இ.எஸ்.ஐயை ஒழித்துக் கட்ட மத்திய அரசு திட்டம்!

-பீட்டர் துரைராஜ்

‘இந்த இ.எஸ்.ஐ எல்லாம்இனி தேவையில்லை. தொழிலாளர்கள் எல்லாம் தனியார் மருத்துவமனைக்கு போகட்டும்’ என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு கொண்டு வந்துள்ளது. அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தும் வழக்கறிஞர் ஆர். நடராஜன் நேர்காணல்.

தமிழகத்தில் மட்டுமே 18,000 க்கு அதிகமான தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயில் இணைந்து பலன் பெற்று வருகின்றனர். இந்தியா முழுமையிலும் லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ மருத்துவப் பலன்களை பெற்று வருகின்றனர்.

”பாஜக அரசு கொண்டு வந்துள்ள Code on Social Security, 2020 என்ற புதிய  சட்டமானது, தொழிலாளர்கள்  தற்போது  அனுபவித்து வரும் பலன்களை தடுக்கும்;  தனியார் காப்பீடு நிறுவனங்களை  ஊக்குவிக்கும். பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு விரோதமாக இந்த சட்டத் தொகுப்பு கொண்டுவரப் பட்டுள்ளது” என்று கூறும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். நடராஜனை நேர்காணல் செய்கிறார் பீட்டர் துரைராஜ்.

இந்த புதிய சட்டத்தின் நோக்கம் என்ன?

மருத்துவத்திற்காக செலவழிக்கும் தொகை ஒருவரது வருமானத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது. எனவேதான், மருத்துவ வசதியானது, சமூகத்தின் பொறுப்பாக கருதப்படுகிறது. ஆனால், நமது மத்திய ஆட்சியாளர்கள்  இதை விரும்பவில்லை. இஎஸ்ஐ – ல் சேருபவர்களின் எண்ணிக்கையையும், இதன் கீழ் வழங்கப்படும் பலன்களையும் குறைக்க அரசு எண்ணுகிறது. இதனால் தொழிலாளர்கள் தனியார் காப்பீடு திட்டத்தை நோக்கி நகர்வார்கள். தனியார் காப்பீடு நிறுவன வியாபாரம் நன்றாக செழிக்கும்.

சமூகப் பாதுகாப்பு என்பது என்ன ?

மருத்துவ வசதி, முதியோர் பராமரிப்பு, வேலையில்லாக் காலத்தில் உதவி, மகப்பேறு உதவி, இறந்து விட்டால் உதவி போன்றவை சமூகப் பாதுகாப்பில் வரும். ஒரு தொழிலாளி இறந்து விட்டால், அவர் வாங்கிய  சம்பளத்தில் 90 சதம் உதவித் தொகையாக குடும்பதினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவே சமூகப் பாதுகாப்பாகும். இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 41 வது பிரிவுகளின்படி மக்களின் உரிமையாகவும்,  அரசின் கடமையாகவும் ஆக்கப்பட்டுள்ளது.சமூகப் பாதுகாப்பு என்பது  ஒருவருக்குக் காட்டப்படும் கருணை அல்ல; தொழிலாளியின், அவரது குடும்பத்தினரின் உரிமையாகும்.

விவசாயத் தொழிலாளர்களையோ, கட்டடத் தொழிலாளர்களையோ, தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டத்திலோ, வருங்கால வைப்புநிதியிலோ  சேர்க்க சட்டப்படியான தடை ஏதுமில்லை.

வழக்கறிஞர் ஆர். நடராஜன்

‘சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு -2020’ குறித்து என்ன நினைக்கிறீர்கள்  ?

அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பே 1948 ஆம் ஆண்டில் தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம் (இஎஸ்ஐ), குறைந்த பட்ச ஊதியச் சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் ஆகிய மூன்றும்  உருவாக்கப்பட்டன. பணிக்கொடைச் சட்டம் 1972 ஆம் ஆண்டு வந்தது.  இதுபோன்ற ஒன்பது சட்டங்களை உள்ளடக்கித்தான் ஒன்றிய அரசு, 2020 ல் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

ஒரு தொழிலாளிக்கு உடல் நலம் இல்லையென்றால் அந்தக் காலத்திற்கு, அவர் வாங்கும் சம்பளத்தில் 70% இழப்பீடு வழங்கப்படுகிறது. மகப்பேறு காலத்தில் 100 % சம்பளத்திற்கிணையாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சம்பளம் என்ற வரையறையில், அடிப்படை சம்பளம்,போக்குவரத்துப்படி, உணவுப் படி, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி,  ஊக்கத்தொகை என எந்தப் பெயரில் வழங்கினாலும் அடங்கும். எனவே ரூ.20,000 சம்பளம் வாங்கும்  ஒரு தொழிலாளிக்கு 100 சத இழப்பீடு என்றால் வாங்கிய சம்பளம் அப்படியே கிடைக்கும். ஆனால், புதிய சட்டத்தில் அந்தத் தொழிலுக்கு உரிய குறைந்தபட்ச சம்பள அடிப்படையில்தான் இழப்பீடு வழங்கப்படும். மற்ற இனங்களில் வழங்கப்படும் படிகள் சேராது. அதாவது கணக்கிடும் முறையே புதிய சட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெறக் கூடிய தொகை பாதிக்கு மேல் குறையும்.

தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம் கொண்டுவரப் பட்டபோது, 400 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களும், பலன் பெறும் வகையில்,  இருந்தது. பிறகு 1975 ஆம் ஆண்டு, ரூ.1000 வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் எனவும், 1984 ஆம் ஆண்டு மாதம் ரூ.1600 வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பொருந்தும் எனவும் இருக்கிறது. தற்போது ரூ. 21000 வரை ஊதியம் வாங்கும் தொழிலாளர்களுக்கு இ.எஸ். ஐ . உள்ளது.  புதிய சட்டத்திற்கான விதிகளில் இந்த விவரம் இன்னும் வரவில்லை. இதில் என்ன கோளாறு செய்யப் போகிறார்களோ?

தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்திற்கு அரசு ஓர்  அறங்காவலர் ஆகும். 8 கி.மீ தூரத்திற்கு ஒரு மருத்துவமனை, 1000 தொழிலாளர்கள் இருந்தால் அதற்கு ஒரு மருந்தகம் என்று படிப்படியாக இந்த திட்டம் வளர்ந்து வருகிறது. மருந்தகங்களுக்கு ஆகும் செலவுக்கு இஎஸ்ஐ முன்பணம் கொடுத்து,  மாநில அரசு மூலமாக, நடத்துகிறது.

சட்டம் இயற்றும் முறைமைகளுக்கு விரோதமாக, இந்த சட்டத்தை ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என்று கருத்தரங்கில் கூறினீர்களே ?

நாடெங்கிலும் தொழிலாளர்களுக்கான மருத்துவக் கல்லூரிகளை, இஎஸ்ஐ நிறுவனம் நடத்தி வருகிறது.  இந்த கல்லூரிகளை நடத்த வேண்டாம் என்று  2015 ஆம் ஆண்டில் முடிவெடுத்தனர். கடும் எதிர்ப்புக்கு பிறகு நடத்தலாம் என்று முடிவெடுத்தனர். இந்தக் கல்லூரிகளை இஎஸ்ஐ நிறுவனமோ, மத்திய அரசோ, மாநில அரசோ, அல்லது வேறு நபர்களோ நடத்தலாம் என சட்டத்தில் மாற்றியுள்ளனர்.

‘வேறு நபர்கள்’  என்றால், யார்  என்ற கேள்வி எழுகிறது.  ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும்  இருநூறு கோடிகளுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டவை.  இவை தொழிலாளர்களும்,  அவர்களால் பலன் பெற்ற முதலாளிகளும்  கொடுத்த பணத்தில் கட்டப்பட்டவை. இந்தச் சொத்துக்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமே சொந்தமானவை. இத்தகைய சொத்துகளை கபளீகரம் செய்யும் எண்ணம் தனியாருக்கு உள்ளது.அதற்கு துணை போகும் எண்ணம் இந்த ஆட்சியாளார்களுக்கு உள்ளது!

‘தனியாருக்கு மருத்துவக் கல்லூரிகளை கொடுத்து நடத்தச் செய்யலாம்’ என்ற  திருத்தத்தை 17- செப்டம்பர் 2019 வரைவில்தான் முதலில் கொண்டுவந்தார்கள். யாருடைய அறிவுரையின்பேரில் இதை செய்கிறார்கள்?

தமிழ்நாட்டில் டான்சி நிலத்தை, எடுத்துக் கொள்ள, என்ன விதமான வேலைகளில் ஈடுபட்டார்கள் , அதன் மதிப்பீட்டை எப்படி குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பார்க்கலாம். அதேபோன்ற செயல்களை இஎஸ்ஐ  மருத்துவக் கல்லூரிகளை தனியாருக்கு கொடுக்கும் போது செய்ய வாய்ப்புள்ளது.

மாநில அரசுக்கும், இ.எஸ். ஐ. நிறுவனத்துக்கும் பிணக்கு வந்தால், மத்தியஸ்தம் செய்பவராக (Arbitrator) நீதிபதிகளை,  நியமிக்கலாம் என்று பாராளுமன்றத்தில்  வைக்கப்பட்ட  முன்மொழிவில்  முதலில் இருந்தது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு ஆட்சேபிக்கவில்லை. ஆனால், பாராளுமன்றத்தில்  புதிதாக 22-செப்டம்பர் 2020  அன்று நிறைவேற்றப்பட்ட  சட்டத்தில் மேற்படி மத்தியஸ்தம் செய்பவர் ஒன்றிய அரசு நியமிக்கும் ஒருவர் என மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மிக ஆபத்தான உள் நோக்கம் கொண்டது.

