குட்கா, குவாரி, கோல்மால் விஜயபாஸ்கர் வெற்றி பெறுவாரா..?

-சாவித்திரி கண்ணன்

விஜயபாஸ்கர் நிர்வகிப்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை! ஆனால், இவர் செய்ததெல்லாம் ஆரோக்கியத்திற்கு கேடான – வாய், நுரையீரல் புற்று நோய்க்கு காரணமாகும் -குட்கா சட்டவிரோத விற்பனை! சுற்றுச் சூழலுக்கே கேடு விளைவிக்கும், இயற்கையை அழிக்கும் குவாரிக் கொள்ளைகள்! மற்றபடி அவர் நிர்வகிக்கும் சுகாதாரத்துறையோ அவருக்கு காண்டிராக்ட் அண்ட் கரப்ஷன் தொடர்பானது என்பதற்கு மேல் வேறு இல்லை! அதீத பணபலத்துடனும், சாணக்கியத் தனத்துடனும் வலம்வரும் விஜயபாஸ்கர் வெற்றி பெறுவாரா..என்பதை அலசுகிறது இந்த கட்டுரை!

தமிழக சுகாதாரத்துறை வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு ஆபத்தான அமைச்சராக யாருமே இருந்ததில்லை..என துறை சார்ந்த அரசு மருத்துவர்கள் ஒருமித்த குரலில் சொல்கின்றனர்.

மக்களின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பான ஒரு மந்திரி தடை செய்யப்பட்ட குட்காவை விற்க கையூட்டு பெற்றுக் கொண்டு அவை ஜோராக விற்பனையாக துணை போனார். இது சந்தேகத்திற்கு இடமின்றி, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வழியாகவும், சாட்சிகள் வாயிலாகவும் நிருபிக்கப்பட்டும் பாஜக மேலிடத்தின் செல்வாக்கால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்துள்ளார் விஜயபாஸ்கர்!

2016ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளரான மாதவராவ் அவரின் வீடு மற்றும் குடோன் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய டைரி ஒன்றினை கைப்பற்றினர். அதில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இவரை சி.பி.ஐ போலீசார் தீவிரமாக பலமணி நேரம் விசாரித்தனர்.

மேலும், விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டுகளில் அவர் சுகாராத்துறையின் நியமனங்கள், இடமாற்றல் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக கையூட்டு பெற்றதும் கண்டறியப்பட்டது. விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியே இதற்கு ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார்! இத்தனைக்குப் பிறகும் அவரது அமைச்சர் பதவிக்கு எந்த ஆபத்தும் நேராமல் அவரை காப்பாற்றி கரை சேர்த்துவிட்டது பாஜக அரசு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான  கல்குவாரியில் விதிகளை மீறி 72 மீட்டர் ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 850 சதவிக்கிதம் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியிருக்கிறது. இந்த வகையில் கடந்த சில வருடங்களில் மலைகளை வெட்டி,வெட்டி தற்போது மலைகள் இருந்த இடமெல்லாம் பள்ளத்தாக்குகளாகிவிட்டன!இதை எதிர்த்து மலையை காக்கும் போராட்டங்களை மக்கள் நடத்தினர்!

’’அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் மூலம் சேர்த்ததாக வருமானவரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப் பட்ட தொகை கடலில் மூழ்கியிருக்கும் பனிக்கட்டியின் முனை அளவு தான். அதுவே இந்த அளவுக்கு என்றால் விஜயபாஸ்கர் செய்த ஊழல்கள், அடித்த இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றின் உண்மையான மதிப்புகளை கணக்கிட்டால், அதைக் கொண்டு தமிழகத்தில் பாதியை வாங்கி விட முடியும். விஜயபாஸ்கரின் ஊழலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சகித்துக் கொண்டிருப்பதுடன், அவரை சட்டத்தின் கைகளை வளைக்காமல் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்…’’ என்று கொதித்து எழுந்து அறிக்கை வெளியிட்டவர் வேறு யாருமல்ல, டாக்டர்.ராமதாஸ் தான்!

