என்ன செய்ய முடியும் ஏ.கே.ராஜன் கமிட்டியால்..?

-சாவித்திரி கண்ணன்

‘’ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு கமிஷன் போட்டால் சரியாயிடுமா..?’’

‘’இந்த நாட்டுல எவ்வளவு கமிஷன்கள் போட்டு இருக்காங்க..! அந்த கமிஷன் அறிக்கைகளைக் கூட வெளியிடாமால் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொள்வதெல்லாம் நடந்திருக்குதே..!’’

‘’கமிஷன் அறிக்கையை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பத் தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாதே!’’

‘’அப்ப என்ன சார் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்குமா..?’’

இப்படியான சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன!

மேற்படி சந்தேகங்களை எழுப்புவதற்கான கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல இருந்தாலும், இந்த விவகாரத்தை பாசிடிவ்வாகவே பார்க்கலாம் என்று தான் தோன்றுகிறது.

எதிர்க்கட்சி அரசியல் செய்வது சுலபம்! நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பொதுக் கூட்டங்கள்.. நடத்தலாம். ஆனால், ஆளுங்கட்சி ஆக்கபூர்வமாகத் தான் ஒரு விவகாரத்தை அணுக வேண்டும்!

நீட் தேர்வால் என்ன பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதை சட்ட பூர்வமாக நிறுவ வேண்டும்.

அது சமூகத்தில் யார் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது?

அதில் பலனடைந்து கொண்டிருப்பவர்கள் யார்?

தகுதி, திறமை இருந்தும் புறக்கணிக்கப்படுபவர்கள் யார்,யார்?

அப்படி தகுதி, திறமை இருந்தும் புறக்கணிக்கப்படுவதை தடுத்து மாற்றி அமைக்கும் கடமை ஒரு அரசுக்கு சட்டபூர்வமாக உண்டல்லவா..?

இந்த பாதையின் துவக்கமாகவே இந்த ஏ.கே.ராஜன் கமிட்டியை நாம் பார்க்க வேண்டும்.

இந்த அறிக்கை பொது வெளியில் வரும் போது மக்களிடம் ஒரு கருத்தாக்கத்தை வலுவாக உருவாக்க உதவும்! அதன் பிறகு அனைத்து கட்சி ஆதரவுடன் இதை சட்டமன்றத்தில் தீர்மானமாக்கி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தகுந்த பதில் சொல்ல முடியாமல் தான் வெறுமனே சென்ற முறை திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர். ஆனால், இந்த அரசாங்கம் அப்படி அனுப்பினால் கேள்வி கேட்கும்! நீதிமன்றம் செல்லும்!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு விட்டன! முதலில் நீட்டை ஏற்க மறுத்த மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களும் பின்னர் தங்கள் பாடதிட்டத்தை சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை போல மாற்றி அமைத்துக் கொண்டு ஏற்றுவிட்டன.

இந்த வகையில் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து வந்த அந்தந்த மண் சார்ந்த கல்வி பாடதிட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்து ஒற்றை நோக்கிலான பாடதிட்டத்தை திணிப்பதே தவறு! ஆகவே, சுதந்திரம் அடைந்தது தொடங்கி தமிழகம் மருத்துவதுறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக விளங்கியுள்ளது என்பதை வைத்து பார்த்தாலுமே கூட, அதன் கல்வி திட்டம் மிக,மிக சரியானது தான்! ஆகவே, நமது சுயத்தை பாதிக்கும் கல்விதிட்டம் தேவையற்றது.

இரண்டாவதாக ப்ளஸ் டூ வரை படித்து வந்த கல்வி அமைப்பில் ஒரு மாணவர் சாதித்த எதுவுமே கணக்கில் கொள்ளாமல், நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே போதுமானது என்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது.

இந்த நுழைவுத் தேர்வானது அதற்கான பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் படிக்க வசதி வாய்ப்புள்ள பணம் படைத்தவர்கள் பலனடையவே உதவுகிறது.

தகுதி, திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்ணுக்கு வெறும் 130 மதிப்பெண் வாங்கிய பணக்கார மாணவர்கள் பணம் தந்தால், கல்வி பயில வாய்ப்பளிக்கிறது. ஆனால், தன் பாடதிட்டத்திற்கு சம்பந்தமில்லாத தேர்வில் கலந்து கொண்டு 350 மற்றும் 400 மதிபெண்கள் வாங்கிய ஏழை மாணவருக்கு கல்வி வாய்ப்பை மறுக்கிறது.

மொத்தத்தில் மருத்துவ கல்வியையும் ,மருத்துவத்தையும் பெரும் வணிக நோக்கில் அணுகக் கூடியவர்களுக்கு சாதகமாகவே நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் நாம் இதை எதிர்க்கிறோம். பாருங்கள் இந்த கொரோனா காலம் தனியார் மருத்துவமனைகளின் இதயமில்லாத பகற்கொள்ளைகளை, மோசடிகளை நமக்கு துல்லியமாக உணர்த்தியுள்ளது. எளிய குடும்ப பின்னணியில், பணம் செலவழிக்காமல் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் கற்று வந்த மருத்துவர்களாலே தான் இன்று சமூகம் காப்பாற்றப்பட்டுள்ளது.

மேலும் ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கேட்பானது வெறும் நீட் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மட்டுமே உரித்தாக்கும் குரலாகவும் வலுப்பட உதவும் என்பது திண்ணம்!

ஆகவே, மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகள் பலனடையவும், கல்வியை பெரும் வணிக நோக்கிலான கடைச் சரக்காக்கவும், எளிய சமூக பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி பயிலுவதை தடுக்கவுமாக  கொண்டுவந்துள்ள நீட்டை நாம் எதிர்க்கிறோம். இதை பல்வேறு நடைமுறை ஆதாரங்களோடும், ஆய்வுகளோடும் நிறுவுவதற்கு நீதிபதி ஏ.கே.ராஜன் மிகப் பொருத்தமானவர். ஏனெனில் அவர் ஏற்கனவே, சமூக பொது நோக்கில் இது போன்ற ஆய்வுகள் செய்து ஒரு நூல் எழுதியுள்ளார்! அந்த நூலின் பெயர் ’’மருத்துவ கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு வளர்சிக்கு தண்டமா..?’’

நீதிபதி அழகுமலை கருப்பன் ராஜன் அடிப்படையில் ஒரு கல்வியாளர். சட்ட பல்கலைக் கழகத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக சட்டத்துறை பேராசிரியராக இருந்தவர், மாவட்ட மாஜிட்ரேட்டாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றிவர்! தமிழக அரசின் சட்டத் துறை செயலாளராக இருந்தவர்.

நீட் தேர்வு முறை இந்த சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்து அர்ப்பணிப்புடன் ஈடுபடத் தகுதியானவர்.

அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பின்தங்கிய மாணவர்களுக்கு அவற்றைச் சரிசெய்வதற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க தக்கவர்!

எனவே, தமிழ்நாடு  முதலமைச்சர்  ஸ்டாலின் கூறியவாறு, ‘’நீட் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.வரவேற்கதக்கதே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time