காந்தி, ராஜிவ்  கொலை குற்றவாளிகளின் விடுதலை ஒரு ஒப்பீடு!

மகாத்மா காந்தி கொலைக் குற்றவாளிகளை நமது அரசுகளும், நீதித் துறையும் அணுகிய விதத்திற்கும் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை அணுகிய விதத்திற்கும் தான் எவ்வளவு  வேறுபாடுகள்! 15 ந்தே ஆண்டுகளில் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையானதும், 31 ஆண்டுகள் இவர்களின் சிறைவாசம் தொடர்வதும் குறித்த ஒரு அலசல்!

காந்தி கொலையில் மொத்தம் ஒன்பது பேர் தான் கைதானார்கள்! ஏராளமானவர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டனர்! சமீபத்தில் கூட மகாத்மா காந்தியின் படுகொலை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் பாண்டா  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மகாத்மா காந்தி கொலையில் தொடர்புடைய 3 குற்றவாளிகள் தப்பிச் சென்றது எப்படி? அவர்களை கைது செய்ய போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியுள்ளார்.

1948, ஜனவரி 30-ல் காந்தியை, நாதுராம் கோட்ஸே என்பவர் சுட்டுக் கொன்றார். அதே சமயம் கங்காதர் தஹாவதே, சூர்ய தேவ் சர்மா, கங்காதர் யாதவ் ஆகிய 3 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். அவர்களை கைது செய்ய டெல்லி போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மேல் முறையீடு செய்தபோது விடுவிக்கப்பட்டனர். அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருந்தார்!

மகாத்மா காந்தியை கொலை செய்ய ஐந்து முறை முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன! இது குறித்து அன்றைய உளவுத் துறையே அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது! காந்தியை கொலை செய்ய ஆர்.எஸ்.எஸும், சாவர்க்கரும் தொடர்ச்சியாக இளைஞர்கள் மத்தியில் பேசியும்,எழுதியும் வந்தனர். ஆக, காந்தியை கொல்வதில் யார் முந்திக் கொள்வது என்ற போட்டியே அன்றைய ஆர்.எஸ்.எஸ் இளைஞர்களிடையே இருந்துள்ளது! அந்த வகையில் காந்தியின் கொலைக்கு உதவிய மற்றும் திட்டமிடலுக்கு துணை போன பல பேர் குற்றவாளியாக சேர்க்கப்படவேயில்லை என்பதற்கான சிறிய உதாரணம் தான் கங்காதர் தஹாவதே, சூர்ய தேவ் சர்மா, கங்காதர் யாதவ் ஆகிய 3 குற்றவாளிகள் தப்பிச் சென்ற அல்லது செல்ல அனுமதித்த விவகாரமாகும்!

காந்தி கொலைக்கு சூத்திரதாரியாக இருந்து கோட்ஸே உள்ளிட்ட இளைஞர்களுக்கு முளைச் சலவை செய்த சாவர்க்கர் என்பவரை விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே நீதிமன்றம் ‘நிரபராதி’ எனத் தீர்ப்பளித்து விடுவித்தது. இது குறித்து சமூக தளத்தில் பேரதிர்ச்சியும், கொந்தளிப்பும் நிலவியது. காந்தி கொலையில் சாவர்க்கருக்கு உள்ள தொடர்புகள் குறித்த ஆவணங்கள் நிறையவே பலரால் வெளிப்படுத்தப்பட்டது. ஆயினும் ஆதிக்கவர்க்கம் கமுக்கமாக அதைக் கடந்து போனது!

காந்தி கொலையில் நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இருவர் மட்டுமே மரண தண்டனைக்கு உள்ளானார்கள்!

அடுத்ததாக மற்ற ஐந்து கொலைக் குற்றவாளிகளில் திகம்பர் பாத்கே என்பவர் அப்ரூவராக மாறிய காரணத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனால், இவரது வாக்கு மூலமே சாவர்க்கரை தூக்கில் போட போதுமானதாக இருந்தது என்றாலும், சாவர்க்கர் விஷயத்தில் எதுவுமே நடக்கவில்லை!

மீதமுள்ள ஏழு கொலை குற்றவாளிகளில் தத்தாத்ரேய பார்சூரே, ஷங்கர் கிஸ்ட்யா ஆகிய இருவரும் மேல் முறையீட்டில் விடுதலை ஆனார்கள். இவர்களின் விடுதலைக்கான நியாயமான காரணம் இது வரை காந்தி கொலையை ஆய்வு செய்பவர்களுக்கு கிடைக்கவில்லை.

