அழித்தொழிப்பு அரசியலில் ‘ஆக்டோபஸ்’ பாஜக..!

- ச.அருணாசலம்

ஒரே இந்துத்துவ கொள்கையால் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சிவசேனா உறவு பூண்டு, கூட்டணி கண்டது. ஆனால், 25 ஆண்டு கால நட்பில் தான் இளைத்தும், பாஜக பெருத்தும் வருவதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டது! அதனால், பாதை மாறி, பயணத்தை தொடர்ந்தது! காத்திருந்த பாஜக, இன்று கருவறுப்பு செய்கிறது!

2019 ம் ஆண்டு நவம்பர் 23 அன்று மராட்டிய கவர்னர் பகத்சிங் கொஷியாரி அதிரடியாக அதிகாலை மூன்று மணிக்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிசை முதல்வராகவும் தேசிய காங்கிரசை சேர்ந்த அஜீத் பவாரை துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  80 மணி நேரமே, அதாவது மூன்று நாட்களே தாக்குப்பிடித்த இந்த அவசர கோல ஆட்சி அற்ப ஆயுளில் மறைந்து போனது. பட்நாவிஸ் கனவில் மண் விழுந்தது.

அப்பொழுது இந்த அநாகரீக செயலுக்கு , சிவசேனா கட்சிக்கு பாரதீய ஜனதா கட்சி இழைத்த அநீதியையும், நம்பிக்கை துரோகத்தையும் எதிர்த்து முன்னின்றவர் ஏக்நாத் ஷின்டே.

அந்த அநீதிக்கு பாடம் புகட்ட எதிரணியில் உள்ள தேசீய காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து மகராஷ்டிர விகாஸ் அலையன்ஸ்  ஏற்படுத்தி, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக பணியாற்றி, அவ்வாட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் தான் ஏக்நாத் ஷிண்டே!

இன்று அவர் குறிப்பிட்ட அளவு(40?) சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஓடிப் போய் அசாம் ஓட்டலில் பதுங்கியுள்ளார், இந்துத்வாவை வளர்த்தெடுக்க நாம் (சிவசேனா) பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்.

 

பாரதிய ஜனதாவும் ,  சிவசேனாவும் இருபத்துந்து ஆண்டுகளாக ஓரணியில் மராட்டியத்தில் அரசியல் நடத்தினர். சிவசேனா தன்னை மராட்டியர்களின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ள, பம்பாய் வாழ் தமிழர்களுக்கும், தென்னிந்தியர்களுக்கும் எதிராக வன்முறையை ஏவிவிட்டு தன்னை வளர்த்துக் கொண்டது. 1966-1969 களில் நடந்த சிவசேனாவினரின் தாக்குதலில் காயமடைந்த தமிழக மார்க்சிஸ்ட் தலைவர் உமாநாத்க்கு ஆதரவாகவும் சிவசேனாவின் இனவெறி போக்கை எதிர்த்தும் அன்று தி.மு.க. தலைவர்  அண்ணாத்துரை நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார் என்பது வரலாறு.

இன வெறியை தூக்கிப்பிடித்த சிவசேனா, இஸ்லாம் மீதும் முஸ்லீம்கள் மீதும் சேற்றை வாரி இறைத்து, வெறுப்பு அரசியலுக்கு அடித்தளமிட்டது. பாபர் மசூதி இடிப்பதிலும், அதையொட்டிய மும்பையில் நடந்த கலவரங்களிலும் முன்னணியில் நின்றது. இந்த வன்முறை வெறியாட்டத்தை  நடத்தியது பால் தாக்கரே தலைமையிலான சிவசேனா என்பதை நீதிபதி ஶ்ரீ கிருஷ்ணா  விசாரணை கமிஷன் உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த கமிஷனின் பரிந்துரைகளை அமுல் படுத்த எந்த கட்சிக்கும் திராணி இல்லை என்பதே வரலாறு.

2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்றபின் சிவசேனாவும் பாஜ கவும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டனர் . யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பா ஜ க(122) சிவசேனா(63) கூட்டணி –  post poll alliance- ஆட்சி தேவேந்திர படநாவிஸ் தலைமையில் அமைந்தது, சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷின்டே பொதுப் பணிதுறை அமைச்சராக வலம் வந்தார்.

