தமிழக அரசியல் பாஜகவின் வேட்டைகளமாகிவிட்டது..!

-சாவித்திரி கண்ணன்

தமிழக அரசியல் சூழல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலே தற்போது மூன்று பிரிவுகளாக இயங்குகிறது.

# பாஜக ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகள்!

# பாஜகவால் இயக்கப்படும் சிறுகட்சிகள்!

# பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்!

இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை  பாஜகவே வழி நடத்துகிறது!

தன்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத வேறுபட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிகளை எப்படியாவது வளைத்துப் போட்டு அவர்களின் லகானை தன் கையில் வைத்து இயக்குகிறது.

மூன்றாவதாக தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பதறியும்,கதறியும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை தன்னை எதிர்க்கும் கட்சிகளுக்கு தொடர்ந்து தந்து கொண்டிருப்பதன் மூலம் எதிர்கட்சிகளின் இயக்கத்தையும் பாஜகவே தீர்மானிக்கிறது!

ஆக, மொத்தத்தில் இன்றைய இந்திய, அதுவும் குறிப்பாக தமிழக அரசியலை இயக்கும் ஒரே மைய சக்தியாக பாஜக எப்படி இருக்கிறது என்பதை தான் இந்த கட்டுரையில் அலசியுள்ளேன்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை ஆதரிக்கும் கட்சிகள் என்றால் அது அதிமுக, தேமுதிக, பாமக ஆகியவை!

பாஜகவால் இயக்கப்படும் கட்சிகள் என்றால், அது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவை! இந்த வரிசையில் அடுத்து ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ள கட்சி விரைவில் சேர்ந்துவிடும்! டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் கூட பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர்.

இந்த மூன்று கட்சிகளின் தலைமையும் தாங்கள் கொள்கை ரீதியாக கடந்த காலங்களில் பாஜகவிற்கு எதிர்முகாமில் இருந்து வளர்ந்த அடையாளம் பெற்றவர்களாயிருப்பதால் பாஜகவை வெளிப்படையாக எதிர்க்க தயங்குகிறார்கள் என்பது மட்டுமல்ல,அப்படி ஆதரித்தால் தங்களது ஆதரவு தளத்தை முற்றிலும் இழக்க நேரும் என்பதும் ஒரு காரணமாகும்!

தமாகவினர் அனைவரும் மதச்சார்பற்ற, சோசலிச சிந்தனை கொண்ட காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். ஆகவே, வாசன் வெளிப்படையாக தற்போது பாஜக ஆதரவு நிலைபாட்டை சொல்லமுடியாமல் இருக்கிறார். ஆனால்,காலமாற்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!அந்தக் கட்சி பாஜகவில் சேர்ந்து கரையலாம்!

சீமான் திராவிடர் இயக்க பின்னணியில் இருந்து வந்து பிறகு தமிழ் தேசிய அரசியல் சிந்தனைக்கு வந்து சேர்ந்தவர். ஆகவே, அவராலும் வெளிப்படையாக பாஜகவை ஆதரிக்க முடியாது! அதே சமயம் பாஜகவை எதிர்ப்பது போல பாவனை காட்டுகிறார்!

இதன் மூலம் பாஜக எதிர்ப்பு உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய் விளங்குகிறார். அவர்களின் உணர்வுகளுக்கு சிறப்பான தீனி தரும் ஒரு எண்டர்டெய்னராக தன்னை வைத்துக் கொண்டார்! அவரது கட்சியைப் பொறுத்த வரையில் அது ஒரு ஒன்மேன் ஷோ! அங்கே அவர் எடுப்பது தான் முடிவு! சொல்வது தான் தீர்வு! கூட்டுத் தலைமை,விவாதம்,கலந்து பேசி முடிவெடுத்தல் என எதற்கும் அங்கு வாய்ப்பில்லை! தமிழ் உணர்வையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் பேசி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டமெல்லாம் அவருக்கு கிடையாது! அதைக் கொண்டு ஒரு கூட்டத்தை சேர்த்து அதிகாரமையத்திடம் பேரம் பேசும் தகுதியை உருவாக்கி கொள்வதோடு அவரது அஜெண்டா முடிந்துவிடுகிறது! முதலில் ஜெயலலிதாவிற்கு தொண்டளந்தார்! அதன் மூலம் இன்று வரை அதிமுக உறவை வலுப்படுத்தி, பாதுகாப்போடு வளம் வருகிறார்! அதன் தொடர்ச்சியாக அவர் தற்போது பாஜகவை பக்க துணையாக்கிக் கொண்டார்!