மற்றுமுள்ள மூன்று கொலை குற்றவாளிகளான கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா, விஷ்ணு கார்கே ஆகிய மூவரும் நவம்பர் 12, 1964 ஆம் ஆண்டில் விடுதலை ஆனார்கள்! அதாவது, பலரும் தப்பிக்க அனுமதிக்கப்பட்டும், விடுதலை செய்யப்பட்டதுமான நிலையில் மற்ற மூன்று கொலை குற்றவாளிகளும் பதினைந்தே ஆண்டுகளில் விடுதலை ஆனார்கள்! காந்தி கொலையில் தொடர்புள்ளதாக கருதி தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தடை ஒரே ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டது!

காந்தி குற்றவாளிகள் அனைவரும் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது!

நாதுராம் கோட்சே

இது மட்டுமல்ல, காந்தியை கொலை செய்வதற்கான நியாயங்களை சொல்ல நீதிமன்றம் கோட்சேவுக்கு முழு சுதந்திரம் தந்தது. அது கூட தவறாக கருத முடியாது. எந்தக் குற்றவாளிக்கும் அவர் தரப்பு நியாயங்களை சொல்ல வாய்ப்பு தர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், காந்தி கொலைக்கான நியாயங்களை மிக விரிவாக 93 பக்கங்களுக்கு எழுதி வைத்து அதை நீதிமன்றத்தில் மிக கம்பீரமாக தொடர்ந்து ஐந்து மணி நேரம் நீண்ட உரையாற்றும் வாய்ப்பு தரப்பட்டது. இதன் மூலம் தன்னை மிகப் பெரிய ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளவும், தேசத் தந்தை காந்தி குறித்த அவநம்பிக்கையை ஆழமாக விதைக்கவும் அந்த சந்தர்ப்பத்தை கோட்சே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்!

கோட்சேவின் எழுத்து பூர்வ வாக்குமூலம் உடனே அழிக்கப்பட்டு இருக்க வேண்டும். அது தான் சமூக நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் எதிர்காலத்திற்கும் நல்லதாக இருந்து இருக்கும்! சாதாரணமாக சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் தவறான ஒரு கருத்தை சொல்லும் போது, ”அந்தக் கருத்து அவைக் குறிப்பில் இடம் பெறாது” என சபாநாயகர் கூறுவதை நாம் அறிவோம். அப்படி இருக்க நீதிமன்ற குறிப்பில் ஆவணமாக கோட்சே வாக்குமூலம் நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது என்ன நியாயம்?

இதைவிடக் கொடுமை தேசிய ஆவண காப்பகத்தில் இருந்த பதிவுகளை தற்போது ஆய்வு செய்ததில், இரண்டு முக்கிய ஆவணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் முதலாவது டெல்லி காவல்துறையின் கடைசி குற்றப்பத்திரிகை, இரண்டாவது கோட்ஸேவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கான நீதிமன்ற உத்தரவு. இந்த ஆவணங்கள்  மாயமான மர்மம் என்ன..? என்பது தான் காந்தியவாதிகள் இன்று வைக்கும் கேள்வியாக உள்ளது! ஏன் இவற்றை பாதுகாக்கவில்லை? அல்லது மறைக்கப்பட்டதன் பின்னுள்ள சதி தான் என்ன?

தற்போது ராஜிவ் காந்தி கொலைக்கு வருவோம். இந்தக் கொலையில் மொத்தம் 42 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்! இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட மனித வெடிகுண்டான தனு ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்! மற்ற சிலரான சிவராசன்,சுபா ஆகியோர் பெங்களூரில் கைது செய்யச் சென்ற போது சயனைடு சாப்பிட்டு இறந்துவிட்டனர். இவர்களை ஏவிவிட்டவர்களாக குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் இலங்கை போரில் கொல்லப் பட்டனர். இப்படியாக 16 பேர் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்ட நிலையில் 26 பேர் சிறை தண்டனை அனுபவித்தனர். இவர்கள் சொல்லொண்ணா சிறை சித்திரவதைகளுக்கு ஆளாயினர். பல்லாண்டுகளாக மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டு இருந்தனர்.

விசாரணையில் இவர்கள் ‘குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான்’ என நிருபணமானதே அன்றி, ‘நேரடியாக சம்பந்தப்பட்டதாக இல்லை’ என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன போதிலும், 26 பேருக்குமே ஒட்டுமொத்தமாக தூக்கு தண்டனை 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பேரறிவாளன் விடுதலை நீதித் துறையின் பேராண்மை!

பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால் தான் இதில் சம்பந்தப்பட்ட 19 பேர் அனுபவித்த எட்டாண்டு தண்டனையே போதுமானது எனக் கூறி 1999 -ல் விடுவிக்கப்பட்டனர். மற்ற எழுவரின் கருணை மனுக்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமாக அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியே நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தில் பேரறிவாளனை விடுதலை செய்து நீதியை நிலை நாட்டி உள்ளது! மேலும் உள்ள ஆறு பேர் விவகாரத்தில் என்ன நடக்கப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time