சுட்டுக் கொல்வதா? உயிரோடு பிடிப்பதா..? -எது சரியான தீர்வு?

-செழியன்.ஜா 

நீலகிரி மாவட்ட மக்கள் திகிலில் உறைந்திருக்கிறார்கள்! எப்போது யாரை புலி கொன்று தின்னப் போகிறது என்ற பதட்டம் பரவலாக மக்களை ஆட் கொண்டதன் விளைவாக புலியை உடனே பிடிக்கவோ, சுடவோ வேண்டும் என சாலை மறியலில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர்! புலியை கொல்வதா..? உயிரோடு பிடித்து கூண்டில் அடைப்பதா..? என்ற விவாதம் வேகம் பெற்றுள்ளது. இதற்கு சரியான தீர்வு என்ன..?

பொதுவாக புலிகள் மனித குடியிருப்பு பகுதிகளில் வராது,வாழாது. அடர்ந்த காட்டுக்குள்ளேயே வாழும். புலியை பார்க்க செல்லும் பயணிகள், ஆய்வாளர்கள் கூட பல முயற்சி செய்தும் புலியை பார்க்க முடியவில்லை என்று கூறுவார்கள். அப்படி அடர்ந்த காட்டுக்குள் வாழும் புலி மனித நடமாட்டத்திற்கு உள்ளான பகுதியில் வருகிறது என்றால், மனிதர்களை தாக்கி உள்ளது என்றால் அவை என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.

காட்டில் வாழும் புலி பொதுவாக மனிதர்களை இரையாக கருதுவதில்லை என்பது விலங்கு நல ஆர்வலர்களுக்கு தெரிந்த உண்மை! மனிதர்களை நேரில் கண்டால் கூட சாதாரணமாக பார்த்து கடந்துவிடும்! ஆனால், ஒரு புலி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வரத் தொடங்குகிறது, மனிதர்களை உணவாக கருதத் தொடங்கியுள்ளது என்பது அசாதரணமான ஒரு விஷயமாகும்! ஒற்றை புலிக்காக மக்கள் வீட்டைவிட்டே வெளியே வராமல் எவ்வளவு நாள் முடங்க முடியும்! புலிக்கு பலியானவர்களின் உறவினர்களின் கதறலை அலட்சியப்படுத்த முடியுமா..?

முதல் 3 நபரை கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்கவே முயற்சித்தார்கள். பிடித்து வண்டலூர் போன்ற உயிரியல் பூங்காவில் விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் 4வது  நபரை கொன்று சாப்பிட தொடங்கியதால் சுட உத்தரவு போட்டு உள்ளனர். புலி, இந்தியாவின் பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய விலங்கு. அரிதாகிக் கொண்டு வரும் காட்டு விலங்கு! அதை சுட ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்றால், அதை மிக ஆழமான மற்றும் பரவலான ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

தமிழகம், கேரளம், கர்நாடகம் என மூன்று மா நில வனத்துறையினர் 75 பேர் மற்றும் அதிரடி படையினர் இன்று டி23 புலியை சுட்டுக் கொல்ல களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்!

இந்த ஆட்கொல்லி புலியை சுடக்கூடாது என்று பலர் கூறி வருகிறார்கள்.  சிலர் வழக்கு தொடுத்து உள்ளனர். நடிகர் கமல்ஹாசன், ”புலியை சுடவேண்டாம் அதற்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ”புலியை கொல்லாமல் மீண்டும் வனத்திற்குள் விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆட்கொல்லி புலியை எவ்வளவு அடர்ந்த காட்டிற்குள் விட்டாலும் மீண்டும் அவை மனிதர்களை தேடி மனிதர்களின் வாழிடப் பகுதிக்கு வந்துவிடும் என்ற புரிதல் இல்லாமல்  இவர்கள் கூறுகிறார்கள்.

மனிதர்களை தாக்கும் புலி என்பது வேறு!  மனிதர்களை கொன்று இரையாக உண்ணும் புலி என்பது வேறு!  பொதுவாக மனிதர்களை பார்த்து நகர்ந்து செல்லவே புலி நினைக்கும். தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே தாக்கும். இதைத் தவிர மான் போன்று மனிதர்கள் புலிக்கு இரை கிடையாது.