2019-ல் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்குப்பின் அவ்வணிக்கு பெரும்பான்மை இருந்தும் ஓரணியில் இருக்க இயலாமல் பிரிந்து விட்டனர் . இதற்கு பல காரணங்களை பலர் கூறினாலும் பாரதிய ஜனதா , சிவசேனாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, முறிவும் நேர்ந்தது. நம்ப வைத்து கழுத்தறுக்க துடித்த பாஜகவை சிவசேனா முன்கூட்டியே அவதானித்துவிட்டது.

உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா,காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சி கூட்டணி  (MVA) ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவையின் அடிப்படையில் அமைந்த இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டது. மதவெறி கலவரங்களற்ற அமைதியான ஆட்சியை தந்து வருகிறது. எனவே, இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடிக்க நாங்கள் அசாம் வந்துள்ளோம் என்று ஏக்நாத் ஷின்டே கதைப்பதை யாரும் ரசிக்கவில்லை.

யார் எந்த கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் , யார் சிறந்த இந்துத்வ வாதி என்ற போட்டியை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு,  பல கட்சிகளை கொண்ட இந்திய ஜனநாயக அமைப்பில் சட்டங்களும், விதிகளும், நேர்மையாக நியாயமாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை நாம் அலச வேண்டிய சூழலில் இன்றுள்ளோம்.

அரசியல் சட்டம் வழங்கியுள்ள தேர்தலின் மூலம் அமையப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது ஒரு புதிய கலாச்சாரமாக கடந்த ஆறேழு வருடங்களில் உருவாகியுள்ளது. இந்த உருமாற்றம் இந்திய மக்களை, இந்தியாவின் மனசாட்சியை  ஏன் உறுத்தவில்லை?

தீமையை கண்டு பொங்குவதும், அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பதும் நமது கலாச்சார பண்புகளில்லையோ என்று எண்ணுமளவிற்கு மக்களின் தீர்ப்புகள்  காலில்  போட்டு மிதிக்கப்படுகின்றன.

மணிப்பூரில் ஆரம்பித்து கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், நாகாலாந்து,மிசோரம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியம் என தொடரும் இந்த கேவலங்களின் மூலம் மக்களாட்சி முறைக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மேலேகூறிய அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பாரதிய ஜனதா  சட்டத்திற்கு புறம்பாக சகலவித தில்லுமுல்லுகள் மூலமே ஆட்சியில் அமர்ந்துள்ளது!

ஆனால், இந்த சீரழிவை தட்டிக்கேட்க வேண்டிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களோ, தேர்தல் கமிஷனோ பாராமுகத்தினராக இருப்பது அமிர்த கால நடைமுறையாக உள்ளது.

அதைவிட வேடிக்கை பத்திரிக்கைகளும் , மெத்த படித்தவர்களும் நாட்டின் மாண்பையும் மனசாட்சியையும் தூக்கிப்பிடிப்பதாக பிதற்றி திரியும் கூட்டமும் இந்த மாண்பிழந்த செயல்களை கண்டிக்காதது ஏன்?

எங்களுக்கு உறுதுணையாக இருப்பது மிகப் பெரிய தேசிய சக்தி என்று ஏக்நாத் ஷிண்டே கூறிய பிறகும் இது பா ஜ க. வின் கைவேலை என்பதில் சந்தேகம் ஏதுமுள்ளதா ? குஜராத் அரசும் தற்போது அசாம்  அரசும் ஷின்டே கும்பலுக்கு ஆதரவும் அரவணைப்பும் கொடுப்பது யாருக்கும் புரியாமலில்லை. ஆனால், இச்செயல் மக்களின் மனநிலையில், அரசியல் சூழலில் எந்தவொரு அஏறச் சீற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதே கவலை கொள்ள வேண்டிதாகும்.

