முதலமைச்சருக்காக சாலை போக்குவரத்தை முடக்குவது சரியா..?

-சாவித்திரி கண்ணன்

முதலமைச்சருக்காக சாலையில் வாகனங்கள் முடக்கப்படுவதில் ஒரு நீதிபதி பாதிக்கப்பட்டதால் பொங்கி தீர்த்துவிட்டார்! நாம் எங்கு போய் பொங்குவது..? முற்றிலும் நிறுத்தப்படும் சாலை போக்குவரத்து! சல்சல்லென்று பரபரத்துக் கடக்கும் போலீஸ் வாகனங்கள்! முதலமைச்சர் காருக்கு முன்னும், பின்னுமாக சீறிச் செல்லும் ஏகப்பட்ட வாகனங்கள்! அது வரை முடக்கப்படும் போக்குவரத்துகள்! நாம் வாழ்வது ஜனநாயக யுகத்திலா? மன்னராட்சி காலத்திலா..?

சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்திற்கு வந்த போது கிரீன்வேஸ் சாலையில் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் நீதிபதி ஒருவரின் வாகனமும் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அவ்வளவு தான் நீதிபதி ஆயிற்றே அவரது அகங்காரம் அவரை உசுப்பிவிடாதா..?

நீதிமன்றம் சென்றதும் தமிழக உள்துறை செயலாளரை தன் முன் ஆஜராகும்படி அழைத்து அவர் கடிந்து கொண்டார். அவரும் தான் போலீஸ் கமிஷனரை அழைத்து விசாரிப்பதாக கோரியதோடு, இனி நீதிபதிகளின் காரும், அமைச்சர்கள் கார் போல பாவிக்கப்பட்டு உடனே தடையின்றி செல்ல அனுமதிக்கப்படும் எனக் கூறியதால் நீதிபதி அமைதி அடைந்தார்!

பாதிக்கப்பட்டவர் ஒரு நீதிபதி! ஆகவே அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை மட்டும் தற்காத்துக் கொண்டார்! ஆனால், இது போன்ற தடைகளால் தினமும் அவதிக்கு ஆளாகும் மக்களுக்கு என்ன நீதி?அவர்களில் ரயிலை தவறவிடுபவர்கள் இருக்கலாம்.அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்று தண்டிக்கபடுபவர்கள் இருக்கலாம்! பள்ளி, கல்லூரிக்கு செல்லமுடியாமல் தவித்த ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கலாம்! அவர்கள் பாதிக்கப்படுவது குறித்து முதல்வருக்கோ, பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ, நீதிபதிக்கோ எந்தக் கவலையும் இல்லை!

நடப்பது மக்களாட்சி தானே! முதல்வர் என்பவர் மக்களால் அதிகாரம் பெற்றவர் தானே! அவர் செல்லும் வழி எங்கும் ஏன் மக்கள் அவதிக்கு உள்ளாக வேண்டும்? ஜெயலலிதாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு கெடுபிடிகளை இன்னும் தொடர்ந்து, மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்க வேண்டுமா..? ஒரளவுக்கான பாதுகாப்புடன் முதல்வர் நடமாட முடியாதா..? இத்தனை நாளும் மக்களில் ஒருவராகத் தானே ஸ்டாலினும் இருந்தார்! திடீரென்று அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதா? தங்கள் உயிர் மட்டுமே மிக முக்கியம் என பயப்படுவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்..? ஒரு வகையில் ஜெயலலிதாவை ஒப்பிடும் போது தற்போது ஸ்டாலின் எவ்வளவோ பரவாயில்லை என்பது உண்மை தான்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக முதலமைச்சர் பதவியை மன்னராட்சி மனோபாவத்தில் மகாராணியை போல தன்னை கருதிக் கொண்டு இல்லாத பாதுகாப்பு ஜபஜஸ்த்துகளை செய்தவர் ஜெயலலிதா தான்!

