வெள்ளை அறிக்கையின் விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு..?

-சாவித்திரி கண்ணன்

மகிழ்ச்சி, வெள்ளை அறிக்கையின் மூலம் ஒரு விவாதத்தை, விழிப்புணர்வை விதைத்தற்கு! பி.டி.ஆர்.தியாகராஜனின் வெளிப்படைத் தன்மைக்கு ஒரு சல்யூட்! ஐயோ..இவ்வளவு கடனா..? இவ்வளவு நெருக்கடிகளா..என வியக்கும் போது, இந்த விபரீதங்களுக்கு வித்திட்டது யார்..? அதிமுக மட்டுமே அத்தனைக்கும் பொறுப்பாகுமா..?

ஒரு வகையில் வெள்ளை அறிக்கை மூலம் தன்னை வெளிப்படைத் தன்மைக்கு இந்த அரசு தயார்படுத்திக் கொண்டுள்ளது என்ற வகையில் மகிழ்ச்சியே! சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்வதன் மூலம் தாங்களும் அதே பாதையில் பயணிக்க நேர்ந்தால் கேள்விக்கு உள்ளோவோம் என இவர்கள் உணர்ந்திருப்பார்கள் தானே!

தமிழக நிதிஅமைச்சர் தியாகராஜன் பேசிய விதமும், ஊடகங்களை எதிர்கொண்ட விதமும் உண்மையிலேயே மகிழ்ச்சியளித்தன. ஒரு அரசியல்வாதிக்கேயான சூது,வாது இல்லாமல் அக்கறையுள்ள நிதி அமைச்சர் – நிர்வாகி – என்ற வகையில் சிறப்பாகப் பேசினார்.

நிதி அமைச்சர் தியாகராஜன் கூறிய எதுவும் நமக்கு புதிய செய்தியல்ல. கடந்த பல ஆண்டுகளாக அரசுகள் மீண்டும், மீண்டும் கடன் வாங்குவது குறித்த அபாயங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன்.

வெள்ளை அறிக்கை தொடர்பாக ஏராளமான புள்ளிவிபரங்கள் வெளியாகிவிட்டன.

ஆகவே அவற்றை இங்கே மீண்டும் பட்டியலிட தேவையில்லை.

உலகிலேயே அதிக கடன்களை வாங்கி குவித்துள்ள நாடாக இந்தியா உள்ளது! இந்தியாவின் இன்றைய கடன் 110 லட்சம் கோடியை கடந்துள்ளது என்றால், தமிழகத்தின் கடன் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமுமே இன்றைக்கு கடன்கார மாநிலமாகத் தான் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி ஊழலில் உச்சத்தை தொட்டது! ஊதாரித்தனத்தில் கொடி கட்டிப் பறந்தது! கடன்களை பொறுப்பில்லாமல் வாங்கிக் குவித்தனர். முதலீட்டிற்காக என்று கடன் வாங்கிய நிலை கடந்து சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளை சமாளிக்கவே கடன் வாங்கியதும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கி சமாளித்ததும் தெரியாத ஒன்றல்ல! தமிழகம் இவ்வளவு மோசமான நிதி நிலையில் உள்ளது ஏற்கனவே ஆண்ட கட்சியாகவும், எதிர்கட்சியாகவுமான திமுகவிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. என்னைப் போன்ற பத்திரிகையாளர்களே இதை கவனப்படுத்தியுள்ளோம்.

அப்படி இருக்க தமிழகத்தின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கும் இலவச அறிவிப்புகளை ஏன் செய்ய வேண்டும்…? ஏற்கனவே விலையில்லா அரிசி மற்றும் மானிய விலையில் சக்கரை உள்ளிட்ட பொருள்களை ரேஷனில் தருவதற்கு ஐயாயிரத்து சொச்சம் கோடி செலவாகி வரும் நிலையில் ரேஷன் கார்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாகத் தருவோம் என்ற வாக்குறுதியை தமிழகம் தாங்காது என்பதை உணரவில்லையே!

போக்குவரத்துதுறையில் ஏற்கனவே படு நஷ்டம்! உழைக்கும் தொழிலாளிகளுக்கு உரிய ஊதிய உயர்வு தர முடியவில்லை, அவர்களிடம் பிடித்தம் ஓய்வூதிய பணம் 7,000 கோடியை திருப்பித் தரமுடியவில்லை. அப்படியிருக்க பெண்களுக்கு இலவச பேருந்து பயண அறிவிப்பு!

பால்வளத்துறையில் ஆவினைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்கும் தனியார் பால் விற்பனையே 84% சந்தையை பிடித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலைக்கு தரப்படும் பாலின் விலையை மேலும் குறைப்பானேன்..? பால் விவசாயிக்கு பாலுக்கு உரிய விலையை கொடுக்காமல் வயிற்றில் அடித்து தானே விலை குறைப்பை நிலை நிறுத்த முடியும்..!

