மருத்துவக் கல்வியிலும் இந்துத்துவ சித்தாந்தமா..?

- விஜய் விக்ரமன்

பாஜக அரசு புதிதாக யோகா கல்வியை உருவாக்கி, அதை பள்ளிக் கல்வி தொடங்கி மருத்துவக் கல்வி வரை கொண்டு வந்துள்ளனர்! நல்லது தான்! ஆனால், இதற்குள் இந்துத்துவ சித்தாந்ததை எப்படியெல்லாம் நுட்பமாக நுழைக்கின்றனர்  என்பது தான் திகைப்பூட்டுகிறது!

இந்தியா முழுமைக்கும் பள்ளிக் கல்வி முதல் உயர் மருத்துவக் கல்வி வரை தங்களது சித்தாந்தங்களை மறைமுகமாக கொண்டு செல்லும்  முன்னத்தி ஏர் ஆக  இந்த யோகா கல்வியை துல்லியமாக வடிவமைத்தது தான் அவர்களின் மாஸ்டர் பிளானாகும்! இதை சற்று விரிவாக பார்ப்போம்;

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி முதன்முதலாக இந்துத்துவா செயல்திட்டத்தை  மருத்துவக் கல்வியில் செயல்படுத்த துவங்கினர்!அதன் துவக்கமாக ‘இந்திய மருத்துவத் துறையின் ‘ பெயரை மாற்றி ‘ஆயுஸ் துறை ‘என  சமஸ்கிருதப் பெயரை சூட்டினர்!

அது வரை இந்திய மருத்துவத் துறையில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகள் மட்டுமே இருந்தன!  பின் ‘யோகா’ என்ற புதிய துறை ஒரு துணைக் கல்வியாக உருவாக்கப்பட்டது!  ஏற்கனவே ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் ஆசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்த காரணத்தால் தனியாக யோகா என்பது தேவைப் படவில்லை. ஆனால்,  அவற்றிலிருந்து யோகத்தை மட்டும் தனியாக எடுத்து  மேற்கத்திய இயற்கை மருத்துவத்தையும் அதனுடன் இணைத்து புதிதாக  bnys  துறையை  உருவாக்கியது அன்றைய பாஜக அரசு!

ஆர் எஸ் எஸ்ஸின் ஆரம்பகட்ட பயிற்சியில்  சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி முக்கிய அங்கம் வகிக்கிறது!  புதிய நபர்களை  கவர்வதற்கு  சூரிய நமஸ்காரம் போன்ற உடற்பயிற்சிகளில் ஆரம்பிப்பார்கள்! பின் இந்திய ஆன்மீகம்,  வேதகால வாழ்வியல் முறைகள் போன்ற பாடதிட்டங்கள் அணிவகுக்கும்!  இதைத்தான்  தற்போதைய பாஜக, அரச அதிகாரத்துடன்  நடைமுறைப்படுத்துகிறது!

இந்த புதிய கல்வி  முறையின் ஊடாக தங்கள் வேதகால வாழ்வியல் முறை மிகச் சிறப்பானது எதிர்காலத்திற்கு தேவையானது  என்று நிரூபிக்க முற்பட்டனர்.

மோடி அரசு மத்தியில் அமைந்தவுடன் முதலில் செய்தது இந்திய யோக முறையை உலகளவில் கொண்டு செல்ல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகும்!  ஐநா சபையில் ‘ உலக யோகா  தினத்தை’ நிறுவினர். இதனை பிரபலப்படுத்த உலகின் அனைத்து இந்திய  தூதரகங்களும், பல நாடுகளில் கிளைபரப்பி உள்ள கார்ப்பரேட் யோக குருக்களின் ஒத்துழைப்புடன் பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

டெல்லியில் பிரதமர் மோடி ,சாலையில்  பாஜக அடையாளத்  துண்டை கழுத்தில் சுற்றிக்கொண்டு பயிற்சி செய்தார். அதைத்தொடர்ந்து பல யோக பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டார். இதன் மூலம் இந்திய மரபுகளை நேசிக்கும் மனிதராக தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.

உலகம் முழுவதும் ஆசிரமம் அமைத்து யோக தியானம் பயிற்சியின் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் கார்ப்பரேட் இந்துத்துவ சாமியார்களின் தொழிலுக்கு இந்திய அரசின் ராஜ்ய ரீதியான ஒத்துழைப்பு அனைத்து மட்டங்களிலும்  வழங்கப்பட்டன.

இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் முதல் மத்திய அரசின் அனைத்து துறைகளும் யோகா தினத்தை கொண்டாட  வலியுறுத்தப்பட்டன!  பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் ஆகியோர் அன்று பொதுவெளியில் ஆசனங்களை செய்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.

