மூலம்  நியமிக்கிறார்கள். இதனால் பலனடைவது அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும், அரசியல்வாதிகளும்தான்.  ஏனெனில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தையும், ஒப்பந்தக்காரர்களுக்கு  வழங்கவேண்டிய சேவை கட்டணத்தையும் சேர்த்து நகராட்சி நிர்வாகங்கள்  வழங்கிவருகின்றன. நகராட்சி நிறுவனங்களே நேரடியாக துப்புரவு பணிக்கு ஆட்களை நியமனம் செய்தால் இந்த சேவைக் கட்டணத்தை குறைக்கலாம். அதோடு துப்புரவுத்  தொழிலாளர்களுக்குரிய சட்டபூர்வ கூலி, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ  போன்றவற்றையும் இடைத்தரகர் இன்றி  கொடுக்க முடியும். ‘நிரந்தர தன்மையுள்ள பணிகளில் ஒப்பந்த முறையை அமலாக்க கூடாது’ என்ற ஒப்பந்த தொழிலாளர் சட்டம் அப்பட்டமாக மீறப்படுகிறது.

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு நகராட்சியின் மக்கள் தொகை  கிட்டத்தட்ட 60,000. ஒரு நபர்  சராசரியாக  உற்பத்தி செய்யும் குப்பை நாளொன்றுக்கு 450 கிராம். ஆனால்  21 நிரந்தர தொழிலாளர்களே  பணியில் இருக்கிறார்கள்;  179 பேர் ஒப்பந்த முறையில் பணிபுரிகிறார்கள்.  இவர்களுக்கு செம்பாக்கம் நகராட்சி  ஒரு ஆளுக்கு 455  ரூபாய் தருகிறது.  ஆனால் இஎஸ்ஐ, பிஎப் போக  தொழிலாளிகள் பெறுவதோ  நாளொன்றுக்கு ரூ. 270  மட்டுமே.  இதுதான் தமிழகம் முழுவதுமுள்ள எல்லா உள்ளாட்சிகளிலும் உள்ள நிலைமை. இந்த சுரண்டலில் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் !

” நான் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணிபுரிகிறேன். தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு சீருடை  தந்துவிடுவார்கள். இன்னமும் எங்களுக்குச்  சீருடை வழங்கவில்லை. எங்கள் பேரூராட்சியில் 38 பேர் தான் நிரந்தர தொழிலாளர்கள். 50 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.’நிதி இல்லை’ என்று சொல்லி  எங்களுக்கு சம்பளம் மாதாமாதம் 20ம் தேதிக்கு மேல்தான்  தருவார்கள்.  ஆனால் அலுவலத்தில் வேலை செய்பவர்களுக்கு  5 ஆம் தேதிக்குள் சம்பளம் கொடுக்கிறார்கள். எனக்கு ஊதிய முரண்பாடு உள்ளது மாதம் 2000 ரூபாய் குறைவாக கிடைக்கிறது. கணக்கு பார்த்தால் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வரவேண்டியிருக்கிறது. ஆனால் ‘நிதி இல்லை’  என்று சொல்லி தர மறுக்கிறார்கள் ”  என்கிறார் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் பணி புரியும் 54 வயதாகும் .பாண்டி.

உள்ளாட்சி நிறுவனங்களை  ‘தல குடியரசு’ என்று சொல்லுவார்கள். ‘மாதிரி வேலை அளிப்பவராக'( Model Employer)  இருக்கவேண்டிய அரசு நிர்வாகங்கள்,  படிப்பறிவற்ற, சுகாதாரமற்ற பணியைச் செய்யும் தலித்  மக்களின் சுரண்டிக் கொழுக்கிறார்கள். மக்கள் தொகை, பரப்பளவு, பணிச்சுமை,   உருவாகும் குப்பை இவைகளின் அடிப்படையில்  சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதற்கு வழிகாட்ட வேண்டிய அரசு ‘பொதுமக்களிடமிருந்து புகார் வராமல் இருந்தால் போதும்;  அதில் பணிபுரியும் தொழிலாளர்கள்  குறித்து எந்தவித அக்கறையும் கொள்ள வேண்டியதில்லை ‘ என்ற நிலையில் இருக்கிறது.

பழங்காலங்களில் செத்த மாட்டை அகற்றுவது, தப்பு அடிப்பது, பிணத்தை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்ட அடித்தட்டு மக்களை,  கிராமத்து சாதி இந்துக்கள்  பயன்படுத்தினார்கள்.  அதே ‘பண்ணையார் மனோபாவத்தில் தான்’  இப்போது அரசும், அதிகாரிகளும், உள்ளாட்சி நிர்வாகிகளும், அரசியல் கட்சிகளும்  இருக்கிறார்கள்.

” ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது சட்டம். நாற்பது  ஆண்டுகளுக்கு பிறகு 2017 இல் குறைந்தபட்ச ஊதியம் வழங்க  அரசு ஆணை வெளியிட்டது. இந்த சம்பளத்தை கொடுக்க முடியாதென சென்னை மாநகராட்சியும், நகராட்சிகளின்  நிர்வாக இயக்குனரும் அரசிடம்  முறையிட்டனர். அரசு தான் போட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்கு பதிலாக, குறைந்த பட்சக் கூலியை மேலும் குறைப்பதற்கு  வேறொரு குழுவை போட்டுள்ளது. இதை எதிர்த்து எங்கள் சங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்றமும் அரசு புதிய உத்தரவை அரசு வெளியிட்டால்  எங்களிடம் வாருங்கள் என்று கூறி விட்டது. குறைந்தபட்ச ஊதியமானது  உச்சநீதிமன்றத்  தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதுகுறித்த புரிதல் கூட இல்லாத முதல்நிலை அதிகாரிகள்தான் இந்த நாட்டை பரிபாலனம் செய்து வருகிறார்கள். நாளொன்றுக்கு மாநகராட்சியில் 500  ரூபாயும், நகராட்சியில் 385 ரூபாயும், பேரூராட்சியில் 308 ரூபாயும், கிராமப் பஞ்சாயத்தில் 231 ரூபாயும்  வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு உள்ளது. இதோடு அகவிலைப்படியையையும் சேர்த்து ( இப்போது மாதமொன்றுக்கு ரூ.4582) வழங்க வேண்டும். இந்த உத்தரவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்  என்று எந்த அதிகாரியாவது சொல்ல முடியுமா ? ”  என்றார் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான எம்.இராதாகிருஷ்ணன்.

” 1990,1991 களில் தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் நகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய ஆட்களை வேலைக்கு எடுத்தார்கள். நகராட்சி தீர்மானம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கபட்டவர்கள். இவர்களில் 58  பேருக்கு 2000 முதல் 2006 வரை மாதம் 2000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்க வேண்டும் என்று நகராட்சிகளின் இணை இயக்குனர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றோம். அதனடிப்படையில் ராமநாதபுர நகராட்சியில் சம்பள உயர்வு கொடுத்து விட்டார்கள்; நிரந்தரம் செய்தார்கள். ஆனால் தேவகோட்டை, காரைக்குடி நகராட்சியில் மேல்முறையீடு சென்றார்கள். வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு செய்த போது நீதிபதி சந்துரு எங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டார். எனவே அவர்களுடைய பழைய பணித் தொடர்ச்சி விடுபட்டுவிட்டது. இதனால் 58 தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் கிடைக்குமா என்று தெரியவில்லை. இது குறித்து யாரிடம் நாங்கள் முறையிடுவது ”  என்கிறார் ஏஐடியூசி சங்கத்தை சார்ந்த தேவக்கோட்டை மீனாள் சேதுராமன்.

“துப்புரவு தொழிலாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மூன்று ஆண்டுகள் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்தால் அவர்களை நிரந்தரமாக்க( டைம் ஸ்கேல்) வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. ‘சமவேலைக்கு சம ஊதியம்’  வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற  உத்தரவு அமலாக்கப் படவில்லை. மாறாக துப்புரவு பணியாளர்களை “தூய்மைப் பணியாளர்கள்”  என்று பெயர்  மாற்றுகிறோம்;  அவர்களுக்கு “பாத பூஜை செய்கிறோம்”. கொரோனா காலத்தில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக அவர்கள் மேல் பூ தூவுகிறோம்  என்று வேஷம் போடுகிறார்கள். எங்களுக்கு ‘பாதபூஜை செய்ய வேண்டாம் பூத்தூவவும் வேண்டாம்; சம வேலைக்கு சம ஊதியம் கொடுத்தால் போதும்’ என்ற கோரிக்கையை மையப்படுத்தி துப்புரவு தொழிலாளர்கள் வருகிற மார்ச் 6ஆம் தேதி திருச்சியில் பேரணி நடத்த இருக்கிறார்கள் என்றார் ஏஐடியுசியைச் சார்ந்த எம். ராதாகிருஷ்ணன்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time