சீமான் என்ன தான் தங்களை எதிர்த்து பேசினாலும், பாஜக அதை பொருட்படுத்தாது! அதே சமையம் சீமானுக்கு எதுவென்றாலும் பாஜக களம் காணும்! ( சீமானால் பாதிக்கப்பட்ட விஜயலஷ்மி என்ற பெண்மணியை பாஜகவினர் மிரட்டியதை கவனத்தில் கொள்க) பாஜக ஆதரவு ஊடகங்களும் ( தினத்தந்தி, தினமலர், தினமணி) சீமானை அனுசரணையோடே அணுகுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்! சீமான் பேசுவதையே ஸ்டாலினோ, ஆ.ராசாவோ, அவ்வளவு ஏன் திருமுருகன் காந்தி பேசினால் கூட இந்த மேற்படி ஊடகங்கள் விட்டுவைக்காது)

சிறந்த உன்னதமான விஷயங்களை கையில் எடுத்துப் பேசிப்,பேசி அதற்கு செயல்வடிவம் தராமல் மழுங்கடிப்பதோடு,அந்த உன்னதங்களுக்கு வருங்காலத்தில் ஒரு மரியாதையும் இல்லாமல் செய்துவிடும் உணர்ச்சி அரசியல் தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல, கட்சியும், தலைமைகளும், அதற்கான இளைஞர்கள் கூட்டமும் தான் வேறுபடுகின்றன!

சீமானுக்கும் கமலுக்கும் பெரிய வித்தியாசமில்லை! உருவத்தில் வேண்டுமானால் கருப்பு, சிவப்பு என்று வேறுபடலாம்! ஆனால், உள்ளத்தளவிலும் சரி, செயல்பாட்டு வடிவத்திலும் சரி முற்றிலும் ஒன்றே! கமல் டிவிட்டரில் அரசியல் செய்கிறார்.சீமான் யூடிபில் அரசியல் செய்கிறார்! கொரானா காலகட்டம், நிவர் புயல்,புரவிப்புயல் இவற்றுக்கெல்லாம் அரசியல்வாதிகள் களத்தில் நின்றனர்! ஆனால், இவர்கள் இருவரும் முடங்கிவிட்டனர்! இந்த லட்சணத்தில் மற்ற அரசியல் கட்சிகளையெல்லாம் முந்திக் கொண்டு இப்போதே ஓட்டு வேட்டைக்கு புறப்படுகிறார் கமல்!

சீமானுக்கு தமிழ்தேசிய உணர்ச்சி என்றால், கமல் நேர்மை என்ற வார்த்தையை எவ்வளவுக்குகெவ்வளவு மலினப்படுத்தி, மழுங்கடிக்க முடியுமோ அவ்வளவும் செய்கிறார்! கமலின் மக்கள் நீதிமையம் ஒன்மேன் ஷோ கட்சி தான்! வெளிப்படைத் தன்மைக்கும் இடமில்லை, ஜனநாயகத்திற்கும் அங்கே ஒருபோதும்  இடமில்லை. ஆகவே, கட்சியை முறைப்படி கட்டமைக்க வேண்டிய தேவையும் எழவில்லை!

இந்த வரிசையில் தற்போது கடைசியாக வந்து இணைந்திருப்பவர், மன்னிக்கவும் இணைக்கப்பட்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் பீகாரின் சிராஸ்பஸ்வான் போல பாஜகவிற்காக தன்னை அர்ப்பணித்து தொண்டளக்க களத்திற்குள் இறக்கப்படுகிறார்.

இத்தனை வியூகங்கள், தந்திரமான களசெயல்பாடுகள் என சுற்றிச் சுழலும் பாஜகவிற்கு ஈடு கொடுக்க எதிர்கட்சிகளிடம் எந்த செயல்திட்டங்களும்,ஒருங்கிணைப்புகளும் இருப்பதாக இது வரையிலும் தெரியவரவில்லை என்பதே யதார்த்தமாக உள்ளது!

இந்திய அரசியல் மட்டுமல்ல, தமிழக அரசியலும் பாஜகவின் வேட்டைகளமாகிவிட்டது..!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time