முதல்வர் கார் செல்லும் இடங்களில் எல்லாம் சுமார் 20 நிமிடங்கள் முன்பாகவே சாலையில் வாகனங்களை அப்படியே ஸ்தம்பிக்க வைத்து, போக்குவரத்தையே முடக்கி தனக்கு முன்னும்,பின்னும் பல வாகனங்கள் அணிவகுத்து வர முதல்வர் பதவியை பயங்கர ஜபர்ஜஸ்து காட்டி மிரட்டியவர் ஜெயலலிதா! அவர் சென்ற பின்னும் பத்து நிமிடங்கள் அப்படியே வாகனங்கள் காத்துக் கிடக்கும்! இதனால் போக்குவரத்து சிக்னல்களில் மாட்டிக் கொண்ட மக்கள் பெரும் அவஸ்த்தைக்கு ஆளானார்கள்.

அப்படி ஜெயலலிதா காட்டிய  அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுத் தான், தான் வசிக்கும் போயஸ்கார்டன் பகுதியில் நுழைய முடியாமல் தவித்த ரஜினிகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிராக மாறி 1996 தேர்தலில் அந்த கோபத்தை வெளிப்படுத்தினார்!

ஆனபோதிலும் ஜெயலலிதாவின் ஆணவ மற்றும் அதிகார போதை அரசியல் கடைசி வரை மாறவே இல்லை!

முதலமைச்சர்களுக்கு பொதுவாக இசட்பிளஸ் பாதுகாப்பு தரப்படுகிறது. ஆனால், அது மட்டுமே தனக்கு போதாது எனக் கருதிய ஜெயலலிதா எஸ்.எஸ்.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை மாநில அளவில்  தனக்காக உருவாக்கினார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் காஷ்மீருக்கான ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் தான் அன்று அதற்கு தலைமையேற்று வடிவம் தந்தார்!  இது முழுக்க முழுக்க ஒரு தனி நபரான ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, போலீஸில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கப்பட்டது! இதற்குப் பயிற்சி அளிக்க பிஎஸ்எஃபிலிருந்து மனோகரன் வரவழைக்கப்பட்டு தமிழக கேடராக மாற்றப்பட்டார். அவர் தலைமையில் அப்பிரிவு செயல்பட்டு வந்தது.

அது 700 போலீஸாருக்கு மேல் கொண்ட அமைப்பாக அப்பிரிவு இயங்கியது! அதாவது ஒரு தனி நபரின் அதிகார ஆணவ அகங்காரத்திற்காக 700 போலீசாருக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் தரப்பட்டது! தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு முன்னும்,பின்னும் எந்த முதலமைச்சரும் இந்த அளவுக்கு பந்தா காட்டியது இல்லை!

கருணாநிதியுமே கூட எளிய முறையில் தான் பாதுகாப்பு போலீசாரை வைத்திருந்தார்! ஆனால், அவரும் காலப் போக்கில் ஜெயலலிதாவின் தாக்கத்தால் சற்று மாறிப் போனார்! ஆனால், ரொம்ப மோசமில்லை! கருணாநிதிக்கும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது போதாது என்று ஜெயலலிதா  வைத்திருந்த எஸ்.எஸ்.ஜி படையை, கருணாநிதி முதல்வரான பின்னர் எண்ணிக்கையை 140 என்கிற அளவுக்குக் குறைத்து ‘கோர்செல்’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

ஒரு வகையில் ஜெயலலிதா பயன்படுத்திய அளவிற்கு பார்த்தால் இது குறைவு என்று சொல்லலாமே தவிர 140 என்பதும் அதிகம் தான்!

நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் சரி முதலமைச்சர்கள் செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை.மக்கள் எந்த விதத்திலும் காக்கவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதில்லை!இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் எப்போதுமே இருந்ததில்லை!

