ஒன்னுமே புரியல..அரவக்குறிச்சியில…! என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது..! பாஜகவின் எதிர்கால முதலமைச்சராக கருதப்படும் அண்ணாமலையை எப்படியாவது சட்டசபைக்குள் இடம் பெற வைக்க மத்திய பாஜக அரசு சாம,பேத,தான,தண்டங்களை பிரயோகித்து வருகிறது…! பிரதமரே அரவக்குறிச்சி மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறாராம்…! திமுகவை மிரட்டி, முடக்கி அரவக்குறிச்சியை அடித்து, தூக்கி எடுத்துவிட பாஜக அரசு முயற்சிப்பது உண்மையா…? என்பது பற்றி ஒரு விசாரணையில் இறங்கினோம்.
‘’முதல்ல அவரு அதான் அண்ணாமலை ஓட்டுக் கேட்டு வந்தப்ப உண்மையிலேயே ஒரு காமெடிப் பீஸாத் தான் தெரிஞ்சார்..! அவரோட பேட்டிங்க, காணொலிங்க..எல்லாம் பாத்தபோது அப்படித்தான் தோணுச்சு..! ஆனா, இப்ப எங்களுக்கே கொஞ்சம் அபிராயம் மாறிடுச்சு..’’ இப்படிச் சொன்னவரு அரவக் குறிச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.
‘’சார் பயங்கரமாக எலெக்ஷன் ஒர்க் பண்றார்! அவரு கூட பெரிய டீமே வர்றாங்க…தொகுதி பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்து எந்த இடத்துல எதைப் பேசணுமோ அதைப் பேசுறார். ஆறுகள் வற்றிக்கிடப்பது, தண்ணீர் பிரச்சினை, மணல் அள்ளி ஆற்றுப்படுகைகள் சூறையாடப்பட்டு இருப்பது, வேலை இல்லா திண்டாட்டம்..அதற்கு தோதாக தொழிற்சாலைகள் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகப் பேசுவது, விவசாயிகள் பிரச்சினை, நெசவாளர்கள் பிரச்சினை..எல்லாம் பேசறார்..! பேச்சும் செம்மையா எடுபடுது..’’
‘’திமுகவுலயும் அதுக்கு ஈக்குவலா பேசுவாங்களே…!’’ என்றேன்.
‘’எங்க சார் பேசறாங்க..பிரசாரத்தையே காணோமே..! இன்னும் தொகுதி மக்கள் பெரும்பாலோருக்கு திமுக வேட்பாளர் இளங்கோவின் முகமே தெரியாது. தேர்தல் வேலைகள் திமுக தரப்புல நடக்கிறதாவே தெரியல..! ஐபேக்கே தன்னோட ரிப்போர்ட்டுல திமுகவுக்கு வாய்ப்பில்லைன்னு சொன்னதா கதை விடுறாங்க…’’ என்றார்.
‘’ஒரு வேளை அதிருப்தி கேண்டிடேட் என்று அசால்ட்டாக இருக்காங்களோ..’’
‘’ஒரு வகையில இவர் எதிர்பாராதவிதமாக அறிவிக்கப்பட்டவர் தான். கே.சி.பழனிச்சாமி மகன் சிவராமன் ரொம்ப எதிர்பார்த்தார். நல்ல கிரவுண்டு ஒர்க்கும் பண்ணி இருக்கார்! அவருக்கு கிடைக்கல. கரூர் சின்னசாமி எதிர்பார்த்து கிடைகாமல் அதிருப்திலே அதிமுக பக்கம் போயிட்டாரு. ஒன்றிய செயலாளர் ஒருத்தர் அவரும் எதிர்பார்த்திருந்தார், அவருக்கும் கிடைக்கலே..! அதிருப்தி இருந்தது தான். அப்படின்னா கூட அது ஒன்றிரண்டு நாளில சரி செய்யப்பட்டு இயல்பு நிலைக்கு வருவது தானே நடந்திருக்கணும்.’’
‘’பாஜகவிற்கு அதிமுகவின் ஒத்துழைப்பு எப்படி இருக்கு…?’’
‘’சும்மா தீயாய் இறங்கி வேலை பார்க்கிறாங்க..சாதி ஓட்டுகளை டார்கெட் பண்ணி பாக்கெட்,பாக்கெட்டாக ஒர்க் பண்றாங்க..பணப்பட்டுவாடாவும் ஜோரா இருக்குது…!எடப்பாடி நேரடியாக வந்த் அண்ணமலைக்கு ஆதரவாக பேசினார்.அத்துடன் அண்ணாமலையை தன் வேனிலேயே கூட நிற்க வைத்து பிரச்சாரம் செய்தார். ஆனால்,இந்த வாய்ப்பு அதிமுக வேட்பாளர்களுக்கே கூட இல்லை! அண்ணாமலைக்கு கர்நாடகா தரப்பு எம்.பி,எம்.எல்.ஏக்கள் எல்லாம் கூட பண்ட் பண்றதா சொல்றாங்க…’’ என்றார்.
