ஏழைகள் வயிற்றில் அடிப்பது தான் அதிகாரமா?

- பீட்டர் துரைராஜ்

இருப்பதிலேயே மிகக் கடினமான, சவாலான பணி என்பது துப்புரவு தொழில் தான்! ஆனால், மிகக் குறைவான சம்பளம் பெறுவதும் துப்புரவு தொழிலாளிகள் தான்! தற்போது அந்த சம்பளத்தையும் குறைக்க திட்டமிட்டுள்ளது தான் அதிர்ச்சியளிக்கிறது! ”இப்ப வாங்குற சம்பளத்தை தொடர முடியாது, இது தான் கூலி இருந்தா இரு..’’ என்று சொல்லும் ஆணவத்தை தமிழக அதிகாரிகளுக்கு தந்தது யார்?

”துப்புரவு தொழிலாளியாக வாழ விரும்பிய காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாளில் தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தைக்  குறைக்க நகராட்சிகளின் நிர்வாக  இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்! ஏழைத் தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கத் துணிந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உள்ளாட்சித்துறை  பணியாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

‘வேலையின்மையையும், அறியாமையையும் பயன்படுத்தி, கண்ணியமான ஊதியம் வழங்காத தொழில்களில் இயங்கும் தொழிலாளர்களைச்  சுரண்டக்கூடாது. தொழிற்சங்கம் இல்லையென்றாலும் சுரண்டல் இருக்கக்கூடாது  என்பதற்காக இயற்றப்பட்டதுதான் குறைந்தபட்ச ஊதியச் சட்டம். இந்தச் சட்டம் நிர்ணயிக்கும் கூலியைவிட குறைவாக சம்பளம் தருபவர்கள்  அபராதம் செலுத்த நேரிடும். ஆறு மாத சிறை தண்டணை உண்டு.  கொடுக்க மறுத்த குறைந்தபட்ச சம்பளத்தைவிட பத்துமடங்கு சம்பளத்தை கொடுக்க நிர்பந்திக்கப்படுவர்’ என்கிறது சட்டம்.

உதிரித் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக 1948 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசு தரப்பு,  முதலாளி தரப்பு,  தொழிற்சங்கம் ஆகியோரது முத்தரப்புக் குழு  ஒவ்வொரு தொழிலுக்கும் சம்பளத்தை நிர்ணயிக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை மறுநிர்ணயம் செய்யும். அகவிலைப்படியும் விலைவாசி உயர்வுக்கேற்ப அவ்வப்போது உயர்த்தப்படும்.

நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஆகும் குறைந்த பட்சத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சம்பளம் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்திற்கான அடிப்படையாகும்.

உதாரணமாக, தற்போது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு, ஈரோடு மாநகராட்சியில் ரூ.500 அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி ரூ.193.45 அதாவது நாளொன்றுக்கு ரூ.693  ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனை குறைக்கும் கெடு நோக்கத்துடன்,  நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை உள்ளது. இது சட்டத்திற்கு புறம்பாகும்.

இது குறித்து தமிழ்நாடு  உள்ளாட்சித்துறை  பணியாளர் சங்கத்தின் ம.இராதாகிருஷ்ணன் கூறியதாவது “குறைந்த பட்ச கூலிக்கு விரோதமாக கூலியை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இல்லை. ஆனால், சென்னை மாவட்ட ஆட்சியர் நாளொன்றுக்கு  ரூ 391 என நிர்ணயம் செய்துள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் நாளொன்றுக்கு ரூ.391க்கு  மிகாமல் மாநகராட்சிகள்  துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில் ஓட்டுநர், பொறியாளர், தூய்மைப் பணியாளர் போன்ற  பலவகையான தொழில்களுக்கு ஊதியம்  நிர்ணயித்து உள்ளார். இது குறைந்த பட்ச ஊதியச்  சட்டத்திற்கு முரணான சுற்றறிக்கை. இதனை  முடிவு செய்த குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இல்லை. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.”

பத்து ஆண்டுகள் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

” அரசு ஏற்கனவே  வரையறை செய்துள்ள நார்ம்ஸ் படி தமிழ்நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய ஆட்களை துப்புரவு பணியில் நியமிக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அத்தியாவசியான பணிகளுக்கு தற்காலிகப்  பணியாளர்களை நியமிக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தப்படுத்தி, கண்ணியமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தர வேண்டும் ” என்றார் ஏஐடியுசியின் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி.

