தமிழகப் பாட நூல்களை அண்டை மாநிலங்களில் அச்சிடுவதா…?

-மாயோன்

தமிழ் நாட்டில் தேவைக்கும் அதிகமான நவீன வெப்செட், ஆப்செட் அச்சகங்கள் இருக்க, அண்டை மாநிலங்களுக்கு  பல்லாயிரம் டன்கள் பாட நூல்கள் அச்சடிக்கும் ஆர்டர் தரப்படுவது ஏன்? ஆந்திராவுக்கு முதல் ஆர்டர் தரப்பட்டுவிட்டது.

பாடநூல் அச்சிடுவோர் வேதனை!

புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைண்டர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மோசஸ், பிரேம்குமார் ,விநாயகம், பாடநூல் அச்சிடுவோர் நலச்சங்க  நிர்வாகிகள் உதயகுமார் ,குமரேசன் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்  இன்று கூட்டாக  பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியது:

“தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து பாட நூல்களையும் அச்சடித்து நாங்கள் தான்  கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முழுமையாக கொடுத்து வந்தோம்.

நாங்கள் MSME எனப்படும் சிறு, குறு மற்றும்  நடுத்தர நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறோம்.  எங்களைப் போல, இந்த தொழிலுக்கு உப பொருட்கள் வழங்கும் INK,PLATE, CHEMICAL ஆகிய நிறுவனங்களையும் சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரமே இதுதான்.

தமிழகத்தில் அரசு பள்ளி, மாணவர்களுக்கான பாடநூல்கள், டைரிகள், வினா வங்கி, இதர கையேடுகள் என ஆண்டு தோறும் சுமார் 8 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு தரப்படுகின்றன.

வழக்கமாக புத்தக அச்சிடுதல் பணிகள் தமிழகத்தைச் சேர்ந்த அச்சகங்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டு 50 சதவீதத்துக்கும் மேலான புத்தக அச்சிடுதல் பணி ஆந்திரா உட்படவெளிமாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2016 -ம் ஆண்டு முதல் நூல்களை வெளிமாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கும் போக்கு உருவானது. இதைத் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு தொடர்ச்சியாக ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இதற்குஎங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆயினும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்களுக்கு கடுமையான தொழில் சரிவு ஏற்பட்டது. சரி வர வேலை வாய்ப்பு இல்லை. இதனால் அச்சகத் தொழில் நலிந்துள்ளது. சில அச்சகங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணைகளை உரிய நேரத்தில் கட்ட முடியவில்லை. கடன்சுமை எங்களை அழுத்திக் கொண்டிருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் எங்கள் வேதனைகளுக்கு விடிவு கிடைக்கும் என நம்பினோம்.

ஆனால், இந்தத் தருணத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,தற்போது தமிழக அரசு திட்டமிட்டு  வாங்க உள்ள மொத்த ஆர்டரில் அதாவது 30 ஆயிரம் டன் நூல்களில் கணிசமானவை வெளிமாநிலங்களுக்கு கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் முதல் ஆர்டர் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியான இந்த தகவலை அடுத்து உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு எங்கள் நிலையை தெரிவிப்பதற்காக ஊடகத்தினரை சந்தித்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு;

அண்டை மாநிலங்களான ஆந்திரம் ,தெலுங்கானா , கர்நாடகம் மற்றும் கேரளா ஆகியவை தங்கள் மாநிலத்திற்கு தேவைப்படும் பாடநூல்களை தங்கள் மாநிலத்தில் உள்ள அச்சகங்களில் தான் அச்சடித்து வாங்க  வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளன.

கர்நாடக மாநில அரசின் ஆர்டர்

கர்நாடக மா நில அரசோ, ஆந்திர மாநில அரசோ, தெலுங்கானா மாநில அரசோ மற்ற மா நில அச்சகங்களுக்கு ஆர்டர் தருவதில்லை என்பதில் உறுதி காட்டுகின்றனர். தங்கள் ஆர்டரிலேயே தெளிவாக அதைக் குறிப்பிடவும் செய்கின்றனர்.