இவை எல்லாம் போதாது என்று புதுக் கோட்டை மாவட்டத்தில் திரும்பிய திக்கெல்லாம் பள்ளிகூடம், பாலிடெக்னிக், கலைக் கல்லூரி, நர்சிங் கல்லூரிகள்..என காசு பறிக்கும் கல்வி நிறுவன வியாபாரம்..என்று சதா சர்வ காலமும் கல்லா கட்டுவதிலேயே கவனம் செலுத்தும் அமைச்சராக வலம் வருகிறார் அமைச்சர் விஜய பாஸ்கர்! இந்த வகையில் குறுகிய காலத்தில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதற்கு ஒரு வாழும் சரித்திரமாகத் திகழ்கிறார் விஜயபாஸ்கர்!

சரி, இப்படிப்பட்ட தன்நலச் சாதனையாளரான விஜயபாஸ்கர் தன் தொகுதியை எவ்வாறு வைத்துக் கொண்டுள்ளார் என்று பார்ப்போம்;

கோமங்கலம் கிராமம் தவிர்த்த இலுப்பூர் தாலுக்கா, குளத்தூர் தாலுக்காவின் ஒரு பகுதி, குமாரமங்கலம், மாத்தூர், சிங்கத்தாக்குறிச்சி, செங்கலாக்குடி , மண்டையூர், லெட்சுமணபட்டி, மேட்டுபட்டி, சிவகாமிபுரம், தென்னதிராயன்பட்டி, பாலாண்டாம்பட்டி, களமாவூர், நீர்ப்பழனி, ஆம்பூர்பட்டி , மதயாணைப்பட்டி, சூரியூர், பேராம்பூர் , ஆலங்குடி, வெம்மணி, வடுகபட்டி, மேலப்புதுவயல், குளத்தூர் மற்றும் ஒடுக்கூர் கிராமங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் வருபவையாகும்!

இவை தவிர்த்து, திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை தாலுக்காவின் ஒரு பகுதி, கவிநாரிப்பட்டி, புத்தாக்குடி, கப்பக்குடி கிராமங்கள் வீராலிமலை தொகுதிக்குள் வருகிறது.

# ஆறு,குளம்,கண்மாய்,மலைகள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம்விடும் கல்குவாரிகள் காரணமாக வானம் பார்த்த பூமியான புதுக் கோட்டை வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது! விளை நிலங்களெல்லாம் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன!

# தங்கள் ஊருக்கு அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்ற மக்களின் நெடுநாள் கோரிக்கையை நிர்த்தாட்சயண்யமாக நிறைவேறாமல் தடுத்துவிட்டார் விஜயபாஸ்கர் காரணம், அவரது கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணமோ..என்னமோ..?

# இருக்கின்ற கல்குவாரிகளில் கூட வட நாட்டு இளைஞர்களுக்கு தான் வேலை வாய்ப்புகள்..! அத்துடன் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் தொகுதியில் மிகக் குறைவு! இதனால் வீராலிமலை தொகுதி இளைஞர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர்!

# தண்ணீரில்லாமல் கிராமங்கள் தத்தளிக்கின்றன! குண்டும்,குழியுமான சாலைகள் பயணிப்பவர்களின் இடுப்பு எலும்பை பதம்பார்த்து விடுகின்றன!

# புதுக்கோட்டை  மாவட்ட அதிமுக செயலாளராகவும் விஜயபாஸ்கர் உள்ளதால் இத் தொகுதியில் தன்னை மீறி யாரும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்தி வருவதால், கட்சி வளர்ச்சியும் பெரும் பின்னடைவை கண்டுள்ளது! புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து அதிமுக வேட்பாளர்களும் பலவீனமானவர்கள் என்ற பேச்சு உள்ளது! சொந்த கட்சியிலேயே கடும் அதிருப்தியை பெற்றுள்ளார் விஜயபாஸ்கர்!

