கணவன் என்பது கட்டாய பாலியலுக்கான அதிகாரமில்லை!-தீர்ப்பு

-சாவித்திரி கண்ணன்

நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கியுள்ள  தீர்ப்பில், ஆண் என்பவர் ஆண் தான். சட்டம் என்பதும் சட்டம் தான். பலாத்காரம் என்றால், அது பலாத்காரம் தான். பலாத்காரம் செய்வது கணவனாக இருந்தாலும், பலாத்காரத்திற்கு ஆளாவது மனைவியாக இருந்தாலும் பலாத்காரமே.’’ எனக் கூறியுள்ளார்.

”என் மனைவி தானே. என் விருப்பத்திற்கு அவள் தட்டாமல் பணிந்து போக வேண்டும் என அதிகாரம் செய்வது மனிதாபிமானமற்றது! ஆகவே, விருப்பமில்லாத மனைவியை நிர்பந்தித்து உறவு கொள்வதோ, அதற்காக துன்புறுத்துவதோ ஏற்கதக்கதல்ல” என்கிறது தீர்ப்பு.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகப்பிரசன்னா வழங்கிய ஒரு தீர்ப்பு இன்றைய தினம் பெண்களால் பெரிதும் பேசப்படுகிறது. ஒரிசாவைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவன் மிகக் கொடூரமான வழிகளில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதாக தெரிவித்த வழக்கை ரத்து செய்யக் கோரிய கணவனின் மனுவை ரத்து செய்தார் நீதிபதி!

முன்னதாக மனைவியுடனான வலுக்கட்டாய தாம்பத்யத்தை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத்தொடரப்பட்டது நமக்கு நினைவிருக்கலாம். இந்திய கற்பழிப்பு சட்டத்தில் கணவன்மார்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் ஒரு பெண், ஒரு ஆண் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது! ஆனால், என்ன காரணத்தாலோ, அந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

வலுக்காட்டாயமாக மனைவியுடனான தாம்பத்யம் நமது வீடுகளில் நடக்கும் மிகப் பெரிய பாலியல் வன்முறை. திருமணம் என்ற கட்டமைப்பில் எவ்வளவோ மோசமான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன! அவற்றில் எத்தனை பதிவு செய்யப்படுகின்றன..?  இந்த தகவல்கள் ஒருபோதும் பதியப்படுவதில்லை மேலும் ஆராயப்படுவதுமில்லை! கணவனுக்கு இல்லாத உரிமையா? அனுசரித்து போக வேண்டியது மனைவியின் கடமை என பொத்தாம் பொதுவாக பார்க்கப்பட்டு விடுகிறது. இந்த நிலையில், ‘‘கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?” என சில பெண் ஆளுமைகளிடம் கேட்டேன்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறியதாவது: `பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து கணவருக்கு விலக்கு அளிக்கும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும் என்று பல பெண்ணிய அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆடு, மாடு, நாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் கூட, அவை எதுவுமே எதிர்பாலினத்தை நிர்பந்தப்படுத்தி உறவு கொள்வதில்லை. ‘விருப்பமில்லை’ என்று தெரிய வந்தால், விலகி சென்றுவிடுவதை நாம் சாதாரணமாக பார்க்க முடியும்.ஆனால், கனவன் என்பதற்காகவே மனைவியை அவளது விருப்பம் ,உடல் நிலை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் வலிந்து உடல் உறவு கொள்ளும் போக்கு சில ஆண்களிடம் உள்ளது. இது மனைவியை தனது பாலியல் அடிமையாக அல்லது ஒரு போகப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்க மனோபாவமாகும்!

பெரும்பாலான உலக நாடுகளில் கணவனே ஆனாலும், வன்முறையாக செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வர ஆட்சியாளர்கள் தயங்கும் நிலை உள்ளது. இது பெண்கள் மீது ஆட்சியாளர்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. அதே சமயம் குடும்ப வன்முறை சட்டம் கணவன் வலிந்து மனைவியை உடல் உறவுக்கு நிர்பந்திப்பதை குற்றமாக கருதுகிறது. அது தான் தற்போதுள்ள ஒரே பாதுகாப்பு! தில்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான ஒரு வழக்கில் நீண்ட காலமாக தீர்ப்பு கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மிக ஆறுதலாக உள்ளது.

மன நல மருத்துவர் வெற்றிச் செல்வி; பொதுவாக நம்ம நாட்டுல மனைவி என்பவளின் உணர்வை புரிந்து கொண்டு உறவில் ம் கணவர்கள் குறைவு. அவர்கள் விருப்பமும் மதிக்கப்படாது. விருப்பமின்மையும் பொருட்படுத்தப்படாது.