தெலுங்கானா அரசின் ஆர்டர்

அதாவது அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. அந்தந்த மாநில தொழிலாளர்களுக்கு தான் வேலை வாய்ப்பை வழங்குகின்றன. அது தானே இயற்கையான அணுகுமுறையாக இருக்கமுடியும்.

ஆந்திர அரசின் ஆர்டர்

அப்படிப்பட்ட ஒரு அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வில்லை. எனவே, தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் தரும் ஆர்டரை தவிர வேறு மாநில ஆர்டர்கள் எதுவும் எங்களுக்கு வராது.

அடுத்ததாக, பாட நூல்களை தமிழகத்தில் உள்ள அச்சகங்கள் விரைந்து அச்சடித்து தர முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

இப்போது தமிழ்நாட்டில் 48 வெப் ஆப்செட் அச்சகங்களும், 51 ஆப்செட் அச்சகங்களும்  ஆக மொத்தம் 99 அச்சகங்கள் உள்ளன.

நவீன தொழில்நுட்பம் பயின்ற ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் மற்றும்  5 ஆயிரம் தொழிலாளர்கள் கூடுதலாக எங்கள் துறையில் இணைந்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கும் திறன் இப்போது நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழக அரசு ஆறுமாதத்தில் அச்சடித்துத் தர சொல்லும் பணியை 3 மாதத்திலேயே அச்சடித்துக் கொடுக்கும் திறமை எங்களிடம் உள்ளது.

வெளிமாநிலங்களுக்கு ஆர்டர் கொடுப்பதால் பண இழப்பையும் தமிழக அரசு சந்தித்து வருகிறது.

அச்சடித்த நூல்களை கொண்டு வந்து சேர்க்க ஒரு கிலோமீட்டருக்கு (30 கிலோ மீட்டர் வரை கட்டணம் கிடையாது) டன் ஒன்றுக்கு ரூ 5 என்ற வகையில் அரசு கட்டணம் தருகிறது. இந்த வகையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டணமாக மட்டும் ரூபாய் 5 கோடி முதல் 7 கோடி வரை தமிழக அரசு பணம் செலவழிக்கிறது. ஆர்டர் முழுவதும் தமிழகத்தில்  வழங்கப்பட்டால் இந்தத் தொகை அரசுக்கு மிச்சம் ஆகும்.

கல்வித் துறை அதிகாரிகள் சிலரின் சுய நல உள் நோக்கம் காரணமாக தமிழக அச்சகங்களுக்கான ஆர்டர்கள் அண்டை மா நிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது! தமிழகம் அச்சுத்துறையில் சர்வதேச தரத்துடன் போட்டி போடத்தக்க வகையில் சிறந்து விளங்குகிறது. அப்படி இருக்க அண்டை மாநிலங்களுக்கு ஆர்டர் தருவது தமிழக தொழில்துறையையும், அதைச் சார்ந்துள்ள உழைக்கும் வர்க்கத்தையும் பெரிதும் பாதிக்கும் செயலாகும்.

இப்பிரச்சினை தொடர்பாக அண்டை மாநிலங்கள் வெளியிட்டுள்ள அரசு ஆணைகள், தமிழக அச்சகங்களின் திறன் மற்றும் தொழிலாளர்களின் பலம், போக்குவரத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆகிய அனைத்து விவரங்களுடன்  தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் , அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் லியோனி ஆகியோரை சந்தித்தோம். அனைவரும் எங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து முதலமைச்சருடன் கலந்து பேசி உரிய முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகத்திற்கு முதல் ஆர்டர் கொடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து உரிய உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அண்டை மாநிலங்களை போல தமிழக அரசும் உரிய ஆணையை பிறப்பிக்கும் என காத்திருக்கிறோம்.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-மாயோன்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time