இந்த தகிடு தத்தங்களுக்கு எல்லாம்  துணைபோவதெற்கென்றே கட்சி தாவல் தடை சட்டம் உள்ளதா அல்லது அதை பற்றிய நீதிமன்றங்களின் முரண்பட்ட தீர்ப்புகள் உள்ளனவா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கட்சி சார்பில் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுய லாபத்திற்காக ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபடுவதை தவிர்க்க, இயற்றப்பட்ட கட்சி தாவல் தடை சட்டம் இன்று வலுவிழந்து  காணப்படுகிறது.  இதில் உள்ள ஓட்டைகளின் மூலம் நீதி மன்றங்களின் கண்களில் மண்ணைத் தூவும் பா ஜ க மக்களை முட்டாளாக்குவதில் சாணக்கியர்களாக உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு, சீர்திருத்து (Reform) செயலாற்று (Perform) உருமாற்று (Transform) என்ற மூன்று தான் இப்பொழுது தாரக மந்திரங்களாம். இந்த வழிகாட்டுதலில்தான் ஆட்சி நடைபெறுகிறது என்கிறார் மோடி.

மோடியின் தலைமையில் பா ஜ க பண பலம், ஆள் பலம் அதிகார பலம் ஆகியவற்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ஆசை காட்டி அல்லது அச்சுறுத்தி தேவைப்பட்டால் ஆட்களையும் கடத்தி தங்கள் கைப்பாவை அரசுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிவசேனா அரசு பிழைக்குமா இல்லையா என்று ஆருடங்கூற நாம் தயாரில்லை, ஆனால் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் உருவான ஒருசட்டப்படியான அரசை தொடர விடாமல் கவிழ்ப்பதில் உள்ள சாடிஸ்ட் மனநிலை பா ஜ க தலைமைக்கு வந்திருப்பதுதான் இங்கு அவதானிக்கப்பட வேண்டும்.

மக்கள் தீர்ப்பின் மூலம் தேர்தல் வெற்றி பெறுவது, பெறாவிட்டால் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து ஆட்சியை இடித்துரைப்பது போன்ற அரசியல் நாகரீக , ஜனநாயகமுறைகளை புறந்தள்ளிவிட்டு , அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதன் மூலம் சட்டத்தை வளைப்பதும். பண பலத்தில் ஆட்களை விலைக்கு வாங்குவதன் மூலம், தேர்தலில் தோற்றாலும் நாங்களே ஆட்சி நடத்துவோம் என்ற புது விதியை பா ஜ க ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பவர்களின் உண்மை நோக்கம் எதிர்ப்பார் இல்லாத இந்தியா தான். அதற்காக, பாஜகவினரோ ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக காங்கிரசை மட்டுமல்ல, ஏனைய கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு கட்சிக்கான கதை முடிக்கும் நேரம் மாறுபடலாம், ஆனால், சிகிச்சை தப்பாது!

அவர்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது, பண பலம் உள்ளது!  ஆள் பலம் –  E D, C B I, E.C. –  உள்ளது. விரும்பியதை தீர்ப்பெழுத நீதிமான்கள் உள்ளனர் விரும்பாதவர்களை அடைத்து வைக்க காவல்துறையும், சிறைகளும் உள்ளன. கீர்த்திகளை பரப்ப ஊடகங்கள் உள்ளன.

ஓடிப்போன சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் தங்களது சொந்த பாதுகாப்பு வீர்ர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, சூரத் நகர் விரைந்துள்ளனர் அங்கு அவர்களுக்கு சகல பாதுகாப்பும், விருந்தும் தடபுடலாக நடக்கிறது;

பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள சூரத் பயணத்திற்கு பின் மற்றொரு பாஜக ஆளும் அசாமிற்கு இந்த எம் எல் ஏக்கள் அனுப்ப படுகின்றனர். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் அசாம் மக்களை பற்றி கவலைப்படாமல் ஆளும் பாஜக அரசு மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களை “கவனிக்க” அசாம் அமைச்சர்களை ஈடுபடுத்தியுள்ளது.

சொந்த கட்சி தொண்டர்களே(சிவ சேனா) இந்த ஓடுகாலி எம்.எல் ஏ. க்களுக்கெதிராக கிளர்ந்து எழுந்துள்ளதால் அமீத் ஷா வின் உள் துறை அமைச்சகம் 16 சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பா ஜ க அமைச்சர் ராவ்சாகிப் தான்வே இந்த கூட்டணி அரசு இன்னும் மூன்று நாள்களுக்குள் கவிழ்ந்துவிடும் அதன்பின்னர் பாஜக வே ஆளும் கட்சி என்று கூறியுள்ளார்!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time