ஜெயலலிதாவின் தாக்கத்தால் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் தன் பங்கிற்கு பந்தா காட்டத் தவறவில்லை! அவருக்கும்  ‘கோர்செல் பிரிவு’ போலீஸார் பாதுகாப்பு அளித்து வந்தனர். ‘கோர்செல’ என்பது தனிப்பிரிவு அது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு!  இதில் ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் மூன்று ஷிப்டுகளும் இயங்கும் வகையில் பாதுகாப்பு அளிப்பார்கள். அனைவரும் சஃபாரி உடையுடன் படுவேகத்துடன் இயங்கி மிரட்டுவார்கள்.

இவர்கள் முதல்வரின் கார் செல்லும் பகுதியை மொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் போல படுபந்தாவாக கண்ட்ரோல் செய்வார்கள்! இவர்கள் காட்டும் அதிகாரத்தால் சாலையில் செல்லும் மக்கள் பயந்து ஒடுங்கி மூச்சை பிடித்துக் கொண்டு நிற்கும் அவலம் சொல்லி மாளாது! இது போன்ற நேரங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஜனநாயக யுகத்திலா..? அல்லது மன்னராட்சி காலத்திலா..? என்ற தடுமாற்றமே ஏற்படும்!

முதலமைச்சர் ஓரிடத்திற்கு செல்கிறார் என்றால், அவர் செல்லும் வழி எங்கும் நூறு அடிக்கு ஒரு போலீசார் வீதம் வெட்டியாக நிறுத்தப்படுகிறார்கள்! அந்த வகையில் தான் செல்லும் வழியில் பெண் போலீசார் கால்கடுக்க நிற்க வைக்கப்பட்டிருப்பது கண்டு மனம் வருந்தி பெண் போலீசாரை தவிர்க்கும்படி ஸ்டாலின் கூறியது நமக்கெல்லாம் நினைவிருக்கும்!

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் இருந்து கிளம்பி செல்லும் போது அவரிடம் ஏதோ ஒரு அவசர செய்தியை சொல்ல நினைத்த எம்.எல்.ஏ எழிலன் பாதுகாப்பு அதிகாரிகளால் மறித்து அவமானப்படுத்தப்பட்டார். ”என்னங்க நான் எம்.எல்.ஏ என்னை போய் தடுக்கிறீர்களே” என்ற போது, ”எம்.எல்.ஏ என்ன?  அமைச்சராக இருந்தாலும் முதல்வரின் கான்வாயில் நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள்!

அதாவது அதீத பாதுகாப்பு ஏற்பாடுகள் முதலமைச்சரையே சிறைபடுத்திவிடுகிறது என்பது தான் உண்மை! ஒரு மக்கள் தலைவர் உண்மையில் இதை நிச்சயம் விரும்பமாட்டார்! மக்கள் சூழ இருப்பதே தனக்கான உண்மையான பாதுகாப்பு என்று தான் நினைப்பார்கள்! மக்களிடம் இருந்து தன்னைத் தானே அந்நியப்படுத்திக் கொள்ளும் அதிகார மோகம் யாரையும்விடாது போல!

தளபதியாக தொண்டர்களிடமும், கட்சி அணிகளிடமும் பல்லாண்டுகள் இரண்டறக் கலந்து பணியாற்றி பக்குவம் பெற்றவர் ஸ்டாலின். தற்போது தலைவராக ஏற்கப்பட்டுள்ள ஸ்டாலின், மக்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்தும் வகையில் அதிகாரவர்க்கம் தன்னை ஆளுமை செய்வதை உடனடியாக தவிர்க்க வேண்டும்! மக்கள் முதல்வராக விரும்பும் ஸ்டாலின், முதலில் அதிகாரவர்க்கத்திடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பாதுகாப்பு கெடுபிடிகளை கணிசமாக தவிர்க்க வேண்டும்! மக்களே எந்த தலைவருக்கும் பாதுகாப்பு அரணாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

.

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time