திமுக,அதிமுக அரசியலுக்கு கிராம சபைக் கூட்டத்தை பலிகடாவாக்குவதா?

சாவித்திரி கண்ணன்

அச்சத்தில் தமிழக அரசு!  ஆத்திரத்தில் கிராம மக்கள்..!

காந்தி ஜெயந்தியன்று கிராமசபையைக் கூட்டி விவாதிப்பதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்பாடாகி வந்த நிலையில்,அதிரடியாக தீடிரென்று கிராம சபைக் கூடக்  கூடாதென்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிராம சபைக் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற முடியாவிட்டாலும் ஆண்டுக்கு நான்கு முறையேனும் நடத்த வேண்டும் என்ற வழமை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்தது! அதன்படி குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே1,சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடந்து வந்தது.

ஆனால்,தற்போது ஜனவரிக்குப் பிறகு கிராமசபைக் கூட்டம் கொரானா காரணமாக நடக்க முடியாமல்  இருந்தது.  இந்த நிலையில் காந்தி பிறந்த நாளன்று நடத்த பஞ்சாயத்து தலைவர்கள் பரவலாக ஆர்வம் காட்டி வந்தனர்.இதனால், நடத்திக் கொள்ளும்படி தமிழக அரசும் கூறிவிட்டது.

கொரானாவிற்கு பின்பான வாழ்வாதாரம்,பொருளாதார சிக்கல்கள்,ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி காலதாமதமாகி வருவது, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பரவலாக்கி வலுப்படுத்துதல்,ஊராட்சி உரிமைகளை மாநில அரசு ’ஹைஜாக்’ செய்வது குறித்த கவலைகள், இன்னும் தமிழகத்தில் 2,900 கிராம சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் இருப்பது…. இத்துடன் சுற்றுச் சூழல் வரைவு மசோதா, புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விவாதங்கள். பி.டி கத்தரிக்காய் கள பரிசோதனைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ஆகியவை தொடர்பாக விரிவாக பேசத் திட்டமிட்டிருந்தனர்.

அரசியல்படுத்தப்பட்ட அவலம்

இதற்கிடையில் கிராம சபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றக் கோரி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இது தமிழக ஆட்சியாளர்களை கலவரத்தில் ஆழ்த்தியது! வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை தருவதாக முதலமைச்சர், வேளாண் அமைச்சர் ஆகியோரெல்லாம் அறிக்கைவிட்டு வந்த நிலையில்,ஏன் பயப்பட வேண்டும்..? நல்ல திட்டங்கள் என்றால், மக்கள் வரவேற்பார்கள் என்று நம்பி இருக்கலாமே…..! அதை மனதில் கொண்டு, அச்சத்தில் கிராம சபைக் கூட்டங்களை கொரானாவைக் காரணம் காட்டி அதிரடியாக தடுத்திருப்பது உள்ளபடியே தமிழக கிராம மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது! இந்த இரண்டு கட்சிகளின் அரசியலுக்கு கிராம மக்களை பலிகடாவாக்குவதா?

தன்னாட்சி அமைப்பு கண்டனம்

சட்டமன்றக் கூட்டம்,பாராளுமன்றக் கூட்டம் ஆகியவை பிரம்மாண்டமாக நடத்தப்பட்டன.அவை நான்கு சுவர்களுக்குள்,குளிரூட்டப்பட்ட அறையில் நடந்தது.ஆனால், கிராம சபை கூட்டங்கள் வெட்டவெளியில் மரத்தடியில் காற்றோட்டமாக நடப்பது,இதை முதலில் நடத்த முடிவெடுத்து அறிக்கை வெளியிட்ட அரசு பின்வாங்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும்.கிராம சபைகள் சுயமாக இயங்குவதை முடக்க கூடாது. இந்த கூட்டம் ரத்தானதன் மூலம் பல கோடி மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கிறது. கிராம சபை கூடுவதைக் கூட அரசியலாகப் பார்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான்! நினைத்தால் கூட்டுங்கள் என்பதும், பிறகு ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் பாணியில் வேண்டாம் என ரத்து செய்வதும் எந்த அளவுக்கு உள்ளாட்சிகளையும், கிராம மக்களையும்  கிள்ளுக் கீரையாக பாவிக்கிறது  தமிழக அரசு என்பதற்கான சாட்சியாகும்! இந்த போக்கு வேதனைக்குரியதாகும். ரத்து செய்யப்பட்டது மட்டுமல்ல,ரத்து செய்யப்பட்ட அணுகுமுறையும் மிகவும் தவறாகும்.’’ என்றார் தன்னாட்சி அமைப்பின் நந்தகுமார்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time