மாரிதாஸின் வழக்கறிஞராக மாறிப் போனாரா நீதிபதி..?

- சாவித்திரி கண்ணன்

கொஞ்சம் கூட கூச்ச, நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு இன்று தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு சங்காராச்சாரியார் வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது.

மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது  என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக மாறி கேள்வி கேட்டு இருப்பதே சாட்சியாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய முப்படைத் தளபதி ஒரு விபத்தில் இறந்த அதிர்ச்சியில் இந்த தேசமே உறைந்திருக்கும் வேளையில்,

”திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்திற்கு எந்தப் பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்’’

என டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார் மாரிதாஸ்.

இது ஒரு விஷக் கருத்தா இல்லையா? இது விஷக் கருத்து என்பதால் தானே போட்ட சில நிமிடங்களில் அந்த டிவிட்டை மாரிதாஸ் எடுத்துவிட்டார். அப்படியானால், அதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கலாமே!

இந்த கருத்திற்கு எதிர்வினையாற்ற திமுகவினர் முனைந்தால் அது எவ்வளவு பெரிய கொந்தளிப்பில் சென்று முடியும்?

இன்றைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, “அவரது ட்விட்டரில் முப்படைத் தளபதி குறித்த கருத்துகளின்போது தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்தால் தவறாக நினைப்பார்கள். மாநிலத்தின் நேர்மை குறித்தே கேள்வியெழுப்பியுள்ளார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைப் பதிவுசெய்தார் என விசாரிக்கவேண்டியுள்ளது” என்ற வாதிட்டார்.

ஆனால், இந்த சப்ஜெக்டில் இருந்து வெளியேறியவராக திடீரென குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கூறுகிறார் என்றால், என்ன பொருள்?

ஒரு திருடனைப் ப்டித்து கோர்ட்டில் நிறுத்தினால், அவன் திருடியது உண்மையா? என்பதை தீர விசாரிக்காமல், ”இன்னொருத்தனும் திருடி இருக்கானாமே அவனை ஏன்பிடிக்கலை? ஐந்து வருடத்திற்கு முன்பு கூட திருட்டு நடந்திருக்குதாமே” என்றால், அந்த இடத்தில் நீதிபதியானவர் குற்றவளியின் சகாவாக வெளிப்படுவதாகத் தானே மக்கள் புரிந்து கொள்வார்கள்! மேலும் இவ்வளவு விஷமத்தனமாக டிவிட்டர் போட்ட மாரிதாஸின் வழக்கையே ரத்து செய்துள்ளார் நீதிபதி.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

இதே நீதிபதி தான் சமீபத்தில் தமிழ்தாய் வாழ்த்திற்கு சங்கராச்சாரியார் பொது இடத்தில் மரியாதை கொடுக்க மறுத்த விவகாரத்திலும் வழக்கு தொடுத்தவரையே குற்றவாளி கூண்டில் ஏற்றி,  ”நீங்க யாரு,தமிழ் ஆர்வலரா? எங்கே, ஐந்து திருக்குறள் சொல்லுங்கள் பார்க்கலாம்…’’ எனக் கேட்டு சோதித்து குற்றம் கண்டார்.

பிறகு சங்கராச்சாரியாரின் பிரதிநிதியாக மாறி நின்று, ”இறைவழிபாடு நடக்கும் போது தியானத்தில் இருப்பது சங்கராச்சாரியார் வழக்கம். அந்த வகையில் அவர் தமிழ்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்துவிட்டார்’’ என சொல்கிறார். இந்த விளக்கத்தை சங்கராச்சாரியாரை அழைத்து கேட்டு அவராகவே சொல்லி இருந்து, ”அதை நான் ஏற்கிறேன்” என நீதிபதி சொன்னாலாவது, அதை ஒரு நியாயமான விசாரணை எனக் கருதலாம்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்து விளக்கம் பெறாமலே நீதிபதியே அந்த குற்றவாளி நிலையில் இருந்து வியாக்கியானம் தருவது, ‘சட்டத்திற்கு எதிரானது மட்டுமில்லை, சார்பு நிலையை பட்டவர்த்தனமாக காட்டுவதாகும்’. ‘இப்படிப்பட்டவர்கள் நீதிபதி ஸ்தானத்திற்கே அருகதையற்றவர்கள்’ என்ற எண்ணமே இதை கேட்கும் பொது மக்கள் மனதில் வலுப்படும்.

கிஷோர் கே.சாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்து அன்றைக்கு மாரிதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை பார்த்தால் மாரிதாஸ் மன நிலைக்கும் இந்த நீதிபதி மன நிலைக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதில், “திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை. சட்டத்தை தன் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பதுதான் சரி” எனப் பதிவிட்டிருந்தார்.

 

ஒருமுறை மாரிதாஸ் அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்கள் பற்றி மிக அவதூறாக பேசி இருந்தார்.

