ஒ.பி.எஸ்சின் ஊசலாட அரசியலுக்கு உண்மையிலேயே உதை கொடுத்து சென்றுள்ளார் மோடி என்று தான் சொல்ல வேண்டும். இது வரை ஒ.பி.எஸ்சின் மீது தான் பாஜக தலைவர்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து வந்தனர். ஆனால், அவரது இரண்டுங்கெட்டான் நடவடிக்கைகள் காரணமாகவும் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது ஆளுமை வெகுவாக பலவீனப்பட்டு வருவது காரணமாகவும் தற்போது ஒ.பி.எஸ் மீது ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர் கேள்வியே இல்லாமல் ஆதரித்து இ.பி.எஸ் ஒத்துழைப்பு நல்குவதாலும், எள் என்பதற்கு முன்பு எண்ணெய் கொண்டு நிற்பதாலும் டில்லி பாஜக தலைமையிடம் முக்கியத்துவம் பெற்றுவிட்டதாகத் தெரிய வருகிறது. சென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பி.எஸ்சும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்கள் என்று தான் பரவலாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், மோடி ஒ.பி.எஸ்ஸை ஒதுக்கிவிட்டு இ.பி.எஸ்ஸை மட்டும் பார்த்துச் சென்று இருப்பது,ஒரு அதிர்ச்சி வைத்தியமாகவே பார்க்கப்படுகிறது. தனியே ஒ.பி.எஸ்சை பார்த்து பேசாவிட்டாலும் இருவரோடு சேர்ந்த நிலையிலாவது பார்த்திருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டதன் மூலம் ஒ.பி.எஸ்ஸின் ஆளுமை ஆட்சியிலும், கட்சியிலும் படு பலவீனமாகிவிட்டது என்பது பிரதமர் வரை தெரிந்துவிட்டது என்றே பொருளாகும். அது மட்டுமின்றி, ஒ.பி.எஸ்ஸைக் காட்டிலும் தில்லி தொடர்பை இபிஎஸ் பலப்படுத்திக் கொண்டார் என்பதும் உறுதியாகிறது. முன்னதாக பிரதமர் மோடி மேடையில் மக்கள் முன்னிலையில் இபிஎஸ்ஸை வாஞ்சையாக முதுகில் தட்டிக் கொடுத்த நிகழ்வும் நடந்தது.
தேர்தல் பிரச்சாரத்தை இ.பி.எஸ் மட்டுமே முன்னெடுத்து செய்து கொண்டிருக்க, பன்னீர் அமைதி காத்து வருவதோடு, சசிகலா- தினகரன் வகையறாக்களோடு மறைமுக பேர அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. பன்னீரின் கமுக்க அரசியல் மெளனம் கலையாமல் தொடர்வது அவர் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சசிகலா வரவேற்கப்பட்டதில் பன்னீருக்கு மறைமுகத் தொடர்பு இருப்பதுவும் ஆதாரபூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆக, தனக்கென்று தனிப்பட்ட எந்த செல்வாக்கும் இல்லாமல் அடிவருடி அரசியலைக் கொண்டு நீண்ட கால நோக்கில் அரசியல் செய்ய முடியாது என்பதை தற்போதாவது பன்னீர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை! மேடையில் இருவர் கைகளையும் சேர்த்து தூக்கி காட்டியதன் மூலம் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மோடி சூசகமாக உணர்த்திச் சென்றுள்ளதாகவே அதிமுகவினர் பார்க்கின்றனர்.
தன்னுடைய ஊசலாட்ட அரசியல் காரணமாக முன்பு அரசு விளம்பரங்களில் இடம்பெற்ற தன் பெயரும், புகைப்படங்களும் தற்போது முற்றாக புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து கேள்வி கூட எழுப்பமுடியாத நிலைமைக்கு ஒ.பி.எஸ் தள்ளப்பட்டுவிட்டார். அவர் தனக்குத் தானே பத்திரிகைகளில் செய்து வரும் விளம்பரங்களும், அதன் தொனியும் அவர் தன் சொந்த கட்சிக்குள்ளேயே அன்னியப்பட்டு நிற்கிறார் என்ற புரிதலையே பொதுத் தளத்தில் உருவாக்குகிறது.