# விஜயபாஸ்கர் ஒரு கருவ மரம் அல்லது பார்த்தீனிய செடியைப் போன்றவர்! இவை எப்படி நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு, பிற மரங்களோ, செடிகளோ தன்னை சுற்றிலும் வளராமல் தடுக்கின்றனவோ, அதனை எப்படி ஆடுமாடுகள் கூட விரும்புவதில்லையோ, பறவைகள் கூட அதன் கிளைகளில் அமர்வதில்லையோ…’’ அது போன்றவர் என அவருக்கு நெருக்கமான கட்சிக்காரர்களே புலம்புகின்றனர்.

# அவ்வளவு ஏன் அவர் நிர்வகித்த சுகாதாரத்துறையின் மருத்துவர்களிடம் கேட்டாலே, ’’’விஜயபாஸ்கரை விஞ்சிய வில்லன் இந்த பூவுலகினில் உண்டோ..?’’ என்று கதைகதையாய் படிக்கின்றனர். விஜயபாஸ்கர் பொறுப்பேற்றது முதல் எட்டாண்டுகளாக மருத்துவர்களுக்கு உரிய சம்பள உயர்வுகள் இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவர்களும்,செவிலியர்களும்,சுகாதாரப் பணியாளர்களும் அழுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதற்காக போராடிய மருத்துவர்களை தூக்கி அடித்து பழிவாங்கியுள்ளார். வேலை நியமனங்கள் பணி இட மாறுதல்கள் எல்லாவற்றுக்கும் கையூட்டு தான்!’’ என்கிறார்கள்! இந்த விஜயபாஸ்கரிடமிருந்து சுகாதாரத்துறை எப்போது விடுபடுகிறதோ அப்போது தான் இந்த துறைக்கே விமோச்சனம் என்கிறார்கள்!

# இது நாள் வரை மக்கள் எளிதில் சந்திக்க முடியாதவர் விஜயபாஸ்கர். ஆகவே, தனக்கு தன் தொகுதியில் நிலவும் அதிருப்தி நன்கு தெரிந்து வைத்துள்ள விஜயபாஸ்கர் சாம,பேத,தான,தண்ட வழிமுறைகளை பயன்படுத்தி,பணத்தை பாதாளம் வரை இறைத்து, எப்படியாவது ஓட்டு வாங்க தீயாய் களம் கண்டுள்ளார். தன் இரு பெண் குழந்தைகளையும் வேகாத வெயிலில் ஓட்டு கேட்க வைத்து செண்டிமெண்டாக வாக்காளார்களை வென்றெடுக்க பார்க்கிறார்.

# விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.பழனியப்பன் சென்ற தேர்தலில் வெறும் எட்டாயிரத்து சொச்சம் ஓட்டுகளில் வெற்றியை பறி கொடுத்தவர். நல்ல களப் பணியாளராக தொகுதியில் அறியப்பட்டுள்ளார். பணபலத்தில் விஜயபாஸ்கருக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், மனோ பலத்தில் தீவிரமாக பணியாற்றுகிறார் என தெரிய வருகிறது!

# காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், வி.சி.க, இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணி பலமாக உள்ளது! அதே சமயம் அதிமுக ஓட்டுகளை அமமுக கூட்டணி பலவீனப்படுத்துகிறது. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தந்ததில் கோபத்தில் உள்ள மற்ற சமூகத்தினரின் கோபம் களத்தில் தெரிகிறது! விஜயபாஸ்கருக்கு வாக்களிப்பது எரியும் கொள்ளியை எடுத்து தங்கள் கூரையில் வைத்துக் கொள்வதற்கு நிகராகும் என்பது தொகுதி மக்களின் சொந்த அனுபவமாக உள்ளது! இந்த அனுபவ அறிவை பணபலம் மிஞ்சிட வாய்ப்பில்லை என்றே அனுமானிக்க முடிகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time