கூடலூரில் 3 மனிதர்களை கொன்ற டி23 புலி அவர்களை உண்ணவில்லை. ஆனால் கடைசியாக ஒருவரை கொன்று சாப்பிட்டு உள்ளது. இதன் மூலம் அது மெல்ல ஆட்கொல்லி புலியாக மாறிவருகிறது என்பது தெரிகிறது.

ஒரு புலி எப்பொழுது ஆட்கொல்லியாக மாறும்?

புலியே என்றாலும் மான் எதிரே கம்பிரமாக நடந்து சென்று கொல்ல முடியாது. மெல்லப் பதுங்கி பதுங்கி சென்று தான் அதை பிடிக்க முடியும். இப்படி மெல்ல பதுங்கி சென்றாலும், பலமுறை மான் தப்பிவிடும். உயிருக்கு ஓடும் விலங்கு,  இரைக்கு ஓடும் விலங்கு இதில் பெரும்பாலும் உயிருக்கு ஓடும் விலங்கு தான் வெற்றிபெறும் !

ஆக பலமாகவும், கால் நாகங்கள் கூர்மையாகவும், பல் உடையாமல், காயங்கள் இல்லாமலும் இருக்கும் ஒரு புலிக்கே பல தடவை முயற்சியில் ஒரு மான் மாட்டும் போது, வயதான புலி, சண்டையில் பல் உடைந்த புலி, காலில் காயங்கள் உடைய புலிக்கு இரையாகிய மான் எப்படி கிடைக்கும்?

 

டி23 புலிக்கும் இப்படி ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே வாய்ப்புகள் உள்ளன.

இரைகள்  மிக மிக குறைவாகவே இவ்வகை புலிக்கு மாட்டும். பல நாட்கள் இரை இல்லாமல் உலாவி வரும்.  இதனால் சில புலிகள் இறந்துவிடும். ஒரு சில புலிகள் மனிதர்கள் நடமாடும் இடத்தில் உலாவி வரும்பொழுது  எதேச்சையாக மனிதனை ஒரு தட்டு தட்டும். மனிதன் பொத் என்று விழுந்து விடுவான். மான் போன்று துள்ளி ஓடுவதோ, தப்பிக்க முயற்சிப்பதோ மனிதனிடம் இருக்காது. மொத்த பயத்தில் அப்படியே நின்றுவிடுவான். இது புலிக்கு வசதியாக மாறிவிடும்.

இதுவரை பல முறை முயன்று மானை பிடித்து வந்த அந்த புலிக்கு மனிதனை மிக சுலபமாக கீழே வீழ்த்த முடிகிறதே என்ற நினைப்பு மீண்டும் மீண்டும் மனிதர்கள் நடமாடும் பகுதிக்கு வரச் செய்யும். சில மனிதர்களை கொன்று சாப்பிட தொடங்கிவிட்டால், மனிதன் ருசி அதற்கு பிடித்துவிடும். மான் தனக்கான இரை என்பதை மறந்து மனிதனை இரையாக எடுத்துக்கொள்ளும்.

இப்படி ஆட்களை கொன்று சாப்பிட தொடங்கிவிட்டால் இந்த புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டாலும் மீண்டும் மனிதர்கள் குடியிருக்கும்  பகுதிக்கு வந்துவிடும். அதனால் ஆட்கொல்லி புலியை சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. புலிகளை பல வருடங்களாக ஆய்வு செய்த உல்லாஸ் கரந்த் கூட ஆட்கொல்லி புலியை  கொல்வதுதான் சரியான முறை என்கிறார்.

சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் இதையே உறுதிப்படுத்துகிறார்.