இதையடுத்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை அலுவலர் ஒருவரிடம் பேசினேன்.
‘’சார், இது அடிப்படையில் திமுகவிற்கு சாதகமான தொகுதி தான். ஆனால் இப்ப ஈக்குவல் பைட்டுன்னு சொல்ற அளவுக்கு நிலைமை இருக்கு! ஏன்னா, அண்ணாமலையோட பிரச்சாரம் எபடிவ்வாக இருக்குது. பதிலுக்கு திமுக பக்கத்தில் இருந்து ஒன்னும் காணோம். ஒரு மெத்தனம் இருக்கு.’’. என்றார்.
பள்ளபட்டியைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் பேசினேன். ‘’சார் பள்ளப்பட்டியில் மட்டும் 23,000 இஸ்லாமியர் ஓட்டுகள் இருக்கு. அதுல 19,000 ஓட்டுகள் தான் ஆவரேஜா விழும். அதுல மிகப் பெரும்பாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தான் விழும். இதை யாராலும் மாற்றமுடியாது. இங்க பாஜகவிற்கு பலமே இல்லை. 2016 தேர்தலில் ஒட்டுமொத்த அரவக்குறிச்சிக்குமாக பாஜக பெற்ற ஓட்டுகள் மொத்தமே மூவாயிரத்து சொச்சம் தான்! ஆனால் இப்ப அண்ணாமலை பயங்கரமாக கெத்து காட்டறார். பள்ளப்பட்டிக்குள்ள பாஜககாரங்க பொதுவா வந்து ஓட்டு கேட்க மாட்டாங்க..ஆனா இவரு வந்து நீண்ட பிரசங்கமே செய்தார்.சி.ஏ.ஏ, என்.ஆர்.சி இது பற்றியெல்லாம் விளக்கம் தந்தார். எல்லாம் பொய்! அது தானே அவங்க வழக்கம். ஆனா, மேற்கொண்டு ஒன்னும் சொன்னார். யார் ஓட்டு போட்டாலும், போடாட்டியும் நான் ஜெயிப்பது உறுதி. நீங்க ஓட்டு போடாட்டியும் நான் தான் ஜெயித்து வருவேன். அதுல சந்தேகமே வேண்டாம். அப்படி வந்தாலும் உங்களுக்கு நல்லது தான் செய்வேன்.இங்க வீடு இல்லாத முஸ்லீம்களுக்கு 3,500 வீடுகள் கட்டித் தருவேன்.’’ அப்படி சொன்னார்.
அவர் இப்படி சொன்னது தான் எங்களுக்கு கலவரமாயிடுச்சு. நாம ஓட்டு போடாட்டி கூட ஜெயிப்பார்னா…, அது எப்படி..? இதனால் நாங்க எங்க தரப்புல இன்னும் உஷாராக இருக்கோம். வெளியூரில் வேலை பார்ப்பவங்க எல்லாம் தேர்தல் நேரத்திலே அலட்சியமாக இருந்துடக் கூடாது. தவறாமல் வரணும்னு வலியுறுத்தி சொல்லி வச்சு இருக்கோம். என்னா ஒரு வருத்தம் என்றால், இன்னும் கிராமத்து பக்கம் திமுக வேட்பாளரையே மக்கள் பார்க்கலை..ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்காங்க என்று தெரியல…’’ என்றார்.
இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, எங்க வேட்பாளர் இளங்கோவின் குடும்பமே திமுக பாராம்பரியக் குடும்பம். அவர்கிட்ட இருக்குற ஒரே மைன்ஸ் பாயிண்ட் பணம் இல்லாதது தான். அதை தலைமை சரிக்கட்டுவாங்கன்னு நம்புகிறோம். அவர் தன் சக்திக்கு உட்பட்ட வகையில் பிரச்சராம் பண்ணிக் கொண்டு தான் இருக்கார் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் எங்க கூட களப் பணிகளில் வர்றாங்க. செந்தில் பாலாஜி கரூரில் போட்டியிடுவதால் அவரது முழுக்கவனமும் அங்கு தான் உள்ளது. கனிமொழி மேடம் வந்துட்டு போயிருக்காங்க. நாங்க வெற்றி பெறுவோம். அதில சந்தேகமே வேண்டாம் என்றனர்.
