கொலைபாதக அரசும், கொடுமைக்கு ஆளாகும் ஜனநாயகமும்!

-சாவித்திரி கண்ணன்

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் இந்தியாவில் காட்டாட்சி நடத்தி வரும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் அஜய்மிஸ்ரா சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைக்க என்னால் முடியும்’’ என்று பேசி இருந்தார்!

அதைதான் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தி பயமுறுத்தி பார்க்க முயன்றுள்ளார்!

ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது என்பது அமைதியான வகையில் எதிர்ப்பை தெரிவிக்க செய்யும் ஒரு போராட்ட அணுகுமுறை தான்! இந்த வகையில் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உரிமை இல்லை என்று நினைக்கும் சர்வாதிகாரிகள் ஆட்சியில் வேறென்ன நடக்கும்?

ஆட்சியில் இருக்கிறோம் என்ற அகங்காரத்தில் விவசாயிகளின் வாழ்வாதரத்தையே சூறையாடத் துணிந்து நீங்கள் சட்டங்கள் போடுவீர்கள்! அதை சாத்வீக வழியில் எதிர்த்தால் வன்முறையை பிரயோகிப்பீர்கள் என்றால், சட்டத்தின் வழிமுறையில் பாஜகவிற்கு ஆட்சியை கொண்டு செலுத்த விருப்பமில்லை என்பது தான் அர்த்தம்! கடந்த ஓராண்டாக வெயில், மழை பாராமல் டெல்லி எல்லையிலே உயிரைக் கொடுத்து போராடி வரும் விவசாயிகளின் உள்ள உறுதியை கார்ப்பரேட் அடிவருடியான ஆட்சியாளர்கள் அசைத்து பார்த்துவிடத் துடிக்கிறார்கள்!

உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத், மத்திய இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஆகியோர் லக்கிம்பூர் பகுதிக்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரவிருப்பதாக விவசாயிகளுக்குத் தகவல் கிடைத்து,அவர்கள் போராடத் திரள்கின்றனர்! உத்திரபிரதேசத்தில் காட்டுமிராண்டித் தனமான ஆட்சிக்கு இலக்கணமாக தன் ஆட்சியை நிலை நாட்டியுள்ள முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் போலீசார் விவசாயிகளை ஒழுங்குபடுத்தி போராட வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஆட்சியாளர்களின் வன்முறைக்கு துணை போயுள்ளனர்!

துணை முதல்வர் கேசவ் பிரசாத் ஹெலிகாப்டரில் லக்கிம்பூர் வருவதாக இருந்தது. எனவே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஹெலிகாப்டர் தரையிறங்கத் திட்டமிடப்பட்ட மைதானத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், ஹெலிகாப்டரில் வரும் திட்டத்தைக் கைவிட்ட கேசவ் பிரசாத் சாலை மார்க்கமாக வந்தார். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரில் சென்ற போது விவசாயிகள் காரினை மறித்து கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்துள்ளனர்! ஆனால்,அவரும், அவருடன் வந்தவர்களும் தாங்கள் வந்த காரை அசுர வேகத்தில் திரண்டிருந்த விவசாயிகள் கூட்டத்தில் செலுத்தி உள்ளனர்! இந்த மனிதாபிமானமற்ற மயிர் கூச்செறியும் வன்முறையை நிகழ்த்திவர்கள் நிச்சயம் மனிதகுலத்தின் அங்கமாக தங்களை கருதும் தகுதியை கொண்டவர்களாக இருக்க முடியாது!

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வில் கார் நசுக்கியும், வன்முறையிலுமாக 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு பத்திரிகையாளரும் உயிர் இழந்துள்ளார்.ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்!

இவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்தால் அந்தப் பகுதிக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்வது என்பது ஒரு அரசியல் கட்சித் தலைவரின் அடிப்படை கடமையாகும்! ஆனால், ஜன நாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த வழிமுறைக்கும் கூட பயந்து அஞ்சி காவல்துறையை ஏவி அர்சியல் கட்சித் தலைவர்களை முடக்கும் கோழைத்தனத்தை உ.பி.அரசு செய்திருக்கிறது! போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதிக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் சீதாபூரில் தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ளனர்! முன்னதாக தன்னை தடுத்து நிறுத்துவதற்கான அல்லது கைது செய்வதற்கான வாரண்ட் காவல்துறையினரிடம் உள்ளதா? என பிரியங்கா கேட்டதற்கு இல்லை என்று சொன்னதும், அப்படி என்றால் என்னை தடுக்கக் கூடாது என உறுதிபட பிரியங்கா வாதாடியுள்ளார்!  ஆனால், போலீஸ் அவரை வலுக்கட்டாயமாக அங்குள்ள விடுதி ஒன்றின் சுத்தம் செய்யப்படாத அறையில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்த அறையை மிக இயல்பாக சுத்தம் செய்யும் பிரியங்காவின் அணுகுமுறையே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு போதுமானதாகும்! பிரியங்காவின் எளிமையும், மன உறுதியும் அகங்காரச்சாமியான ஆதித்திய நாத்தை நிச்சயம் அதிர வைத்திருக்கும்!

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரியங்கா, நீங்கள் பின்வாங்கமாட்டீர்கள் என எனக்குத் தெரியும். உங்களின் துணிச்சலால் அவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர். நீதிக்காக நீங்கள் முன்னெடுத்துள்ள அஹிம்சைவழிப் போராட்டம் வெற்றி பெற்றும். பயம் என்பதே இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

இதே போல சீத்தாராம் யெச்சூரியும், அகிலேஷ் யாதவும் மற்ற சில தலைவர்களும் கூட தடுக்கப்பட்டுள்ளனர்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பாற்றி வருகிறது யோகி அரசு! சிறுபான்மையினருக்கு எதிராக வன்மம்,வெறுப்பு ஆகியவற்றை தன் அடி நாதமாகக் கொண்டு ஆட்சி செய்து அகில உலக அளவில் இந்தியாவிற்கே அவப் பெயரைத் தேடி தந்து கொண்டுள்ளார் யோகி!

விவசாயிகள் போராடத்தை விவசாயிகள் மீது வாகன விபத்து என திசை திருப்பி சத்தமில்லாமல் முடிக்க திட்டமிடும் ஒன்றிய அரசு வனங்களை கார்ப்பேரேட்டுகள் சுரண்டுவதை ஆதரிக்கும் வகையில் வன திருத்த சட்டம் ஒன்றை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது யாருடைய கவனமும் பெறாமல் திசை திருப்பப்பட்டுள்ளது! குறுகிய கால அவகாசத்தில் சட்டத்தை திருத்த ஒன்றிய அரசு செய்திருக்கும் நரித்தன வேலை அதிர்ச்சியளிக்கிறது! இதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்க கூடாது. கிரிமினல்கள் ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளைகளைக் கூட நியாயப்படுத்த சட்டம் போடுவார்கள் என்பதற்கு இந்த ஆட்சியே சிறந்த உதாரணமாகும்!

பாஜக அரசின் அராஜகங்கள் மேன்மேலும் விவசாயிகளை ஒன்றுபடுத்தி போராட்ட மன நிலைக்கே தள்ளுகிறது! உபி சம்பவம் இன்று தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுமையிலும் விவசாயிகளை களம் காண வைத்துவிட்டது! தமிழகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி போராட்டங்களை வலுவாக முன்னெடுத்து வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time