விரை வீக்கத்தை விரட்ட இத்தனை எளிய வழிகளா?

- எம்.மரிய பெல்சின்

விரை வீக்கம்… ஆண்களை பாடாய்ப்படுத்தும் பிரச்சினைகளுள் ஒன்று. ஆங்கிலத்தில் இதை  ஹைட்ரோசெல் என்பார்கள். ஆண்களின் விதைப்பை வீங்குவதால் ஏற்படுவது! குழந்தைகளுக்கு கூட வருகிறது. இதற்கு மருத்துவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரவரே எளிய முறையில் இதிலிருந்து விடுபடலாம்.

ஆண்களின் விரை அல்லது விதைப்பை என்று சொல்லப்படும் இடத்தைச் சுற்றிலும் ஜவ்வு மாதிரி இருக்கும். பை போன்ற அமைப்பில் காணப்படும் இந்த இடத்தில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் ஏற்படும் பிரச்சினையே விரை வீக்கம் அல்லது விதை வீக்கம் எனப்படுகிறது. இது தவிர, வாய்வுக்கோளாறு காரணமாகவும், மென்மையான அந்த இடத்தில் அடிபடுவதாலும்கூட வீக்கம் உண்டாக வாய்ப்புண்டு.

விரை வீக்கம் எந்த வயதில், யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. பொதுவாக புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றாலும், அவர்களுக்கு சில சமயங்களில் தானாகவே சரியாகிவிடும். அதே நேரத்தில் வயதான ஆண்களுக்கு அந்த இடத்தில் அடிபடுவதாலோ அல்லது காயம் ஏற்படுவதாலோ விரை வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வயதான சூழலில் வரக்கூடிய இந்தப் பிரச்சினையை பலர் வெளியே சொல்வதில்லை. காரணம், அதை அவமானம் என்று நினைத்து வெளியே சொல்லாமலும், மருத்துவம் செய்யாமலும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தரங்க நோய்களுக்குக் கூட மிகச்சாதாரணமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் இன்றைய சூழலில், இது போன்ற நலக்கோளாறுகள் வந்தால் தாராளமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். யாரிடமும் சொல்லாமல் உங்களது பிரச்சினையை நீங்களே கூட எளிமையான சிகிச்சைகளைச் செய்து பலன் பெறலாம்.

பொடுதலைக் கீரை

பொடுதலை என்று ஒரு கீரை உள்ளது. ஈரம் நிறைந்த நிலப்பகுதியில் வளரக்கூடிய கீரை வகையைச் சேர்ந்த தாவரம் இது. எல்லா இடங்களிலும் கிடைக்காது என்றாலும், கீரை விற்கும் பாட்டிமாரிடம் சொல்லிவைத்து வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கீரையை மையாக அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் நாளடைவில் பிரச்சினை சரியாகும். இதேபோல் முருங்கைப்பூவை இட்லி சட்டியில் வைத்து அவித்து பொறுக்கும் சூட்டில் விரையின்மீது வைத்துக் கட்டி வந்தால் மூன்றே நாட்களில் விரை வீக்கம் சரியாகும். இது போன்ற எளிய வழிகள் இருக்கும்போது நம்மில் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வைத்திய முறைகள் மட்டுமல்ல, இன்னும் பல எளிய முறைகள் உள்ளன. அவற்றை இங்கே தொடர்ந்து பார்ப்போம்.

கழற்சிக்காய் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் ஒரு தைலம் தயாரித்துப் பூசினாலும் பலன் கிடைக்கும். அந்த தைலத்தை நீங்களே தயாரிக்கும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். அடுப்பில் வாணலியை வைத்து விளக்கெண்ணெய்; அதில் பாதி அளவு கழற்சிக்காய் பொடியைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். நன்றாகக் காய்ச்சியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் தைலத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை விரை வீக்கம் உள்ள இடத்தில் பூசி வர வேண்டும். அதேநேரத்தில் கழற்சிக்காயுடன் மிளகு சேர்த்து ஒரு பொடி தயார் செய்து அதை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும். அதாவது 100 கிராம் கழற்சிக்காய்க்கு 25 கிராம் மிளகு சேர்த்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், விதைப்பை வலி விலகும்.

கழற்சிக்காயை உள்ளுக்குள் சாப்பிடும் விதமாக வேறு ஒரு மருந்தையும் தயார் செய்யலாம். வெள்ளைப்பூண்டு இரண்டு பற்கள் எடுத்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது கழற்சிக்காய் சேர்த்து அரைத்து ஒரு சட்டியில் போட்டு விளக்கெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்ச வேண்டும். சிவந்த நிறம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி மூன்று நாட்கள் காலை வேளையில் மட்டும் சாப்பிட்டால் போதும்; விரை வீக்கம், விரை வாய்வு விலகும். இதேபோல் தோல் நீக்கிய கழற்சிக்காய், கொள்ளு, தோலுரித்த வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் போன்றவற்றை சம அளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து 100 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் பிரச்சினை சரியாகும்.

ஊமத்தை இலை

ஊமத்தை இலை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஸ்பீக்கர் பூ போன்று இருக்கும். வெள்ளை, ஊதா மற்றும் கறுப்பு நிறங்களில் ஊமத்தை பூக்கள் பூத்திருக்கும். அதில் எது கிடைத்தாலும் பரவாயில்லை. அதன் இலைகளை எடுத்து நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரை வீக்கம் சரியாகும். இதை சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் வடியும். ஊமத்தை இலையைப் போன்றே மணத்தக்காளிக் கீரையின் இலைகளையும் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் கட்டி வரலாம். வல்லாரைக்கீரை கிடைத்தால் நல்லெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் விரைவாதத்தின் மீது கட்டினால் விரை வீக்கம் குறையும். வல்லாரைக் கீரைப்பொடி கால் டீஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் கால் டீஸ்பூன் பசு நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம். பச்சை வல்லாரைக்கீரையை மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டாலும் விரைவீக்கம் சரியாகும்.

வெள்ளைப்பூண்டு வாய்வுக்கோளாறுகளை சரிசெய்யக்கூடியது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே, வெள்ளைப்பூண்டு பற்களை சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் விரைவாய்வு விலகும். விரை வாய்வு மட்டுமல்லாமல் மூட்டு வலி, வாய்வுப் பொருமலும்கூட விலகும்.

பாரிஜாதப்பூக்கள் அல்லது மல்லிகைப்பூக்களை விரைவீக்கம் உள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தாலும் வீக்கம் வடியும். கால் ஸ்பூன் பெருங்காயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்து நாட்டு வாழைப்பழத்தின் உள்ளே வைத்துச் சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு, தேன் சேர்த்து போன்றவற்றை நன்றாகக் கலந்து தடவி வந்தாலும் விரைவீக்கம் சரியாகும். இதுபோன்ற எளிய வழிமுறைகள் இருக்கும்போது கவலைப்படத் தேவையில்லை. பணத்தையும் வீணாக இழக்க வேண்டிய அவசியமும் இல்லை.

கட்டுரையாளர்;எம்.மரிய பெல்சின்

இயற்கை வழி மருத்துவர், உடல் நல ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time