வடக்கே பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில், பல மத்திய அரசு  நிறுவன ஊழியர்களுக்கு அன்றைய தினம் சூரிய நமஸ்காரம் ஆசனத்தை பயிற்றுவித்தனர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பயிற்சியாளர்கள்.

தற்போது, நடைமுறைக்கு வரவுள்ள புதிய கல்விக் கொள்கையில்  பள்ளிகள் அனைத்திலும் யோகாசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  புதிதாக நிறுவப்பட்டுள்ள நேஷனல் மெடிகல் போர்டு எம்பிபிஎஸ்  படிப்பில்  யோகாசனம் சேர்க்கப்பட்டுள்ளது.

யோகாசனத்தை  மக்களிடம் கொண்டு செல்ல இந்த பாஜக அரசு பல ஆயிரம் கோடிகளை இதுவரை  செலவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் மட்டும்   பல கோடிகளை யோகாசனம் வளர்ச்சிக்கு செலவிட்டு மத்திய மோடி அரசின் நன்மதிப்பை பெற்றனர். செங்கல்பட்டில் 80 ஏக்கர் பரப்பளவில் இன்டர்நேஷனல் யோகா ரிசர்ச் சென்டர் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் புதிதாக 18க்கும் மேற்பட்ட யோக கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன! அவை மாணவர் சேர்க்கையின் போது  தங்களின் விளம்பரங்களில்   நீட் எழுதாமலும் மருத்துவர் ஆகலாம்  என்று விளம்பரப்படுத்துகின்றனர்.

யோகா மருத்துவராக நீட் தேவையில்லை!

அனைத்து மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று இருக்கும்போது யோகக் கல்விக்கு மட்டும் நீட் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வில்லை! தமிழ்நாட்டில் பெருந்திரளான மக்கள் மருத்துவ கல்விக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். ’நீட் விலக்கு சாத்தியமே இல்லை’ எனக் கூறுபவர்கள், யோகா படிப்புக்கு மட்டும் கேட்காமலே விலக்களித்துள்ளனர்.

யோகக் கல்விக்கு மட்டும்  எதற்கு இந்த விதிவிலக்கு?

இந்தியாவில் ஒருவர் ஆங்கில  மருத்துவராகவோ, சித்தா, ஆயூர்வேதா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவராகவோ ஆக வேண்டுமெனில், நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், யோக மருத்துவத்திற்கு மட்டும்  இந்த விதிவிலக்கு வழங்கப்பட்ட காரணத்தை அவர்கள் சொல்லவில்லை.

சித்த மருத்துவமும்-  திருமூலர் யோகமும்!

சித்த மருத்துவத்துறை தனக்கென்று தனித்துவமான யோக மரபைக் கொண்டுள்ளது!  ஆசனங்கள்,  உடலை உறுதியாக்கும் கற்ப மருந்துகள், தனித்துவமான தியானம் மூச்சுப் பயிற்சிகள், உணவு முறைகளை கொண்டுள்ளது,.

யோகாவின் வரலாற்றினை சொல்லித் தரும்போது  வேத காலத்திலிருந்து தியானம் , ஆசனங்கள் வந்ததாகவும், பதஞ்சலி யோகாவின் தந்தை என்றும் கூறுகின்றனர்.

சித்த மருத்துவத்தில் என்னென்ன இருந்தனவோ அவ ற்றிலிருந்து அரைகுறையாக சிலவற்றை  பிரித்தெடுத்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யோகக் கல்வியில்  சேர்த்து வருகின்றனர். அப்படி சேர்த்துவிட்டு, இவற்றையெல்ல்லாம் பதஞ்சலி என்ற முனிவர் எழுதி வைத்ததாக கதை விடுகின்றனர். இந்த பதஞ்சலி என்பவர் ஒரு கற்பனை கதாபாத்திரம்! இவர் எங்கு, எப்போது வாழ்ந்தார்? எந்த நூற்றாண்டை சேர்ந்தவர். என்னென்ன எழுதினார். எதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. நமது சித்த மருத்துவத்தில் இருந்து உருவி எடுத்தவற்றை தொகுத்து பதஞ்சலி எழுதியதாக  காட்டுகின்றனர்! அதே நேரத்தில் சித்தர்களுக்கும் யோகங்களுக்கும், வாசி தியான முறைகளும் இருக்கும் தொடர்பு திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்திய அரசின் ஆயூஸ் இணைய தளத்திலேயே இன்றைய கார்ப்பரேட் சாமியார்களான ராம்தேவும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் இடம் பெற்றுள்ளனர்! இவர்கள் யோகக் கலையை கண்டுபிடித்தவர்களல்ல, அதில் காசு பார்ப்பவர்களே!

