பெரியாரும், சிவாஜியும்

periyar kannadhasan and sivaji

அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்!

என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே !

1988 என்று நினைக்கிறேன்.அப்போது நான் விசிட்டர் பத்திரிகையில்,’ஒரு புகைப்படக் காரரின் பார்வையில்’ என்றொரு தொடர் எழுதி வந்தேன்.

தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று முழுக்க அவரோடு கழிந்தது.

சிவாஜி, தன் வீட்டின் அந்த மிகப்பெரிய ஹாலில் அழகான இரண்டு யானைத் தந்தங்களின் நடுவே, சப்பளங்கால் போட்டு அமர்ந்திருக்கிறார்.உணர்ச்சி பிளம்பாக காணப்பட்ட ரசிகர்களை மாவட்ட வாரியாகச் சந்தித்து உரையாடினார். உரையாடல்கள் மிகவும் நேர்பட இருந்தது.சிவாஜியிடம் கடுகளவும் பாசங்குத் தனம் இல்லை !

தன் அன்பிற்க்காக காங்கிரஸ்கட்சிக்கு போஸ்டர் ஒட்டி,பேனர் கட்டி,மேடை போட்டு, நோட்டிஸ் அடித்து, வீடு வீடாகப் பிரச்சாரம் செய்து… அனாதையாக்கபட்டிருந்த அந்த எளிய தொண்டர்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்ற தவிப்பும்,அவஸ்த்தையும் நிஜமாகவே அவரிடம் வெளிப்பட்டதை என்னால் நன்கு உணர முடிந்தது!

ஒரு தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு தன் விரலை பிளேடால் கிழித்து சிவாஜிக்கு ரத்த திலகமிட, சிவாஜி துடித்துப் போனார்.’’அட முட்டாப்பய மவனே,ஏண்டா இப்படி பண்றே..’’ என்று பதறி ஈரத் துணியால் வெட்டுபட்ட இடத்தை கட்டி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

மாலையில் புறப்பட்டு காந்தி ,காமராஜர் சிலைகளுக்கெல்லாம் மாலைகள் போட்டுவிட்டு,இறுதியாக பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதிக்கு வந்தார்.பெரியார் சமாதியில் மலர்வளையத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வைத்துவிட்டு,மூன்றுமுறை சுற்றி வளம் வந்தவர், கண்கலங்க கட்சிக்காரர்களைப் பார்த்து, கை கூப்பி, ’’நான் சித்த நேரம் தனியாக இங்க உட்காந்து இருந்துட்டு வாறேன். நீங்க எல்லாரும் இங்கிருந்து போங்க…’’ என்றார்.

எல்லோரும் அங்கிருந்து நகர்ந்துவிட, சிவாஜி மட்டும் மிக மெல்லிய வெளிச்சத்தில் தனியே சுமார் 10 நிமிடங்கள் அமர்ந்தார். அதை 20 அடித் தொலைவில் இருந்து போட்டோ எடுத்துவிட்டு, அமைதியாக தொலைவில் இருந்து அவரை கவனித்தேன். ஒரு காலை மடக்கியும்,ஒரு காலை குத்துக்காலிட்டும் அமர்ந்து ,ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவராய்,கண்களில் திரண்டு வந்த துளிகளை அவ்வப்போது துடைத்துக் கொண்டார்..

இறுதியில் நீண்ட ஒரு பெரு மூச்சுவிட்ட வண்ணம் எழுந்து, மீண்டும் பெரியார் சமாதியை வணங்கிவிட்டு, மிகத் தளர்ந்த நடையோடு அங்கிருந்து வெளியேறினார் !

பெரியார் சமாதியில் நீண்ட நேரம் அமர்ந்து புறப்பட்ட சிவாஜி,பெரியார் திடலில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார். பெரியாரோடு அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர்..ஆகியோரெல்லாம் இருக்கும் போட்டோக்களையும்,பெரியார் பயன்படுத்திய பொருள்களையும் பார்த்து ரசித்தார்.