இதுபோல் ஆட்கொல்லி புலிகளை சுட்டுக் அவற்றை வேட்டை இலக்கியமாக எழுதிய ஜிம் கார்பட் காலத்தில் ஒரு புலி ஆட்கொல்லியாக மாறியுள்ளது என்பதே பல மனிதர்களை கொன்று சாப்பிட்டபிறகே தெரியவரும்.  அப்படி ஒரு ஆட்கொல்லி புலி 264 மனிதர்களை கொன்ற பிறகு ஜிம் கார்பட் அவற்றை தேடி சென்று சுட்டு உள்ளார். இப்படி எந்தவித தகவல் தொடர்பு இல்லாத காலமான 1907 முதல் 1939 வரை ஜிம் கார்பட்டு பல ஆட்கொல்லி புலியை தேடி சென்று மிகுந்த மனோதிடத்துடன் சுட்டு கொன்று உள்ளார்.

இப்பொழுது அப்படி இல்லை ஒரு மனிதரை கொன்ற உடனே அனைவரின் கவனத்திற்கு வந்துவிடுகிறது. ஆட்கொல்லி புலி பிடிக்கும் வரை அந்த பகுதி மக்கள் மிகுந்த எச்சரியாக இருப்பது மட்டுமே ஒரே வழி.

கமல்ஹாசன் சொல்வது போல் ஆட்கொல்லி புலிகளை பிடித்து கூண்டில் அடைத்து பராமரித்தால் புலி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும். அவை அதற்கு மிகப்பெரிய தண்டனை ஆகும். சித்திரவதை செய்வதற்கு சமமாகும்.  உயிர் என்று நினைத்து சிலர் அவற்றை சுடக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் சுடுவதை விடவும் அவற்றை சித்திரவதை செய்வது மிகக் கொடியது ஆகும்.

டெல்லி மிருகக்காட்சி சாலையில் ஒருவர் புலி இருக்கும் இடத்தில் தவறுதலாக உள்ளே விழுந்து விடுகிறார். அந்த நபர் அருகில் புலி வந்தவுடன் செய்வதறியாமல் முழு பயத்தில் அங்கேயே இருந்து விடுகிறார். அவரை புலி கொன்றதே தவிர இரையாக சாப்பிடவில்லை. தன் இடத்தில் ஒரு மனிதன் வந்துவிட்டான் நமக்கு ஆபத்து என்ற உணர்வில் அவரை கொன்றது. இத்தகையை புலியை பாதுகாக்கலாம்.

2018  மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்கொல்லிபுலியான டி1 புலியை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுட்டுப்பிடித்தனர். இந்த புலி 13 மனிதர்களை கொன்று சாப்பிட்டு உள்ளது.

முதலில் ஒரு  புலி ஆட்கொல்லியாக மாறி உள்ளதா  என்று நன்கு உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். தேடி செல்லும் போது அந்த பகுதியில் வேறு புலிகள் இருந்தால் எந்த புலி ஆட்கொல்லி என்று குழப்பம் வர செய்யும்.  தவறுதலாக வேறு புலிகளை கொன்று விட கூடாது. NTCA விதிமுறைப்படி மாலை 6 மணிக்கு மேல் புலியை பிடிக்க கூடாது. இப்பொழுது டி23 புலியை தேடி சென்று கொண்டு இருக்கும் மிகப் பெரிய குழுவும் இத்தகையை முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டே தேடி சென்று கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் புலி மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளது என்பது உண்மையென்றாலும் இயற்கையான இரைக்கு பதிலாக மனிதர்களை ஒரு புலி தேடி வந்து கொன்று சாப்பிடுகிறது என்றால் அவற்றை உயிருடன் பாதுகாப்பது மிக கடினமேயாகும். இன்றைய சூழலில் நமக்கு இருக்கும் வாய்ப்புகள் இவைதான் என்பதை தவிர வேறு இல்லை. எதிர்காலத்தில் இதைவிட வேறு வாய்ப்புகள் உருவாக்கலாம். ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வது மட்டுமே தீர்வாகும். தற்பொழுது அது ஒன்று மட்டுமே இருக்கும் வாய்ப்பாகும்!

கட்டுரையாளர் ; செழியன்.ஜா

சுற்றுச் சூழல் ஆர்வலர்,

‘பறவைகளுக்கு ஊரடங்கு’ நூலின் ஆசிரியர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time