இந்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் என்னென்ன?

-செழியன் ஜானகிராமன்

நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை!

அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய வேண்டும் அதற்கு இப்பொழுது என்ன நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என்று தெளிவாக வரையறுத்து விடுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு என்ன நிதி கொள்கையோ அதே தான் ஒரு வீட்டிற்கும்! ஒவ்வொரு குடும்பமும் அடுத்த ஐந்து ஆண்டு திட்டம் ஒன்றை வரையறுக்க வேண்டும். அதில்  நிதி தொடர்பான செயல் திட்டங்களை குடும்ப உறுப்பினர்கள் உடன் கலந்து ஆலோசித்துத் தீட்ட வேண்டும். எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் பெரும் நிதி சிக்கலில் மாட்டுவார்கள் என்பதே உண்மை.

மக்களிடம் சேமிப்பு இருந்தால்தான் நாடு பலமாக இருக்க முடியும்! மக்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் அதை முதலீடு செய்ய  ஊக்குவிக்க அரசு பல முதலீட்டுத் திட்டங்களை உருவாகியுள்ளது. ஆனால் அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல தவறிவிட்டது. ஒரு சாரார் மட்டுமே அந்த திட்டங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பணத்தை வீட்டிலேயே வைத்துப் பழக்கப்பட்ட நம் மக்களுக்கு அரசு உருவாகியுள்ள இந்த  முதலீட்டுத் திட்டங்களை பயன்படுத்தினால்  நிகழ்காலம்-எதிர்காலம் எந்த காலத்திலும் பொருளாதாரம் சார்ந்து பலமாக இயங்க முடியும்.

குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை திட்டங்கள்

அனைத்து வயது பிரிவினருக்கும் திட்டங்கள் உள்ளன! நம் பணத்திற்கும்  பாதுகாப்பு மற்றும் அளவான வட்டியும் கிடைக்கும். மோசடி நிறுவனங்கள் சொல்வது போன்று நம் பணம் சில மாதங்களிலேயே இரட்டிப்பு ஆகும் என்பது போன்ற திட்டங்கள் கிடையாது. அப்படி யாரும் கொடுக்கவும் முடியாது.

முதலில் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டங்களைப் பார்த்துவிட்டு பெரியவர்கள், மூத்த குடிமக்கள் திட்டங்கள் பார்ப்போம்.

அரசு சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் அஞ்சலகம்-பொதுத்துறை வங்கிகளில் சேரலாம். .

1.SSY –சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்)

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு உருவாக்கிய திட்டமாகும். ஒரு வீட்டில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்கலாம். போஸ்ட் ஆபிஸ், பொதுத்துறை வங்கி, சில தனியார் வங்கியில்  கணக்கு தொடங்க முடியும்.

10 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க முடியும் . மொத்தம் 21 வருடம் சேமிப்பு காலம் ஆகும் . உதாரணத்திற்கு ஒரு குழந்தை 3 வயதில் சேர்ந்தால் 24வது வயதில் இந்த திட்டம் முதிர்வு (Maturity) அடையும். அப்பொழுதுதான் முழு தொகையும் எடுக்க முடியும்.

இடையில் பணம் எடுக்க வேண்டும் என்றால் பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் எடுக்கலாம். அதுவும் திருமணம்-மேற்படிப்புக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

வருடம் குறைந்தபட்ச முதலீடு 250 ரூபாய் ஆகும் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலுத்தலாம். வருமான வரி 80C கீழ் வரிவிலக்கு பெறலாம். தற்போதைய வட்டி 7.6 சதவிகிதம் ஆகும். இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கு மாறுபடும். வட்டியை மத்திய அரசு நிர்ணயிக்கும்.