இலவசம், விலை குறைப்பு என்ற தூண்டிலை போட்டு மக்கள் ஓட்டை கபளீகரம் செய்யும் அரசியல் தந்திரங்களால் மக்களில் ஒரு பகுதியினர் கடுமையாக பாதிக்கப்படுவதை குறித்து அரசும் சிந்திப்பதில்லை. மக்களும் சிந்திப்பதில்லை.

ஆக, இந்த வெள்ளை அறிக்கை என்பது வரப் போகிற பட்ஜெட்டில் அதிகமாக எதிர்பார்க்காதீர்கள் என்ற எச்சரிக்கை தரவும், போகப்போக சொத்துவரி குடிநீர் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றை அதிகரிப்பதை நியாயப்படுத்தவும் உதவலாம்!

ஆனால், அதிமுக ஆட்சியை போல நாங்கள் மேலும் கடனை வாங்கமாட்டோம். ஊதாரிதனமான செலவுகளை தவிர்ப்போம், சிக்கனமாக செலவு செய்வோம், நேர்மையான நிர்வாகம் தருவோம் என்ற உறுதி மொழியை திமுக ஆட்சி எடுத்தால் தான் தீர்வு.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைத்து வந்த வரிவருவாய் 33% குறைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் கவலைக்குரியது. அத்துடன் பெட்ரோல் டீசலுக்கு தமிழகத்தில் இருந்து வசுலிக்கப்படும் வரியான 3,89,000 கோடியில், தமிழகத்திற்கு வெறும் 837 கோடி தான் தரப்படுகிறது என்பது மிகப் பெரிய அநீதியாகும்! மாநில அரசுகளை சுரண்டும் ஒரு எஜமானனாக மத்திய அரசு நடப்பது முடிவுக்கு வர அனைத்து மாநில அரசுகளும் குரல் கொடுக்க வேண்டும்.

கடைசியாக ஒன்று; காந்தியப் பொருளாதரத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று கடன் வாங்காமல் உள் நாட்டு வளங்களையும், மக்களையும் நம்பி இயங்குதல்!

1996 -2001 வரை தமிழகம் வாங்கிய கடன் 34,540 கோடி!

2001 -2006 வரை வாங்கிய கடன் 63,848 கோடி!

2006 -2011 வரை வாங்கிய கடன் 1,14000 கோடி!

2011 -2021 வரை வாங்கிய கடன் 5,70,189 கோடி!

ஆக, இரு கட்சிகளுமே கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்கியதால் தான் இன்று ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63,976 கோடி ரூபாய் கடன் உள்ளது! எங்களை கேட்காமலே எங்களை கடனாளியாக்கிவிட்டீர்களே!

இலவச தொலைகாட்சி பெட்டியை கலைஞர் ஆரம்பித்துவைத்தார். அதை மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறி என ஜெயலலிதா விரிவுபடுத்தினார். ரேஷன் அரசியை தேவையில்லாமல் கிலோ இரண்டு ரூபாய்க்கு கலைஞர் தந்தார். அதை விலையில்லா அரிசியாக்கினார் ஜெயலலிதா! நெல் விவசாயம் தமிழகத்தில் பெரும் வீழ்ச்சியடைந்து இன்று வெளி மாநிலங்களில் இருந்து அரசி தருவிக்கிறோம்! இந்தியாவிலேயே அதிக இலவசங்களை தந்த மாநிலம் தமிழகம் தான்!

அவசியமில்லாமல் தரப்படும் இலவசங்களும், வாங்கப்படும் கடன் பெரும்பாலும் கரப்ஷன் வளர்வதற்கே வழிவகுத்துள்ளது!

கடன் கொடுப்பவன் விதிக்கும் நிபந்தனைகளை ஆட்சியாளர்கள் மக்களிடம் தெரிவிப்பதே இல்லை. சாலைகளில் சுங்கச்சாவடிகள் வைத்து காசு பறிப்பதை கடன் கொடுத்தவன் தானே கற்பித்தான்! இப்படி நாம் பெறும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.

மின்சாரத் துறைக்கு தான் அதிக கடன் தரப்பட்டுள்ளது 1,34,000 கோடி ரூபாய்! இப்படி கடன் கொடுப்பதன் மூலம் மின்சாரத்துறையில் அரசு உற்பத்தியை அதிகப்படுத்த தடை போட்டு, தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்க கட்டளை இடுகிறான்,கடன் தந்தவன். இதனால் தான் செலவு அதிகரித்து, ஊழலுக்கும் வகை ஏற்படுகிறது. கடன் கொடுப்பவன் மீண்டும், மீண்டும் நம்மை கடனாளியாக்கவே கடன் தருகிறான். ஆகவே, கடனை தவிர்க்க, கரப்ஷனை, ஒழிக்க  சுதேசி பொருளாதாரமே தீர்வு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time