உளவு பார்ப்பது, ஒட்டுக் கேட்பதில் உலகமகா கேடியான பாஜக அரசு!

-சாவித்திரி கண்ணன்

ஒட்டு கேட்பு, உளவு பார்ப்பு  விவகாரத்தில், சொந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களைக் கூட உளவுபார்க்கும் ஒரு கோழைத்தனமான அரசாக பாஜக இருந்துள்ளது என்பது தான் இதன் ஹைலைட்டாகும்!

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை என்ற உளவு மென்பொருளை பல்வேறு உலக நாடுகள் தீவிரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியா அரசோ ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நீதித் துறையினர்,அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்  உட்பட 300 பேரை உளவு பார்க்க கள்ளத்தனமாக இதைப் பயன்படுத்தியுள்ளது!

இதன் அதிர்வு இன்றைய நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டது. எதிர்கட்சிகளின் அமளிகளால் மிகவும் அரண்டு போனார் மோடி!

இந்தியாவில் குறைந்தபட்சம் 40 ஊடகவியலாளர்கள் இவ்வாறு கள்ளத்தனமாக இந்த உளவு மென்பொருளான பெகாசஸ் மூலமாக உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலானது இந்திய அரசின் தன்நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது!

எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வியூக வல்லுனர் பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிசேக் பானர்ஜி.. ஆகியோர் உளவுபார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது போன்ற தொலைபேசியை அரசு ஒட்டு கேட்பதற்கு எதிராக பலமுறை உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. குறிப்பாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநலன் வழக்கை மக்கள் சிவில் உரிமை கழகம் (பியுசில்)  அமைப்பு தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கை நீதிபதிகள் குல்தீப் சிங், சாஹீர் அகமது கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்த போது, தனிநபரின் அந்தரங்கத்தில் தலையிடுவது அடிப்படை உரிமைக்கு முரணானது. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது,அதன் மூலம் உளவு பார்ப்பது அத்தகைய உரிமையை மீறுவதாகுமென்று தீர்ப்பளித்திருந்தது நினைவிருக்கலாம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஆபத்தான கள்ளத்தனமான உளவு மென்பொருள் இந்தியாவில் வாட்சப் என்னும் சமூக ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சனை எழுப்பிய போது, அதை மோடி அரசாங்கம் ”அது ,அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பு ’’ என்று கூறி சமாளித்தது! அதிகாரத்தில் இருந்து கொண்டு அதிகாரத்திற்கு அப்பாறப்பட்ட செயல்களை செய்வது மோடிக்கும், அமித்ஷாவிற்கும் கைவந்த கலையாகும்!

கர்நாடகவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு இருந்த போது அன்றைய கர்நாடக காவல் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி ,”எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி உரையாடலை மத்திய பாஜக அரசு ஒட்டு கேட்டு வருகிறது. இது தொடர்பான உறுதியான தகவல் எனது கவனத்துக்கு வந்துள்ளது…” என்று பகிரங்கமாக அம்பலப்படுத்தினார்!

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே அவர் அரசு மீது தொலைபேசி ஒட்டுகேட்பு புகார் வெடித்து, சந்தி சிரித்தது. ஆயினும் அந்த புத்தி அவருக்கு இன்னும்விடவில்லை!

இப்போது வெளியாகியுள்ள விவரங்களிலிருந்து, பாஜக அரசு  தன் சொந்தக் குடிமக்கள் மீதே உளவு பார்ப்பதற்காக என்எஸ்ஓ நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது  உறுதியாகிறது. என்எஸ்ஓ-விடம் எவ்விதமான ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது?, அந்த ஒப்பந்த விதிமுறைகள் என்ன ?, அதற்காக மக்களின் வரிப்பணம்  எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தெல்லாம் உள்துறை அமைச்சகம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

இதே கருத்தை பாஜக தலைவரான சுப்பிரமணியன்சாமியே வெளிப்படையாக கூறியுள்ளார் என்றால், இந்த அரசின் யோக்கியதையை என்னென்பது? ”தொலைபேசி ஒட்டு கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா? இல்லையா? என்பது பற்றி விளக்கமளித்தால் நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போல இது தலைவலியாக மாறும” என சுப்பிரமணியசாமி கூறியுள்ளது கவனிக்கத் தக்கது!

குடிமக்களின் அந்தரங்க உரிமை (right to privacy) உச்சநீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், இந்த பாஜக அரசானது எல்லா சட்ட விதிகளையும் மீறி, அராஜக முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பும் இது தொடர்பாக பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் மற்றும் கணினிகளில் கள்ளத்தனமாக மென்பொருள்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன. பின்னர் அதன்அடிப்படையில் நாட்டிலுள்ள கொடுங்கோன்மையான உபா போன்ற சட்டங்களின் கீழ் பாதிரியார் ஸ்டேலன்சாமி, கவிஞர் வரவரராவ்,திருமுருகன் காந்தி… உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மொத்ததில் இந்த அரசு எவ்வளவு பலவீனமான அரசாக இருக்கும் பட்சத்தில், இது போன்ற இழி செயல்களை செய்யத் துணிந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கும் போது, மோடி காட்டும் கெத்து, வாய்ச் சவடால்கள் எல்லாம் எவ்வளவு உள்ளீடற்ற உலுத்துப் போனவை என்றே எண்ணத் தோன்றுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time