பொதுவாக ஆண் தன்னை ஒருபடி மேலானவனாகவே பார்க்கிறான். ஆகவே, தாம்பத்தியத்தில் மனைவி விருப்பமில்லாவிட்டாலும் கணவனுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலை உள்ளது. இது உண்மையிலேயே அவளுக்கு வெளியில் சொல்ல முடியாத ஒரு துன்பம் தான்! இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் உணவு மற்றும் குடிப் பழக்கம் காரணமாக ஆண்மை குறைவுள்ளவர்களாக உள்ளனர். மனைவி விரும்பினாலும் அதில் ஈடுபட முடியாதவர்களாக உள்ளனர். ஆனால், ஒரு பெண் இதை கணவனிடம் வலியுறுத்த நம் குடும்ப அமைப்பில் இடமில்லை. தன்னை கணவன் கேவலமாக நினைத்துவிடக் கூடாது என பொறுமை காட்டுவார்கள். அதாவது, கணவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலோ அல்லது அவனால் அதில் திருப்தி தர முடியவில்லை என்றாலோ கூட பெண் தன் கணவனை நிர்பந்திப்பதில்லை. அனுசரித்து போய்விடுபவளாகவே உள்ளாள். ஆனால், ஆணோ அதிகாரமாக அதை மனைவியிடம் எதிர்பார்க்கிறான். இது தவறு என்பது கூட அவனுக்கு புரிவதில்லை. ஆக, இங்கே சம நிலை இல்லை. அந்த வகையில் இந்த தீர்ப்பை நிச்சயமாக எல்லா பெண்களுமே ஒருமனதாக வரவேற்பார்கள்!

பள்ளி ஆசிரியை ஆர்.எஸ்.லஷ்மி; இந்த தீர்ப்பு ஒரு பாதுகாப்பு உணர்வை அனைத்து பெண்களுக்கும் ஏற்படுத்தும்.பெண் என்பவளை உணர்வுகளால் ஆன ஒரு சக உயிராக பெரும்பாலான கணவன்மார்கள் இந்திய சமூகத்தில் நினைப்பதில்லை. பெண்னை கல்யாணம் செய்து வைப்பதே இஷ்டத்திற்கு தான் அனுபவிக்கத் தான் என்ற நினைப்புடன் ஆண்கள் உள்ளனர். ஒரு பெண் குடும்பத்தை நிர்வகிப்பது , குழந்தைகளை வளர்ப்பது போன்றவற்றுக்கும் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவளாக உள்ளாள். ஆகவே, அவளது மன நிலையும், உடல் நிலையும் உணர்ந்தே ஆண் தன் தேவையைச் சொல்வதே கண்ணியமான உறவுக்கு அழகாகும். அதிலும் கூட, அவள் மனதையும், உடலையும் பக்குவப்படுத்த அவன் ஒத்துழைப்பது முக்கியம். இருவருக்குமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவை பேணுவது தான் நாகரீகமான தாம்பத்தியதிற்கான அடையாளமாகும்.

யார் ஒருவரையும் பசி இல்லாத போது நீங்கள் சாப்பிட வலியுறுத்த முடியாது. பசி தான் உணவை எடுத்துக் கொள்ளச் செய்யும். பசி இல்லாமால் சாப்பிடுவது உடலுக்கு கேடாகும். அது உடல் உறவுக்கும் பொருந்தும். கணவனே ஆனாலும் நிர்பந்தப்படுத்தி உறவு கொள்வது பெண்ணுக்கு மிகக் கசப்பான அனுபவமாகவே முடியும். அவளால் பிறகு இயல்பாக தன் பணிகளைக் கூடச்  செய்ய முடியாது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், உடலில் பாலியல் என்பது உடலின் ஒரு ஒரு வேதியல் வினையே! அதற்கான தூண்டுதலில் தான் அது நிகழ முடியும். கழிவை வெறியேற்றுவதற்கு உடல் தயார் நிலையில் இல்லாத போது நீங்கள் கழிவறை சென்று அமர்ந்தால் அது ஒருபோதும் வராது. எப்படி ஒரு கணவனை மனைவி நிர்பந்தப்படுத்த முடியாதோ,  அது போல கணவனும் நிர்பந்தபடுத்தக் கூடாது. இந்த தீர்ப்பை மிகவும் வரவேற்கிறேன்.

சமூக ஆர்வலர் ராஜலஷ்மி; தில்லி உயர் நீதிமன்றத்தில் இது போன்ற ஒரு வழக்கு நடந்த போது மத்திய அமைச்சரான ஸ்மிருதிராணி போன்றவர்களே, ‘கணவன் பலாத்காரப்படுத்துவதை பெண் வெளியே சொல்வதால் குடும்ப உறவு பாழாகிவிடும். ஆகவே, பெண் பொறுத்துபோவதைத் தவிர வேறு வழியில்லை…’ என்றெல்லாம் பேசினார். ஆனால், உண்மையில் பல குடும்பங்களில் பெண்ணை சக மனுஷி என்று கூட நினைக்காத ஆணாதிக்க கணவன்மார்களால் பெண்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது. வெளியே சொல்லவும் முடியாது. இந்த தீர்ப்பு ஆண்களை கொஞ்சம் யோசிக்க வைத்து, சற்று மனிதாபிமானத்துடன் மனைவியை அணுக வேண்டும் என உணர்த்தினாலே பெரிய வெற்றி தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time