ஆசிரியர் வீரமணி அவரை வரவேற்று பேசினார்.

அப்போது சிவாஜி, ஆசிரியர் வீரமணியிடம் ,’’இங்கே பெரியாரோடு இவங்க இருக்கிற படமெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க.. நானும் பெரியாரோடு சேர்ந்து எடுத்த நல்ல படமெல்லாம் இருக்கே..’’என்றார்.

பிறகு விடை பெற்று காரில் ஏறி பயணித்து வருகையில், கட்சி நிர்வாகி ஒருவர், அண்ணே, நாம காந்தியிடத்திற்கு, காமராஜ் இடத்திற்கு எல்லாம் போனோம்.ஆனால்,அங்கெல்லாம் மாலை வைத்து,வணங்கி வந்துட்டோம்.ஏன் நீங்க பெரியார் இடத்துல மட்டும் அப்படி உட்கார்ந்துட்டீங்க…’’என்றார்.

நல்லா கேட்டப்பா கேள்வி! காந்தியும்,காமராஜரும் பெரிய தியாகிங்க.. நாட்டுக்காக பாடுபட்டவங்க வாஸ்த்தவம் தான்! ஆனா,என்னவோ எனக்கு இவங்களவிட பெரியார் மேல பற்று பந்தம்…சொல்லத் தெரியாத ஒரு மரியாதை இருக்குது.

அது எப்படின்னா நான் பத்து,பதினொரு வயசில அண்ணன் ராதா நாடக கம்பெனியில இருக்கும் போதே பெரியார் பெருமைகளை அவர் சொல்லச் சொல்லக் கேட்டு வளந்தவன். அதற்கு பிறகு அண்ணா,மூனாக் கானா இவுகளோட சேர்ந்து நான் நடிச்சு கொடுத்த எத்தனையெத்தனையோ நாடகங்கள் அனைத்துமே பெரியார் கொள்கைகளை பரப்புறதுக்கானது தான்!அப்ப எத்தனை எதிர்ப்புகள்,தொல்லைகள பார்த்திருக்கோம்…அதெல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்…!

டேய் ,என்னத்தச் சொல்லி ஒங்களுக்கு வெளங்க வைப்பேன்னு தெரியல..ஆனா ஒன்ன மட்டும் சொல்வேன். பெரியார் மட்டும் இல்லன்னா இந்த கணேசன் இந்தளவுக்கு ஆளாகியிருப்பாங்கிற..?என்று கேள்வி கேட்டு நிறுத்தினார்.

யாரும் பதில் சொல்லவில்லை. என்ன பதில் சொல்வதென்று புரியாமல் மட்டுமல்ல, அவர் என்ன பதில் சொல்வார் என்ற ஆர்வத்தோடும் அவரையே பாரத்தனர்.

சிவாஜியே தொடர்ந்தார். ம்..கூம் .. நூத்துல ஒரு கூத்தாடியா நானும் வாழ்ந்திட்டு கவனிப்பில்லாமப் போயிருப்பேன்…’’என்றார்.இப்படிப் பேசும் போது சிவாஜி குரல் கம்மியது. நா தழுதழுத்தது..!

அப்போது,சிவாஜியின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜசேகர்,அண்ணே நீங்க ரொம்ப உணச்சிவசப்படுறீங்க..இப்ப கூட ஆசிரியர் வீரமணி உங்க கிட்ட இதை சொல்லச் சொன்னார்..’’.ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் ஒடம்பு சீக்கிரம் கெட்டுப் போயிடும். அரசியல்வாதி ஆவேசப்படுவது போலப் பேச வேண்டுமேயல்லாது நிஜமாவே ஆவேசப்படக் கூடாது, உருக்கமாக பேசலாம்… ஆனால்,அப்படிப் பேசும் போது நம்ப உள்ளத்தை தளர விட்டுடக் கூடாது.’’ என்றார்.
அவருக்கு எம்மேல அக்கறை சொல்றார்.. நமக்கு அது முடியலப்பா..’’என்றார்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time