நம் வீட்டில் உள்ள பெண் குழந்தையை நிச்சயம் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். தொடர்  முதலீடு செய்ய இந்த திட்டம் சிறந்த முறையாகும். குழந்தைக்கு கருத்து தெரிந்த உடன் இந்த திட்டத்தைக்  குறித்து விளக்கிப் புரிய வைக்க வேண்டும். சேமிப்பின் அவசியத்தை குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருவது சிறப்பு. பிள்ளைகளையும் அழைத்துச் சென்று பணம் கட்டுவது அவர்களுக்கு நல்ல அனுபவம் ஆகும்.

PPF – Public Provident Fund (பொது வருங்கால வைப்புநிதி)

இது மிகப் பிரபலமான திட்டமாகும். சிறுவர்கள், பெரியவர்கள் இதில்  கணக்கைத் தொடங்கலாம். வருடத்திற்குக் குறைந்தபட்சம் 500 ரூபாய் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலுத்தலாம்.


ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஆண் குழந்தைக்கு என்று தனியாகத் திட்டம் இல்லை என்பதால் அதற்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். தற்பொழுது 7.1 வட்டி வழங்கப்படுகிறது. மத்திய அரசு 3 மாதம் ஒரு முறை வட்டியை  மாற்றி அமைக்கும்.

கணக்கு தொடங்கிய ஆறாவது நிதி ஆண்டு  முடிவடைந்து ஏழாவது நிதி ஆண்டு முதல் இடையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 15ஆம் ஆண்டு முடிந்தவுடன் மொத்த பணமும் எடுக்க முடியும்..

KVP-Kisan Vikas Patra (கிசான் விகாஸ் பத்திரம்)

இது, அனைவருக்கும் நன்கு பரிச்சயமான திட்டம்! எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக்கும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அது இருபது ஆயிரமாகக் கிடைக்கும்.

அனைத்து போஸ்ட் ஆபிஸ், சில அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் என்று எந்த விதிமுறையும் இல்லை. நாம் செலுத்தும் பணம் 10 வருடம் 4 மாதங்களில் இரட்டிப்பாகும் அதாவது 124 மாதத்தில்.  தற்போதைய வட்டியாக 6.9 சதவீதம் கொடுக்கப்படுகிறது.

இடையில் எடுக்க விரும்பினால், கணக்கு தொடங்கி இரண்டரை வருடம் கழித்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.  அதற்கான வட்டி மட்டுமே கிடைக்கும். முதிர்வு காலம் வரை காத்திருக்க முடியும் என்றால், வங்கியில் இந்த பத்திரத்தைக் கொண்டு கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கிசான் விகாஸ் திட்டத்திற்கு வருமான வரி 80C கிடையாது. பெரியவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்  மற்றும்  பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் தொடங்கலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் தொடங்கலாம்.

சேமிக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. அதனால், சேமிக்கும் தொகையில் 20 சதவிகிதம் அரசுத் திட்டத்தில் முதலீடு செய்ய்யலாம். அதில் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம் முக்கியமானது.

NSC -National Saving Certificate (தேசிய சேமிப்பு சான்றிதழ்)

இதுவும் ஒரு நல்ல முதலீடு முறையாகும். செலுத்தும் பணம் குறுகிய வருடத்தில் திரும்ப எடுக்க வேண்டுமென்றால் இந்த திட்டத்தில் சேரலாம். முதலீடு செய்த  பணம் 5 வருடத்தில்  முதிர்வு அடையும்..

குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். அதற்கு ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் தொடங்க முடியும். ஒவ்வொரு முறையும் ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள்.

தற்பொழுது 6.8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. கணக்கு தொடங்கிய போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி முதிர்வு காலமான 5 வருடம் வரை மாறாது. இடையில் அரசு வட்டியில் மாற்றம் கொண்டுவந்தாலும், இதற்குப் பாதிப்பு இல்லை. அதே வட்டிதான் முடிவு வரை.

5 வருடம் முதிர்வு காலம் என்பதால் இடையில் பணம் எடுக்க முடியாது. இடையில் இறப்பு ஏற்பட்டால் நமது நாமினிக்கு தொகையைக் கொடுத்து விடுவார்கள். ஆனால்,  இந்த பத்திரம் வைத்து வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

தேசிய சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யும் பணத்தில் 1,50,000 ரூபாய் வரை வருமான வரி 80Cகீழ் காண்பித்து வரி சேமிக்க முடியும்.