தமிழ்நாட்டின் சித்தர்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை, திருமூலர் திருமந்திரம் போன்ற யோக புத்தகங்களை அவர்கள் மறைகின்றனர்.

சித்த மருத்துவத்துறை தனக்கான தனித்துவமான யோக முறைகளை- ‘திருமூலர் யோக முறைகள்’  என்று தற்போது  ஆவணப் படுத்தி காத்துக் கொள்கின்றனர்!

ஆங்கில மருத்துவத்தில் இந்துத்துவ நோக்கு;

புதிய மருத்துவ கல்வி கொள்கையில்  தற்போது ஆங்கில மருத்துவ முதலாம் ஆண்டு  பயிற்சியில் யோகப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்று,  இதுவரை மரபாக பின்பற்றி வந்த ‘ஹிப்போகிரேட்டஸ்’ உறுதிமொழியை நீக்கிவிட்டு ‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழி ‘ஒன்றை திணிக்கின்றனர்.

இதற்கு இந்திய மருத்துவ அசோஷேசியன் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காரணம், சாரக் ஷாபாத் உறுதிமொழியானது மருத்துவத்தை சாதிய மற்றும் பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகிறது என்பதே!

கிரேக்க ஞானியும், மருத்துவ மேதையுமான ஹிப்போகிராட்டின் உறுதி மொழியையே உலகம் முழுமையும் உள்ள ஆங்கில மருத்துவர்கள் பின்பற்றி டாக்டர் தொழிலுக்குள் பிரவேசிக்கின்றனர்.

அதில் மனித குலத்திற்கு சேவையாற்றுவதே என் நோக்கம்! நோயாளியின் நலனும், ஆரோக்கியமுமே என் குறிக்கோள். நோயாளியின் தனிப்பட்ட பிரைவேசியை நான் பாதுகாப்பேன். அவர் உடல் தொடர்பான ரகசியங்களை கண்ணியமாக பாதுகாப்பேன். எந்த நோயாளியையும் வயது, நிறம், இனம், குலம், பாலினம்,அரசியல்,சமூக சார்புகள் ஆகியவை சார்ந்து அணுக மாட்டேன் என்பதாகும். இதை மாற்றவேண்டும் என பாஜக அரசு களத்தில் இறங்கி செயல்பட்டு வருவது மருத்துவ தொழிலின் மீதான புனிதத்தையே புதை குழிக்குள் தள்ளிவிடும். என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்!

ஆனால், இந்த எதிர்ப்பை புறக்கணித்து கொல்கத்தாவில் முதலாண்டு மாணவர்கள் அனைவரும் விளக்கேந்தி சரகர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் – இதுதான் இந்துத்துவாவின் ஆரம்பம்!

ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் இயற்கையாகவே ஒன்றோடு ஒன்று  வேறுபட்ட மருத்துவ வரலாற்று பின் புலன்களை கொண்டுள்ளன.

தற்போதுள்ள ஆயுர்வேதமானது வேதங்களை முன்னிறுகின்ற, வேதகால அறிவியலாகும்! அது, சமஸ்கிருத பெருமைகளை   முன்னிறுத்தி வளர்க்கப்பட்டு வருகிறது. பௌத்த, சமண  முறைகளில் பின்பற்றப்பட்டு வந்த மருத்துவ பங்களிப்புகளை  ஆயூர்வேதம் உள்வாங்கி தன்னை செழுமைப்படுத்திக் கொண்டதை முற்றாக மறைக்கின்றனர்.

சரகர் ஆயுர்வேத மருத்துவத் துறையில் முக்கியமானவர், அவரின் பெயரில் ஆங்கில மருத்துவர்கள் உறுதிமொழி ஏற்க  முடியும் என்றால், திருமூலர் பெயரிலும் உறுதி மொழி ஏற்கலாமே.. என்ற வாதங்களும் எழுந்துள்ளன!

அந்தந்த மண்ணுக்கான மருத்துவத்தை மறைப்பதும், மழுங்கடிப்பதும், இந்துத்துவ நோக்கில் மருத்துவத்தை மாற்றுவதும் இந்திய பன்மைத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, மருத்துவத்திற்கே எதிரானது! மனிதகுலத்திற்கே எதிரானது!

கட்டுரையாளர்; விஜய் விக்ரமன்

சித்த மருத்துவர் மற்றும்  சித்த மருத்துவ ஆய்வாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time