அரசு ஊழியர்களுக்கு தேசப்பற்று துளிகூட இல்லை.. அரசு ஊழியர்கள் அரசிடம் துப்பாக்கி முனையில் வைத்து பணத்தை பறித்து செல்கிறார்கள்.. அரசு டாக்டர்கள் பஞ்சை திருடிக்கிட்டு போயிடுறான்… 60 வருஷமாக இது நடக்கிறது.. அரசு ஆஸ்பத்திரிகள் எதுவும் சரியாக செயல்படுவதில்லை.. இந்த அரசு ஆஸ்பத்திரிகளை மூடிவிட்டு தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அரசு நிதி அளிக்க வேண்டும்” என்று மாரிதாஸ் தெரிவித்திருந்தார்.

அரசு மருத்துவமனைகளின் சில தவறுகளுக்கும், அரசு ஊழியர்கள் சிலர் செயல்பாடுகளுக்கும் பெருந் திரளான ஏழை, எளிய மக்கள் பலன் பெறும் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூடுவது எவ்வளவு ஆபத்தானது? அது போதாது என்று மனிதாபிமானற்று பணம் பறிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி தரவேண்டும் என்பது எப்படிப்பட்ட உள் நோக்கம் கொண்ட சிந்தனை?

இது குறித்தும் அன்று அவர் மீது புகார்கள் பதிவாகின.ஒன்றும் நடக்கவில்லை. எளிய பழங்குடியினர் காவல்துறையால் அனுபவிக்கும் துன்பங்களை காட்சிப்படுத்திய ஜெய்பீம் திரைப்படத்தையும், அதன் படைப்பாளிகளையும்  படுகேவலமாக விமர்சித்தார்!

பத்திரிகையாளர்களை கருத்தியல் ரீதியாக அல்லாமல் மிகத் தரக் குறைவாக விமர்சிப்பதும் மாரிதாஸ் வழக்கமாக உள்ளது.

இதே போல கொரானா காலகட்டத்தில் மக்கள் வேலை இழந்து வாழ்வாதாரங்கள் இழந்து தவித்த காலத்தில் கொரானாவை இஸ்லாமியர்கள் பரப்பி வருகிறார்கள் என வெறுப்பு பிரச்சாரம் செய்தார். இதற்கும் மாரிதாஸ் மீது புகார்கள் குவிந்தன! ஆயினும் அவரை காவல்துறையால் நெருங்கவே முடியவில்லை.

திமுகவை, கருணாநிதியை, ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அப்படி விமர்சிக்கப்பட வேண்டியவர்களே அவர்கள்! ஆனால், எந்த ஒரு விமர்சனமும் பொது நலன் சார்ந்திராமல், வன்மமாக வெளிப்படும் போது அது சமூக அமைதிக்கே கேடாகிவிடும். திமுகவிற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. திமுக தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது.. போன்ற விஷம கருத்துக்களை தனி நபராக இருந்து செய்வது மாரிதாஸீக்கு சவுகரியமாக இருக்கிறது.

இதை பாஜகவிற்குள் பொறுப்பில் இருந்து செய்தால் அதற்கு கட்சி பதில் சொல்ல வேண்டி இருக்கும். அது கட்சியின் விமர்சனமாக கருதப்படும். ஆகவே, அவர்கள் இப்படி அவதூறு பேசுவதற்கு என்று தனியாக ஒருவரை அதிகாரபூர்வமற்றவராக வைத்து அதிகாரவர்க்க பாதுகாப்பையும் பின்னிருந்து வழங்கி வருகிறார்கள். ஒரு அரசியல் கட்சியாக தங்களால் பேச முடியாதவற்றை எல்லாம், அப்படிப் பேசினால் அசிங்கப்பட்டு அம்பலப்படுவோம் என அஞ்சுவதை எல்லாம் மாரிதாஸ் என்ற ஒரு விஷமியை பேச வைத்து அவர் பின்னால் அரணாக நிற்பது கோழைத்தனம் தானே?

தற்போது மாரிதாஸ்காக பாஜக களம் காண்கிறது. ஆளுனரை சந்தித்து மனு கொடுக்கிறது. கட்சி அலுவலகத்தில் வாயில் துணிகட்டி அனைவரும் போராடுகின்றனர். தெருவில் இறங்கியும் போராடுகின்றனர். அவர் அவ்வளவு முக்கியமானவர் என்றால் அவரை ஏன் உங்கள் கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பு கொடுக்க முடியவில்லை உங்களால்…?

இன்றைக்கு மாரிதாஸீக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது..? மாரிதாஸீக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன..?

வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது..?

தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் உறுதியாக மாரிதாஸ் மீதான சகல குற்றங்களையும் நிரூபித்து உள்ளே தள்ளவில்லையானால் சட்டம், நீதி எதற்கும் மரியாதை இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாக அது வழி வகுத்துவிடும். தங்களின் சுயமாரியாதையே காப்பாற்றி கொள்ள முடியாத ஆட்சியாளர்கள் எப்படி  நம்மை காப்பாற்ற போகிறார்கள்..? என்ற அவ நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படாதவாறு திமுக நடந்து கொள்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time