SCSS -Senior Citizen Savings Scheme (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

இது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமாகும்..மற்ற சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டி கொடுக்கக் கூடியதாகும்.

60 வயது முடிவடைந்த எந்த இந்தியரும் இந்த திட்டத்தில் சேரலாம். VRS கொடுத்த, 55 வயது முடிந்த அரசு ஊழியர்கள்  கூட இந்த திட்டத்தில் சேர முடியும். ஆனால், ராஜினாமா செய்த 1 மாதத்தில் சேர வேண்டும். இல்லை என்றால் 60 வயது முடிந்த பிறகு சேரலாம்.

இந்த திட்டத்தின் நன்மைகள் பார்க்கலாம்.

5 வருட முதிர்வு காலமாகும். அதிகபட்சமாக 7.4 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது கடைசி வரை வட்டி சதவிகிதம் மாறாது.

குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாய். அதிகபட்சம் பதினைந்து லட்சம்  ரூபாய் ஆகும்.  மாதா மாதம் பணம் செலுத்தும்  முறை இல்லை. ஒரே முறை குறைந்தது 1000 ரூபாய் அல்லது 15 லட்சம் வரை  பணம் செலுத்தலாம்.  ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமென்றாலும் எடுக்கலாம் ஆனால், மொத்தத் தொகை 15 லட்சத்திற்கு மேல் செல்லக் கூடாது.

5 வருட முடிவில் பணம் எடுக்க முடியும். இடையில் பணம் வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் உண்டு. ஒரு வருடத்தில் எடுத்தால் எந்த வட்டியும் கொடுக்க மாட்டார்கள். 1இல் இருந்து 2 வருடத்தில் எடுத்தால் வட்டி கிடைக்கும். ஆனால், செலுத்திய தொகையில் 1.5 சதவிகிதம் பிடித்துக் கொள்வார்கள்!.  2 வருடம் முதல் 5 வருடத்திற்குள் எடுத்தால் வட்டி கொடுத்தும் போது, அசல் தொகையில் 1 சதவிகிதம் பிடித்துக் கொள்வார்கள்.

அதனால் 5 வருடம் வரை காத்திருந்து எடுத்தால் நல்ல லாபம்  கிடைக்கும். நாம் செலுத்தும் தொகையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரியில் காண்பித்து வரி சேமிக்கலாம்.

வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு சிறந்த முதலீடு திட்டமாகும்!

ஒவ்வொரு திட்டத்திற்கும்  ஒரு குறிக்கோள் உண்டு

அனைத்தும் ஒன்று போலத் தெரிந்தாலும்,  ஒவ்வொரு திட்டமும் கொஞ்சம் மாறுபட்டதே!

பெண் குழந்தைக்கு 21 வருட பொன்மகள் சேமிப்பு திட்டம், சேமிப்பு பணம் இரட்டிப்பாக கிசான் விகாஸ் பத்திரம், குறுகிய வருட முதலீட்டுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ், ஆண் குழந்தைக்கும் சேமிக்க வேண்டும் என்றால், பொது வருங்கால வைப்புத் தொகை திட்டம், வயதானவர்களுக்கு முத்த குடிமகன் சேமிப்பு திட்டம்.

நம் தேவைக்கேற்ப திட்டங்களைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் அனைத்து திட்டங்களிலும் சேர வேண்டும் என்பது கட்டாயமில்லை ஆனால் நிச்சயம் சில திட்டங்களில் சேர்ந்து எதிர்கால பொருளாதார பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதுபோல் இன்னும் முக்கியமான திட்டங்களான NPS, Atal Pension Yojana போன்ற திட்டங்களை அரசு உருவாகியுள்ளது. அதுவும் மக்கள் எதிர்காலத்திற்கே  உருவாக்கப்பட்டது. அவற்றையும் அடுத்துத் தெரிந்து கொள்வோம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time