இது ஒரு புறமிருக்க, தேவேந்திரக் குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிரதமர் அறிவித்ததில் இ.பி.எஸ்ஸின் முன்முயற்சி அதிகமாக இருந்துள்ளது. இத்தனைக்கும் கொங்கு வேளாளர்கள் மத்தியில் இதற்கு சற்று எதிர்ப்பு வெளிப்பட்டதையும் பொருட்படுத்தாமல் பழனிச்சாமி இது நிறைவேற ஒத்துழைத்துள்ளார். பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றவர்கள் இனி தேவேந்திரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கதேயாகும்!. இவர்கள் அடிப்படையில் விவசாயிகள்! நெல்,கேழ்வரகு,கம்பு,கரும்பு, வாழை, பனை..விவசாய உற்பத்தியில் பெரும்பங்கு வகித்தவர்கள். எப்படி சாணான்,கிராமணி என்ற பெயர்களை தவிர்த்து நாடார்கள் என்ற பொதுப் பெயர் கண்ணியமாக உருவாக்கப்பட்டதோ, எப்படி கள்ளர், மறவர், அகமுடையர் என்பவர்கள் முக்குலத்தோர் என பொதுப் பெயருக்குள் ஒன்றுபட்டார்களோ..அதே போல தாங்களும் ஒற்றை அடையாளமாக ஒன்றுபட்டு பார்க்கப்பட அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதை மற்ற சமூகத்தில் உள்ளவர்களும் மனம் ஒப்பி வரவேற்பதே தமிழ் சமூகத்தின் பண்பட்ட நாகரீகத்திற்கு அடையாளமாக இருக்கமுடியும்! இதில் உயர்வு, தாழ்வு பார்வைகளை புகுத்தி, வேறுபடுத்தி பார்ப்பது முதிர்ச்சியற்ற பிற்போக்குத்தனமாகிவிடும்.
அதே சமயம் அந்த சமூகத்தினர் எஸ்.சி பட்டியலில் இருந்த காரணத்தால் தான் மிகப் பெரிய அளவில் கல்வி வேலை வாய்ப்புகளை பெற்றனர். அந்த வாய்ப்புகளை வருங்காலத்தில் எம்.பி.சி.பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர்கள் சந்ததியினர் பெறுவார்களா, இழப்பார்களா எனத் தெரியவில்லை. மேலும் ஏற்கனவே எம்.பி.சி பட்டியலில் 108 சாதிகள் உள்ளன. ஆகவே, எப்படி முடிவெடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு சுய மரியாதையையும், தன் நம்பிக்கையும் பெற்றுத் தந்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே!
ஆனால், பொதுவாக சாதி அடையாள அரசியலில் இருந்து படிப்படியாக அனைத்து பிரிவினருமே விடுபடுவது தான் ஆரோக்கிய சமூகத்திற்கான அடையாளமாகும்! வெறும் பெயர் அடையாளம், பேப்பர் அறிவிப்புகள் மட்டுமே மரியாதையை பெற்றுத் தந்துவிடாது. அறிவு, கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம்,சுயமரியாதை, மற்றவர்களையும் சமமாக நடத்தும் அணுகுமுறை, மனித நேயம் ஆகியவற்றை சாதி கடந்து வளர்த்தெடுக்க வேண்டும்!
Also read
ஒ.பி.எஸ் சாதி அடையாள அரசியல் ஒன்றை மட்டுமே நம்பி அதிமுக போன்ற ஒரு பொதுக் கட்சிக்குள் பலம் பெறமுடியாது. அனைவருக்குமானவராக தன்னை தகவமைக்காவிட்டால் இன்னும் சுருங்கி போய்விட நேரிடலாம். ஏனெனில், முக்குலத்து சாதிக்குள் பன்னீரைவிட சசிகலாவுக்கு அதிக செல்வாக்கு இருக்கும் பட்சத்தில் பன்னீரின் சாதிப் பிடிமானமும் கை நழுவிப் போய்விடக்கூடும்! அரசியல் சதுரங்கத்தில் ஒ.பி.எஸ் பின் தங்குகிறார். இ.பி.எஸ் முன்னேறுகிறார்!
மற்றபடி மோடியின் வருகையும் அவர் அறிவித்த அவசர, அவசரமான திட்ட அறிவிப்புகளும், அவர் பாடிய பாரதியார் மற்றும் அவ்வையார் பாடல்களும் தேர்தல் கால அரசியல் ஸ்டண்டுகள் என்பதை தவிர்த்து சொல்வதற்கு என்ன இருக்கிறது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
சுடச்சுட விமர்சனம்!
நீங்கள் எப்படி கூறினாலும் இந்த தேர்தலோடு அதிமுகவுக்கு முடிவுரை எழுதப்படும்