இதற்கிடையில் பாதர் ஜெகத்கஸ்பர் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. அதில், ‘’பாஜக தலைமை அரவக்குறிச்சி தொகுதியை விட்டுக் கொடுக்கணும் என்று திமுக தலைமையை நிர்பந்திப்பதாக தெரிய வருகிறது. இல்லாவிட்டால் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவோம்’’ என மிரட்டி உள்ளார்களாம்.
இந்த பேச்சுக்கு வலு சேர்ப்பது போல அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கார். ‘’நான் சமீபத்தில் பிரதமர் மோடியை பார்த்தேன். என்னிடம் தொகுதி பற்றி விசாரித்தார். அரவக்குறிச்சி என்னோட நேரடி கவனத்தில் இருக்குற தொகுதி! நீங்க தைரியமாக போய் வேலை பாருங்க.. அப்படின்னு சொன்னார். அமித்ஷா ஏப்ரல் ஒன்றாம் தேதி அரவக்குறிச்சி வருகிறார். மத்திய அரசின் முழு கவனம் இந்த தொகுதியில் இருக்கு.ஆறு மாசத்துல பிரதமரை அரவக்குறிச்சி அழைத்து வந்து இந்த தொகுதிக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.என்றார். அண்ணாமலையை பொறுத்த வரையில் பாஜக மேலிடத்தின் விருப்பதற்கு உரியவர். அவர் ஆர்.எஸ்.எஸ்சின் நேரடி தேர்வு! ஆர்.எஸ்.எஸ் ஒன்றை டார்கெட் செய்தால் அதை எந்த வழியிலும் சாதித்தே தீரும் என்பது அதன் இயல்பாகும்! அதனால் தான் அண்ணாமலை கட்சியில் சேர்ந்தவுடனே அவருக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பாஜக தலைமையின் அறிவுறுத்தல்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாமலை அரவக்குறிச்சியில் களப் பணி செய்து வருகிறார் என்பதும் கவனத்திற்கு உரியது.அத்துடன் கருர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை போன்றவை அதிமுக அரசுக்கு சாதகமானவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது என்ன ஜனநாயகமோ தெரியல. சென்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியின் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டுல ரெய்டு நடத்தி கோடிக்கோடியாய் கரன்சிகளை கைப்பற்றினார்கள். இதனால், தேர்தலே நிறுத்தப்பட்டது. ஆனால், அதையெல்லாம் ஒன்றுமில்லாமல் பண்ணிவிட்டது பாஜக அரசு. அந்த அன்புநாதன் தற்போது அண்ணாமலையின் தோஸ்த்தாக வளம் வருகிறார். இது தான் பாஜக பேசும் நேர்மையான அரசியலோ..!
Also read
2019 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் 37,957 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் செந்தில்பாலாஜி அபார வெற்றி பெற்ற தொகுதி இது! அப்படியான ஒரு தொகுதியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. ஆனால், திமுகவை மிரட்டியும், முடக்கியும் ஒரு வெற்றியை தட்டிப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என அலட்சியப்படுத்த முடியவில்லை.
ஒன்னுமே புரியல..அரவக்குறிச்சியில…! என்னமோ நடக்குது..மர்மமாய் இருக்குது..
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மர்ம தேசத்தில் ஒரு உண்மை அறியும் முயற்சி! ஒன்னுமே புரியலை என்பதுதான் முடிவென்றால்?
Bjp lam tamilnadu la varave mudiyathu pesama katchi packup panitu north side polam
அரவக்குறிச்சியில் 2016 -இல் வெறும் 3000 வோட்டு வாங்கிய பிஜேபி யை விட்டு விட்டு ஏன் செந்தில் பாலாஜி கரூர் போனார் என்ற ரகசியத்தை அறம் சொல்லுமா?
தெரியும்…ஆனா… சொல்லமாட்டோம்! 🙂
Annamalai is an effective intellectual and BJP’s preferred candidate for entry in to TN assembly.
ஐடி ரெய்டு நடத்துவேன்னா பயப்படுறவன் யோக்கியன். நடத்துவேன்னு மிரட்டுறவன் அயோக்கியன். அடடா! என்ன அறம்? என்ன அறம்? இது உங்கள் இதழ். இதில் நீங்கள் எதுவும் எழுதலாம். உங்கள் உரிமை. ஆனால் இந்த அறம் ங்கற பேர்தான் முரண் நகையா இருக்கு. பேசாம முரசொலி சப்ளிமெண்ட் னு மாத்திட்டீங்கன்னா எல்லா திமுகவினரும் சந்தா செலுத்துவாங்க. டொனேஷனும் கேட்க வேண்டாம். கொஞ்சம் நேர்மையாகவும் இருக்கும்