”இடதுசாரி தொழிற்சங்கங்களும், தலித் அமைப்புகளும்தான துப்புரவுப் பணியில் சங்கம் வைத்துள்ளனர்.  தான்தோன்றித்தனமாக  அதிகாரிகள்  இப்படிப்பட்ட மனசாட்சி இல்லாத, சட்டவிரோத  சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியமும், பத்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தரப்  பணியும் தர அரசு ஆணைகள் உள்ளன.

இரண்டு வருடத்தில் 480 நாட்களுக்கு மேலாக பணிபுரிபவர்களை நிரந்தரமாக்கவும் ஒரு சட்டம் உள்ளது. இது போன்ற தொழிலாளர்களுக்கு வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆணைகளை அமலாக்காமல், நாளொன்றுக்கு 391 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என்று சொல்லுவது ஒரு ஆதிக்க மனோபாவமே. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு வருகிற 21 ம் தேதி  ஏ.ஐ.டி.சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் ” என்றார் ம.இராதாகிருஷ்ணன்.

” அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கப்படி, மக்களின் உரிமைகளை சட்டத்தின் மூலம்  நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு  குறைந்த பட்சக் கூலி 2017 ஆம் ஆண்டு கடைசியாக நிர்ணயிக்கப்பட்டது. நாளொன்றுக்கு  மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.693, நகராட்சிகளில் ரூ. 579, பேரூராட்சிகளில் ரூ. 502, கிராமப் பஞ்சாயத்துகளில் ரூ.425 கொடுக்கப்பட வேண்டும்.

இதனை அமலாக்கம் செய்யாத முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை கூட வழங்க முடியும்.

இதனை அமலாக்க வேண்டிய பொறுப்பு நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு இல்லையா ?  அத்தனை இலட்சம் தொழிலாளர்களாலும்  குறைந்த பட்ச ஊதிய அமலாக்க அதிகாரி முன்பு வழக்கு போட முடியுமா ? இந்த சுற்றறிக்கையைப் பார்த்து பேரூராட்சிகளின் இயக்குநர் எல்லா பேரூராட்சிகளும் இதைப்போல சம்பளத்தை குறைவாக நிர்ணயம் செய்ய உத்தரவிடலாம். அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவு பணியாளர்களின் வாழ்வை சூறையாடும் உத்தரவு இது.

மேலும் ‘ஒரு துப்புரவு பணியாளர் 8 கி.மீ. தூரத்திற்கு துப்புரவுப் பணியைச் செய்ய வேண்டும்’  என்கிறது சுற்றறிக்கை! மனித சக்திக்கு இது  சாத்தியமே இல்லை. எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல், எந்தவிதமான ஆய்வும் இல்லாமல் இப்படி ஒரு அளவுகோளை மனம்போன போக்கில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பிறப்பித்துள்ளார். இதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றார் ம. இராதாகிருஷ்ணன்.

“தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளில் ஒப்பந்த,   வெளிச்சந்தை முறைகள் எந்தப் பெயரில் இருந்தாலும் அவைகளை  முற்றாக கைவிட வேண்டும்.  தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அதுவரை 2017 ஆம் ஆண்டு வெளியான அரசாணை 62 ன் படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்”  என்று திருப்பூரில் 9,10 தேதிகளில் கூடிய  ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு  தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.

தொழிலாளர்களுக்கு வாழ்வூதியம் (Living Wage) வழங்க வேண்டும் என்று நமது அரசியல் அமைப்புச் சட்ட வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம் ! திமுக அரசு வலியுறுத்தி வரும்  சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக, ஒரு  சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. என்ன செய்யப் போகிறார் நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என். நேரு? முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் ஏழை துப்புரவு தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை  தடுக்க வேண்டும்.

பீட்டர் துரைராஜ்

 

அறம் கேள்வி – பதில் பகுதிக்கு கேள்வி அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணைப்பை சொடுக்கி, கேள்விகளை பதிவு செய்யலாம்!

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time