ஒரு சட்டம் புதிதாக அறிமுகப்படுத்தும் போது ஏற்கனவே இருந்த சட்டம் என்ன ? இப்போது அதனை எப்படி மாற்றப் போகிறார்கள். பாராளுமன்ற நிலைக்குழு கொடுத்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறோமா ! அதில் எங்கு மாறுபடுகிறோம் என்ற விபரங்களைக் கொடுப்பார்கள். அப்படி எதுவும் இதில் கொடுக்கவில்லை. புதிய சட்டத்தை மட்டும் கொடுத்து, சட்டமாக்கி யுள்ளனர். இது பாராளுமன்ற நடைமுறைகளுக்கு ( Manual of Parliamentary Procedure) எதிரானது. இது ஒரு நாணயமற்ற செயல். விவாதமே இல்லாமல் பாராளுமன்றத்தில் தொழிலாளர் சட்டங்களை  நிறைவேற்றியுள்ளனர்.

இதனை எதிர்த்து ஐஎன்டியுசி சார்பாக ஆதிகேசவலு, ஏஐடியுசி சார்பாக டி.எம்.மூர்த்தி,  கோபால்சாமி என்ற இஎஸ்ஐ சந்தாதாரர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இஎஸ்ஐ இல்லாத தொழிலாளர்களுக்கு, பேறுகாலநலப்பயன் சட்டம் பொருந்தும். இதிலும் சம்பள வரையறை  மாற்றப்பட்டுள்ளதால் பயனாளர்களுக்கு வழங்கப்படும் தொகை குறையும்.இதனால்  தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதகங்களை விளக்கி வகிதா நிஜாம், உழைக்கும் பெண்கள் சார்பாக, உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அனைத்து விதமான தொழிலாளர் சட்டங்களுக்கும், ஒரே விதமான  சம்பள வரையறை தவறு.

உலகின் மற்ற நாடுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் எப்படி உள்ளன?

பதில்: இங்கிலாந்துப் பிரதமர் கொரானாவால் பாதிக்கப்பட்ட போது அங்கிருந்த தேசிய சுகாதார காப்பீட்டு மருத்துவமனையில்தான் (இங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனை போல) சிகிச்சை எடுத்தார். அங்கு எல்லா நோயாளிக்கும் ஒரே விதமான சிகிச்சைதான். நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் தொழிலாளர்களிடமிருந்து கணிசமான பங்களிப்பு தொகை பெறப்படுகிறது. கல்வி, மருத்துவம், ஓய்வூதியம்  போன்ற சகலவிதமான வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கின்றன.தாய்லாந்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மாதந்தோறும் ஐந்தாம் தேதிக்குள் தங்கள் பங்களிப்பை மருத்துவ ஈட்டுறுதிக்குச்  செலுத்தினால், அதற்கு ஈடான தொகையை வேலையளிப்பவர் சார்பாக அரசாங்கமே செலுத்திவிடுகிறது.

உலகம் எங்கும் சமூகப் பாதுகாப்பு அரசாங்கத்தின் வசம்தான் உள்ளது.பெரு நாட்டில் சமூகப் பாதுகாப்பை தனியார் வசமாக்கினார்கள்; இதனால் அந்த திட்டம் தோல்வி அடைந்தது. இது ஒரு தவறான முன்மாதிரி ஆகும். வேலையாள் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மரணமடைந்த, காயமுற்ற, அல்லது செயலிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு தருவது வேலை அளிப்பவரின் பொறுப்பாகும்.

தனியார் காப்பீடு வசம் இத்தகைய திட்டங்கள் சென்றால், பலன்களை குறைக்கும் வகையில் தந்திரமாக சில கட்டுப்பாடுகளைப் போடுவார்கள். முடிந்த அளவு உதவாமல் தவிர்க்க பார்ப்பார்கள்.

புதிய சட்டங்களை உருவாக்கும்போது, ஏற்கனவே இருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்துவதும், விரிவு அவசியமாகும்.  அதனால்தான் பாராளுமன்ற நிலைக்குழு, ‘இப்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகையையும் குறைக்கக் கூடாது’ என்று பரிந்துரைத்து இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு இப்போது கொண்டுவந்திருக்க புதிய சட்டத்தில் ஏற்கனவே வழங்கப்படும் சலுகைகளைப் பறிக்கின்ற வகையில் சட்டம் இயற்றியுள்ளது. இவர்களுக்கு தொழிலாளர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கிறது!

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time